441. வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கிப்லாத் திசையில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்திருந்தார்கள். நான் தொழுகையை முடித்துக்கொண்டு என் இடத்தில் இருந்தவாறே அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்களது இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால்,கிப்லா (கஅபாவின்) திசையையோ பைத்துல் மக்திஸையோ முன்னோக்கி அமரக்கூடாது என்று மக்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால், நான் (என் சகோதரி ஹஃப்ஸா) வீட்டின் கூரை மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள்மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற்செயலாகக்) கண்டேன்.
அத்தியாயம் : 2
442. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சகோதரி(யும் நபியவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ரலி) அவர்களது வீட்டின் (கூரை)மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பைத்துல் மக்திஸ் உள்ள) ஷாம் நாட்டின் திசையை முன்னோக்கியபடியும் கிப்லா(கஅபா)வைப் பின்னோக்கியபடியும் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருந்ததைக் கண்டேன்.
அத்தியாயம் : 2
பாடம் : 18 (மல ஜலம் கழித்த பின்) வலக்கரத்தால் துப்புரவு செய்யலாகாது.
443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது அவர் தமது பிறவி உறுப்பை வலக்கரத்தால் பிடிக்க வேண்டாம். மலஜலம் கழித்த பின் வலக் கரத்தால் சுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் கழிப்பிடத்திற்குச் சென்றால் அவர் தமது வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 2
445. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ஒருவர் (ஏதேனும் பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சுவிட வேண்டாம் என்றும், (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் பிறவி உறுப்பைத் தொட வேண்டாம் என்றும், வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 19 தூய்மைப்படுத்தல் உள்ளிட்ட செயல்களை வலப் பக்கத்திலிருந்து ஆரம்பித்தல்.
446. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உளூ மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப் படுத்திக்கொள்ளும்போதும்,அவர்கள் தலை வாரிக்கொள்ளும்போதும், காலணி அணியும் போதும் வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.
அத்தியாயம் : 2
447. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் வலப் பக்கத்தை(க் கொண்டு தொடங்குவதை)யே விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்; காலணி அணியும் போதும், தலை வாரிக்கொள்ளும்போதும், (உளூ மற்றும் குளியல் மூலம் தம்மைத்) தூய்மைப்படுத்திக்கொள்ளும்போதும் (வலப் பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பி வந்தார்கள்).
அத்தியாயம் : 2
பாடம்: 20 நடைபாதைகளிலும் நிழல்(உள்ள இடங்)களிலும் மலம் கழிப்பதற்கு வந்துள்ளதடை.
448. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சாபத்திற்குரிய இரு செயல்களைத் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள். மக்கள், சாபத்திற்குரிய அவ்விரு செயல்கள் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள்.
அதற்கு, மக்களின் நடைபாதையில், அல்லது அவர்களின் (ஓய்விடங்களான) நிழல்களில் மலம் கழிப்பதுதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 2
பாடம் : 21 மலம் கழித்த பின் தண்ணீரால் துப்புரவு செய்வது.
449. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்றார்கள். அப்போது எங்களில் வயதில் சிறியவரான ஒருவர் தம்முடன் தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றை எடுத்துக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்தார். பின்னர் அதை ஓர் இலந்தை மரம் அருகே வைத்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின் அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்துவிட்டு எங்களிடம் வந்தார்கள்.
அத்தியாயம் : 2
450. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் நானும் என்னைப் போன்ற இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய ஒரு தோல் பாத்திரத்தையும் (இரும்புப் பிடிபோட்ட) கைத்தடி ஒன்றையும் எடுத்துக்கொண்டு செல்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இயற்கைக் கடனை நிறைவேற்றிய பின்) அந்தத் தண்ணீரால் துப்புரவு செய்வார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
451. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற ஒதுக்குப் புறங்களுக்குச் செல்வார்கள். அப்போது நான் அவர்களுக்காகத் தண்ணீர் கொண்டு செல்வேன். அதன்மூலம் அவர்கள் கழுவி(த் துப்புரவு செய்து)கொள்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
பாடம் : 22 காலுறைகள் (மோஸா)மீது ஈரக் கையால் தடவி (மஸ்ஹு செய்து)கொள்வது.
452. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அப்போது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். அவர்களிடம் (இது குறித்து), இவ்வாறு செய்யலாமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,ஆம் (செய்யலாம்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அங்கத் தூய்மை (உளூ) செய்வதை நான் பார்த்தேன். (அப்போது) அவர்கள் தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள் என்று பதிலளித்தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(காலுறைகள் மீது மஸ்ஹு செய்து தொழலாம் எனும்) இந்த ஹதீஸ் மக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவே அமைந்தது. ஏனெனில், ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் (குர்ஆனில்) 5:6 ஆவது வசனம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஈசா பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அப்தில்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய தோழர்களுக்கு இந்த ஹதீஸ் மகிழ்ச்சியளித்து வந்தது. ஏனெனில், ஜரீர் (ரலி) அவர்கள் அல்மாயிதா எனும் (5ஆவது) அத்தியாயம் அருளப்பெற்ற பின்னரே இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
453. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தேன். அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று (அங்கு) நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களை விட்டும் சற்று ஒதுங்கிச்சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அருகில் வா! என்று கூறினார்கள். நான் அருகில் சென்று அவர்களுக்குப் பின்பக்கம் நின்று(அவர்களை மறைத்துக்)கொண்டேன். பிறகு நபியவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
அத்தியாயம் : 2
454. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள். (மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள். மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்.
(இதை அறிந்த) ஹுதைஃபா பின் அல் யமான் (ரலி) அவர்கள், உங்கள் தோழர் (அபூ மூசா) இந்த அளவு கண்டிப்பானவராய் இருக்க வேண்டியதில்லை என்றே நான் விரும்புகிறேன். (ஒரு முறை) நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சுவருக்குப் பின்னாலிருந்த குப்பைக் குழிக்குச் சென்று உங்களில் ஒருவர் நிற்பதைப் போன்று (சாதாரணமாக) நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். உடனே நான் அவர்களைவிட்டும் சற்று ஒதுங்கிச் சென்றேன். அப்போது அவர்கள் என்னை நோக்கி (தம் அருகில் வருமாறு) சைகை செய்தார்கள். நான் அவர்களிடம் சென்று அவர்கள் தமது தேவையை முடித்துக் கொள்ளும்வரை அவர்களுக்குப் பின்பக்கம் நின்று (மறைத்துக்) கொண்டிருந்தேன்.
அத்தியாயம் : 2
455. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். உடனே நான் தண்ணீர் குவளையுடன் அவர்களைப் பின்தொடர்ந்தேன். அவர்கள் இயற்கைக் கடனை முடித்து (துப்புரவு செய்து),திரும்பியபோது அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீரை ஊற்ற, அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (தமது கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையில் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு தம் காலுறைகள் மீது மஸ்ஹு செய்தார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 2
456. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் இரவில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒரு பயணத்தில்) இருந்தேன். அப்போது அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி இயற்கைக் கடனை நிறைவேற்றினார்கள். பிறகு (திரும்பி) வந்தார்கள். அப்போது நான் என்னிடமிருந்த குவளையிலிருந்து தண்ணீரை அவர்களின் (கை கால்கள்) மீது ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
அத்தியாயம் : 2
457. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் (தபூக் போர்) பயணத்தில் இருந்தேன். அப்போது அவர்கள், முஃகீரா! தண்ணீர் குவளையை எடுங்கள்! என்று கூறினார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடந்து (என் கண்ணுக்கெட்டாத தூரத்திற்குச்) சென்று என்னைவிட்டு மறைந்து இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு (திரும்பி) வந்தார்கள். அப்போது அவர்கள், கைப் பகுதி குறுகலான ஷாம் நாட்டு நீளங்கி அணிந்திருந்தார்கள். எனவே, தமது கையைச் சட்டைக் கைகளிலிருந்து வெளியே எடுக்கப்போனார்கள். ஆனால்,சட்டைக் கைகள் குறுகலாக இருக்கவே, தமது கையை அதன் கீழிருந்து வெளியே எடுத்தார்கள். நான் அவர்களின் (கை, கால்கள்)மீது தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு (கால்களைக் கழுவுவதற்கு பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)விட்டுப் பின்னர் தொழுதார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
458. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். பிறகு அவர்கள் திரும்பி வந்தபோது தண்ணீர் குவளையுடன் அவர்களைச் சந்தித்தேன். அவர்களின் (கை கால்கள்)மீது நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தம் (முன்) கைகளைக் கழுவிவிட்டுப் பிறகு முகத்தைக் கழுவினார்கள். பிறகு தம் முழங்கைகளைக் கழுவப்போனபோது அவர்கள் அணிந்திருந்த நீளங்கி குறுகலானதாக இருந்தது. எனவே, தம் கைகளை நீளங்கியின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும், (ஈரக் கையால்) தமது தலையைத் தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்; தம் காலுறைகள் மீதும் (அவ்வாறே ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு எங்களுக்கு (இமாமாக நின்று) தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 2
459. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள், உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா? என்று கேட்டார்கள். நான், ஆம்! (இருக்கிறது) என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவுக்கு நடந்தார்கள். (இயற்கைத் தேவையை முடித்த) பிறகு அவர்கள் வந்தார்கள். நான் குவளையிலிருந்த நீரை அவர்கள்மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். அப்போது கம்பளி நீளங்கி அணிந்திருந்தார்கள். ஆதலால், அங்கியிலிருந்து தம் முழங்கைகளை வெளியே எடுக்க அவர்களால் இயலவில்லை. ஆகவே, முழங்கைகளை அங்கியின் கீழிருந்து வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை (ஈரக் கையால்) தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அப்போது அவர்கள், அவற்றை விட்டுவிடுவீராக! ஏனெனில், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொல்லி, (ஈரக் கையால்) அவற்றைத் தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள்.
அத்தியாயம் : 2
460. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதற்காக நான் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். (ஈரக் கையால்) தம் காலுறைகள்மீது தடவி (மஸ்ஹு செய்து)கொண்டார்கள். அப்போது நான் (காலுறைகளைக் கழற்ற வேண்டுமல்லவா என்பது குறித்து) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், நான் (என் கால்கள்) இரண்டையும் தூய்மையான நிலையிலேயே (காலுறைகளுக்குள்) நுழைத்திருந்தேன் என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 2