3919. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முந்நூறு பேர் கொண்ட படைப்பிரிவொன்றை அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையில் அனுப்பினார்கள்.
அவர்களிடமிருந்த பயண உணவுகள் தீர்ந்துவிட்டபோது, அபூஉபைதா (ரலி) அவர்கள் படைப் பிரிவினரிடமிருந்த உணவுகளை ஒரு பையில் சேகரித்தார்கள். அதையே எங்களுக்கு உணவாக விநியோகித்தார்கள். இறுதியில் நாள் ஒன்றுக்கு ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரைக்கு (சீஃபுல் பஹ்ர்) அனுப்பினார்கள். அப்படையில் நானும் ஒருவனாயிருந்தேன்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட அறிவிப்புகளில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "படைப் பிரிவினர் அந்த (மீன்) உணவைப் பதினெட்டு இரவுகள் உண்டனர்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஜுஹைனா" குலத்தார் வசிக்கும் பகுதியை நோக்கிப் படைப்பிரிவொன்றை அனுப்பினார்கள். அவர்களுக்கு ஒரு மனிதரைத் தளபதியாக நியமித்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 34
பாடம் : 5 நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்பதற்கு வந்துள்ள தடை.
3920. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தவணைமுறைத் திருமணத்திற்கும் ("முத்ஆ"),நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கும் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாம் என்றும் தடை விதித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3921. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்குத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3922. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3923. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள். (அன்றைய தினத்தில்) மக்களுக்கு அந்த இறைச்சியின் தேவை இருக்கவே செய்தது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3924. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம் நாட்டுக் கழுதைகளின் இறைச்சி(யை உண்பது) குறித்துக் கேட்டேன். அவர்கள், "கைபர் போர் நாளன்று எங்களுக்குப் பசி ஏற்பட்டது. அப்போது நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அந்த நகரிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த, அந்த ஊர் மக்களுக்குச் சொந்தமான (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகப்) பெற்றோம். அவற்றை நாங்கள் அறுத்தோம். எங்கள் பாத்திரங்களில் கழுதைகளின் இறைச்சி வெந்துகொண்டிருந்தது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சிகளில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று அறிவித்தார் எனத் தெரிவித்தார்கள்.
அப்போது நான், "எதற்காக அதற்குத் தடை விதித்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள், "(இந்த அறிவிப்பைச் செவியுற்ற) எங்களில் சிலர் "முற்றாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்துவிட்டார்கள்" என்றும், வேறுசிலர் "(அப்படியல்ல போர்ச்செல்வமாகக் கைப்பற்றிய) அந்தக் கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் (தாற்காலிகமாகத்) தடை செய்தார்கள்"என்றும் பேசிக்கொண்டோம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 34
3925. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் (முற்றுகை) நாட்களில் எங்களுக்கு(க் கடுமையான) பசி ஏற்பட்டிருந்தது. கைபர் போர் (தொடங்கிய) நாளன்று நாங்கள் நாட்டுக் கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றை அறுத்(துச் சமைத்)தோம்.
பாத்திரங்கள் கொதிக்கத் தொடங்கிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள். கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள்" என்று (உரக்கக் கூவி) அறிவித்தார்.
அப்போது மக்களில் சிலர், "(போர்ச்செல்வமாகப் பிடிக்கப்பட்ட) அக்கழுதைகளிலிருந்து ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) செலுத்தப்படாததால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினர். வேறுசிலர், "(அப்படியல்ல;) முற்றாக அதற்குத் தடை விதித்து விட்டார்கள்" என்று கூறினர்.
அத்தியாயம் : 34
3926. பராஉ பின் ஆஸிப் (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் (கைபர் போரின்போது நாட்டுக்) கழுதைகளை (போர்ச் செல்வமாக)க் கைப்பற்றி அவற்றைச் சமைத்துக்கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்" என்று அறிவிப்புச் செய்தார்.
அத்தியாயம் : 34
3927. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளன்று (நாட்டுக்) கழுதைகளை நாங்கள் (போர்ச் செல்வமாகக்) கைப்பற்றி (சமைக்கலா)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் ஒருவர் "பாத்திரங்களைக் கவிழ்த்துவிடுங்கள்"என்று அறிவிப்புச் செய்தார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3928. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3929. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (கைபர் போரின்போது) நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை, அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப்பட்டிருந்தாலும் எறிந்துவிடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவே யில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3930. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்ததற்குக் காரணம், நாட்டுக் கழுதை மக்களின் பொதிகளைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதால், (உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமல் போய்விடும் என நபியவர்கள் அஞ்சியதா? அல்லது கைபர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சிக்கு (நிரந்தரமாக)த் தடை விதித்தார்களா என்பது எனக்குத் தெரியாது.
அத்தியாயம் : 34
3931. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி (போருக்காக)ப் புறப்பட்டோம். பிறகு கைபர்வாசிகளுக்கு எதிராக எங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தான். வெற்றி பெற்ற அன்றைய மாலை வேளையில் மக்கள் அதிகமான நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன நெருப்பு? எதற்காக மூட்டியிருக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். "இறைச்சி சமைப்பதற்காக" என்று மக்கள் கூறினர். "எந்த இறைச்சி?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, "நாட்டுக் கழுதைகளின் இறைச்சி" என்று மக்கள் கூறினர்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்துவிடுங்கள்"என்று கூறினார்கள். அப்போது ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே, இறைச்சிகளைக் கொட்டிவிட்டு, பாத்திரங்களைக் கழுவிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்படியே ஆகட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3932. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றிகொண்டபோது, அந்த ஊரிலிருந்து வெளியே வந்த நாட்டுக் கழுதைகளை நாங்கள் கைப்பற்றி, அவற்றை அறுத்துச் சமைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர்களில் ஒருவர், "அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். அவை அசுத்தமானவையும் ஷைத்தானின் நடவடிக்கையும் ஆகும்" என்று அறிவிப்புச் செய்தார்.
உடனே பாத்திரங்கள் அவற்றில் உள்ளவற்றோடு கவிழ்க்கப்பட்டன. அப்போது அப்பாத்திரங்களில் இறைச்சி வெந்து கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தியாயம் : 34
3933. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நாளன்று ஒருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (அறுத்து) உண்ணப்படுகின்றன" என்று கூறினார். பிறகு மற்றொருவர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! கழுதைகள் (உண்டு) தீர்க்கப்பட்டுவிட்டன" என்று சொன்னார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு அறிவிப்புச் செய்யும்படி) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர் மக்களிடையே, "அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கள் நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ணக் கூடாதெனத் தடைசெய்கிறார்கள். ஏனெனில், அவை அசுத்தமானவையாகும்"என்று அறிவிப்புச் செய்தார். உடனே பாத்திரங்கள் அவற்றிலிருந்தவற்றோடு கவிழ்க்கப்பட்டன.
அத்தியாயம் : 34
பாடம் : 6 குதிரைகளின் இறைச்சியை உண்பது.
3934. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போர் நாளன்று நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள்; குதிரையின் இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3935. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நடந்த கால கட்டத்தில் நாங்கள் குதிரைகளையும்,காட்டுக் கழுதைகளையும் உண்டோம். நபி (ஸல்) அவர்கள் (கைபர் போர் நாளில்) நாட்டுக் கழுதையின் இறைச்சியை உண்ண வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3936. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு குதிரையை (அதன் கழுத்து நரம்பை) அறுத்து ("நஹ்ர்" செய்து) உண்டோம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 7 உடும்பு உண்ணலாம்.
3937. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சி உண்பது) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அதை நான் உண்ணக்கூடியவனாகவும் இல்லை; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்பவனாகவும் இல்லை" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3938. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உடும்பை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34