3939. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது ஒரு மனிதர் உடும்பை உண்பதைப் பற்றிக் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்யவுமாட்டேன்" என விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஏழு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அய்யூப் பின் அபீதமீமா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் உண்ணவுமில்லை; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை" என்று இடம்பெற்றுள்ளது.
உசாமா பின் ஸைத் அல்லைஸீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபோது, பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதர் எழுந்தார்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3940. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் இருந்தனர். அப்போது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டு வரப்பட்(டு பரிமாறப்பட்)டது. உடனே நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர் அழைத்து "அது உடும்பு இறைச்சி" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) "நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், அது அனுமதிக்கப்பட்டது (ஹலால்)தான். ஆயினும், அது என் (பரிச்சியமான) உணவு இல்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பின்வருமாறு இடம்பெற்றுள்ளது. தவ்பா பின் அபில்அசத் கைசான் அல்அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக (நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்லது ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து (ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை. அதாவது சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களிடம்) இருந்தனர்... என்று (மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 34
3941. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது பொரிக்கப்பட்ட உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதன் பக்கம் தமது கரத்தை நீட்ட, மைமூனா (ரலி) அவர்களது இல்லத்திலிருந்த பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை உண்ணப் போகிறார்கள் என்பதை அவர்களுக்கு (முன்பே) தெரிவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.
அப்போது நான், "உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அவர்கள், "இல்லை (தடை செய்யப்பட்டதன்று); ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்து உண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டு தானிருந்தார்கள்.
அத்தியாயம் : 34
3942. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் வாள்" எனப்படும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர் என் தாயின் சகோதரியும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியும் ஆவார்.
மைமூனா (ரலி) அவர்கள் அருகில் பொரிக்கப்பட்ட உடும்பு இறைச்சி இருப்பதைக் கண்டேன். அதை மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி ஹுதைஃபா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டுவந்திருந்தார். அவர் அந்த உடும்புக் கறியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் வைத்தார்.
-பொதுவாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஏதேனும் உணவு வைக்கப்பட்டால் அதைப் பற்றிச் சொல்லாமலும் அதன் பெயரைத் தெரிவிக்காமலும் அதை அவர்கள் உண்பது அரிதாகும்-
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்த உடும்பை நோக்கி நீட்ட, அங்கிருந்த பெண்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் எதை வைத்துள்ளீர்கள் என்பதை (முன்னதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்" என்று சொன்னார். அப்பெண்கள், "இது உடும்பு, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை (உடும்பிலிருந்து) எடுத்துவிட்டார்கள்.
உடனே நான், "உடும்பு தடை செய்யப்பட்டதா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இல்லை (தடை செய்யப்பட்டதன்று); எனினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. ஆதலால், என் மனம் அதை விரும்பவில்லை" என்று பதிலளித்தார்கள்.
நான் அதை (என் பக்கம்) இழுத்து வைத்து உண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னைப்) பார்த்துக்கொண்டுதானிருந்தார்கள். (உண்ண வேண்டாமென) என்னை அவர்கள் தடை செய்யவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3943. காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் என் தாயின் சகோதரி மைமூனா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் உடும்புக் கறி வைக்கப்பட்டது. அதை (மைமூனா (ரலி) அவர்களின் சகோதரி) உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் நஜ்துப் பகுதியிலிருந்து கொண்டு வந்திருந்தார். உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள் பனூ ஜஅஃபர் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரின் துணைவியராய் இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் அது என்னவென்று அறியாமல் உண்ணமாட்டார்கள்.
பிறகு மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "இதை யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். அவர் மைமூனா (ரலி) அவர்களது மடியில் வளர்ந்தவர் ஆவார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நாங்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது, நபி (ஸல்) அவர்களிடம் பொரிக்கப்பட்ட இரு உடும்புகள் கொண்டுவரப்பட்டன" என்று இடம் பெற்றுள்ளது. அதில் "யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" எனும் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் உடும்புக் கறி கொண்டுவரப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் இருந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 34
3944. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாயாரின் சகோதரி உம்மு ஹுஃபைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நெய்யும் பாலாடைக் கட்டியும் உடும்புகளும் அன்பளிப்பாக வழங்கினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெய்யையும் பாலாடைக் கட்டியையும் உட்கொண்டார்கள். உடும்பை அவர்களின் மனம் விரும்பாததால் அதை உண்ணாமல் விட்டுவிட்டார்கள்.
ஆனால், உடும்புகள் (சமைக்கப்பட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பின் மீது உண்ணப்பட்டன. உடும்புகள் தடை செய்யப்பட்டவையாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய உணவு விரிப்பில் அவை உண்ணப்பட்டிருக்க மாட்டா.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3945. யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மதீனாவில் புதிதாக மணமுடித்த (மணமகன்) ஒருவர் எங்களை விருந்துக்காக அழைத்தார். அவர் எங்களிடம் (சமைக்கப்பட்ட) பதிமூன்று உடும்புகளைக் கொண்டுவந்து வைத்தார். மக்களில் சிலர் உண்டனர். வேறுசிலர் உண்ணவில்லை.
மறுநாள் நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, அதைப் பற்றித் தெரிவித்தேன். அவர்களைச் சுற்றி இருந்தவர்கள் அதிகமாகப் பேசினர். எந்த அளவுக்கென்றால், அவர்களில் சிலர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடும்பை உண்ணவுமாட்டேன்; உண்பதைத் தடுக்கவுமாட்டேன்; அதை உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமாட்டேன்" எனக் கூறியுள்ளார்கள் என்று (நபியவர்கள் எந்த விளக்கமும் சொல்லாமலேயே சென்று விட்டார்கள் என்பதைப் போன்று) பேசினார்கள்.
இதைக் கேட்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நீங்கள் சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதிக்கப்பட்டவற்றையும் தடை செய்யப்பட்டவற்றையும் அறிவிப்பதற்காகவே அனுப்பப்பட்டார்கள். (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் இருந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு அருகில் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் மற்றொரு பெண்ணும் இருந்தார்கள். அப்போது அவர்களிடம் ஓர் உணவுவிரிப்பில் இறைச்சி வைக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்ணமுற்பட்டபோது அவர்களிடம் மைமூனா (ரலி) அவர்கள், "இது உடும்புக் கறி" என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தை எடுத்துக்கொண்டார்கள்.
மேலும் "இந்த இறைச்சியை நான் ஒருபோதும் உண்டதில்லை" என்று கூறிவிட்டு, அங்கிருந்தவர்களிடம், "நீங்கள் உண்ணுங்கள்" என்றார்கள்.
எனவே, அதை ஃபள்ல் (ரலி) அவர்களும் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களும் அந்தப் பெண்ணும் உண்டனர். மைமூனா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை உண்பார்களோ அதைத் தவிர வேறெதையும் நான் உண்ணமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.
அத்தியாயம் : 34
3946. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்பு (இறைச்சி) கொண்டுவரப்பட்டது. அதை அவர்கள் உண்ண மறுத்துவிட்டார்கள். மேலும், "எனக்குத் தெரியவில்லை. இது, (முந்தைய சமுதாயத்தார்) உருமாற்றப்பட்ட தலைமுறைகளில் உள்ளவையாக இருக்கலாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3947. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் உடும்பைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் "அதை உண்ணாதீர்கள்" என்று கூறியதுடன் அதை அருவருப்பாகவும் கருதினார்கள். மேலும் "நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கிறான். ஏனெனில், பொதுவாக இடையர்களின் உணவு அதுதான். அது என்னிடம் இருந்திருந்தால் அதை நானும் உண்பேன்" என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றார்கள்.
அத்தியாயம் : 34
3948. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உடும்புகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். எனவே, அதைப் பற்றி எங்களுக்கு என்ன "கட்டளையிடுகிறீர்கள்?" அல்லது "தீர்ப்பளிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் சிலர் (உயிர்ப் பிராணிகளாக) உருமாற்றப்பெற்றனர் என என்னிடம் கூறப்பட்டது" என்று கூறினார்கள். அதை உண்ணும்படி கட்டளையிடவுமில்லை;உண்ண வேண்டாமெனத் தடை செய்யவுமில்லை.
அதன் பின்னர் உமர் (ரலி) அவர்கள், "வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அதன் மூலம் பலருக்குப் பயனளிக்கிறான். இது இந்த இடையர்களில் பெரும்பாலோரின் உணவாகும். அது என்னிடம் இருந்திருந்தால் அதை நான் உண்டிருப்பேன். (தனிப்பட்ட முறையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனம் அதை விரும்பவில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 34
3949. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் உடும்புகள் நிறைந்த பள்ளமான பகுதியில் வசிக்கிறேன். உடும்புதான் என் குடும்பத்தாரின் பொதுவான உணவாகும்" என்று கூறினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் அந்தக் கிராமவாசியிடம், "நபியவர்களிடம் மறுபடியும் கேள்" என்று சொன்னோம். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. இவ்வாறு மூன்று முறை நடந்தது.
மூன்றாவது முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்து, "கிராமவாசியே! அல்லாஹ், பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாரில் ஒரு கூட்டத்தாரைச் சபித்தான்; அல்லது கோபப்பட்டான். அவர்களைப் பூமியில் ஊர்ந்து செல்லும் பிராணிகளாக மாற்றிவிட்டான். எனவே, இது (உடும்பு) அவர்களாயிருக்குமோ என்பது எனக்குத் தெரியாது. எனவே, அதை நான் உண்ணவுமாட்டேன்; அதை (உண்ண வேண்டாமென)த் தடை செய்யவுமாட்டேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 34
பாடம் : 8 வெட்டுக்கிளியை உண்ணலாம்.
3950. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஏழு போர்களில் கலந்துகொண்டோம். (அப்போது) நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஏழு போர்களில் (கலந்துகொண்டோம்)" என்று இடம்பெற்றுள்ளது.
இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆறு (போர்களில் கலந்து கொண்டோம்)" என்று இடம்பெற்றுள்ளது.
இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆறு அல்லது ஏழு (போர்களில் கலந்துகொண்டோம்)" என்று இடம் பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "ஏழு போர்களில்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 9 முயலை உண்ணலாம்.
3951. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "மர்ருழ் ழஹ்ரான்" எனும் இடத்தைக் கடந்து சென்றபோது முயல் ஒன்றைத் துரத்திச் சென்றோம்.மக்கள் அதைப் பிடிக்க முயன்று களைத்துவிட்டனர். நான் அதை விரட்டிச் சென்று பிடித்துவிட்டேன். அதை (என் தாயின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களிடம் கொண்டுவந்தேன். அவர்கள் அதை அறுத்து அதன் சப்பையையும் இரு தொடைகளையும் (அன்பளிப்பாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (கொடுக்குமாறு) அனுப்பிவைத்தார்கள். அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அதன் சப்பையை அல்லது இரு தொடைகளை (அனுப்பிவைத்தார்கள்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 10 வேட்டையாடுவதற்கும், எதிரிகளை எதிர்கொள்வதற்கும், வேண்டிய பயிற்சிகளை மேற்கொள்வது அனுமதிக்கப்பட்டதாகும். கல்சுண்டு விளையாட்டு வெறுக்கப்பட்டதாகும்.
3952. அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் சிறிய கற்களைச் சுண்டி (விளையாடி)க்கொண்டிருந்த என் தோழர் ஒருவரைக் கண்டேன். அவரிடம், "கற்களைச் சுண்டி விளையாடாதே! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சிறிய கற்களைச் சுண்டியெறிவதை வெறுத்து வந்தார்கள்" அல்லது "சிறிய கற்களைச் சுண்டியெறிய வேண்டாமெனத் தடுத்து வந்தார்கள்". அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் வேட்டைப் பிராணிகள் வேட்டையாடப்படுவதோ எதிரிகள் வீழ்த்தப் படுவதோ கிடையாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)" என்று சொன்னேன்.
அதன் பிறகு ஒரு முறை அதே தோழர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து "விளையாடுவதை வெறுத்து வந்தார்கள்" அல்லது "அதைத் தடை செய்துவந்தார்கள்" என்று நான் உன்னிடம் சொல்கிறேன். பிறகு (மறுபடியும்) நீ சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடுவதைக் காண்கிறேனே! நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்" என்று கூறினேன்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3953. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடை விதித்தார்கள்" என்று அப்துல்லாஹ் பின் அல் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் அது எதிரியை வீழ்த்திவிடவோ வேட்டைப் பிராணியை வேட்டையாடிவிடவோ செய்வதில்லை. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம்" என்று கூறினார்கள்" என்றும் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது எதிரியை வீழ்த்தி விடாது" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "கண்ணைப் பறித்துவிடலாம்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 34
3954. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தம் நண்பர் ஒருவர் சிறிய கற்களைச் சுண்டி விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்ட அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள், அவ்வாறு விளையாட வேண்டாமெனத் தடுத்தார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடைசெய்தார்கள். அவ்வாறு சுண்டியெறிவதால் எந்தப் பிராணியையும் வேட்டையாடவும் முடியாது; எந்த எதிரியையும் வீழ்த்தவும் முடியாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம் என்று கூறினார்கள்" என்றார்கள்.
பிறகு மறுபடியும் அந்த நண்பர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடினார். அப்போது அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று நான் உனக்குச் சொல்கிறேன். நீ மறுபடியும் சிறிய கற்களைச் சுண்டியெறிகிறாயே! (இனி) நான் உன்னிடம் ஒருபோதும் பேசமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 11 பிராணிகளை அறுக்கும்போதும், (மரண தண்டனைக் கைதிகளுக்கு) மரண தண்டனை நிறைவேற்றும் போதும் எளிய முறையைக் கையாளுமாறும், கத்தியை கூர்மையாகத் தீட்டிக் கொள்ளுமாறும் வந்துள்ள கட்டளை.
3955. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.
- மேற்கண்ட ஹதீஸ் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வது தடை செய்யப்பட்டதாகும்.
3956. ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு தடவை) என் பாட்டனார் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் துணை ஆளுநரான) ஹகம் பின் அய்யூபின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு சிலர், கோழியொன்றைக் கட்டி வைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்தனர். இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள், "விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்காதீர்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3957. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், கோழி ஒன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்து கொண்டிருந்த சிலரைக் கடந்து சென்றார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சிதறியோடிவிட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்கள், பறவையொன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்த குறைஷி இளைஞர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் (குறி) தவறவிடும் அம்புகள் ஒவ்வொன்றும் பறவையின் உரிமையாளருக்கு உரியவை என முடிவு செய்திருந்தனர்.
இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அவர்கள் சிதறியோடிவிட்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சபித்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்கியவனைச் சபித்தார்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3958. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிர் பிராணியும் கட்டிவைத்துக் கொல்லப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34