பாடம் : 1 பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் மூலம் வேட்டையாடுதல்.
3899. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்...) சொல்லி அனுப்புகிறேன். அவை எனக்காக (வேட்டையாடி)க் கவ்விப் பிடிக்கின்றன (அவற்றை நான் உண்ணலாமா?)" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டு வருவதை) நீங்கள் உண்ணுங்கள்" என்று பதிலளித்தார்கள்.
நான், "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?" என்று கேட்டேன். "(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே (அதை நீங்கள் உண்ணுங்கள்); நீங்கள் அனுப்பாத மற்றொரு நாய் அவற்றுடன் கூட்டுச் சேராதவரை (உண்ணலாம்)" என்றார்கள்.
நான், "இறகு இல்லாத அம்பை ("மிஅராள்") வேட்டைப் பிராணியின் மீது நான் எய்கிறேன். அது வேட்டைப் பிராணியைத் தாக்கிவிடுகிறது (அதை நான் உண்ணலாமா)?" என்று கேட்டேன். "நீங்கள் இறகு இல்லாத அம்பை எய்ய,அது (தனது கூர்முனையால்) குத்தி (வீழ்த்தி)யதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3900. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்" என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன்.
அதற்கு அவர்கள், "பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை, அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பியிருந்தால், உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்;அவற்றை அவை கொன்றுவிட்டாலும் சரியே! (ஆனால்,) அந்த நாயே தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காகவே கவ்வி வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் உங்கள் நாய்களுடன் கூட்டுச்சேர்ந்திருந்தாலும் (அவை வேட்டையாடியவற்றை) உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3901. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பைக் குறித்து (அதன் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியை உண்ணலாமா என)க் கேட்டேன். அதற்கு அவர்கள், "அம்பின் முனைப் பகுதி பிராணியைத் தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதி தாக்கிச் செத்திருந்தால், அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (போல்) தான். எனவே, அதை உண்ணாதீர்கள்" என்று சொன்னார்கள்.
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (பயிற்சியளிக்கப்பட்ட) நாய் (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணியைக்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அனுப்பியிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் உண்ணலாம். அந்தப் பிராணியிலிருந்து சிறிதளவை அந்த நாய் தின்றுவிட்டிருந்தால், அதை உண்ணாதீர்கள். ஏனென்றால், அது தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது" என்று பதிலளித்தார்கள்.
"நான் அனுப்பிய நாயுடன் மற்றொரு நாயைக் கண்டேன். அவற்றில் எது அந்தப் பிராணியைக் கவ்விப் பிடித்தது என்று எனக்குத் தெரியவில்லை (அப்போது நான் என்ன செய்வது?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். மற்றொரு நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பு (மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன்" என்றே ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 34
3902. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இறகு இல்லாத அம்பின் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்துக் கேட்டேன். அவர்கள், "பிராணி அம்பின் கூர்முனையால் தாக்கப்பட்டிருந்தால் அதை உண்ணுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்குண்டு செத்திருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதை உண்ணாதீர்கள்)" என்று பதிலளித்தார்கள்.
(பயிற்சியளிக்கப்பட்ட) நாய்கள் மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்தும் அவர்களிடம் நான் கேட்டேன். அவர்கள், "உங்களுக்காக அவை கவ்விப் பிடித்துவைத்து, அதிலிருந்து எதையும் தின்னாமல் இருந்தால் நீங்கள் உண்ணுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் கவ்விப் பிடிப்பதே, (முறைப்படி) அறுப்பதாகிவிடும்.
உங்களது நாயுடன் வேறொரு நாயை நீங்கள் கண்டு, அந்த வேறொரு நாய் உங்கள் நாயுடன் அந்தப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் உங்கள் நாயை மட்டுமே அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பினீர்கள். வேறொரு நாயை அவ்வாறு கூறி நீங்கள் அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3903. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கில் உள்ள) "நஹ்ரைன்" எனும் இடத்தில் எங்கள் அண்டை வீட்டாராகவும், உற்ற நண்பராகவும், (வழிபாடுகளில்) மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும் இருந்த அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபி (ஸல்) அவர்களிடம், "நான் எனது (வேட்டை) நாயை (அல்லாஹ்வின் பெயர் சொல்லி) அனுப்புகிறேன். எனது நாயுடன் வேறொரு நாயை, (வேட்டைப் பிராணியைப்) பிடித்த நிலையில் நான் காண்கிறேன். அவற்றில் எது வேட்டைப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியவில்லை (இந்த நிலையில் நான் என்ன செய்வது)?" என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதை உண்ணாதீர்கள். ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பியது உங்கள் நாயைத்தான். வேறொரு நாயை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்பவில்லை" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3904. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களது (வேட்டை) நாயை அனுப்ப, அது வேட்டைப் பிராணியைப் பிடித்து உயிருடன் வைத்திருப்பதை நீங்கள் கண்டால், அதை (முறைப்படி) நீங்கள் அறுத்து உண்ணலாம். அது வேட்டைப் பிராணியைப் பிடித்துத் தின்றுவிடாமல் கொன்று விட்டிருப்பதை நீங்கள் கண்டால் அதையும் நீங்கள் உண்ணலாம்.
உங்கள் நாயுடன் வேறொரு நாயும் (வேட்டைப் பிராணியைக்) கொன்றுவிட்ட நிலையில் இருப்பதை நீங்கள் கண்டால்,அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அந்தப் பிராணியைக் கொன்றது என்பது உங்களுக்குத் தெரியாது.
நீங்கள் உங்கள் அம்பை அல்லாஹ்வின் பெயர் கூறி (வேட்டைப் பிராணியை நோக்கி) எய்ய, அது ஒரு நாள் அளவுக்கு உங்களை விட்டு மறைந்துவிட்டது. ஒரு நாள் கழித்து உங்கள் அம்பின் அடையாளம் அதில் இருக்க நீங்கள் கண்டால்,விரும்பினால் அதை நீங்கள் உண்ணலாம். அந்தப் பிராணி தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதை நீங்கள் கண்டால் அதை உண்ணாதீர்கள்.
அத்தியாயம் : 34
3905. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேட்டைப் பிராணிகள் குறித்து வினவினேன். அவர்கள், "நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்கள் அம்பை எய்ய, அது சென்று பிராணியைத் தாக்கிக் கொன்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணலாம்; அந்தப் பிராணி தண்ணீரில் விழுந்து கிடக்கும் நிலையில் அதை நீங்கள் கண்டால் தவிர! (அப்போது அதை உண்ணாதீர்கள்.) ஏனெனில், தண்ணீரில் விழுந்ததால் அது செத்ததா, அல்லது உங்கள் அம்பு தாக்கி அது செத்ததா என்பது உங்களுக்குத் தெரியாது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 34
3906. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் வசிக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் சாப்பிடுகிறோம். மேலும், வேட்டைப் பிராணிகள் நிறைந்த ஒரு பகுதியில் வசிக்கிறோம். நான் எனது வில்லாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்பட்ட எனது நாயாலும் வேட்டையாடுகிறேன். பயிற்சியளிக்கப்படாத நாயாலும் வேட்டையாடுகிறேன். இவற்றில் எது எங்களுக்கு அனுமதிக்கப்பட்டது என்பதை எனக்குத் தெரிவியுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:
வேதம் வழங்கப்பெற்றவர்களின் நாட்டில் நீங்கள் வசிப்பதாகவும் அவர்களுடைய பாத்திரங்களில் உண்பதாகவும் நீங்கள் சொன்னதைப் பொறுத்தமட்டில், அவர்களுடைய பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால்,அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் உண்ணாதீர்கள். (வேறு பாத்திரம்) உங்களுக்குக் கிடைக்காவிட்டால், அதைக் கழுவிவிட்டு, பின்னர் அதில் உண்ணுங்கள்.
வேட்டைப் பிராணிகள் நிறைந்த பகுதியில் நீங்கள் வசிப்பதாகச் சொன்னதைப் பொறுத்தவரை, உங்கள் வில்லால் வேட்டையாடியதை நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி (அறுத்து) உண்ணலாம். (அவ்வாறே) பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயின் மூலம் வேட்டையாடியதையும் அல்லாஹ்வின் பெயர் கூறி நீங்கள் உண்ணலாம்.
பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயின் மூலம் நீங்கள் வேட்டையாடியது அறுப்பதற்கு ஏதுவாக (உயிர் பிரியாத நிலையில்) உங்களுக்குக் கிடைத்தால், அதை (முறைப்படி அறுத்து) நீங்கள் உண்ணலாம்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு வஹ்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், வில்லால் வேட்டையாடப்பட்ட பிராணியைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 34
பாடம் : 2 (அம்பு எய்த பின்) மறைந்துபோன வேட்டைப் பிராணி பிறகு கிடைத்தால்...?
3907. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் அம்பினால் நீங்கள் எய்த பின் வேட்டைப்பிராணி மறைந்து, பின்னர் (இறந்த நிலையில்) அதை நீங்கள் கண்டால், நாற்றமடிக்காமல் இருக்கும்வரை அதை நீங்கள் உண்ணலாம்.
இதை அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 34
3908. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(காயமடைந்த) வேட்டைப் பிராணி (இறந்த நிலையில்) மூன்று நாட்கள் கழித்து கிடைத்தால், நாற்றமடிக்காமல் இருக்கும் வரை அதை நீங்கள் புசிக்கலாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 34
3909. மேற்கண்ட ஹதீஸ் அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நாற்றமடிக்காமல் இருக்கும்வரை" எனும் குறிப்பு இடம்பெறவில்லை. "நாய் வேட்டையாடிய பிராணி, மூன்று நாட்கள் கழித்துக் காணப்பட்டால், நாற்றமடிக்காமல் இருக்கும்வரை அதை நீங்கள் உண்ணலாம். அவ்வாறு நாற்றமடித்துவிட்டால் அதை (உண்ணாதீர்கள்.) விட்டுவிடுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 3 கோரைப் பற்கள் உடைய விலங்குகளையும் கோரை நகங்கள் உடைய பறவைகளையும் உண்பதற்கு வந்துள்ள தடை.
3910. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் ஷாம் (சிரியா) நாட்டை சென்றடையும்வரை இந்த ஹதீஸைக் கேள்விப்படவில்லை.
அத்தியாயம் : 34
3911. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இந்த ஹதீஸை ஹிஜாஸில் உள்ள நம் அறிஞர்களிடமிருந்து செவியுறவில்லை. பின்னர் ஷாம் (சிரியா)வாசிகளின் மார்க்கச்சட்ட அறிஞர்களில் ஒருவரான அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களே எனக்கு இதை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 34
3912. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்ணக்கூடாதெனத் தடை விதித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், யூனுஸ் பின் யஸீத் மற்றும் அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) ஆகியோ ரைத் தவிர மற்றவர்களின் அறிவிப்பில் "உண்ணக்கூடாதென" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. அவ்விருவரின் அறிவிப்பில் "விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள அனைத்துக்கும் தடை விதித்தார்கள்" என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 34
3913. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள எதையும் உண்பது தடை செய்யப்பட்டதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3914. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், விலங்குளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் உள்ள ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாதெனத்) தடை செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 4 கடல்வாழ் உயிரினங்களில் செத்தவற்றை உண்பதற்கு வந்துள்ள அனுமதி.
3915. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்கொள்ள படைப் பிரிவு ஒன்றில் எங்களை அனுப்பினார்கள்.
எங்களுக்கு அபூஉபைதா பின் அல்ஜர் ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். ஒரு பை பேரீச்சம் பழத்தை எங்களுக்குப் பயண உணவாகக் கொடுத்தார்கள். எங்களுக்குக் கொடுக்க வேறெதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அபூஉபைதா (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பேரீச்சம் பழமாக எங்களுக்குக் கொடுத்துவந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்) "அதை வைத்துக்கொண்டு என்ன செய்தீர்கள்? (அது உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்காதே?)" என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்: குழந்தை வாயிலிட்டுச் சுவைப்பதைப் போன்று நாங்களும் அந்தப் பேரீச்சம் பழத்தைச் சுவைப்போம். அதற்கு மேல் தண்ணீரும் அருந்திக்கொள்வோம். அன்றைய பகலிலிருந்து இரவு வரை அதுவே எங்களுக்குப் போதுமானதாயிருக்கும்.
நாங்கள் எங்களிடமிருந்த தடிகளால் கருவேல மரத்தில் அடி(த்து இலை பறி)ப்போம். பிறகு அதைத் தண்ணீரில் நனைத்து அதையும் உண்டோம்.
பிறகு நாங்கள் கடற்கரையோரமாக நடந்தோம். அப்போது கடலோரத்தில் பெரிய மணல் திட்டைப் போன்று ஏதோ ஒன்று எங்களுக்குத் தென்பட்டது. அங்கு நாங்கள் சென்றோம். அங்கே "கொழுப்புத் தலை திமிங்கலம்" (அம்பர்) எனப்படும் ஒரு பிராணி கிடந்தது.
(தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் "செத்ததாயிற்றே?" என்று கூறினார்கள். பிறகு "இல்லை, நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதர்கள் ஆவோம். அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) உள்ளோம். நீங்கள் நிர்ப்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, (இதை) உண்ணுங்கள்" என்று கூறினார்கள்.
அந்தத் திமிங்கலத்தை வைத்துக்கொண்டு நாங்கள் ஒரு மாதம் கழித்தோம். எங்கள் முந்நூறு பேரின் உடலும் வலிமையாகிவிட்டது. நாங்கள் அந்தத் திமிங்கலத்தின் விழிப் பள்ளத்திலிருந்து பெரிய பாத்திரங்கள் மூலம் எண்ணெய் எடுத்தோம். அதன் உடலைக் காளை மாட்டின் அளவுக்குத் துண்டு போட்டோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் பதிமூன்று பேரைத் தேர்ந்தெடுத்து, அதன் விழிப் பள்ளத்தில் உட்காரவைத்தார்கள்.
மேலும், அதன் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து, அதை (பூமியில்) நட்டுவைத்தார்கள். பிறகு எங்களிடமிருந்த ஒரு பெரிய ஒட்டகத்தில் சிவிகை பூட்டி அதில் ஏறி அந்த எலும்பிற்குக் கீழே கடந்துபோனார்கள். (அந்த எலும்பு தலையைத் தொடவில்லை. அந்த அளவுக்குப் பெரியதாக இருந்து.) பிறகு அந்த மீனை (அரை வேக்காட்டில்) வேகவைத்து, பயண உணவாக எடுத்துக்கொண்டோம்.
நாங்கள் மதீனா வந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது அல்லாஹ் உங்களுக்கு வெளிப்படுத்திய உணவாகும். அதில் ஏதேனும் உங்களிடம் மீதியிருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்களேன்!" என்று கேட்டார்கள்.
உடனே நாங்கள் அதிலிருந்து சிறிதளவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினோம். அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3916. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் வாகனங்களில் அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் (படைக்குத்) தளபதியாக இருந்தார்கள்.
நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவொன்றை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையில் அரை மாதம் தங்கினோம். (இந்நாட்களில் உணவுப் பற்றாக் குறையால்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. எனவே,நாங்கள் கருவேல மரத்தின் இலைகளைப் புசித்தோம். ஆகவேதான், அந்தப் படைப்பிரிவு "கருவேலஇலை படைப்பிரிவு" எனப் பெயர் பெற்றது.
இந்த (இக்கட்டான சூழ்)நிலையில் கடல் எங்களுக்கு "அல்அம்பர்" (கொழுப்புத் தலைத் திமிங்கலம்) எனப்படும் (ஒரு வகைக் கடல்வாழ்) உயிரினத்தை ஒதுக்கியது. நாங்கள் அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அ(ந்த மீனைப் புசித்த)தனால் (வலிமையான) உடல்கள் எங்களுக்குத் திரும்பக் கிடைத்தன.
அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த மீனின் விலாஎலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுப் பிறகு,படையிலிருந்த உயரமான மனிதரையும், உயரமான ஒட்டகம் ஒன்றையும் கண்டு(பிடித்து), அவரை அந்த ஒட்டகத்தில் ஏற்றி அனுப்ப, அவர் அந்த எலும்பிற்குக் கீழே (தலை முட்டாமல்) கடந்து சென்றார்.
அந்த மீனுடைய கண்ணின் எலும்புக்குள் ஒருவர் உட்கார்ந்திருந்தார். அதன் விழிப் பள்ளத்திலிருந்து நாங்கள் இப்படி இப்படி பெரிய பாத்திரத்தில் கொழுப்பை எடுத்தோம்.
(அந்தப் பயணத்தின் துவக்கத்தில்) எங்களுடன் ஒரு பை நிறைய பேரீச்சம் பழங்கள் இருந்தன. அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கைப் பிடி பேரீச்சம் பழம் கொடுத்துவந்தார்கள். பிறகு (நாட்கள் செல்லச் செல்ல) ஒவ்வொரு பேரீச்சம் பழம் தந்தார்கள். அதுவும் தீர்ந்து விட்டபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம்.
அத்தியாயம் : 34
3917. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"கருவேல இலை"ப் படைப்பிரிவின் போது, ஒரு மனிதர் (கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள்) மூன்று ஒட்டகங்கள் அறு(த்து உணவளி)த்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்கள் அறுத்தார். பிறகு (அவர் அறுக்க முற்பட்டபோது) அவரை அபூஉபைதா (ரலி) அவர்கள் தடுத்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 34
3918. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களில் முந்நூறு பேரை ஒரு படைப்பிரிவில் அனுப்பினார்கள். நாங்கள் எங்கள் பயண உணவை எங்கள் தோள்களில் சுமந்து எடுத்துச் சென்றோம்.
அத்தியாயம் : 34