312. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்றவாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக(பின்வருமாறு) மக்களுக்கு அறிவித்தார்கள்:
மூசா (அலை) அவர்கள் இறைவனிடம், "சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு இறைவன் கூறினான்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்குள் நுழைந்த பிறகு ஒரு மனிதர் வருவார். அவரிடம் "நீ (சென்று) சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறப்படும். அதற்கு அவர், "இறைவா! எப்படி (நான் நுழைவேன்)? மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களைப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைத்ததை எடுத்துக்கொண்டுவிட்டார்களே?" என்று கூறுவார். அவரிடம், "உலக அரசர்களில் ஒருவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியைப் போன்று உனக்குக் கிடைத்தால் திருப்திதானே?" என்று கேட்கப்படும். அதற்கு அவர் "திருப்தியடைவேன், இறைவா!" என்பார். அப்போது இறைவன், "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும், இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று (நான்கு மடங்கைக்) குறிப்பிடுவான். ஐந்தாம் மடங்கு பற்றிக் கூறும்போது, அவர், "திருப்தியடைந்துவிட்டேன், இறைவா!" என்பார்.
உடனே இறைவன், "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும். உன் மனம் விரும்புகின்ற, உன் பார்வை ரசிக்கின்ற அனைத்தும் உனக்குக் கிடைக்கும்" என்பான். அப்போது அவர், "திருப்தியடைந்தேன், இறைவா!" என்று கூறுவார்.
பின்னர் மூசா (அலை) அவர்கள், "இறைவா! சொர்க்கத்தில் மிக உயர்ந்த தரமுடையவர் யார்?" என்று கேட்டார்கள். அதற்கு இறைவன், "அவர்களை நானே தேர்ந்தெடுத்தேன். அவர்களுக்குரிய தரங்களையும் நானே நேரடியாகத் தீர்மானித்தேன். அவற்றின் மீது நான் முத்திரையும் வைத்துவிட்டேன். எனவே, (அவர்களின் தரத்தை) எந்தக் கண்ணும் பார்த்திராது; எந்தக் காதும் கேட்டிராது. எந்த மனிதனின் உள்ளத்திலும் தோன்றியிராது" என்றான்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் அல்லாஹ்வின் வேதத்தில், "அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குரிய பிரதிபலனாக அவர்களுக்கென மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது" (32:17) என்று இடம் பெற்றுள்ளது.
இது, அறிவிப்பாளர் இப்னு அப்ஜர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன செய்தி (மர்ஃபூஉ) என்றும், முதர்ரிஃப் பின் தரீஃப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் தாமே சொன்ன செய்தி (மவ்கூஃப்) என்றும் இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
313. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் சொர்க்கவாசிகளில் மிகத் தாழ்ந்த தரமுடைய மனிதரைப் பற்றிக் கேட்டார்கள்" என்று முஃகீரா (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 1
314. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும், நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டுவரப்படுவார். அப்போது, "இவர் புரிந்த சிறு பாவங்களை இவருக்கு எடுத்துக் காட்டுங்கள்! இவர் புரிந்த பெரும்பாவங்களை இவரைவிட்டு நீக்கிவிடுங்கள்" என்று கூறப்படும். அவ்வாறே அவருக்கு அவர் புரிந்த சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டு, "நீ இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன (பாவத்)தைச் செய்துள்ளாய்; இன்ன இன்ன நாளில் இன்ன இன்ன பாவத்தைச் செய்துள்ளாய்" என்று கூறப்படும். அவரும் "ஆம்" என்று (ஒப்புதல்) கூறுவார்; அவரால் எதையும் மறுக்க முடியாது. தாம் புரிந்துவிட்டிருக்கும் பெரும் பாவங்கள் தம்மிடம் எடுத்துக் காட்டப்பட்டுவிடுமோ என்றும் அஞ்சிக்கொண்டிருப்பார். இந்நிலையில் அவரிடம், "நீ செய்த ஒவ்வொரு (சிறு) தவறுகளுக்கும் ஈடாக ஒரு நன்மை உனக்கு உண்டு" என்று கூறப்படும். அப்போது அவர், "இறைவா! நான் இன்னும் பல (பெரும் பாவச்) செயல்களைப் புரிந்திருந்தேனே! அவற்றையெல்லாம் இங்கு நான் காணவில்லையே!" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 1
315. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
316. அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் ("உங்களில் யாரும் அங்கு -நரகத்திற்கு- வராமல் இருக்க முடியாது" எனும் (19:71ஆவது) வசனத்தில் இடம்பெற்றுள்ள) "வருதல்" பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:
மறுமை நாளில் நாம் இப்படி இப்படி -அதாவது எல்லா மக்களுக்கும் மேல் (உயரமான குன்றின் மீது)- வருவோம். அப்போது ஒவ்வொரு சமுதாயத்தாரும் அவரவர் தெய்வச் சிலைகளுடனும் அவர்கள் வழிபட்டுவந்தவையுடனும் அழைக்கப்படுவர். முதலில் முதல் சமுதாயம், அடுத்து அதற்கடுத்த சமுதாயம் (என வரிசை முறையுடன் அழைக்கப்படுவார்கள்). பிறகு நம்மிடம் நம் இறைவன் வந்து "நீங்கள் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர்கள்?" என்று கேட்பான். அப்போது (ஓரிறை நம்பிக்கையுள்ள) மக்கள், "நாங்கள் எங்கள் இறைவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளிப்பார்கள். உடனே, அவன், "நான்தான் உங்கள் இறைவன்" என்பான். மக்கள் "நாங்கள் உன்னை (நேரடியாகப்) பார்க்காதவரை (உறுதி கொள்ளமாட்டோம்)" என்று கூறுவார்கள். ஆகவே, இறைவன் சிரித்தபடி அவர்களிடையே காட்சியளிப்பான். அவர்களை அழைத்துக்கொண்டு நடப்பான். அவர்களும் அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். அப்போது அவர்களிலுள்ள நம்பிக்கையாளர் (முஃமின்), நயவஞ்சகர் (முனாஃபிக்) ஆகிய ஒவ்வொருவருக்கும் ஓர் ஒளி வழங்கப்படும். அவர்கள் அந்த ஒளியைப் பின்தொடர்ந்து செல்வார்கள். நரகத்தின் (மேல் அமைக்கப்பட்டிருக்கும்) பாலத்தின் மீது கொக்கிகளும் முட்களும் இருக்கும். அவை அல்லாஹ் நாடிய சிலரை (அவரவர் தீமைகளுக்கேற்ப) கவ்விப் பிடிக்கும். பிறகு நயவஞ்சகர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒளி அணைக்கப்பட்டுவிடும். அதன் பிறகு (அந்தப் பாலத்தைக் கடந்து) நம்பிக்கையாளர்கள் மட்டும் தப்பிச்செல்வார்கள். (அவர்களில்) தப்பிச்செல்லும் முதல் கூட்டத்தாரின் முகங்கள் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்று ஒளிரும்; அவர்கள் எழுபதாயிரம் பேர் இருப்பர்; அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்தப்படாது. பிறகு அவர்களைத் தொடர்ந்துவரும் கூட்டத்தார் வானத்துத் தாரகைகள் போன்று ஜொலிப்பர். இவ்வாறே அடுத்தடுத்து வருபவர்களும் (அவர்களது நன்மைகளுக்கேற்ப இலங்குவர்).
பிறகு பரிந்துரை (ஷஃபாஅத்) நடைபெறும். "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை உள்ளதோ அவர் நரகத்திலிருந்து வெளியேறும்வரை (பரிந்துரைக்கு அனுமதி பெற்றவர்கள்) பரிந்துரைப்பார்கள். அ(ப்போது நரகத்திலிருந்து வெளியேற்றப்படுப)வர்கள் சொர்க்கத்தின் முற்றத்தில் வைக்கப்படுவார்கள். அவர்கள்மீது சொர்க்கவாசிகள் (ஜீவ) நீரைத் தெளிப்பார்கள். முடிவில் வெள்ளத்தில் வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (பொலிவுடன்) அவர்கள் எழுவார்கள். அத்தகையவர் மீதிருந்த தீக்காயங்கள் மறைந்துவிடும். பிறகு அவர் தமக்கு இந்த உலகமும் இன்னும் அதைப் போன்று பத்து மடங்கும் (சொர்க்கத்தில் தமக்குரியதாக) ஆக்கப்படும்வரை வேண்டிக்கொண்டேயிருப்பார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
317. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மக்களில் சிலரை அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றி,சொர்க்கத்திற்குள் அனுப்புவான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் என் காதுபடக்கேட்டேன்.
அத்தியாயம் : 1
318. ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், "மக்களில் சிலரைப் பரிந்துரையின் பேரில் அல்லாஹ் நரகத்திலிருந்து வெளியேற்றுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிப்பதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
319. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மக்களில்) சிலர் தம் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர மற்ற (அங்கங்கள்) யாவும் கரிந்துவிட்டிருக்கும் நிலையில் நரகநெருப்பிலிருந்து வெளியேறி, சொர்க்கத்திற்குள் நுழைவார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
320. யஸீத் அல்ஃபகீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
காரிஜிய்யாக்களின் கொள்கைகளில் ஒன்று என் உள்ளத்தை உறுத்திக்கொண்டேயிருந்தது. இந்நிலையில் (கணிசமான) எண்ணிக்கை கொண்ட ஒரு குழுவாக நாங்கள் ஹஜ் செய்துவிட்டுப் பிறகு (காரிஜிய்யாக்களின் அக்கொள்கை குறித்து விவாதிக்க) மக்களிடம் புறப்பட்டுச் செல்லத் தீர்மானித்தோம். அப்(பயணத்தின்)போது நாங்கள் மதீனாவைக் கடந்துசென்றோம். அங்கு ஒரு தூண் அருகில் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அமர்ந்துகொண்டு மக்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய செய்திகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்போது "நரக விடுதலை பெறுவோர்" பற்றியும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
நான், "இறைத்தூதரின் தோழரே! நீங்கள் இவ்வாறு கூறுகின்றீர்கள்? அல்லாஹ்வோ, "நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்" (3:192) என்றும், "அவர்கள் அ(ந்த நரகத்) திலிருந்து வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்படுவார்கள்" (32:20) என்றும் கூறுகின்றானே? ஆனால், நீங்களோ வேறுவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே?" என்று கேட்டேன்.
அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், "நீங்கள் குர்ஆனை ஓதிவருபவர்தாமே?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். "அவ்வாறாயின், நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களின் உயர் தகுதியைப் பற்றி -அதாவது நபியவர்களை அல்லாஹ் ("மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திற்கு) அனுப்புவானே அதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்" என்றேன். அப்போது அவர்கள், "அந்த "மகாமு மஹ்மூத்" எனும் உயர் இடத்திலிருந்து கொண்டுதான் நபி (ஸல்) அவர்களின் மூலம் அல்லாஹ் சிலரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுவான்" என்று கூறிவிட்டு, பிறகு "ஸிராத்" எனும் பாலம் அமைக்கப்படுவது பற்றியும் அதைக் கடந்து மக்கள் செல்வது பற்றியும் விவரித்தார்கள். மேலும் "இதை நான் நினைவிலிருத்தாதவனாக ஆகிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்" என்றும் குறிப்பிட்டார்கள்.
மேலும், "ஆயினும், சிலர் நரகத்திலிருந்த பின் அங்கிருந்து வெளியேறுவார்கள்- அதாவது எள்ளுச் செடியின் குச்சிகளைப் போன்று (கரிய நிறத்தில் கருகி) வெளியேறுவார்கள். பிறகு சொர்க்க நதிகளில் ஒன்றில் நீராடுவார்கள். அதையடுத்து வெள்ளைத் தாள்களைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள்" என்று கூறினார்கள்.
நாங்கள் "(காரிஜிய்யாக்களே!) உங்களுக்கு நாசம் உண்டாகட்டும். இந்த மூதறிஞர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கிறார் என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?" என்று சொல்லிக்கொண்டே (அங்கிருந்து) திரும்பினோம். அல்லாஹ்வின் மீதாணையாக! (பரிந்துரையும் நரக விடுதலையும் உண்டு எனும் எங்கள் கொள்கையிலிருந்து) எங்களில் ஒரேயொரு மனிதரைத் தவிர வேறெவரும் விலகிவிடாத நிலையில் நாங்கள் (ஹஜ்ஜிலிருந்து) திரும்பினோம்.
(முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகின்றேன்:)
(ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாஇர் (ரஹ்) அவர்கள், அபூநுஐம் ஃபள்ல் பின் துகைன் (ரஹ்) அவர்களிடமிருந்து இவ்வாறுதான் எனக்கு அறிவித்தார்கள் என்று நான் கருதுகிறேன்.) அல்லது அபூநுஐம் (ரஹ்) அவர்கள் எவ்வாறு கூறினார்களோ அவ்வாறு.
அத்தியாயம் : 1
321. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறுதிக் கட்டத்தில்) நான்கு பேர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேறுவார்கள். அந்நால்வரும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவார்கள். அப்போது அவர்களில் ஒருவர் (நரகத்தை நோக்கித்) திரும்பி, "இறைவா! இ(ந்தக் கொடிய நரகத்)திலிருந்து என்னை நீ வெளியேற்றிய பின் மீண்டும் அதற்குள் என்னை அனுப்பிவிடாதே!" என்று கூறுவார். அதையடுத்து அல்லாஹ் அதிலிருந்து அவரைக் காப்பாற்றுவான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
322. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் மக்களை ஒன்று கூட்டுவான். அப்போது அவர்கள் "(அமளிகள் நிறைந்த) அந்த நாளைப் பற்றி (அதிலிருந்து விடுபடும் வழிவகை குறித்து) கவலையோடு யோசிப்பார்கள்" அல்லது "அது குறித்த எண்ணம் அவர்களது உள்ளத்தில் ஏற்படுத்தப்படும்". ஆகவே, அவர்கள் "(அதி பயங்கரமான) இந்த நிலையிலிருந்து நம்மை விடுவிக்க நம் இறைவனிடம் பரிந்துரைக்கும்படி (யாரையாவது) நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே!" என்று கூறியவாறு (ஆதி மனிதரும் ஆதித் தூதருமான) ஆதம் (அலை) அவர்களிடம் வருவார்கள். அவரிடம் "நீங்கள்தாம் மனித குலத்தின் தந்தை ஆவீர்கள்; அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்தான். தன்(னால் படைக்கப்பட்ட) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். மேலும், தன் வானவர்களுக்கு அவன் கட்டளையிட, அவர்கள் உங்களுக்குச் சிரம்பணிந்தனர். ஆகவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலிருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்கள் இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை (ஷஃபாஅத்) செய்யுங்கள்" என்று கூறுவார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறியவாறு, (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்துப் பார்த்து தம் இறைவனுக்கு முன் அதற்காக வெட்கப்படுவார்கள். பிறகு, "நீங்கள் (எனக்குப் பின் முக்கிய) முதல் தூதராக இறைவன் அனுப்பிவைத்த நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள், நூஹ் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அன்னாரும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, (உலகில்) தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். மேலும், "அல்லாஹ் தன்னுடைய உற்ற நண்பராக்கிக் கொண்ட (நபி) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவன் முன் வெட்கப்படுவார்கள். மேலும், "நீங்கள் அல்லாஹ் உரையாடிய, தவ்ராத் (வேதத்)தையும் வழங்கிய (நபி) மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், மூசா (அலை) அவர் களிடம் செல்வார்கள். அன்னாரும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறி, தாம் புரிந்துவிட்ட தவறை நினைத்து அதற்காகத் தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். மேலும், "நீங்கள் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்" என்று கூறி விடுவார்கள். உடனே மக்கள், அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையுமான (நபி) ஈசாவிடம் செல்ல, அவர்களும் "(நீங்கள் நினைக்கும்) அந்த இடத்தில் நான் இல்லை" என்று கூறிவிடுவார்கள். "எனவே, நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான (நபி) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள், என்னிடம் வருவார்கள். அப்போது நான் என் இறைவனிடத்தில் அனுமதி கேட்பேன். எனக்கு அனுமதி அளிக்கப்படும். இறைவனை நான் கண்டதும் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அவன் நாடிய நேரம்வரை (அப்படியே) என்னை விட்டுவிடுவான். பிறகு (இறைவனின் தரப்பிலிருந்து) "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். உடனே நான் எனது தலையை உயர்த்தி என் இறைவன் எனக்குக் கற்றுத்தரும் புகழ்மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு, நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன் (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பின்னர் அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். பின்னர் மீண்டும் நான் (இறைவனிடம்) சென்று சிரம்பணிந்து விழுவேன். இறைவன் தான் நாடும் நேரம்வரை (அப்படியே) என்னை விட்டுவிடுவான். பிறகு "முஹம்மதே, உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். நானும் அவ்வாறே என் தலையை உயர்த்தி, என் இறைவன் எனக்கு அப்போது கற்றுத்தருகின்ற புகழ்மொழிகளைக் கூறி அவனை நான் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். (நான் யார் யாருக்குப் பரிந்துரைக்கலாம் என்பதை வரையறுத்து) எனக்கு அவன் வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் நரகத்திலிருந்து வெளியேற்றி, சொர்க்கத்திற்கு அனுப்பிவைப்பேன். (இதைப் போன்றே மூன்று அல்லது நான்கு முறை நடக்கும்.)
அறிவிப்பாளர் கூறுகிறார்: மூன்றாவது முறையிலா, அல்லது நான்காவது முறையிலா என்று தெரியவில்லை; நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "என் இறைவா! குர்ஆன் தடுத்துவிட்டவர்கள் -அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், இப்னு உபைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) கூறப்பட்டுள்ளது: கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள், "குர்ஆன் தடுத்துவிட்டவர்களைத் தவிர" என்பதற்கு விளக்கமாக "நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
323. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், "மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி..." என்று தொடங்கி, இறுதியில் "பிறகு நான் நான்காம் முறையும் இறைவனிடம் "சென்று" அல்லது திரும்பிப்போய்", "என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
324. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்களை ஒன்றுகூட்டுவான். அப்போது அவர்களுடைய உள்ளத்தில் (பரிந்துரைக்கும்படி யாரையாவது நாம் கேட்டுக்கொண்டால் நன்றாயிருக்குமே" எனும்) எண்ணம் ஏற்படுத்தப்படும்.
மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
இந்த அறிவிப்பிலும் "நான்காம் முறை நான் "என் இறைவா, குர்ஆன் தடுத்து விட்டவர்களைத் தவிர - அதாவது நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்களைத் தவிர- வேறு யாரும் நரகத்தில் எஞ்சியிருக்கவில்லை" என்று கூறுவேன்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
325. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறிய எவரது உள்ளத்தில் வாற்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறிய எவரது உள்ளத்தில் மணிக்கோதுமையளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப் படுவார். பிறகு "லா இலாஹ இல்லல்லாஹ்" எனக் கூறிய எவரது உள்ளத்தில் அணுவளவு அளவு நன்மை இருக்குமோ அவர் (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றப்படுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
முஹம்மத் பின் மின்ஹால் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அறிவிக்கும்போது (பின் வருமாறு) யஸீத் பின் ஸுரைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாகக் குறிப்பிட்டார்கள்:
நான் ஷுஅபா (ரஹ்) அவர்களைச் சந்திக்கும்போது இந்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது ஷுஅபா (ரஹ்) அவர்கள், "இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும், அன்னாரிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்களும் எமக்கு அறிவித்தார்கள்" என்றார்கள். ஆனால், ஷுஅபா (ரஹ்) அவர்கள் ("அணுவளவு என்பதைக் குறிக்க,) "தர்ரா" எனும் சொல்லுக்கு பதிலாக "துரா" எனும் சொல்லைக் கூறியுள்ளார்கள். அபூபிஸ்தாம் (என்ற ஷுஅபா) அவர்கள்தாம் இவ்வாறு மாற்றியுள்ளார்கள்.
அத்தியாயம் : 1
326. மஅபத் பின் ஹிலால் அல்அனஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(பஸ்ராவாசிகளான) நாங்கள் (அபூஹம்ஸா) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை நோக்கிப் புறப்பட்டோம். (பரிந்துரை குறித்த ஹதீஸை அன்னார் எங்களுக்கு அறிவிக்க) ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்களின் பரிந்துரையை நாடினோம். அனஸ் (ரலி) அவர்கள் "ளுஹா" தொழுது கொண்டிருக்கையில் நாங்கள் அங்கு போய்ச்சேர்ந்தோம். நாங்கள் உள்ளே நுழைய எங்களுக்காக ஸாபித் (ரஹ்) அவர்கள் அனுமதி கேட்டார்கள். பிறகு நாங்கள் உள்ளே நுழைந்தோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் தமது கட்டிலில் ஸாபித் (ரஹ்) அவர்களைத் தம்முடன் அமரவைத்துக்கொண்டார்கள். ஸாபித் (ரஹ்) அவர்கள், "அபூஹம்ஸா! பஸ்ராவைச் சேர்ந்த உங்கள் சகோதரர்கள் பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான ஹதீஸைத் தமக்கு அறிவிக்குமாறு உங்களிடம் கோருகிறார்கள்" என்று சொன்னார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
முஹம்மத் (ஸல்) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள்: (பீதி நிறைந்த) மறுமை நாள் நிகழும்போது மக்கள் சிலர் சிலரோடு அலைமோதுவார்கள். அப்போது மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வந்து, "உங்கள் வழித்தோன்றல்களுக்காக நீங்கள் பரிந்துரை செய்யுங்கள்" என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் உற்ற நண்பர் ஆவார்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்வார்கள். அப்போது இப்ôôஹீம் (அலை) அவர்களும், "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் மூசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்விடம் உரையாடியவர் ஆவார்" என்று கூறுவார்கள்.
உடனே (பரிந்துரை பற்றிய மக்களின் கோரிக்கை) மூசா (அலை) அவர்களிடம் கொண்டு செல்லப்படும். மூசா (அலை) அவர்களும், "அந்தத் தகுதி எனக்கு இல்லை; நீங்கள் ஈசா (அலை) அவர்களைப் போய்ப்பாருங்கள். ஏனெனில், அவர்தாம் அல்லாஹ்வின் ஆவியும் அவனுடைய வார்த்தையும் ஆவார்" என்று சொல்வார்கள்.
உடனே (மக்களின் கோரிக்கை) ஈசா (அலை) அவர்களிடம் கொண்டுசெல்லப்படும். அப்போது ஈசா (அலை) அவர்களும் "எனக்கு அந்தத் தகுதி இல்லை; நீங்கள் முஹம்மத் (ஸல்) அவர்களை அணுகுங்கள்" என்று கூறுவார்கள். உடனே (மக்களின் கோரிக்கை) என்னிடம் கொண்டுவரப்படும். அப்போது "நான் அதற்குரியவனே" என்று நான் சொல்லிவிட்டுச் சென்று (மக்களுக்காகப் பரிந்துரைக்க) என் இறைவனிடம் அனுமதி கேட்பேன். அப்போது எனக்கு அனுமதி வழங்கப்படும். உடனே நான் இறைவனுக்கு முன்னால் நின்று தற்போது என்னால் சொல்லவியலாத புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன்;அவற்றை அல்லாஹ்வே (அந்த நேரத்தில்) என் எண்ணத்தில் தோன்றச் செய்வான். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம் பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது (இறைவனின் தரப்பிலிருந்து) "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான், "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன்.
அப்போது, "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் மணிக்கோதுமை அல்லது வாற்கோதுமையளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். ஆகவே, நான் சென்று அவ்வாறே செய்வேன். பிறகு மீண்டும் என் இறைவனிடம் வந்து, அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு (அவனைக் காணும்போது) அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போதும், "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போதும் "என் இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது என்னிடம், "செல்லுங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரக) நெருப்பிலிருந்து வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும்.
நான் சென்று அவ்வாறே செய்துவிட்டு, மீண்டும் என் இறைவனிடம் திரும்பிவருவேன். அதே புகழ்மாலைகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பின்னர் அவனுக்காகச் சிரம்பணிந்து விழுவேன். அப்போதும் என்னிடம் "முஹம்மதே, எழுந்திருங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; தரப்படும். பரிந்துரையுங்கள்; ஏற்கப்படும்" என்று கூறப்படும். அதற்கு நான் "என் இறைவா, என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அப்போது "செல்லுங்கள்; எவரது உள்ளத்தில் கடுகுமணியை விட மிக மிகச் சிறியஅளவு இறைநம்பிக்கை இருக்கிறதோ அவரை நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள்" என என்னிடம் சொல்லப்படும். நானும் சென்று அவ்வாறே செய்வேன்.
இதுதான் அனஸ் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த (பரிந்துரை பற்றிய) ஹதீஸாகும். நாங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து (விடைபெற்றுப்) புறப்பட்டோம். நாங்கள் பாலைவன (மணல்)மேட்டுக்கு வந்தபோது, "நாம் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களைச் சந்தித்து சலாம் சொல்லிவிட்டு வந்தால் (நன்றாயிருக்கும்)" என்று பேசிக்கொண்டோம். அன்னார் (அமீர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிற்கு அஞ்சி) அபூகலீஃபா என்பவரின் இல்லத்தில் ஒளிந்திருந்தார்கள். அவ்வாறே நாங்கள் அவர்களிடம் சென்று சலாம் கூறினோம். மேலும், "அபூசயீத்! நாங்கள் உங்கள் சகோதரர் அபூஹம்ஸா (அனஸ்-ரலி) அவர்களிடமிருந்து வந்துள்ளோம். பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பாக அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸைப் போன்று வேறு யாரும் அறிவிக்க நாங்கள் கேட்டதில்லை" என்று கூறினோம்.
அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "எங்கே சொல்லுங்கள்!" என்றார்கள். அந்த ஹதீஸை நாங்கள் அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் "இன்னும் சொல்லுங்கள்!" என்றார்கள். அதற்கு நாங்கள், "இதைவிடக் கூடுதலாக எங்களிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறவில்லை" என்றோம். அதற்கு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்னால் நினைவாற்றலும் உடல்பலமும் மிக்கவராக இருந்தபோது இந்த ஹதீஸை (இன்னும் விரிவாக) எமக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். அதில் சிலவற்றை இப்போது அனஸ் (ரலி) அவர்கள் கூறாமல் விட்டுள்ளார்கள். முதியவரான அன்னார் அதை மறந்துவிட்டார்களா? அல்லது (நபிகளாரின் பரிந்துரை மீது அபரிமிதமான) நம்பிக்கை வைத்துக்கொண்டு (நல்லறங்களில் நாட்டமில்லாமல்) நீங்கள் இருந்து விடுவீர்கள் என்று அஞ்சினார்களா என்று எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள்.
நாங்கள் ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடம், "(அந்தக் கூடுதல் செய்தியை) எங்களுக்குச் சொல்லுங்கள்!" என்றோம். (இதைக் கேட்டவுடன்) ஹசன் (ரஹ்) அவர்கள் சிரித்துவிட்டு, "மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நபிமொழியை உங்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே உங்களிடம் நான் இவ்வாறு குறிப்பிட்டேன்" என்று (சொல்லிவிட்டு, அந்தக் கூடுதல் செய்தியையும்) கூறினார்கள்.
(நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:)
பிறகு நான்காம் முறையும் நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று அதே புகழ்மொழிகளைக் கூறி அவனைப் போற்றுவேன். பிறகு அவனுக்காகச் சிரம்பணிந்தவனாக (சஜ்தாவில்) விழுந்துவிடுவேன். அப்போது, "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள். சொல்லுங்கள்; உங்கள் சொல் செவியேற்கப்படும். கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று கூறப்படும். அப்போது நான், "என் இறைவா! "லா இலாஹ இல்லல்லாஹ்" மொழிந்தவர்கள் விஷயத்தில் (பரிந்துரை செய்ய) எனக்கு அனுமதி வழங்குவாயாக!" என்று கேட்பேன். அதற்கு இறைவன், "அந்த உரிமை உங்களுக்கில்லை" அல்லது "அந்தப் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை". மாறாக, என் வல்லமையின் மீதும், பெருமையின் மீதும், மகத்துவத்தின் மீதும், அதிகாரத்தின் மீதும் ஆணையாக! "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று சொன்னவரை நிச்சயமாக நானே (நரகத்திலிருந்து) வெளியேற்றுவேன்" என்று கூறுவான்.
அறிவிப்பாளர் மஅபத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: "ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை எங்களுக்கு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள்" என்று நான் அறுதியிட்டுக் கூறுகிறேன். மேலும், ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள், "இருபது ஆண்டுகளுக்கு முன்னால் அனஸ் (ரலி) அவர்கள் நினைவாற்றலும் உடல் பலமும் மிக்கவராக இருந்தார்கள். (அப்போது இந்த ஹதீஸை அறிவித்தார்கள்)" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
327. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் (விருந்தொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைச்சி பரிமாறப் பட்டது. அப்போது (சமைக்கப்பட்ட) முன்கால் சப்பை ஒன்று அவர்களிடம் வழங்கப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. (அதை) அவர்கள் தம் பற்களால் கடித்து, அதிலிருந்து சிறிது உண்டார்கள்.
பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்: நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன். அது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? (அந்நாளில்) அல்லாஹ் (மனிதர்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதை அவர்கள் செவியேற்க முடியும். (பார்ப்போரின்) பார்வை அவர்களை ஊடுருவிச் செல்லும். சூரியன் (அவர்களுக்கு) அருகில் வரும். அப்போது மனிதர்களிடம் அவர்களால் தாங்கிக் கொள்ளவோ சகித்துக்கொள்ளவோ இயலாத துன்பங்களும் துயரங்களும் வந்துசேரும். அப்போது மனிதர்களில் சிலர் (சிலரை நோக்கி) "நீங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையைக் கவனிக்கவில்லையா? உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் பார்க்க வில்லையா? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை(த் தேடி)ப் பார்க்கமாட்டீர்களா?" என்று கேட்பார்கள். அப்போது மனிதர்களில் சிலர் வேறு சிலரிடம், "(ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள் (அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார்)" என்பர்.
ஆகவே, மனிதர்கள், ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "ஆதமே, நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள்; உங்களை அல்லாஹ் தனது கரத்தால் படைத்தான். தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை உங்களுக்குள் அவன் ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என்மீது இன்று (கடுங்)கோபம் கொண்டிருக்கிறான். இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. (நான் நெருங்கக்கூடாத ஒரு) மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னை அவன் தடுத்தான். நான் அவனுக்கு மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது" என்று கூறிவிட்டு, "நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் (இறைத்தூதர்) நூஹிடம் செல்லுங்கள்" என்று சொல்வார்கள்.
உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமி(யில் வசிப்பவர்களு)க்கு (அனுப்பப்பெற்ற முக்கியமான) முதலாவது இறைத்தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் "நன்றியுள்ள அடியார்" என்று குறிப்பிட்டுள்ளான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு நூஹ் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போன்று கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் அவன் இதைப் போன்று ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை. (எல்லா நபிமார்களுக்கும் இருப்பதைப் போன்று விசேஷமான) பிரார்த்தனை ஒன்று எனக்கு (வழங்கப்பட்டு) இருந்தது. அதை நான் என் சமுதாயத்தாருக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டேன். நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!" என்று கூறிவிட்டு, "நீங்கள் (இறைவனின் உற்ற நண்பர்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்பார்கள்.
அவ்வாறே மக்களும் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று, "நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசித்தவர்களில் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை" என்று கூறிவிட்டுத் தாம் சொன்ன (மூன்று) பொய்களை நினைவு கூருவார்கள். பிறகு "நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள். (இறைத் தூதர்) மூசாவிடம் செல்லுங்கள்" என்று கூறிவிடுவார்கள்.
உடனே மக்கள் மூசா (அலை) அவர்களிடம் சென்று, "மூசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். தன்னுடைய தூதுவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும் விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான். (ஆகவே,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்திருக்கும் (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்க வில்லையா?" என்று கூறுவார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள் "இன்று என் இறைவன் (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை. கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன். நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. (ஆகவே,) நீங்கள் (இறைத்தூதர்) ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
உடனே மக்கள் ஈசா (அலை) அவர்களிடம் சென்று, "ஈசாவே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள். நீங்கள் (குழந்தையாய்) தொட்டிலில் இருந்தபோதே மக்களிடம் பேசினீர்கள். மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் (ஊதிய) உயிரும் ஆவீர்கள். ஆகவே, எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கேட்பார்கள். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "என் இறைவன் இன்று (என்மீது) கடுங்கோபம் கொண்டுள்ளான். இதற்கு முன்பும் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை. இதற்குப் பின்பும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை- (தாம் புரிந்துவிட்டதாக) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல்- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது; நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள்; நீங்கள் (இறுதித்தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
அப்போது மக்கள் என்னிடம் வந்து, "முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர்; இறைத் தூதர்களில் இறுதியானவர். உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள். நாங்கள் (சிக்கிக்கொண்டு) இருக்கும் (அவல) நிலையையும், எங்களுக்கு நேர்ந்துள்ள (துன்ப) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா?" என்று கூறுவர்.
அப்போது நான் புறப்பட்டு இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று என் இறைவனுக்கு(ப் பணிந்து) சஜ்தாவில் விழுவேன். பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் (உள்ளத்தில்) உதிக்கச் செய்திராத இறைப் புகழ்மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான். பிறகு "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; அது உங்களுக்குத் தரப்படும். பரிந்துரையுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்" என்று சொல்லப்படும். அப்போது நான் என் தலையை உயர்த்தி, "இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம்" என்பேன். அதற்கு "முஹம்மதே! சொர்க்கவாசல்களில் வலப் பக்க வாசல் வழியாக எந்தவிதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள்; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம்" என்று கூறப்படும்.
முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்கவாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்" அல்லது "மக்காவுக்கும் (சிரியாவிலுள்ள) புஸ்ரா எனும் ஊருக்கும்" இடையிலுள்ள தூரமாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
328. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (ஒரு விருந்தில்) தக்கடி ("ஸரீத்") எனும் உணவும் (சமைக்கப்பட்ட) இறைச்சியும் இருந்த ஒரு தட்டு வைக்கப்பட்டது. அப்போது அதிலிருந்து முன்கால் சப்பை ஒன்றை எடுத்துக் கடித்து சிறிது உண்டார்கள். ஆட்டிலேயே அதுதான் அவர்களுக்குப் பிடித்த பகுதியாகும். பிறகு, "நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன்" என்று கூறினார்கள்.
பிறகு இன்னொரு முறை கடித்துவிட்டு, "நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன்" என்று (மீண்டும்) கூறினார்கள். தம் தோழர்கள் அது குறித்து (ஏன்) எவ்வாறு என்று வினவாதததைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எவ்வாறு என்று நீங்கள் வினவமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். உடனே தோழர்கள், "அது எவ்வாறு, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(மறுமை நாளில்) மக்கள் அகிலத்தின் அதிபதிக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பார்கள்..." என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே கூறினார்கள்.
இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக இதில் பின்வரும் தகவல்கள் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளன:
இப்ராஹீம் (அலை) அவர்கள் (மக்களுக்காகத் தம்மால் பரிந்து பேசமுடியாது என்று கூறிவிட்டு), தாம் (உலகில்) நட்சத்திரத்தைப் பார்த்து "இதுதான் என் இறைவன்" என்றும், அம்மக்களின் தெய்வச் சிலைகளை (உடைத்தது) குறித்து, "இவற்றில் பெரியதுதான் இவ்வாறு செய்தது" என்றும், (நோயில்லாமலேயே) "நான் நோயுற்றிருக்கிறேன்" என்றும் (மூன்று பொய்களைச்) சொன்னதை நினைவு கூர்ந்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகப் பின்வரும் தகவலும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! சொர்க்க வாயிலின் இரு பக்கத் தூண்களுக்கிடையேயான தூரம் "மக்காவிற்கும் (பஹ்ரைனிலுள்ள) ஹஜர் எனும் ஊருக்கும்" அல்லது "ஹஜர் எனும் ஊருக்கும் மக்காவிற்கும்" இடையிலுள்ள தூரமாகும். "இதில் எதை (முந்தி எதைப் பிந்தி)க் கூறினார்கள் என்று தெரியவில்லை" என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.
அத்தியாயம் : 1
329. அபூஹுரைரா (ரலி) மற்றும் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் (மறுமை நாளில்) மனிதர்களை ஒன்றுகூட்டுவான். அங்கு இறை நம்பிக்கையாளர்களும் நின்றுகொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும். உடனே அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று, "எங்கள் தந்தையே! எங்களுக்காகச் சொர்க்கத்தின் வாசலைத் திறக்கும்படி கூறுங்கள்" என்பார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "உங்கள் தந்தை ஆதம் செய்த தவறுதானே உங்களைச் சொர்க்கத்திலிருந்தே வெளியேற்றியது! அ(வ்வாறு சொர்க்கத்தைத் திறக்குமாறு கூறுவ)தற்கு நான் உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் என் புதல்வரும் அல்லாஹ்வின் உற்ற நண்பருமான இப்ராஹீம் அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள்.
(அவ்வாறே மக்களும் செல்ல) இப்ராஹீம் (அலை) அவர்கள், "நான் அதற்கு உரியவன் அல்லன். நான் உற்ற நண்பனாக இருந்ததெல்லாம் (வானவர் ஜிப்ரீல் தூதுவராக இருந்த) பின்னணியில்தான்; அந்தப் பின்னணியில்தான். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ் (நேரடியாக) உரையாடிய மூசா (அலை) அவர்களை நாடிச் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். அவ்வாறே மக்களும் மூசா (அலை) அவர்களிடம் செல்ல, அவர்களும் "நான் அதற்கு உரியவன் அல்லன். (ஆகவே,) நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையும் அவனுடைய ஆவியுமான ஈசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்" என்று கூறுவார்கள். (அவ்வாறே மக்களும் செல்ல) ஈசா (அலை) அவர்கள், "நான் அதற்கு உரியவன் அல்லன்" என்று கூறுவார்கள்.
பின்னர் மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் செல்வார்கள். உடனே அவர்கள் எழு(ந்து பரிந்துரைக்க அனுமதி கோரு)வார்கள். அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். அப்போது நம்பகத்தன்மையும் இரத்தபந்த உறவும் அனுப்பிவைக்கப்படும். அவையிரண்டும் (நரகத்தின் மீதுள்ள "ஸிராத்" எனும்) அப்பாலத்தின் இரு மருங்கிலும் வலம் இடமாக நின்றுகொள்ளும். அப்போது உங்களில் முதல் அணியினர் மின்னலைப் போன்று அதைக் கடந்துசெல்வார்கள்.
-இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, நான் (அபூஹுரைரா-ரலி),
"என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். மின்னலைப் போன்று கடந்துசெல்வது என்றால் என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மின்னல் எவ்வாறு கண் இமைக்கும் நேரத்தில் சென்று விட்டுத் திரும்புகிறதென்று நீங்கள் பார்க்க வில்லையா?" என்று கேட்டார்கள்.-
பிறகு காற்று வீசுவதைப் போன்றும், பறவை பறப்பதைப் போன்றும், மனிதர்கள் விரைந்து ஓடுவதைப் போன்றும் இறைநம்பிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு அவர்களின் (நற்)செயல்கள் ஓடும். உங்கள் நபியோ அந்தப் பாலத்தின் மீது நின்றுகொண்டு, "இறைவா! காப்பாற்று! காப்பாற்று!" என்று கூறிக்கொண்டிருப்பார்கள். இறுதியில் அடியார்களின் செயல்கள் செயலிழந்துபோகும்; அப்போது ஒருவர் வருவார். அவரால் நடக்க முடியாமல் தவழ்ந்தபடியே (அதைக் கடந்து) செல்வார். அந்தப் பாலத்தின் இரு ஓரங்களிலும் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். சிலரைப் பிடிக்கும்படி அவற்றுக்கு உத்தரவிடப்பட்டிருக்கும். சிலர் காயப்படுத்தப்பட்டுத் தப்பிவிடுவர்; சிலர் நரகநெருப்பில் தள்ளப்படுவர்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது ஆணையாக! நரகத்தின் ஆழமானது, எழுபது ஆண்டுகள் தொலைதூரம் கொண்டதாகும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 85 "நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத் தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
330. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
331. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1