292. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதர் (ரலி) அவர்களிடம் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருந்தால் அவர்களிடம் (ஒரு விஷயத்தைப் பற்றி) கேட்டிருப்பேன்" என்று கூறினேன். "எதைப் பற்றிக் கேட்டிருப்பாய்?" என்று என்னிடம் அவர்கள் கேட்டார்கள். நான், "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டிருப்பேன்" என்றேன்.
அபூதர் (ரலி) அவர்கள், "(இதுபற்றி) நான் அல்லாஹ்வின் தூதரிடமே கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் ஓர் ஒளியைக் கண்டேன் (அவ்வளவுதான்; வேறு எதையும் நான் காணவில்லை)" என்று பதிலளித்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 79 "அல்லாஹ் உறங்கமாட்டான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், "ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும்; அதை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம்வரையுள்ள படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்" என்று அவர்கள் கூறியதும்.
293. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச்
சொன்னார்கள். (அவை:)
1) வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான்.
3) (மனிதன்) இரவில் புரிந்த செயல், பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
5) ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். -மற்றோர் அறிவிப்பில் "நெருப்பே அவனது திரையாகும்" என்று காணப்படுகிறது.- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
294. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. மேலும் அதில் "அவனுடைய படைப்பினங்கள்" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. "ஒளியே அவனது திரையாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
295. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று நான்கு விஷயங்களைச் சொன்னார்கள்:
1) அல்லாஹ் உறங்கமாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது.
2) அவன் தராசை உயர்த்துகிறான்; தாழ்த்துகிறான்.
3)(மனிதன்) பகலில் புரிந்த செயல், இரவில் இறைவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
4) (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் அவனிடம் மேலே கொண்டுசெல்லப்படுகிறது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 80 இறைநம்பிக்கையாளர்கள் மறுமையில் இறைவனைக் காண்பார்கள் என்பதற்குரிய சான்று.
296. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. "அத்ன்" எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள "பெருமை" எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
297. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது (அவர்களிடம்) அல்லாஹ், "உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "(இறைவா!) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்க வில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்)?" என்று கேட்பார்கள்.
அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் (காணும் அவர்களுக்கு அவனைக்) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.
இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
298. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு "நன்மை புரிந்தோருக்கு நன்மையும், (அதைவிட) அதிகமும் கிடைக்கும்" எனும் இந்த (10:26ஆவது) வசனத்தையும் நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 81 இறைவனைக் காணும் வழிமுறை.
299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா?" என்று கேட்டார்கள். மக்கள், "(சிரமம்) இல்லை; அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இவ்வாறுதான் (மறுமையில்) இறைவனை நீங்கள் காண்பீர்கள். அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களை ஒன்றுகூட்டி, "(உலகத்தில்) யார் எதை வழிபட்டுக்கொண்டிருந்தாரோ அவர் அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும்" என்று கூறுவான். ஆகவே, சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சூரியனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். சந்திரனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்வார்கள். ஷைத்தான்(களான தீயசக்தி)களை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் பின்தொடர்ந்து செல்வார்கள். இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள். அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள்.
அப்போது இறைவன் அவர்களிடம், அவர்கள் அறிந்திராத ஒரு தோற்றத்தில் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். உடனே அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம். எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்" என்பர். அப்போது அவர்கள் அறிந்துகொள்ளும் தோற்றத்தில் அவர்களிடம் இறைவன் வந்து, "நான் உங்கள் இறைவன்" என்பான். அதற்கு அவர்கள், "நீயே எங்கள் இறைவன்" என்று கூறியவாறு அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள். அங்கு நரகத்திற்கு மேலே பாலம் அமைக்கப்படும். நானும் என் சமுதாயத்தாருமே (அந்தப் பாலத்தைக்) கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்போம். அன்று இறைத்தூதர்களைத் தவிர வேறெவரும் பேசமாட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் இறைத் தூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும் "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்பதாகவே இருக்கும். நரகத்(தின் மேலே உள்ள அப்பாலத்)தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் (சஅதான்) முற்களைப் போன்றிருக்கும்.
-பிறகு "கருவேலமரத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஆம் (பார்த்திருக்கிறோம்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தார்கள்.-
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
அப்போது அவர்கள்மீது "மாஉல் ஹயாத்" எனப்படும் (ஜீவ) நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள்.
பிறகு இறைவன் (தன்) அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடிப்பான். அப்போது நரகத்தை முன்னோக்கியபடி ஒரு மனிதர் மட்டும் எஞ்சியிருப்பார். அந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார். அவர் "என் இறைவா! நரகத்தின் (வெப்பக்) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜுவாலை என்னைக் கரிக்கிறது. ஆகவே, நரகத்தைவிட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிடுவாயாக!" என்று கூறி, அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனைகளைச் சொல்லி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார். பிறகு அல்லாஹ், "இ(ப்போது நீ கோரிய)தை உனக்கு நான் செய்(து கொடுத்)தால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான். அதற்கு அந்த மனிதர், "(இல்லை;) வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு (வேறு பக்கம்) திருப்பிவிடுவான். இதையடுத்து அவர் சொர்க்கத்தை முன்னோக்கி, அ(திலுள்ள)தைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை அமைதியாக இருப்பார்.
பிறகு, "என் இறைவா! சொர்க்கத்தின் வாசல்வரை என்னைக் கொண்டுசெல்வாயாக!" என்பார். அதற்கு இறைவன் அவரிடம், "இப்போது உனக்கு நான் வழங்கியதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டேன் என நீ வாக்குறுதியும் உறுதிமொழியும் வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!" என்பான். ஆனால், அவர் தொடர்ந்து "என் இறைவா..." என்று கூறி அல்லாஹ்வைப் பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரிடம் இறைவன், "(உனது இந்தக் கோரிக்கையை ஏற்று) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா?" என்று கேட்பான்.
அதற்கு அவர், "இல்லை; உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்)" என்று சொல்லிவிட்டு, அல்லாஹ் நாடிய வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தம் இறைவனிடம் வழங்குவார். ஆகவே, அல்லாஹ் அவரைச் சொர்க்கத்தின் வாசல்வரை கொண்டு செல்வான். அவர் சொர்க்கத்தின் வாசலில் நிற்கும்போது அவருக்காகச் சொர்க்கம் திறந்துகொள்ளும். உடனே அவர் அதிலுள்ள உல்லாசமான சுகங்களைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை மௌனமாக இருப்பார். பிறகு, "என் இறைவா! என்னைச் சொர்க்கத்திற்குள் அனுப்புவாயாக!" என்று கூறுவார். அப்போது அவரிடம் இறைவன், "இப்போது உனக்கு வழங்கப்பெற்றதைத் தவிர வேறெதையும் என்னிடம் கேட்கமாட்டாய் என்று கூறி என்னிடம் வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் நீ வழங்கவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான். உனது ஏமாற்று வேலைதான் என்ன!" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! நான் உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆகிவிடக்கூடாது" என்று கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார். இறுதியில் அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடுவான். அவரைக் கண்டு இறைவன் சிரித்ததும் "சொர்க்கத்திற்குள் நுழைந்துகொள்!" என்று கூறிவிடுவான். சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின், "நீ (விரும்பிய) இன்னதை ஆசைப்படலாம்" என்று அவரிடம் இறைவன் கூறுவான். அவ்வாறே அவர் ஆசைப்பட்டுத் தம் இறைவனிடம் கோருவார். அப்போது இறைவன் இன்னின்னதை ஆசைப்படு என்று அவருக்கு நினைவு படுத்துவான். இறுதியில் அவருடைய ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
அறிவிப்பாளர் அதாஉ பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(மேற்கண்ட ஹதீஸை அறிவித்த) அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் இருந்தார்கள். அன்னார் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஸிற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால்,"இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் அம்மனிதரிடம் கூறுவான்" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தபோது தான், அபூசயீத் (ரலி) அவர்கள் (குறுக்கிட்டு) "இதுவும் இதைப் போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் கூறுவான்" என்றல்லவா ஹதீஸ் இருக்கிறது, அபூஹுரைரா!" என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், " "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றே நான் மனனமிட்டுள்ளேன்" என்று கூறினார்கள். அதற்கு அபூசயீத் (ரலி) அவர்கள், "நான் "இதுவும் இதைப்போன்று பத்துமடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்" என்றார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதராவார்.
அத்தியாயம் : 1
300. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் பின்வருமாறு ஹதீஸ் துவங்குகிறது:
நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் "அல்லாஹ்வின் தூதரே, மறுமை நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண்போமா?" என்று கேட்டார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம் பெற்றுள்ளன.
அத்தியாயம் : 1
301. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் இந்த ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் உங்களில் ஒருவரது குறைந்தபட்சத் தகுதி என்னவென்றால், "நீ (இன்னதை) ஆசைப்படு" என்று அவரிடம் (இறைவன்) சொல்வதாகும். அப்போது அவர் ஒவ்வொன்றாக ஆசைப்படுவார். (இறுதியில்) அவரிடம், "ஆசைப்பட்டு (முடித்து)விட்டாயா?" என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "ஆம்" என்று பதிலளிப்பார். அப்போது அவரிடம், "நீ ஆசைப்பட்டதும் அத்துடன் அதைப் போன்றதும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்.
அத்தியாயம் : 1
302. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மக்கள் சிலர் "அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம் (காண்பீர்கள்); மேகமே இல்லாத தெளிவான நண்பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு சிரமப்படுவீர்களா? மேகமே இல்லாத தெளிவான பௌர்ணமி இரவில் முழு நிலவைக் காண்பதற்கு நீங்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்விரண்டில் ஒன்றைப் பார்க்க நீங்கள் சிரமப்படாததைப் போன்றே மறுமை நாளில்- சுபிட்சமும் உயர்வும் மிக்க- அல்லாஹ்வைக் காணவும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். மறுமை நாள் ஏற்படும்போது அழைப்பாளர் ஒருவர் "ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகத்தில்) தாம் வழிபட்டுவந்தவர்களைப் பின்தொடர்ந்து செல்லட்டும்" என்று அழைப்புவிடுப்பார். அப்போது, அல்லாஹ்வை விடுத்து பொய்த் தெய்வங்களையும் சிலைகளையும் வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள் ஒருவர்கூட எஞ்சாமல் அனைவரும் நரக நெருப்பில் விழுவர். முடிவில் அல்லாஹ்வை வழிபட்டுக்(கொண்டு நன்மைகளும் புரிந்து)கொண்டிருந்த நல்லவர்களும் (அல்லாஹ்வை வழிபட்டுப் பாவங்களும் புரிந்து வந்த) பாவிகளும் வேதக்காரர்களில் மிஞ்சியவர்களும்தாம் எஞ்சியிருப்பர்.
அப்போது (வேதக்காரர்களான) யூதர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களிடம், "நீங்கள் எதை வழிபட்டுவந்தீர்கள்?" என்று கேட்கப்படும். அவர்கள், "அல்லாஹ்வின் மைந்தர் உஸைர் அவர்களை நாங்கள் வழிபட்டுக்கொண்டிருந்தோம்" என்று பதிலளிப்பார்கள். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை" என்று கூறப்படும். மேலும், "இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!" என்பார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அத்திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டு செல்லப் படுவார்கள். அது கானலைப் போன்று காணப்படும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
பிறகு, கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டு, "நீங்கள் எதை வழிபட்டுக்கொண்டிருந்தீர்கள்?" என்று அவர்களிடம் கேட்கப்படும். அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் மைந்தர் மஸீஹை (ஈசாவை) வழிபட்டுக்கொண்டிருந்தோம்" என்று கூறுவர். அப்போது அவர்களிடம், "நீங்கள் பொய்யுரைக்கிறீர்கள். அல்லாஹ் தனக்கு எந்தத் துணைவியையும் குழந்தையையும் ஆக்கிக் கொள்ளவில்லை" என்று சொல்லப்படும். மேலும், அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! எங்களுக்குத் தாகமாக உள்ளது. எங்களுக்கு (நீர்) புகட்டுவாயாக!" என்று (யூதர்கள் கூறியதைப் போன்றே) கூறுவார்கள். உடனே நீங்கள் தண்ணீர் உள்ள (அந்த) இடத்திற்குச் செல்லக் கூடாதா என (ஒரு திசையை)ச் சுட்டிக் காட்டப்படும். பிறகு (அந்தத் திசையிலுள்ள) நரகத்தின் பக்கம் அவர்கள் கொண்டுசெல்லப்படுவார்கள். அது கானலைப் போன்று காட்சி தரும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியைச் சிதைத்துக்கொண்டிருக்கும். அப்படியே அவர்கள் அந்த நரக நெருப்பில் விழுவார்கள்.
இறுதியில் அல்லாஹ்வை வழிபட்டு(க்கொண்டு நன்மைகளும் புரிந்து)வந்த நல்லோர் மற்றும் (அல்லாஹ்வையும் வழிபட்டுக்கொண்டு பாவங்களும் புரிந்துவந்த) தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் அகிலத்தாரின் இரட்சகன் வருவான். (அவனுடைய தன்மைகளை முன்பே அறிந்திருந்ததன் மூலம் தம் உள்ளத்தில்) அவனைப் பற்றி அவர்கள் எண்ணி வைத்திருந்த தோற்றங்களில் (அடையாளம் கண்டுகொள்வதற்கு) மிக நெருக்கமானதொரு தோற்றத்தில் (அவன் வருவான்). அப்போது "நீங்கள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொரு சமுதாயத்தாரும் (உலகில்) தாம் வழிபட்டுக் கொண்டிருந்தவற்றைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கின்றார்களே!" என்று அவன் கேட்பான். அவர்கள், "எங்கள் இறைவா! உலகத்தில் நாங்கள் (வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக) இந்த மக்களிடம் அதிக அளவில் தேவையுள்ளவர்களாக இருந்தும், அவர்களுடன் உறவாடிக்கொண்டிராமல் அவர்களைப் பிரிந்திருந்தோம். (அப்படியிருக்க, இப்போதா அவர்களைப் பின்தொடர்வோம்?)" என்று பதிலளிப்பார்கள்.
அப்போது இறைவன், "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். (அவர்களால் உறுதிசெய்ய முடியாத தோற்றத்தில் அப்போது அவன் இருப்பதால்) அதற்கு அவர்கள், "உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக்கோருகிறோம்; நாங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்" என்று இரண்டு தடவையோ அல்லது மூன்று தடவையோ கூறுவார்கள். (அந்தச் சோதனையான கட்டத்தில்) அவர்களில் சிலர் (சத்தியத்திலிருந்து) பிறழ்ந்துவிடும் அளவுக்குப் போய் விடுவார்கள். அப்போது இறைவன், "அவனை இனங்கண்டுகொள்ள உங்களுக்கும் அவனுக்குமிடையே ஏதேனும் அடையாளம் உண்டா?" என்று கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம் (இறைவனின் கணைக்கால் தான் அடையாளம்)" என்று கூறுவார்கள். உடனே (இறைவனின்) கணைக்காலைவிட்டும் (திரை) விலக்கப்படும். அப்போது (உலகத்தில்) மனப்பூர்வமமாக அல்லாஹ்வுக்குச் சிரம்பணிந்து கொண்டிருந்தவர் யாரோ அவர் சிரம்பணிய இறைவன் அனுமதிப்பான். தற்காப்புக்காகவோ பாராட்டுக்காகவோ சிரம்பணிந்து கொண்டிருந்தவருடைய முதுகை (நெடும் பலகையைப் போன்று) ஒரே நீட்டெலும்பாக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அவர் சிரம்பணிய முற்படும்போதெல்லாம் மல்லாந்து விழுந்துவிடுவார். (அவரால் சிரம் பணிய முடியாது.)
பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்துவார்கள். அப்போது முதலில் அவர்கள் பார்த்த அதே தோற்றத்தில் இறைவன் காட்சியளித்து "நானே உங்கள் இறைவன்" என்று கூறுவான். அதற்கு அவர்கள் "நீயே எங்கள் இறைவன்" என்று கூறுவார்கள். பிறகு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும்; (பாவம் புரிந்த இறை நம்பிக்கையாளர்களுக்காகப்) பரிந்துரை செய்ய அனுமதி கிடைக்கும். அப்போது மக்கள், "அல்லாஹ்வே! காப்பாற்று; காப்பாற்று" என்று பிரார்த்திப்பார்கள்.
-(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு கூறிக்கொண்டிருந்தபோது அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பாலம் என்றால் என்ன? (அது எதைக் குறிக்கிறது?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(கால்கள்) வழுக்கிவிடக்கூடிய ஓர் இடமாகும். அ(ந்தப் பாலத்)தில் நஜ்துப் பகுதியில் முளைக்கும் "சஅதான்" எனப்படும் (முட்)செடியின் முற்களைப் போன்ற கொக்கிகள் இருக்கும்" என்று பதிலளித்தார்கள்.-
இறைநம்பிக்கையாளர்கள் கண் சிமிட்டும் நேரத்தில் மின்னல், காற்று, பறவை, உயர் ரகக் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றைப் போன்று (விரைவாக அந்தப் பாலத்தைக்) கடந்துவிடுவார்கள். (அப்போது அவர்கள் மூன்று வகையினராக இருப்பார்கள்:) அவர்களில் பாதுகாப்பாகத் தப்பித்துக்கொள்வோரும் உண்டு. கீறிக் காயப்படுத்தப்பட்டுத் தப்புவோரும் உண்டு. பின்புறத்திலிருந்து தள்ளப்பட்டு நரக நெருப்பில் விழுவோரும் உண்டு. இறுதியில் இறைநம்பிக்கையாளர்கள் (அந்தப் பாலத்தைக் கடந்து) நரக நெருப்பிலிருந்து தப்பிவிடுவார்கள்.
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! மறுமை நாளில் நரகத்தில் கிடக்கும் தம் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறை நம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை. அவர்கள் (பின்வருமாறு) கூறுவார்கள்: எங்கள் இறைவா! இவர்கள் எங்களுடன்தான் நோன்பு நோற்றார்கள்; தொழுதார்கள்; ஹஜ் செய்தார்கள் (எனவே இவர்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்வாயாக!). அப்போது அவர்களிடம், "நீங்கள் (சென்று) உங்களுக்குத் தெரிந்தவர்களை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறப்படும். மேலும், (நரகத்திலுள்ள அவர்களை இவர்கள் அடையாளம் காண்பதற்கு வசதியாக) அவர்களது உடலைத் தீண்டக் கூடாதென நரகத்திற்குத் தடை விதிக்கப்படும். உடனே அவர்கள் (நரகத்திற்குச் சென்று) ஏராளமான மக்களை வெளியே கொண்டுவருவார்கள். அப்போது (நரகத்தில் இருந்த) அவர்களில் சிலருடைய கணைக்கால்களில் பாதிவரையும், (இன்னும் சிலருடைய) முழங்கால்கள்வரையும் நரக நெருப்பு தீண்டியிருக்கும். பிறகு, "எங்கள் இறைவா! நீ யாரை வெளியேற்றுமாறு கூறினாயோ அவர்களில் ஒருவர்கூட நரகத்தில் எஞ்சவில்லை (எல்லாரையும் நாங்கள் வெளியேற்றிவிட்டோம்)" என்று கூறுவார்கள்.
அப்போது இறைவன் "நீங்கள் திரும்பிச் சென்று எவரது உள்ளத்தில் ஒரு பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அவ்வாறே அவர்களும் (இன்னும்) ஏராளமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), "எங்கள் இறைவா! நீ உத்தரவிட்ட யாரையும் அதில் நாங்கள் விட்டு வைக்கவில்லை (எல்லாரையும் வெளியேற்றி விட்டோம்)" என்று கூறுவார்கள். பிறகு இறைவன், "நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அரைப் பொற்காசு அளவு நன்மை இருக்கிறதோ அவரையும் (நரகத்திலிருந்து) வெளியேற்றிவிடுங்கள்" என்பான். அவர்களும் ஏராளமான மக்களை வெளியே கொண்டு வருவார்கள். பின்னர் "எங்கள் இறைவா, நீ கட்டளையிட்ட ஒருவரையும் நாங்கள் விட்டு வைக்கவில்லை" என்று கூறுவார்கள். பின்பும் இறைவன் "நீங்கள் திரும்பிச்சென்று எவரது உள்ளத்தில் அணுவளவு நன்மை இருக்கிறதோ அவரை வெளியேற்றுங்கள்" என்பான். அவ்வாறே அவர்கள் (சென்று) அதிகமான மக்களை வெளியேற்றிவிட்டு (வந்து), "எங்கள் இறைவா! நரகத்தில் எந்த நன்மையையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை" என்று கூறுவார்கள்.
-அறிவிப்பாளர் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் கூறும் இந்த ஹதீஸை நீங்கள் நம்பாவிட்டால், "திண்ணமாக அல்லாஹ் (எவருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான். அணுவளவு நன்மை இருந்தாலும் அதை அவன் பன்மடங்காக்கி (வழங்குவதுடன்) தன்னிடமிருந்து மாபெரும் சன்மானத்தையும் வழங்குவான்" எனும் (4:40ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்.-
பிறகு வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், "வானவர்கள் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைத்தூதர்களும் பரிந்துரைத்துவிட்டார்கள்; இறைநம்பிக்கையாளர்களும் பரிந்துரைத்து விட்டார்கள். இப்போது கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் மட்டுமே எஞ்சியிருக்கிறான்" என்று கூறிவிட்டு, நரகத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவிலான மக்களை அள்ளியெடுத்து, அறவே எந்த நன்மையும் செய்திராத ஒரு கூட்டத்தை நரகத்திலிருந்து வெளியேற்றுவான். அவர்கள் கரிக்கட்டை போன்று மாறியிருப்பார்கள். எனவே, அவர்களைச் சொர்க்கத்தின் நுழைவாயில்களில் உள்ள ஒரு நதியில் போடுவான். -அதற்கு "ஜீவநதி" (நஹ்ருல் ஹயாத்) என்று பெயர்.- உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) வெளியேறுவார்கள். நீங்கள் விதைப் பயிரைப் பார்த்ததில்லையா? பாறையோரங்களில் அல்லது மரங்களுக்கு அருகில் அவை வளர்கின்றன. அவற்றில் வெயில் படுமிடத்தில் இருப்பவை மஞ்சளாகவும் பச்சையாகவும் இருக்கும். (வெயில் படாமல்) நிழலில் இருப்பவை (வெளிறிப்போய்) வெள்ளை நிறத்தில் இருக்கும் அல்லவா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கிராமப் புறங்களில் (கால்நடைகளை) மேய்த்துக் கொண்டிருந்தீர்கள் போலும்" என்றார்கள்.
(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆக, அவர்கள் (அந் நதியிலிருந்து) முத்துகளைப் போன்று (ஒளிர்ந்தவர்களாக) வெளியேறுவார்கள். அவர்களது கழுத்தில் ("நரக விடுதலை பெற்றோர்" எனும்) முத்திரை இருக்கும். (அதை வைத்து) அவர்களைச் சொர்க்கவாசிகள் அடையாளம் கண்டு கொள்வார்கள். "இவர்கள் அல்லாஹ்வால் (நரகத்திலிருந்து) விடுதலை செய்யப்பட்டவர்கள்; (உலகில்) எந்த நற்செயலும் புரிந்திராமலும் எந்த நன்மையும் செய்துவைத்திராமலும் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்திற்கு அனுப்பினான்" என்று பேசிக்கொள்வார்கள்.
பிறகு (அவர்களிடம்) இறைவன், "சொர்க்கத்திற்குள் செல்லுங்கள்; அங்கு எதையெல்லாம் நீங்கள் காண்கிறீர்களோ அது உங்களுக்கே உரியது" என்று கூறுவான். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கிவிட்டாய்" என்று (நன்றியுடன்) கூறுவார்கள். அதற்கு இறைவன், "உங்களுக்கு இதைவிடச் சிறந்த வேறொன்று உள்ளது" என்று கூறுவான். அதற்கு அவர்கள், "எங்கள் இறைவா! இதைவிடச் சிறந்த அந்த ஒன்று எது?" என்று கேட்பார்கள். அதற்கு, "எனது திருப்தி(தான் அது). இனி ஒருபோதும் உங்கள் மீது நான் கோபம் கொள்ளமாட்டேன்" என்பான் இறைவன்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நான், பரிந்துரை (ஷஃபாஅத்) தொடர்பான இந்த ஹதீஸை ஈசா பின் ஹம்மாத் ஸுஃக்பதல் மிஸ்ரீ (ரஹ்) அவர்களிடம் வாசித்துக்காட்டி, "இந்த ஹதீஸை லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதாக உங்களிடமிருந்து நான் அறிவிக்கலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம் (அறிவியுங்கள்)" என்றார்கள்.
மேலும் "இந்த ஹதீஸைத் தங்களுக்கு லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் காலித் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தும், காலித் அவர்கள் சயீத் பின் அபீஹிலால் (ரஹ்) அவர்களிடமிருந்தும், சயீத் அவர்கள் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்களிடமிருந்தும், ஸைத் அவர்கள் அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்களிடமிருந்தும், அதாஉ அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தும், அபூசயீத் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்தார்களா?" என்றும் நான் ஈசா பின் ஹம்மாத் அவர்களிடம் கேட்டேன்.
அதாவது அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே, நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "(மேகமூட்டமில்லாத) தெளிவான பகல் நேரத்தில் சூரியனைப் பார்க்க நீங்கள் முண்டியடித்துக்கொண்டு சிரமப்படுவீர்களா?" என்று கேட்டார்கள்... என்று தொடங்கும் மேற்கண்ட ஹதீஸை முழுமையாக அறிவித்தார்கள்.
அதில், "(உலகில்) எந்த நற்செயலும் புரிந்திராமலும், எந்த நன்மையும் செய்துவைத்திராமலும் இருந்த இவர்களை அல்லாஹ்வே (தனது தனிப்பெரும் கருணையால்) சொர்க்கத்திற்கு அனுப்பினான்" எனும் வாசகத்திற்குப் பின்னால் "நீங்கள் காணக்கூடிய இதுவும் இதைப் போன்று இன்னொரு மடங்கும் உங்களுக்கே உரியது என அவர்களிடம் கூறப்படும்" எனும் வாசகத்தை அதிகப்படியாகவும் அறிவித்துள்ளார்கள்.
மேலும், அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அந்தப் பாலம் முடியைவிட மெலிதானது; வாளைவிட கூர்மையானது" எனும் செய்தி எனக்கு எட்டியது.
லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(நரகத்திலிருந்து விடுதலை பெற்று சொர்க்கம் சென்ற) மக்கள், "எங்கள் இறைவா! அகிலத்தாரில் யாருக்கும் நீ வழங்காத (பாக்கியத்)தை எங்களுக்கு நீ வழங்கிவிட்டாய்" என்று கூறுவார்கள் எனும் வாசகமும் அதற்குப் பிறகு வருபவையும் இடம்பெறவில்லை.
நான் அறிவித்த இவை அனைத்தையும் ஈசா பின் ஹம்மாத் (ரஹ்) அவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
303. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் வந்துள்ள வாசகங்களில் சிறிது கூடுதல் குறைவு காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
பாடம் : 82 (மறுமையில்) பரிந்துரை (ஷஃபாஅத்) உண்டு என்பதற்கான சான்றும், ஓரிறைக் கோட்பாட்டை நம்பினோர் (அனைவரும்) நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவதும்.
304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமையில் விசாரணைகள் முடிந்த பின்) அல்லாஹ் சொர்க்கவாசிகளைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான். தான் நாடும் சிலரைத் தனது (தனிப் பெரும்) கருணையால் அவன் சொர்க்கத்திற்கு அனுப்புவான். நரகவாசிகளை நரகத்தில் நுழையவைப்பான். பிறகு (இறைநம்பிக்கையாளர்களிடம்), "பாருங்கள்; யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறுவான். அப்போது கரிந்து கரிக்கட்டையாகிவிட்ட நிலையில் நரகவாசிகள் வெளியேற்றப் படுவார்கள். பின்னர் அவர்கள் "நஹ்ருல் ஹயாத்" (ஜீவ) நதியில் அல்லது "நஹ்ருல் ஹயா" (மழை) நதியில் போடப்படுவார்கள். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) நிறம் மாறிவிடுவார்கள். அந்த வித்து(விலிருந்து வரும் புற்பூண்டுகள்) மஞ்சள் நிறத்தில் (பார்ப்பதற்கு அழகாகவும், காற்றில்) அசைந்தாடக் கூடியதாக(வும்) எவ்வாறு முளைக்கின்றது என்பதை நீங்கள் கண்டதில்லையா?
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
305. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அவர்கள் நஹ்ருல் ஹயாத் (ஜீவ) நதியில் போடப்படுவார்கள்" என்று ஐயப்பாடின்றி இடம்பெற்றுள்ளது.
காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர்கள் வெள்ளத்தின் ஓரத்தில் குப்பைக் கூளங்கள் (மத்தியிலுள்ள வித்துகள்) முளைப்பதைப் போன்று" என்று இடம்பெற்றுள்ளது.
உஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "களிமண் வெள்ளத்தில்" அல்லது "சேற்று வெள்ளத்தில்" மிதந்துவரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று" என்று (ஐயப்பாட்டுடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
306. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்திற்கே உரியவர்களான நரகவாசிகள் நரகத்தில் இறக்கவுமாட்டார்கள்; வாழவு மாட்டார்கள். ஆனால், "தம் பாவங்களால்" அல்லது "தம் குற்றங்களால்" நரக நெருப்பிற்கு ஆளான மக்களை உடனே இறைவன் இறக்கச் செய்துவிடுவான். அவர்கள் (எரிந்து) கரிக் கட்டையாக மாறிவிடும் போது (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்ய (சொர்க்கவாசிகளான இறைநம்பிக்கையாளர்களுக்கு) அனுமதி வழங்கப்படும். உடனே அவர்கள் தனித் தனிக் கூட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, சொர்க்க நதிகளின் படுகையில் பரப்பி வைக்கப்படுவர். பிறகு (சொர்க்கத்திலிருப்பவர்களிடம்) "சொர்க்கவாசிகளே! அவர்கள்மீது தண்ணீரை ஊற்றுங்கள்" என்று கூறப்படும். (அவ்வாறே ஊற்றப்படும்.) உடனே அவர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று (புதுப் பொலிவுடன்) மாறி விடுவார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது மக்களில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிராமப்புறத்தில் இருந்திருக்கிறார்கள் போலும்" என்று கூறினார்.
அத்தியாயம் : 1
307. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "வெள்ளத்தில் மிதந்துவரும் விதைப் பயிர் முளைப்பதைப் போன்று" என்பது வரைதான் இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள தகவல் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 83 நரகத்திலிருந்து இறுதியாக வெளியேறுபவர்.
308. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும், சொர்க்க வாசிகளில் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம் அல்லாஹ், "நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள்" என்பான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். உடனே அவர் திரும்பிவந்து, "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள்!" என்று (மீண்டும்) சொல்வான். அவர் சொர்க்கத்திற்குச் செல்வார். அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும். ஆகவே, அவர் திரும்பிவந்து, "என் இறைவா! அது நிரம்பியிருக்கக் கண்டேன்" என்று கூறுவார். அதற்கு அவன், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள். ஏனெனில், "உலகம் மற்றும் அதைப் போன்று பத்து மடங்கு" அல்லது "உலகத்தைப் போன்று பத்து மடங்கு" (இடம் சொர்க்கத்தில்) உனக்கு உண்டு" என்று சொல்வான். அதற்கு அவர், "அரசனாகிய நீ என்னைப் "பரிகாசம் செய்கிறாயா?" அல்லது "என்னை நகைக்கின்றாயா?" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இவரே சொர்க்கவாசிகளில் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டுவந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
309. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்: நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதை நான் நன்கறிவேன். நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர். அவரிடம், "நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்து கொள்" என்று கூறப்படும். அவர் சென்று சொர்க்கத்தில் நுழைவார். அங்கு மக்கள் தத்தமது இருப்பிடங்களைப் பிடித்துக் கொண்டிருப்பதை அவர் காண்பார். அவரிடம், "நீ கடந்து வந்த காலத்தை நினைவுகூருகிறாயா?" என்று கேட்கப்படும். அதற்கு அவர், "ஆம்" என்பார். "நீ (இன்ன இன்னதை) ஆசைப்படலாம்" என்று கூறப்படும். அவர் அவ்வாறே ஆசைப்படுவார். அவரிடம், "நீ ஆசைப்பட்டதும் உனக்குக் கிடைக்கும்; உலகத்தைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று கூறப்படும். உடனே அவர், "அரசனாகிய நீ என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார்.
(இதைக் கூறும்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 1
310. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரகத்திலிருந்து விடுதலை பெறும் மனிதர் குறித்துப் பின்வருமாறு) கூறினார்கள்:
(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கிக் கரித்தும்விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து, "உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறை)வன் சுபிட்சமிக்கவன்; முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான்" என்று கூ(றி இறைவனைப் போற்)றுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக! அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன்; அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக்கொள்வேன்" என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், "மனிதா! அதை நான் உனக்கு வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா" என்று கூறுவான். அதற்கு அவர், "இல்லை; இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறி, வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன், அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அந்த மரத்தின் அருகே கொண்டுசெல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார்; அதன் நீரையும் பருகிக்கொள்வார்.
பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தைவிட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட) உடன் அவர், "என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி அதன் நிழலை அடைந்து கொள்வேன்! இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் கேட்கமாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டுசென்றால், வேறொன்றை என்னிடம் நீ கேட்கக்கூடுமல்லவா" என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்கமாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார்.
பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்மியமானதாய் இருக்கும். உடனே அவர், "என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலைப் பெறுவேன்; அதன் நீரைப் பருகிக்கொள்வேன்; இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். அதற்கு இறைவன், "மனிதா! வேறெதையும் நான் கேட்கமாட்டேன் என்று (முன்பு) என்னிடம் நீ வாக்குறுதி அளிக்கவில்லையா?" என்று கேட்பான். அதற்கு அவர், "ஆம்; என் இறைவா! இந்தத் தடவை (மட்டும்); இனி, இதன்றி வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன்" என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து, அவரை அதன் அருகே கொண்டுசெல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும்போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், "என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக!" என்பார். அதற்கு இறைவன், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்? உலகத்தையும் அதைப் போன்ற இன்னொரு மடங்கையும் உனக்கு நான் வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும்தானே?" என்று கேட்பான். அதற்கு அவர், "என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று கேட்பார்.
(இதை அறிவித்தபோது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு "நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்கமாட்டீர்களா?" என்று கேட்டார்கள். அப்போது மக்கள் "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "இவ்வாறுதான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அப்போது நபித் தோழர்கள், "ஏன் சிரித்தீர்கள், அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா?" என்று அந்த மனிதர் கூறும்போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்.) மேலும், "நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக, நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான்" என இறைவன் கூறுவான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 84 சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரம் உடையவர்.
311. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திலிருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், "என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழலில் இருக்க வேண்டும்" என்பார்.
-பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.-
ஆனால், "மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?" என்பதிலிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. "இன்னின்னதை நீ கேட்கலாம்!"என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, "இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்" என்று இறைவன் கூறுவான்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய "ஹூருல் ஈன்" எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்"என்று கூறுவார்கள். அப்போது அந்த மனிதர் "எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப் படவில்லை" என்று (மகிழ்ந்து) கூறுவார்.
இதை நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1