272. அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், (விண்ணுலகப்) பயணத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நடந்தவற்றை விவரித்துக் கூறியபடி, “நான் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்.(அப்போது கூறினார்கள்:) மூசா (அலை) அவரகள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரைப் போன்று ஒல்லியாக, தலைமுடி தொங்கலாக (வாரி) விட்டிருப்பராக இருந்தார்கள்.
(தொடர்ந்து நபி (ஸல் அவர்கள்) நான் ஈசா (அலை) அவர்களைச் சந்தித்தேன்” என்று கூறிவிட்டு, அவர்(களின் அங்க அடையாளங்)களை வர்ணித்தார்கள்; சிவப்பு நிறமுடையவர்களாக, நடுத்தர உயரம் கொண்டவர்களாக, (அப்போதுதான்) குளியலறையிலிருந்து வெளியே வந்தவரைப் போன்று அவர்கள் இருந்தார்கள். மேலும், நான் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பார்த்தேன். நான்தான் அவர்களுடைய வழித் தோன்றல்களிலேயே சாயலில் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருக்கின்றேன். (அந்த பயணத்தில்) என்னிடம் இரு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவற்றில் ஒன்றில் பாலும் மற்றொன்றில் மதுவும் இருந்தது. “நீங்கள் விரும்பியதை எடுத்துக்கொள்ளுங்கள்” என்று என்னிடம் சொல்லப்பட்டது. நான் பாலை எடுத்து பருகினேன். அப்போது, “நீங்கள் இயற்கையான வழியில் செலுத்தப்பட்டுவிட்டீர்கள்” அல்லது “நீங்கள் இயற்கை மரபை பெற்றுக்கொண்டீர்கள்”. நீங்கள் மதுவை எடுத்துக் கொண்டிருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று என்னிடம் சொல்லப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 75 மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா-அலை), "தஜ்ஜால்" எனும் மஸீஹ் ஆகியோரைப் பற்றிய குறிப்பு.
273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இரவில் (இறையில்லம்) கஅபாவின் அருகே(கனவில்) நான் என்னைக் கண்டேன், அப்போது மனிதர்களில் மாநிறத்தில் நீ பார்த்தவர்களிலேயே மிக அழகான முடி அவருக்கு இருந்தது, அதை அவர் வாரிவிட்டிருந்தார், அதிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அவர் “இரு மனிதர்களின் மீது சாய்ந்தபடி’ அல்லது “இரு மனிதர்களின் தோள்கள் மீது சாய்ந்தபடி” இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்தார். நான், “இவர் யார்? என்று கேட்டேன். “இவர் தாம் மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளிக்கப்பட்டது. பின்னர் அங்கே கடும் சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான மனிதன் ஒருவன் இருந்தான்,அவனுக்கிருந்த கண் (ஒரே குலையில்) துருத்திக்கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருந்தது, நான், ”இவர் யார்?” என்று கேட்டேன். “இவன் தான் அல்மஸீஹுத் தஜ்ஜால்” என்று பதிலளிக்கப்பட்டது.
இதை அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
274. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களிடையே “தஜ்ஜால்” எனும் மஸீஹை நினைவுகூர்ந்தார்கள்.அப்போது “அல்லாஹ்,ஒற்றைக் கண்ணன் அல்லன், ஆனால் “தஜ்ஜால்” எனும் மஸீஹ், வலது கண் குருடானவன். அவனது கண், (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சையைப் போன்றிருக்கும்” என்று கூறினார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இன்றிரவு நான் கஅபாவின் அருகே கனவில் என்னைக் கண்டேன், நீ கண்ட மனிதர்களின் மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவருடைய தோள்களுக்கிடையே தொங்கிக்கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக இருந்தார். அவரது தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது, இரு மனிதர்களின் தோள்கள்மீது அவர் தம் இரு கைகளையும் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்தார். நான், ”இவர் யார்?” என்று கேட்டேன்.“மர்யமின் மைந்தர் மஸீஹ் (ஈசா)” என்று பதிலளித்தார்கள். அவருக்குப் பின்னால் நிறைய சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்த மனிதர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவனாக இருந்தான். நான், ”இவன் யார்?” என்று கேட்டேன். “இவன் “தஜ்ஜால்” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
275. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (கனவில்) இறையில்லம் கஅபா அருகில் மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலை முடியுடைய ஒரு மனிதரைக் கண்டேன். அவர் இரு மனிதர்கள் மீது தம் இரு கைகளை வைத்துக்கொண்டிருந்தார்; “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது” அல்லது அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது”. நான் “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு, “மர்யமின் மைந்தர் ஈசா’ அல்லது “மர்யமின் மைந்தர் மஸீஹ்’ என்று பதிலளித்தார்கள். இவற்றில் எதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எங்களுக்குத் தெரியாது,அவருக்குப் பின்னால் சிவப்பு நிறைமுடைய, சுருள்முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனை நான் பார்த்தேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவனாக இருந்தான். நான், “இவன் யார்?” என்று கேட்டேன்.”(இவன்) “தஜ்ஜால்’’’’””” எனும் மஸீஹ்” என்று பதிலளித்தார்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
276. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
(நான் இரவின் சிறு பகுதியில் புனித கஅபாவிலிருந்து பைத்துல் மகதிஸ் (ஜெருசலேம்) வரை சென்று வந்த தகவலைச் சொன்ன சமயம்) குறைஷியர் என்னை நம்ப மறுத்தனர், அப்போது நான் (கஅபாவில்) “ஹிஜ்ர்” எனும் (வளைந்த பகுதியில் நின்றிருந்தேன். அல்லாஹ் எனக்கு அப்போது பைத்துல் மக்திஸைக் காட்சியளிக்கச் செய்தான். உடனே நான் அதைப் பார்த்தபடியே அதன் அடையாளங்களைக் குறைஷியருக்கு விவரிக்கலானேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
277. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) இறையில்லம் கஅபாவைச் சுற்றி நான் (தவாஃப்) வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு மாநிறமுடைய, படிய வாரப்பட்ட தலைமுடி கொண்ட ஒருவர் இரண்டு மனிதர்களுக்கிடையே இருந்தார். “அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது’ அல்லது ”அவருடைய தலையிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்தது.” நான், “இவர் யார்?” என்று கேட்டேன். “இவர்தாம் மர்யமின் மைந்தர்” என்று பதிலளித்தார்கள்.
பிறகு நான் திரும்பிச் சென்ற போது சிவப்பான, உடல் பருத்த, சுருள்முடி கொண்ட, (ஒரு) கண் குருடான மனிதன் ஒருவன் அங்கிருந்தான். அவனது கண் (ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருந்தது.நான், “இவன் யார்?” என்று கேட்டேன். “தஜ்ஜால்’ என்று பதிலளித்தார்கள், மக்களிலேயே அவனுக்கு மிக நெருக்கமான சாயலுடையவர் இப்னு கத்தன் தாம்.- இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அத்தியாயம் : 1
278. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நான் (கஅபாவிலோ ஹிஜ்ர் எனும் (வளைந்த) பகுதியில் இருந்தேன். நான் (இரவின் ஒரு சிறு பகுதியில் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸ் – ஜெருசலேம் வரை) பயணம் மேற்கொண்டது பற்றி என்னிடம் குறைஷியர் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பைத்துல் மக்திஸிலுள்ள சில பொருட்களைப் பற்றி என்னிடம் அவர்கள் கேட்டனர். ஆனால், அவை என் நினைவிலிருக்கவில்லை. அப்போது நான் மிகவும் வருந்தினேன். முன்பு எப்போதும் அந்த அளவுக்கு நான் வருந்தியதேயில்லை. உடனே அல்லாஹ் பைத்துல் மக்திஸை எனக்குக் காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் (சரியான) தகவல் தெரிவித்தேன்.
(பைத்துல் மக்திஸில்) இறைத்தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர். அங்கு மூசா (அலை) அவர்கள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் (யமனியர்களான) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று (உயரமாக) திரண்ட உடல் உள்ள மனிதராக இருந்தார்கள்.அங்கு மர்யமின் மைந்தர் ஈசா அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். அவர்கள் மனிதர்களிலேயே (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள். மக்களில் அவர்களுக்கு மிக நெருக்கமான சாயல் உடையவர் உங்கள் தோழர் (நான்)தான்.
அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்துவிடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினேன்.தொழுது முடித்தபோது (என்னிடம்) ஒருவர், “முஹம்மதே! இதோ இவர்தாம் நகரத்தின் காவலர் மாலிக்.அவருக்கு சலாம் சொல்லுங்கள்! என்று கூறினார். நான் அவரை நோக்கித் திரும்பிய போது அவர் முந்திக் கொண்டு எனக்கு சலாம் சொல்லிட்டார்.-இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 76 (வான்) எல்லையிலுள்ள இலந்தை மரம் (சித்ரத்துல் முன்தஹா) பற்றிய குறிப்பு.
279. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூஹர் (ஸல்) அவர்கள் (விண்ணுலகப் பயணத்திற்காக)இரவில் அழைத்துச் செல்லப்பட்ட போது (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) சித்ரத்துல் முன்தஹா” வரை அவர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அ(ந்த மரத்தில் வேர்பகுதியான)து ஆறாம் வானத்தில் அமைந்துள்ளது. பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்தப்படுகின்றன.அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
“சித்ரத்துல் முன்தஹா எனும் அம்மரத்தை ஏதோ (பிரமாண்டமான) ஒன்று சூழ்ந்து கொண்டிருக்கிறது” எனும் (53:16 ஆவது) வசனம் தங்கத்தாலான விட்டில் பூச்சிகளையே குறிக்கிறது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்று(கட்டளைகள்) வழங்கப்பட்டன. அவையாவன: 1. ஐவேளைத்தொழுகைகள் வழங்கப்பட்டன. 2. அல்பகரா அத்தியாயத்தின் இறுதி (மூன்று) வசன்ங்கள் அருளப்பெற்றன. 3. அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்(படுவதாக அறிவிக்கப்)பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
280. சுலைமான் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஸிர்ரு பின் ஹீபைஷ் (ரஹ்) அவர்களிடம் “(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது” எனும் (53:9வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன்.அதற்கு அவர்கள்,“(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை, அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள்’ (என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும்) என இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
281. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபியின்) உள்ளம்,அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை””” எனும் (53:11 ஆவது) வசனத்திற்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
282. ஸிர்ரு பின் ஹூபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்” எனும் (53:18 ஆவது) வசனம் குறித்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல் அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க, அவரது (நிஜ) உருவத்தில் அவரைப் பார்த்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 77 "நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) இறைவசனத்தின் பொருளும், விண்ணுலகப் பயணத்தின்போது நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா? என்பதும்.
283. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்" எனும் (53:13ஆவது) வசனம், "நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்ததையே குறிக்கிறது" என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 1
284. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
”நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை அகத்தால் பார்த்தார்கள்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (53:13 ஆவது) வசனத்திற்கு விளக்கம்) கூறினார்கள்.
அத்தியாயம் : 1
285. அபுல் ஆலியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை” (53:11), “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்” (53:13), ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
286. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
287. மஸ்ரூக் பின் அஜ்த உ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்), “அபூஆயிஷா, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்” என்று கூறினார்கள்: நான், அவை எவை?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டிவிட்டார்” என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து (ஓய்வு எடுத்துக்)கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, “இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கூறுங்கள்! அவசரப்படாதீர்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ், “திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்’ (81:23) என்றும், “நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்’ (53:13) என்றும் கூறவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:
இந்த சமுதாயத்தாரில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அது,(வானவர்) ஜிப்ரீலை, (நான் பார்த்த்தை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை, அவர் படைக்கப்பெற்றுள்ள (நிஜத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து(பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.அப்போது அவருடைய பிராமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது” என்று கூறினார்கள்.
மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.
“கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (6:103).
அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹீயின் (தனது அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை (வேதமாக) அறிவிக்கச்செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை; நிச்சயமாக அவன் உயர்ந்தோனும் ஞானமிக்கோனும் ஆவான்” (42:51).
(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவேத்திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று யாரேனும் கூறினால், அவரும் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுகட்டிவிட்டார்.அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்! (இவ்வாறு) நீங்கள் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீங்கள் நிறைவேற்றியவராகமாட்டீர்கள்” (5:67) என்று கூறுகின்றான்.
“நபி (ஸல்) அவர்கள் நாளை நடக்கவிருப்பதைத் தெரிவிப்பார்கள்’ என்று யாரேனும் கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது மிகபெரும் பொய்யைப் புனைந்துவிட்டார். அல்லாஹ்வோ, “(நபியே!) கூறுக: அல்லாஹ்வைத் தவிர வான்ங்களிலும் பூமியிலும் உள்ள யாரும் மறைவானவற்றை அறியமாட்டார்” (27:65) என்று கூறுகின்றான்.
அத்தியாயம் : 1
288. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் கீழ்க்காணும் தகவல் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது:
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைப்பவராக இருந்தால், பின்வரும் வசனத்தை மறைத்திருப்பார்கள்: (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்புரிந்து நீங்களும் அவர்மீது உபகாரம் புரிந்தீர்களோ, அவரிடத்தில் நீங்கள், "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் துணைவியை (மணவிலக்குச் செய்துவிடாமல்) உம்மிடமே நிறுத்திவைத்துக்கொள்ளும்" என்று சொன்னபோது, அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை மனிதர்களுக்குப் பயந்து நீங்கள் உங்களது மனத்தில் மறைத்துவைத்தீர்கள்; அல்லாஹ்வே நீங்கள் அஞ்சுவதற்கு மிகவும் தகுதியுடையோன். (33:37)
அத்தியாயம் : 1
289. மேற்கண்ட (287ஆவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மஸ்ரூக் (ரஹ்) அவர்கள், "நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் "முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் தூயவன். நீர் கூறியதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது..." என்று கூறியதாக ஹதீஸ் துவங்குகிறது. (இது தொடர்பான அறிவிப்புகளில்) மேற்கண்ட (287ஆவது) ஹதீஸே முழுமையானதும் விரிவானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
290. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்க்கவில்லை என்று கூறிய) ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான், "(வளைந்த) வில்லின் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போன்று, அல்லது அதைவிடச் சமீபமாக (அவர்கள் இருவருக்கும் இடையிலான) நெருக்கம் இருந்தது. பிறகு அல்லாஹ் தன் அடியாருக்கு எதை அறிவித்தானோ அதை அறிவித்தான்" எனும் (53:9-11) வசனங்களின் பொருள் என்ன?" என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "அது (வானவர்) ஜிப்ரீலை (நபியவர்கள் பார்த்ததை)யே குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித உருவிலேயே நபி (ஸல்) அவர்களிடம் வருவார்கள். ஆனால், இம்முறை மட்டும் அடிவானத்தையே அடைத்தபடி (பிரமாண்டமான) தமது (நிஜ) உருவத்தில் வந்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 78 "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்றும், "நான் ஓர் ஒளியைக் கண்டேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியது.
291. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "(அவனைச் சுற்றிலும் இருப்பது) ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்.
அத்தியாயம் : 1