பாடம் : 73 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப் பெற்றதன் துவக்கம்.
252. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேதஅறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று (தெளிவாகவே) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் "ஹிரா" குகையில் தனித்திருந்து கணிசமான இரவுகள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுவந்தார்கள். அதற்காகத் தம் குடும்பத்தாரிடம் சென்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டுசெல்வார்கள். (அந்த உணவு தீர்ந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து அதைப் போன்று (பல நாட்களுக்கு வேண்டிய) உணவைப் பெற்றுச் செல்வார்கள். இந்நிலை, "ஹிரா" குகையில் அவர்களுக்குச் சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. (ஒரு நாள்) அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "ஓதுவீராக!" என்றார். நபி (ஸல்) அவர்கள்,
"நான் ஓதத் தெரிந்தவனில்லையே!" என்று சொன்னார்கள். (பின்பு நடந்தவற்றை) நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:
வானவர் (ஜிப்ரீல்) என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு என்னை விடுவித்துவிட்டு "ஓதுவீராக!" என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்த வனில்லையே!" என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து நான் திணறும் அளவிற்கு (மீண்டும்) இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விடுவித்துவிட்டு "ஓதுவீராக!" என்றார். அப்போதும் "நான் ஓதத் தெரிந்தவனில்லையே!" என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க இயலாத அளவிற்கு மூன்றாவது முறையாக இறுகத் தழுவினார். பின்னர் என்னை விடுவித்துவிட்டு, "படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை "பற்றித் தொங்கும் (அட்டைபோன்ற) நிலை"யிலிருந்து படைத்தான். (நபியே!) ஓதுவீராக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்" எனும் (96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த வசனங்களுடன், (அச்சத்தால்) தம் கழுத்துச் சதைகள் படபடக்கத் திரும்பிவந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் சென்றார்கள். "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்றார்கள். அவ்வாறே (வீட்டாரும்) அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றைத் தெரிவித்து விட்டு "எனக்கு என்ன ஆயிற்று? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள், "அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறீர்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கின்றீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகின்றீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு உதவி செய்கின்றீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)" என்று (ஆறுதல்) சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரர் மகனான வரக்கா பின் நவ்ஃபல் பின் அசத் பின் அப்தில் உஸ்ஸா என்பாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் சென்றார்கள்.
"வரக்கா" அறியாமைக் காலத்திலேயே கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும், அவர் அரபி (மற்றும் எபிரேய) மொழியில் எழுதத் தெரிந்தவராக இருந்தார். எனவே, இன்ஜீல் வேதத்தை அல்லாஹ் நாடிய அளவிற்கு (எபிரேய மொழியிலிருந்து) அரபு மொழியில் (மொழிபெயர்த்து) எழுதுவார். அவர் கண்பார்வையிழந்த முதியவராகவும் இருந்தார்.
அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள், "என் தந்தையின் சகோதரரே! உங்களுடைய சகோதரரின் புதல்வர் (முஹம்மத்) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்" என்றார்கள். அப்போது வரக்கா பின் நவ்ஃபல் (நபி (ஸல்) அவர்களிடம்), "என் சகோதரர் மைந்தரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?" எனக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் விவரத்தை அவரிடம் தெரிவித்தார்கள். (இதைக் கேட்ட) வரக்கா, "(நீர் கண்ட) இவர்தாம் (இறைத்தூதர்) மூசாவிடம் அனுப்பப்பெற்ற வானவர் (ஜிப்ரீல்) ஆவார்" என்று நபியவர்களிடம் கூறிவிட்டு, "(மகனே!) உம்மை உம் சமூகத்தார் (உமது நாட்டிலிருந்து) வெளியேற்றும் அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தத் தருணத்தில் உயிரோடு இருந்தால் நன்றாயிருக்குமே!" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டு) வெளியேற்றவா செய்வார்கள்?" என்று கேட்க, வரக்கா, "ஆம், நீங்கள் பெற்றுள்ள (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) பகைத்துக்கொள்ளப்படாமல் இருந்ததில்லை. உங்களது (தூதுத்துவப் பணி பரவலாகும்) நாளை நான் அடைந்தால் உங்களுக்குப் பலமான உதவிபுரிவேன்" என்று கூறினார்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
253. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்" எனும் வாசகத்திற்கு பதிலாக) "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் கவலையில் ஆழ்த்தமாட்டான்" என்று (கதீஜா (ரலி) அவர்கள் ஆறுதல் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.
அவ்வாறே ("என் தந்தையின் சகோதரரே!" என்று வரக்காவிடம் கூறியதற்கு பதிலாக) "என் தந்தையின் சகோதரர் புதல்வரே!" என கதீஜா (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
254. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ("தம் கழுத்து சதைகள் படபடக்க நபியவர்கள் தம் துணைவியார் கதீஜாவிடம் திரும்பிவந்து" எனும் வாசகத்திற்கு பதிலாக) "(அச்சத்தால்) இதயம் படபடக்க நபியவர்கள் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பிவந்து" என்று இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த வேத அறிவிப்பு (வஹீ) தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது" என்று இந்த அறிவிப்பின் தொடக்கத்தில் கூறப்படவில்லை.
யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்" என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது. மேலும், கதீஜா (ரலி) அவர்கள் "என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்கள் சகோதரர் மகனிடம் கேளுங்கள்" என்று சொன்னதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 1
255. நபித்தோழர் ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:
நான் நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அங்கே, நான் "ஹிரா"வில் இருந்தபோது என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து பயந்து அதிர்ச்சிக்குள்ளானேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பிவந்து (என் வீட்டாரிடம்), "எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்று சொன்னேன். அவர்களும் போர்த்திவிட்டார்கள். அப்போது சுபிட்சமும் உயர்வும் உடைய அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக" எனும் வசனங்களை (74:1-5) அருளினான். பின்னர் வேதஅறிவிப்பு (வஹீ) தொடர்ந்து வரலாயிற்று.
மேற்கண்ட (74:5ஆவது) வசனத்தின் மூலத்திலுள்ள "அர்ருஜ்ஸ்" (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.
அத்தியாயம் : 1
256. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது:
பின்னர் சிறிது காலம் எனக்கு வேதஅறிவிப்பு (வஹீ) நின்றுபோயிற்று. அப்போது (ஒரு நாள்) நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன். ...அவரைப் பார்த்து பயந்து அதிர்ச்சிக்குள்ளான நான் தரையில் விழுந்துவிட்டேன்... பின்னர் வேதஅறிவிப்புத் தொடர்ந்து அதிகமாக வரலாயிற்று.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.
அதில், "தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அந்த வசனங்களை (74:1-5) அல்லாஹ் அருளினான்" என்று சிறு வித்தியாசத்துடன் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
257. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம், "குர்ஆனில் எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "போர்த்தியிருப்பவரே!" (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (74:1ஆவது) வசனம்" என்றார்கள். நான், "ஓதுக (என்று தொடங்கும் 96:1ஆவது) வசனம் இல்லையா?" என்று கேட்டேன். அதற்கு அபூசலமா (ரஹ்) அவர்கள், "நான் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம், "எந்த வசனம் முதன் முதலில் அருளப்பெற்றது?" என்று (இதே கேள்வியைக்) கேட்டேன். அதற்கு அவர்கள், "போர்த்தியிருப்பவரே!" எனும் (74:1ஆவது) வசனம்" என்றே பதிலளித்தார்கள். உடனே நான் "ஓதுக (இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க...) எனும் (96:1ஆவது) வசனம் இல்லையா?" என்று (நீங்கள் கேட்டதைப் போன்றே) கேட்டேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதையே உங்களுக்கு நான் சொல்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் ஒரு மாதம் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி, அங்கிருந்த "பத்னுல் வாதீ" பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்தேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் முன் புறத்திலும் பின் புறத்திலும் எனக்கு வலப் பக்கத்திலும் எனக்கு இடப் பக்கத்திலும் பார்த்தேன். அங்கு யாரையும் நான் காணவில்லை. பிறகு (மீண்டும்) என்னை அழைக்கும் குரல் கேட்டுப் பார்வையைச் செலுத்தினேன். யாரையும் நான் காணவில்லை. பிறகு (மூன்றாவது முறையாக) என்னை அழைக்கும் குரல் கேட்டு அண்ணாந்து பார்த்தேன். அப்போது அவர் (வானவர் ஜிப்ரீல்) ஆகாயவெளியில் ஓர் ஆசனத்தில் இருந்தார். அப்போது நான் கடுமையாக நடுக்கமுற்றேன். உடனே நான் (என் துணைவியார்) கதீஜாவிடம் வந்து, "எனக்குப் போர்த்திவிடுங்கள்" என்று கூறினேன். அவ்வாறே (என் வீட்டார்) எனக்குப் போர்த்தி விட்டார்கள். என்மீது தண்ணீரை ஊற்றினார்கள். அப்போது மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ், "போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! உம்முடைய இறைவனைப் பெருமைப்படுத்துவீராக! உமது ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக" எனும் (74:1-5) வசனங்களை அருளினான்.
அத்தியாயம் : 1
258. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அவர் (வானவர் ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 74 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்காக (மிஃராஜ்) இரவில் அழைத்துச் செல்லப்பட்டதும், தொழுகை கடமையாக்கப்பட்டதும்.
259. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(விண்ணுலகப் பயணத்தின்போது) என்னிடம் கோவேறு கழுதையைவிடச் சிறியதும், கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த நீளமான புராக் எனும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று கொண்டுவரப்பட்டது. அது பார்வை எட்டுகிற தூரத்திற்குத் தனது கால் குளம்பை எடுத்து (எட்டு) வைக்கும். அதிலேறி நான் பைத்துல் மக்திஸ் (ஜெரூசலேம்) இறை ஆலயம் வரை சென்றேன். பிறகு இறைத்தூதர்கள் தமது வாகனத்தைக் கட்டி வைக்கும் வளையத்தில் எனது வாகனத்தைக் கட்டிவைத்துவிட்டு அந்த இறையாலயத்திற்குள் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுதேன். பிறகு நான் அங்கிருந்து புறப்பட்ட போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என்னிடம்) ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் கொண்டுவந்தார். (அதில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுமாறு கூறினார்.) நான் பால் பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அப்போது ஜிப்ரீல், "இயற்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்" என்று கூறினார்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு முதல் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உங்களுடன் (வந்திருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரச்சொல்லி) அவரிடம் ஆள் அனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(அவரை அழைத்து வரச்சொல்லி என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது" என்றார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. நான் அங்கு (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் என்னை வாழ்த்தி வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு இரண்டாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி சொன்னார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உங்களுடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப் பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்து வரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப் பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு சகோதரிகளின் புதல்வர்களான ஈசா பின் மர்யம் (அலை), யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) ஆகியோரை நான் கண்டேன்.அவர்கள் இருவரும் என்னை வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தனர்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு மூன்றாம் வானத்திற்கு உயர்ந்தார். (அதன் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "நீங்கள் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். உடனே எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் யூசுஃப் (அலை) அவர்களைக் கண்டேன். (மொத்த) அழகில் பாதி அவர்களுக்கு வழங்கப்பெற்றிருந்தது. அன்னாரும் என்னை வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு நான்காம் வானத்திற்கு உயர்ந்தார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர் "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம் அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள். (இத்ரீஸ் (அலை) அவர்கள் தொடர்பாக) அல்லாஹ், "மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்" (19:57) என்று கூறுகின்றான்.-
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஐந்தாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். அப்போது, "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவருமாறு) ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவருமாறு என்னை) அவரிடம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் ஹாரூன் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஆறாம் வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர் "முஹம்மத்" என்று பதிலளித்தார் "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் மூசா (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் (என்னை) வரவேற்று, எனது நன்மைக்காகப் பிரார்த்தித்தார்கள்.
பிறகு ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஏழாவது வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அவர், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் (இருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அவர், "முஹம்மத்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அவர், "(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது" என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் அல்பைத்துல் மஅமூர் (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்துகொண்டிருந்தார்கள். அ(ந்த இறையில்லத்)தில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் (இறைவனை வணங்கச்) செல்வார்கள். அவர்கள் மறுபடியும் அங்கு நுழைவதில்லை. (புதியவர்களே அடுத்து நுழைவார்கள்.)
பிறகு (வான் எல்லையிலுள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா" எனும் இடத்திற்கு என்னை ஜிப்ரீல் அழைத்துச்சென்றார். அதன் இலைகள் யானைகளின் காதுகளைப் போன்றிருந்தன. அதன் பழங்கள் கூஜாக்களைப் போன்றிருந்தன. அல்லாஹ்வின் கட்டளையால் இனம் புரியாத (நிறங்கள்) அதைச் சூழ்ந்து கொண்டபோது (அதன் அமைப்போ முற்றிலும்) மாறிவிட்டது. அல்லாஹ்வின் படைப்புகளில் எவராலும் அதன் அழகை விவரித்துக் கூற முடியாது. அப்போது அல்லாஹ் அறிவிக்க வேண்டியச் சிலவற்றை எனக்கு அறிவித்தான். என்மீது இரவிலும் பகலிலும் (நாள் ஒன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான்.
பிறகு நான் மூசா (அலை) அவர்களிடம் இறங்கிவந்தேன். அப்போது அவர்கள், "உங்கள் சமுதாயத்தாருக்கு உம்முடைய இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள். "ஐம்பது (வேளைத்) தொழுகைகளை(க் கடமையாக்கினான்)" என்று நான் பதிலளித்தேன். "உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று (உங்கள் சமுதாயத்தாருக்காக தொழுகையின் எண்ணிக்கையைக்) குறைக்கும்படி கேளுங்கள். ஏனெனில், உங்கள் சமுதாயத்தார் இதைத் தாங்கமாட்டார்கள். நான் (என்னுடைய) பனூ இஸ்ராயீல் மக்களிடம் பழகி அனுபவப் பட்டிருக்கிறேன்" என்று கூறினார்கள். நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்று, "என் இறைவா! என் சமுதாயத்தார்மீது (ஐம்பது வேளைத் தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைப்பாயாக!" என்று கேட்டேன். இறைவன் (ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து, "(ஐம்பதிலிருந்து) ஐந்தை எனக்குக் குறைத்தான்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "உங்கள் சமுதாயத்தார் இதையும் தாங்கமாட்டார்கள். எனவே, உங்கள் இறைவனிடம் திரும்பிச்சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்றார்கள். இவ்வாறே நான், என் இறைவனுக்கும் மூசா (அலை) அவர்களுக்குமிடையே திரும்பிச் சென்றுகொண்டிருந்தேன்.
இறுதியாக, "முஹம்மதே! இவை இரவிலும் பகலிலும் (நிறைவேற்ற வேண்டிய) ஐவேளைத் தொழுகைகள் ஆகும். ஒவ்வொரு தொழுகைக்கும் பத்து (நற்பலன்) உண்டு. (நற்பலனில்) இவை ஐம்பது வேளைத் தொழுகை(க்கு ஈடு) ஆகும். ஒருவர், ஒரு நன்மை செய்ய வேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே, அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காக ஒரு நன்மை பதிவு செய்யப்படும். அதை அவர் செய்து முடித்துவிட்டால் அவருக்காகப் பத்து நன்மைகள் பதிவு செய்யப்படும். ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் இருந்துவிட்டால் (குற்றம்) எதுவும் பதியப்படுவதில்லை. (எண்ணியபடி) அதை அவர் செய்து முடித்துவிட்டால் ஒரு குற்றமாகவே அது பதிவு செய்யப்படுகிறது" என்று கூறினான்.
பின்னர் நான் அங்கிருந்து புறப்பட்டு மூசா (அலை) அவர்களிடம் வந்துசேர்ந்தேன். அ(ல்லாஹ் கூறிய)தை அவர்களிடம் நான் தெரிவித்தேன். அப்போது அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் சென்று இன்னும் குறைக்கும்படி கேளுங்கள்" என்று கூறினார்கள். உடனே நான், "(பல முறை) என் இறைவனிடம் திரும்பிச் சென்றுவிட்டேன். (இன்னும்) அவனிடம் (குறைத்துக் கேட்க) நான் வெட்கப்படுகிறேன்" என்று கூறிவிட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
260. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னை அ(ந்த வான)வர்கள் ஸம்ஸம் கிணற்றுக்குக் கொண்டுசென்றார்கள். என் நெஞ்சைப் பிளந்து, (இதயத்தை வெளியிலெடுத்து) ஸம்ஸம் கிணற்றின் நீரால் (என் இதயம்) கழுவப்பட்டது. பிறகு மீண்டும் (அதே இடத்திற்கு) நான் கொண்டுவந்து விடப்பட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
261. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது சிறு வயதில்) சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து நபியவர்களைப் பிடித்துப் படுக்கவைத்து,அவர்களின் நெஞ்சைத் திறந்து இருதயத்தை வெளியிலெடுத்தார்கள். ஓர் (சதைத்) துண்டை வெளியில் எடுத்து, "இதுதான் உம்மிடமிருந்த ஷைத்தானுக்குரிய பங்கு" என்று ஜிப்ரீல் கூறினார். பிறகு ஒரு தங்கத் தாம்பூலத்தில் இதயத்தை வைத்து ஸம்ஸம் நீரால் அதைக் கழுவினார். பின்னர் முன்பு இருந்த இடத்தில் இதயத்தைப் பொருத்தினார். (நபியவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த) அந்தச் சிறுவர்கள் நபியவர்களின் செவிலித் தாயிடம் ஓடிச் சென்று "முஹம்மத் கொல்லப்பட்டுவிட்டார்" என்று கூறினர். குடும்பத்தார் நபியவர்களை நோக்கி வந்தபோது (அச்சத்தால்) நபியவர்கள் நிறம் மாறிக் காணப்பட்டார்கள்.
அறிவிப்பாளர் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் ஊசியால் தைத்த அந்த அடையாளத்தை நான் பார்த்திருக்கிறேன்.
அத்தியாயம் : 1
262. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகச் சிறிது முன் பின்னாகவும் கூடுதல் குறைவுடனும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஹதீஸ் பின்வருமாறு துவங்குகிறது: ஷரீக் பின் அப்தில்லாஹ் பின் அபீநமிர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் (விண்ணுலகப் பயணத்திற்காக) கஅபா பள்ளிவாசலில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டது குறித்து அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
நபி (ஸல்) அவர்களுக்கு (மீண்டும்) வேத அறிவிப்பு (வஹீ) வருவதற்கு முன் இறையில்லம் கஅபா அருகில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் (வானவர்) மூன்று பேர் வந்தார்கள்...
அத்தியாயம் : 1
263. அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துவந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து) என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை "ஸம்ஸம்" நீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தாம்பூலம் ஒன்றைக் கொண்டு வந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே) நெஞ்சை மூடிவிட்டார்.
பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க் கொண்டு விண்ணில் ஏறினார். முதல் வானத்திற்கு நாங்கள் வந்தபோது முதல் வானத்தின் காவலரிடம் ஜிப்ரீல், "திறப்பீராக!" என்று கூறினார். அதற்கு அக்காவலர் "யார் அது?" எனக் கேட்டார். அவர் "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார். "உம்முடன் யாரேனும் வந்திருக்கிறார்களா?" என்று அக்காவலர் கேட்டார். அவர், "என்னுடன் முஹம்மத் (ஸல்) வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று அவர் கேட்க, ஜிப்ரீல் "ஆம்" என்று பதிலளித்தார். (முதல் வானத்தின் கதவை அதன்) காவலர் திறந்தார். நாங்கள் முதல் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர்; இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு, என்னைப் பார்த்து,) "நல்ல இறைத்தூதரே, வருக! நல்ல மகனே, வருக!" என்று அந்த மனிதர் கூறினார். நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "யார் இவர் ஜிப்ரீலே?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், "இவர்தாம் (ஆதிமனிதர்) ஆதம் (அலை) அவர்கள். இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அன்னாரின் வழித்தோன்றல்கள்; வலப் பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கமிருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவேதான், அவர் வலப் பக்கம் (சொர்க்கவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும் போது சிரிக்கிறார். இடப் பக்கம் (நரகவாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது அழுகிறார்" என்று பதிலளித்தார்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வானில் ஏறினார். இரண்டாம் வானம் வந்ததும் அதன் காவலரிடம் "திறப்பீராக!" என்று கூறினார். அதன் காவலரும் முதலாம் வானத்தின் காவலர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதிலளித்த பின்) அவர் கதவைத் திறந்தார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), ஈசா (அலை), மூசா (அலை) மற்றும் இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்களே தவிர அவர்கள் எங்கெங்கே தங்கியிருந்தார்கள் என்பது பற்றி (என்னிடம்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை முதல் வானத்திலும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்திலும் கண்டதாகக் கூறினார்கள் என அபூதர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
ஜிப்ரீல் (அலை) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது, "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துச்) சொன்னார்கள். பிறகு (அவரைக்) கடந்து சென்றபோது, நான் "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "இவர்தாம் இத்ரீஸ் (அலை) அவர்கள்" என்று பதிலளித்தார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் நான் மூசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்." என்று (வாழ்த்துக்) கூறினார்கள்.
நான் (ஜிப்ரீலிடம்), "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல், "இவர்தாம் மூசா" என்று பதிலளித்தார். பிறகு நான் ஈசா (அலை) அவர்களையும் கடந்துசென்றேன். அவர்களும் "நல்ல இறைத்தூதரும் நல்ல சகோதரருமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் மர்யமின் மைந்தர் ஈசா" என்று பதிலளித்தார். பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். அவர்கள், "நல்ல இறைத்தூதரும் நல்ல மகனுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், "இவர் யார்?" என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை), "இவர்தாம் இப்ராஹீம்" என்று பதிலளித்தார்.
இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல் அன்சாரி (ரலி) ஆகியோர் அறிவித்துவந்துள்ளதாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத் -ரஹ்) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (இன்னும் மேலே) உயர்ந்தார்கள். நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது (வானவர்கள் தலை விதிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.
இப்னு ஹஸ்ம் (ரஹ்), அனஸ் பின் மாலிக் (ரலி) ஆகியோர் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அப்போது அல்லாஹ் என் சமுதாயத்தார்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், "உங்கள் சமுதாயத்தார்மீது உங்கள் இறைவன் என்ன கடமையாக்கினான்?" என்று கேட்டார்கள். நான், அவர்கள்மீது (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்" என்று பதிலளித்தேன். "அவ்வாறாயின் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று குறைக்கும்படி சொ)ல்லுங்கள்! ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அவற்றைத் தாங்க முடியாது" என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச்சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) அவன் அதில் ஒரு பகுதியைக் குறைத்தான். நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிவந்து (அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான் என்று) தெரிவித்தபோது (மீண்டும்) அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள். (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்.) ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்" என்று சொன்னார்கள். இவ்வாறாக நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்று (இறுதியில்), "இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழுகைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது" என்று கூறிவிட்டான்.
நான் மூசா (அலை) அவர்களிடம் திரும்பிச்சென்றேன். அவர்கள், "உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்!" என்றார்கள். நான், "என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்" என்று சொன்னேன்.
பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலக எல்லையில் அமைந்துள்ள இலந்தை மரமான) "சித்ரத்துல் முன்தஹா"வுக்குப் போய்ச்சேர்ந்தார்கள். பல வண்ணங்கள் அதைப் போர்த்திக்கொண்டிருந்தன. அவையென்ன என்று எனக்குத் தெரியாது. பிறகு நான் சொர்க்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கே முத்தாலான கோபுரங்கள் இருந்தன. சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.
அத்தியாயம் : 1
264. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம் சமூகத்தைச் சேர்ந்த மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் இறையில்லம் கஅபா அருகில் (பாதி) உறக்கத்திலும் (பாதி) விழிப்பிலும் இருந்தபோது, (வானவர்) ஒருவர் (வந்து), "இரண்டு பேருக்கு (ஹம்ஸா மற்றும் ஜஅஃபர்-ரலி) நடுவில் படுத்திருக்கும் மூன்றாவது மனிதரைத்தாம் (நாம் அழைத்துச் செல்லவேண்டும்)" என்று கூறுவதைக் கேட்டேன். பிறகு நான் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது என்னிடம் ஒரு தங்கத்தட்டு கொண்டுவரப்பட்டது. அதில் "ஸம்ஸம்" நீர் இருந்தது. பிறகு எனது நெஞ்சு இங்கிருந்து இதுவரையில் பிளக்கப்பட்டது.
-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் என்னுடன் இருந்த ஒருவரிடம் (-அனஸ் (ரலி) அவர்களின் நண்பர் ஜாரூத் (ரஹ்) அவர்களிடம்), ஹதீஸின் அறிவிப்பாளரான அனஸ் (ரலி) அவர்கள் "இங்கிருந்து இதுவரையில்... என்று எதைக் கருத்தில் கொண்டு கூறினார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "(நெஞ்சின் ஆரம்பத்திலிருந்து) அடிவயிறுவரை" என்ற கருத்தில் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று பதிலளித்தார்கள்.-
பிறகு எனது இருதயம் வெளியிலெடுக்கப்பட்டு, ஸம்ஸம் நீரால் அது கழுவப்பட்டது. பிறகு பழையபடி அது இருந்த இடத்தில் வைக்கப்பட்டது. பிறகு இறைநம்பிக்கையாலும் நுண்ணறிவாலும் அது நிரப்பப்பட்டது. பிறகு கோவேறு கழுதையைவிடச் சிறியதும் கழுதையைவிடப் பெரியதுமான வெள்ளை நிறத்திலமைந்த "புராக்" எனப்படும் (மின்னல் வேக) வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது. அந்த வாகனம் பார்வை எட்டுகிற தூரத்திற்கு ஓர் எட்டு வைக்கும். பிறகு நான் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டேன். பின்னர் நாங்கள் (புறப்பட்டு) முதல் வானத்திற்குச் சென்றோம். அதன் கதவைத் திறக்கும்படி ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். அப்போது "யார் அது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஜிப்ரீல்" என்று பதிலளித்தார்கள். "உம்முடன் (வந்திருப்பவர்) யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "முஹம்மத் (ஸல்)" என்று பதிலளித்தார்கள். "(அவரை அழைத்துவரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஆம்" என்றார்கள். அப்போது (அந்த வானத்தின் காவலர்) எங்களுக்காகக் கதவைத் திறந்து "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை" என்று (வாழ்த்துக்) கூறினார். நாங்கள் (அந்த வானிலிருந்த) ஆதம் (அலை) அவர்களிடம் சென்றோம். -ஹதீஸை இறுதிவரை குறிப்பிடுகிறார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் இரண்டாம் வானத்தில் ஈசா (அலை), யஹ்யா (அலை) ஆகியோரைத் தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்டார்கள். மூன்றாம் வானத்தில் யூசுஃப் (அலை) அவர்களையும், நான்காம் வானத்தில் இத்ரீஸ் (அலை) அவர்களையும், ஐந்தாம் வானத்தில் ஹாரூன் (அலை) அவர்களையும் சந்தித்ததாக குறிப்பிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) கூறினார்கள்:
பிறகு நாங்கள் ஆறாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் மூசா (அலை) அவர்களிடம் சென்று அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள், "நல்ல சகோதரரும் நல்ல நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும்" என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்றபோது அவர்கள் அழுதார்கள். "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "இறைவா! என் சமுதாயத்தாரில் சொர்க்கம் செல்கின்றவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு உன்னால் அனுப்பப்பெற்ற இந்த இளைஞரின் சமுதாயத்தாரிலிருந்து சொர்க்கம் செல்வார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு நாங்கள் ஏழாம் வானத்தைச் சென்றடைந்தோம். அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்றேன்.
(ஏழாம் வானத்தின் எல்லையிலிருந்த இலந்தை மரமான சித்ரத்துல் முன்தஹாவை நான் கண்டேன்.) நான்கு நதிகளையும் கண்டேன். அந்த மரத்தின் வேர்ப்பகுதியிலிருந்து வெளிநோக்கி இரண்டு நதிகளும், உள்நோக்கி இரண்டு நதிகளும் (ஊற்றெடுத்துப்) பாய்ந்து கொண்டிருந்தன. நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், "ஜிப்ரீலே! இந்நதிகள் எவை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உள்ளே இருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ள (சல்சபீல், கவ்ஸர் ஆகிய)வையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
பிறகு, "அல்பைத்துல் மஅமூர்" (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும் இறையில்லம்) எனக்கு (அருகே கொண்டுவந்து) காட்டப்பட்டது. நான், "ஜிப்ரீல்! இது என்ன?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இதுதான் "அல்பைத்துல் மஅமூர்" ஆகும். இதில் (இறைவனை வணங்குவதற்காக) ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் இங்கிருந்து வெளியே சென்றால் திரும்ப இங்கு வரமாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகிவிடும்" என்று சொன்னார்கள். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன; அவற்றில் ஒரு பாத்திரத்தில் மதுவும் மற்றொரு பாத்திரத்தில் பாலும் இருந்தது. அவ்விரு பாத்திரங்களையும் என்னிடம் எடுத்துக் காட்டப் (பட்டு, அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு கூறப்)பட்டது. நான் பாலைத் தேர்ந்தெடுத்தேன். அப்போது, "இயற்கை நெறியையே நீங்கள் பெற்றுள்ளீர்கள்; இறைவன், உங்கள் மூலம் இயற்கை நலனையே நாடியுள்ளான். உங்கள் சமுதாயத்தாரும் அந்த இயற்கை நெறியிலேயே உள்ளனர்"என்று கூறப்பட்டது.
பிறகு என்மீது நாளொன்றுக்கு ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளை இறுதிவரை குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
265. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "...பிறகு என்னிடம் நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரப்பப்பெற்ற தங்கத் தாம்பூலம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பிறகு எனது (நெஞ்சு) காறையெலும்பிலிருந்து அடிவயிறுவரை பிளக்கப்பட்டு ஸம்ஸம் நீரால் கழுவப்பட்டது. பிறகு நுண்ணறிவாலும் இறை நம்பிக்கையாலும் (என் நெஞ்சம்) நிரப்பப்பட்டது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
266. நபி (ஸல்) அவர்களுடைய பெரிய தந்தையின் புதல்வரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட நாள் குறித்து நினைவுகூர்ந்தார்கள்.
அப்போது "மூசா (அலை) அவர்கள் மாநிறமுடையவர்கள்; (யமனியர்களான) "ஷனூஆ" குலத்து மனிதர்களைப் போன்று உயரமானவர்கள்" என்று கூறினார்கள். மேலும், "ஈசா (அலை) அவர்கள் சுருள் முடியுடையவர்கள்; நடுத்தர உயரமுடையவர்கள்" என்றும் சொன்னார்கள். நரகத்தின் காவலர் (வானவர்) மாலிக் அவர்களைப் பற்றியும் தஜ்ஜாலைப் பற்றியும் குறிப்பிட்டார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (விண்ணுலகப் பயணத்திற்காக) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் இம்ரானின் புதல்வர் மூசா (அலை) அவர்களைக் கடந்துசென்றேன். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) "ஷனூஆ" குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள்முடியுடைவர்கள். (அப்பயணத்தில்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் கண்டேன். அவர்கள் நடுத்தர உயரமும் சிவப்பும் வெண்மையும் கலந்த, மிதமான சரும அமைப்புக் கொண்டவர்களாகவும் படிந்த, தொங்கலான தலைமுடி உடையவர்களாகவும் இருந்தார்கள். மேலும், நரகத்தின் காவலரான (வானவர்) மாலிக்கும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலும் எனக்குக் காட்டப்பட்டனர். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் உள்ளவை. "நீங்கள் அவரைச் சந்தித்ததில் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்". (32:23)
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மேற்கண்ட (32:23ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் கத்தாதா (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் மூசா (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி நீங்கள் சந்தேகம் ஏதும் கொள்ள வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
268. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்அஸ்ரக்" பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார்கள்.அப்போது, "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தார்கள். "மூசா (அலை) அவர்கள் உரத்த குரலில் "தல்பியா" சொல்லிக்கொண்டு இந்த மலைக் குன்றிலிருந்து இறங்கிவந்து கொண்டிருப்பதை (இப்போதும்) நான் காண்பதைப் போன்று உள்ளது" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு ஹர்ஷா மலைக் குன்றுக்குச் சென்றார்கள். "இது எந்த மலைக் குன்று?" என்று கேட்டார்கள். மக்கள், "(இது) ஹர்ஷா மலைக் குன்று" என்று பதிலளித்தனர். அதற்கு "யூனுஸ் பின் மத்தா (அலை) அவர்கள் கம்பளி நீளங்கி அணிந்தவர்களாகக் கட்டுடல் கொண்ட சிவப்பு ஒட்டகமொன்றின் மீது "தல்பியா" சொல்லிக் கொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நாரினாலானது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
269. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கைக் கடந்து சென்றோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது எந்தப் பள்ளத்தாக்கு?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்அஸ்ரக் பள்ளத்தாக்கு" என்று பதிலளித்தனர். அப்போது அவர்கள், "மூசா (அலை) அவர்கள் தம் இருவிரல்களைக் காதுகளுக்குள் நுழைத்தவர்களாக உரத்த குரலில் தல்பியாச் சொன்னபடி இந்தப் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றுகொண்டிருப்பதை நான் (இப்போதும்) காண்பதைப் போன்று உள்ளது" என்று கூறினார்கள். -அப்போது மூசா (அலை) அவர்களது நிறத்தைப் பற்றியும் முடியைப் பற்றியும் ஏதோ குறிப்பிட்டார்கள். ஆனால் அது அறிவிப்பாளர் தாவூத் (ரஹ்) அவர்களது நினைவிலில்லை.-
பிறகு நாங்கள் பயணம் செய்து ஒரு மலைக் குன்றுக்கு வந்துசேர்ந்தோம். அப்போது "இது எந்த மலைக் குன்று?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், "ஹர்ஷா" அல்லது "லிஃப்த்" என்று பதிலளித்தனர். அப்போது, "யூனுஸ் (அலை) அவர்கள் சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது கம்பளி நீளங்கி அணிந்தவர்களாக தல்பியா சொன்னவாறு இந்த (மலைக் குன்றின்) பள்ளத்தாக்கைக் கடந்துசெல்வதை நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது. அவர்களது ஒட்டகத்தின் கடிவாளம் ஈச்ச நார் (கொண்டு பின்னப்பட்டது) ஆகும்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
270. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது மக்கள் (இறுதிக் காலத்தில் வரவிருக்கும் மகா பொய்யனான) தஜ்ஜாலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர், "அவனுடைய இரு கண்களுக்குமிடையே "காஃபிர்" (இறைமறுப்பாளன்) என எழுதப்பட்டிருக்கும்" என்று சொன்னார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இவ்வாறு கேள்விப்பட்டதில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், "(இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் எத்தகைய உருவ அமைப்பில் இருந்தார்கள் என்று அறிய வேண்டுமென்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்கள் எத்தகையவர் என்றால், அவர்கள் மாநிறமுடையவர்கள்; சுருள் முடி கொண்டவர்கள்; ஈச்ச நாரினால் மூக்கணாங்கயிறு இடப்பட்ட சிவப்பு ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்தபடி இருப்பார்கள். அவர்கள் (ஹஜ் செய்ய) தல்பியா கூறியபடி இந்த (அல்அஸ்ரக்) பள்ளத்தாக்கில் இறங்கியபோது (அவர்களைக் கண்டேன். அந்தக் காட்சியை) நான் (இப்போதும்) பார்ப்பதைப் போன்று உள்ளது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
271. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறைத்தூதர்கள் எனக்குக் காட்டப்பட்டனர். மூசா (அலை) அவர்கள் (யமனியர்களான) “ஷனூஆ” குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று உயரமான மனிதராக இருந்தார்கள். மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் (என் தோழர்) உர்வா பின் மஸ்ஊதுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். இப்ராஹிம் (அலை) அவர்களையும் நான் பார்த்தேன். அவர்கள் உங்கள் தோழருக்கு (எனக்கு) மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள். (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (என் தோழர்) தஹ்யா அவர்களுக்கு மிக நெருக்கமான சாயலுடையவராக இருந்தார்கள்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், முஹம்மத் பின் ரும்ஹூ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தஹ்யா பின் கலீஃபா அவர்களுக்கு”’’ என்று (தந்தை பெயரும் இணைத்து) கூறப்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1