பாடம் : 65 இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது; குறைந்த எண்ணிக்கையினரிடையே தான் அது திரும்பிச்செல்லும். அது (இறுதியில் மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ ஆகிய) இரு பள்ளிவாசல்களிடையே அபயம் பெறும்.
232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். அந்தக் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கு சுபம் உண்டாகட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் குறைந்த எண்ணிக்கை கொண்ட மக்களிடையேதான் தோன்றியது. அது தோன்றிய பழைய நிலைக்கே திரும்பிச்செல்லும். பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இஸ்லாம் இரு பள்ளிவாசல்களில் அபயம் பெறும்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
233. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பாம்பு தனது புற்றில் (சென்று) அபயம் பெறுவதைப் போன்று இறைநம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 66 இறுதிக் காலத்தில் இறைநம்பிக்கை (இல்லாமற்) போய்விடுவது.
234. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பூமியில் "அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லப்படாதபோதுதான் மறுமை நாள் நிகழும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ், அல்லாஹ்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் (இறைநம்பிக்கையாளர்) எவர்மீதும் மறுமை நாள் நிகழாது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 67 (எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்று) அஞ்சுகின்றவர் தமது இறை நம்பிக்கையை இரகசியமாக வைத்துக்கொள்வது.
235. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள், "எத்தனை பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள்? என்பதை எனக்குக் கணக்கிட்டுச் சொல்லுங்கள்!" என்று கூறினார்கள். நாங்கள் அறுநூறு முதல் எழுநூறு பேர்வரை இருக்க, எங்களைப் பற்றி அஞ்சுகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டோம்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குத் தெரியாது. நீங்கள் (எதிரிகளால்) சோதிக்கப்படலாம்!" என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் சோதிக்கப் பட்டோம். எந்த அளவுக்கென்றால், (ஒரு கட்டத்தில்) எங்களில் சிலர் இரகசியமாகவே தவிரத் தொழ முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 68 தமது இறைநம்பிக்கை குறித்து அஞ்சுகின்ற பலவீனமான ஒருவரின் உள்ளத்தைத் தேற்றுவதும், உறுதியான ஆதாரமின்றி ஒருவரை இறைநம்பிக்கையாளர் என்று முடிவு செய்வதற்கு வந்துள்ள தடையும்.
236. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தர்மப் பொருள்களைப்) பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! இன்னாருக்கு நீங்கள் கொடுங்கள். அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்)" என்று சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறைநம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். நான் முன்பு கூறியதைப் போன்றே மூன்று முறை கூறினேன். நபி (ஸல்) அவர்களும் முன்பு கூறியதைப் போன்றே "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்)" என்று மூன்று முறை என்னிடம் கூறினார்கள். பிறகு, "நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், அவரைவிட மற்றொருவர் என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றம் ஏதும் இழைத்து அதனால்) அவரை இறைவன் நரகத்தில் குப்புறத் தள்ளிவிடுவானோ எனும் அச்சம்தான்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
237. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு குழுவினருக்கு (தர்மப் பொருள்களை) வழங்கினார்கள். அவர்களிடையே நானும் அமர்ந்திருந்தேன். அப்போது, அக்குழுவினரில் எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஏதும் கொடுக்காமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள். ஆகவே நான், "அல்லாஹ்வின் தூதரே! (அவரை ஏன் விட்டுவிட்டீர்கள்?) அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் (முஃமின்) என நான் அறிவேன்" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (வெளித்தோற்றத்தில் இறை நம்பிக்கையாளர்) என்று சொல்லுங்கள்!" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறைநம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்று (மீண்டும்) கூறினேன். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!)" என்றார்கள். சிறிது நேரம் நான் அமைதியாக இருந்தேன். நான் அவரைப் பற்றி அறிந்திருந்த விஷயங்கள் என்னை மிகைத்துவிடவே, "அல்லாஹ்வின் தூதரே! அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் ஓர் இறை நம்பிக்கையாளர் என்று நான் அறிவேன்" என்றேன். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை முஸ்லிம் (என்று சொல்லுங்கள்!) நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்; ஆனால், மற்றொருவர் அவரைவிட என் அன்புக்குரியவராய் இருப்பார். (அப்படியிருந்தும் அவருக்கு நான் கொடுப்பதற்குக்) காரணம், (நான் ஏதும் கொடுக்காதிருந்தால் வறுமையினால் அவர் குற்றமேதும் இழைத்து, அதனால்) அவர் நரகத்தில் முகம் குப்புற வீழ்த்தப்படுவாரோ எனும் அச்சம்தான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அக்குழுவினரில் ஒருவருக்கு ஏதும் கொடுக்காததால்) நான் எழுந்து சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அவர்மீது உங்களுக்கு என்ன (அதிருப்தி)?" என்று இரகசியமாகக் கேட்டேன்" என்று (சஅத் பின் அபீக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (மூன்று முறை கேட்டு பதிலுரைத்த பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கழுத்திற்கும் புஜத்திற்கும் மத்தியில் அடித்து, "சஅதே! (என்னிடம் வழக்காடி) மோத வருகின்றீர்களா? நான் ஒருவருக்குக் கொடுக்கிறேன்..." என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 69 (இறைச்)சான்றுகள் வெளிப்படுவதன் மூலம் (இறைநம்பிக்கை மீது) மன அமைதி அதிகரிப்பது.
238. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர் களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (அவர்கள் சந்தேகப்பட்டு அப்படிக் கேட்கவில்லை.) ஏனெனில், "என் இறைவா! மரித்தவர்களை எவ்வாறு நீ உயிர்ப்பிப்பாய் என்று எனக்குக் காட்டுவாயாக!" என்று அன்னார் கேட்டார்கள். இறைவன், "நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா?" என்று கேட்டான். அதற்கு அவர்கள், "ஆம்! ஆயினும் என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்" என்று பதிலளித்தார்கள். (2:260)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறும்) கூறினார்கள்:
அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக்குக் கருணை புரிவானாக! அன்னார் வல்லமை மிக்க ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாய் இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் தங்கியிருந்த அளவிற்கு நீண்ட காலம் நான் சிறையில் தங்கியிருக்க நேரிட்டு (பிறகு அவர்களை விடுதலை செய்ய அழைப்பாளர் ஒருவர் வந்ததைப் போன்று என்னிடம் வந்து) இருந்தால், நான் அந்த அழைப்பாளரின் அழைப்பை ஏற்றுக்கொண்டிருப்பேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பிறகு நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் "நபி (ஸல்) அவர்கள் இந்த (2:260ஆவது) இறை வசனத்தை முழுமையாக ஓதிக் காட்டினார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 70 முஹம்மத் (ஸல்) அவர்கள் (உலக) மக்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள் என்றும், அவர்களது மார்க்கத்தின் மூலம் மற்ற (முந்தைய) மார்க்கங்கள் காலாவதியாகிவிட்டன என்றும் நம்புவது கட்டாயமாகும்.
239. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பெற்றே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டியநிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, இறைத்தூதர்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள இறைத்தூதராக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
240. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இந்த(இறுதி)ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என்(மார்க்கத்தி)னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த (மார்க்கத்)தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்துவிட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே இருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
241. ஸாலிஹ் பின் ஸாலிஹ் அல்ஹம்தானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அன்றைய) குராசான் நாட்டைச் சேர்ந்த ஒரு மனிதர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்களிடம், "அபூஅம்ரே! "ஒருவர் தம் அடிமைப் பெண்ணை விடுதலை செய்து அவளைத் தாமே மணந்துகொள்ளும்போது, அவர் தமது ஒட்டகத்திலேயே பயணம் செய்து கொண்டிருப்பவரைப் போன்றவராகிறார் (அவருக்கு அதற்காக நன்மை ஏதும் கிடைக்காது)" என எங்கள் குராசான் பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனரே!?" என்று கேட்டார். அதற்கு ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமுசா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத்தில்) இரட்டை நன்மைகள் அளிக்கப்படும்:
1.வேதக்காரர்களில் ஒருவர் தம்முடைய (சமூகத்தாருக்கு நியமிக்கப்பெற்ற) இறைத்தூதரையும் நம்பினார்; எனது காலத்தை அவர் அடைந்தபோது என்னையும் நம்பினார்; பின்பற்றினார்; மெய்ப்படுத்தினார். அவருக்கு இரு நன்மைகள் உண்டு.
2.அடிமையாக உள்ள ஒருவர் இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எசமானின் கடமையையும் நிறைவேற்றினார். அவருக்கும் இரு நன்மைகள் உண்டு.
3.ஒருவர் தம்மிடமிருந்த அடிமைப் பெண்ணுக்கு நிறைவாக உணவளித்(துப் பராமரித்து வந்)தார். அவளுக்கு நற்குணங்களைக் கற்றுக்கொடுத்தார். அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்து தாமே மணந்தும்கொண்டார் எனில், அவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.
பிறகு ஷஅபீ (ரஹ்) அவர்கள் அந்தக் குராசான்வாசியிடம், "(கட்டணம்) ஏதுமின்றி (உங்களுக்கு நான் அறிவித்த) இந்த ஹதீஸைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதைவிடச் சிறிய விஷயங்களை அறிந்துகொள்வதற்காகவெல்லாம் சிலர் மதீனா வரை பயணம் சென்றதுண்டு" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 71 (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கி வந்து, நம்முடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மார்க்க நெறியின்படி நீதி வழங்குதல்.
242. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன்மீது சத்தியமாக! விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா -அலை) உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; (இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.) அப்போது செல்வம் (பெருகி) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக்கொள்ள எவரும் இருக்கமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஓர் அறிவிப்பில், "(மர்யமின் மைந்தர்) நீதிவழுவாத் தலைவராக, நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக (இறங்கவிருக்கிறார்.)" என்று இடம்பெற்றுள்ளது.
மற்றோர் அறிவிப்பில் "நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக" என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது. "நீதிவழுவாத் தலைவராக" என்பது இடம்பெறவில்லை. மற்றோர் அறிவிப்பில் "நீதிவழுவாத் தீர்ப்பாளராக" என இடம்பெற்றுள்ளது. அதில் "அந்த நேரத்தில் செய்யப்படும் ஒரேயொரு சஜ்தா (சிரவணக்கம்) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக இருக்கும்" என்றும் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், "வேதம் வழங்கப் பெற்றவர்களில் எவரும், அவர் (மர்யமின் மைந்தர்) இறப்பதற்கு முன்பாக அவரை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கமாட்டார்..." எனும் (4:159ஆவது) இறைவசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக்கொள்ளுங்கள்!" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
243. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா, உங்களிடையே) நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; அப்போது (உயர்ந்த செல்வமான) ஒட்டகங்கள் அப்படியே விடப்படும். அவற்றை யாரும் தேடி அலையமாட்டார்கள். (அந்த நேரத்தில் மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் போட்டி பொறாமையும் அகன்றுவிடும். செல்வங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால், அதை யாரும் ஏற்கமாட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
244. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு(த் தொழுகை நடத்தும்) இமாமாக இருக்க, மர்யமின் மைந்தர் (ஈசா)உங்களிடையே இறங்குவாரேயானால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
245. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி, உங்களுக்குத் தலைவராக இருந்தால் உங்களுக்கு எப்படியிருக்கும்?
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
246. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மர்யமின் மைந்தர் (ஈசா) உங்களிடையே இறங்கி வந்து, உங்களுக்கு இமாமாக இருந்தால் அப்போது உங்களுக்கு எப்படியிருக்கும்?" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான வலீத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்களிடம் நான், "அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து வரும் அவ்ஸாயீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களைச் சேர்ந்த ஒருவரே உங்களுக்கு இமாமாக இருக்க (மர்யமின் மைந்தர் உங்களிடையே இறங்குவாரேயானால்...)" என இடம்பெற்றுள்ளதே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் "மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால்..." என்பதன் பொருள் என்னவென்று நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். நான், "நீங்களே கூறுங்கள்!" என்றேன். அப்போது அவர்கள், "உங்களுடைய இறைவனின் வேதத்தின்படியும் உங்களுடைய நபியின் வழிமுறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார் என்று பொருள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1
247. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் (சத்தியத்தில்) மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈசா (அலை) அவர்கள் (பூமிக்கு) இறங்கிவருவார்கள். அப்போது முஸ்லிம்களின் தலைவர், "வாருங்கள், வந்து எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்துங்கள்!" என்று (ஈசாவிடம்) கூறுவார். அதற்கு ஈசா (அலை) அவர்கள், "இல்லை (உங்களுக்கு நான் தலைமை தாங்கித் தொழுவிக்கமாட்டேன்). உங்களில் சிலர்தாம் மற்றச் சிலருக்குத் தலைவராக இருப்பார்; இது, அல்லாஹ் இந்தச் சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும்" என்று கூறிவிடுவார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 72 இறைநம்பிக்கை (ஈமான்) கொள்ள முன்வந்தாலும் ஏற்கப்படாத (இறுதிக்) காலம்.
248. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாதவரை மறுமைநாள் வராது. அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது மக்கள் அனைவரும் (அதைப் பார்த்துவிட்டு) ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள். ஆனால், முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த (இறுதி) நாளில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (6:158)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஆறு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
249. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத,அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது. (அவை:) 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல். 2. தஜ்ஜால் (தோன்றுதல்). 3. பூமியிலிருந்து வெளிப்படும் (அதிசய) கால்நடை.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
250. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவார்கள்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "அது (சூரியன்) இறை அரியாசனத்துக்கு (அர்ஷுக்கு)க் கீழே தலைவணங்குவதற்காகத் தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அதனிடம், "எழுந்து, நீ வந்த வழியே சென்றுவிடு" என்று கூறப்படும் வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு (மறுநாள் மீண்டும்) இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் சென்று தலைவணங்குகிறது, அதனிடம், "நீ எழுந்து, வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு!" என்று கூறப்படும்வரை அது அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது. அவ்வாறு கூறப்பட்டதும் அது திரும்பிச் சென்று கிழக்கிலிருந்து உதயமாகிறது. பிறகு மக்களுக்கு (எந்த வித்தியாசமும்) தெரியாத விதத்தில் இறை அரியாசனத்துக்குக் கீழே தனது நிலையை நோக்கிச் செல்கிறது. அப்போது அதனிடம், "நீ எழுந்து மேற்கிலிருந்து உதயமாகு!" என்று கூறப்படும். அப்போது அது (வழக்கத்திற்கு மாறாக) மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது எந்த நாள் என்று உங்களுக்குத் தெரியுமா? அது, முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத (இறுதி) நாளாகும்" என்று கூறினார்கள்.(6:158)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தபோது அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சூரியன் மறைந்தபோது (என்னிடம்) அவர்கள், "இந்தச் சூரியன் எங்கு செல்கிறது என்று உமக்குத் தெரியுமா, அபூதர்?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினேன். அப்போது அவர்கள், "அது (இறை அரியாசனத்துக்குக் கீழே) சென்று தலைவணங்குவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதனிடம், "நீ வந்த வழியே திரும்பிச் சென்றுவிடு" என்று கூறப்படுகிறது போலும். (இறுதியாக ஒரு நாள்) அது மேற்கிலிருந்து உதயமாகும்" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபூதர் (ரலி) அவர்கள் இதை அறிவித்துவிட்டு, (குர்ஆனில் "வஷ்ஷம்சு தஜ்ரீ லி முஸ்தகர்ரின் லஹா" என்று இடம்பெற்றுள்ள 36:38ஆவது வசனத்தை) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஓதல் முறையில் உள்ளபடி "வ தாலிக முஸ்தகர்ருன் லஹா" என்று ஓதிக்காட்டினார்கள். (பொருள்: அதுதான் அது நிலைகொள்ளும் இடமாகும்.)
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
251. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "சூரியன் தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது" எனும் (36:38ஆவது) வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நிலைகொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1