332. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் ஆள் ஆவேன். நான் (இறைவனின் தூதர் என) ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுக்கு இறைத்தூதர்களில் வேறெவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை. இறைத்தூதர்களில்(இப்படியும்) ஒருவர் இருந்தார்; அவருடைய சமுதாயத்தாரில் ஒரேயொரு மனிதர்தாம் அவரை ஏற்றுக்கொண்டார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
333. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மறுமை நாளில் சொர்க்கத்தின் தலைவாயிலுக்குச் சென்று அதைத் திறக்கும்படி கோருவேன். அப்போது அதன் காவலர், "நீங்கள் யார்?" என்று கேட்பார். நான், "முஹம்மத்" என்பேன். அதற்கு அவர், "உங்களுக்காகவே நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்; உங்களுக்கு முன் வேறு யாருக்காகவும் (சொர்க்க வாயிலை) நான் திறக்கலாகாது (எனப் பணிக்கப் பட்டுள்ளேன்)" என்று கூறுவார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 86 நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அளிக்கப்பட்ட சிறப்புப்) பிரார்த்தனையி(ன் வாய்ப்பி)னை தம் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தியது.
334. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக்கொள்ள (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஒன்று (வழங்கப்பட்டு) உள்ளது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
335. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு. அல்லாஹ் நாடினால் நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்தள்ளது.
அத்தியாயம் : 1
336. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
337. அம்ர் பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரஹ்) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள், "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் (தம் சமுதாயத்தாருக்காகப்) பிரார்த்தித்துக் கொள்ள பிரார்த்தனை ஒன்று உண்டு. நான் அல்லாஹ் நாடினால் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தவே விரும்புகிறேன் என்று கூறினார்கள்" என்றார்கள்.
அதற்கு கஅப் (ரஹ்) அவர்கள்,"நீங்கள் இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
338. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (தம் சமுதாயத்தார் தொடர்பாக) ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை உண்டு; எல்லா இறைத்தூதர்களும் அந்தப் பிரார்த்தனையை அவசரப்பட்டு (இம்மையிலேயே) கேட்டுவிட்டனர். நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்வதற்காகப் பத்திரப்படுத்தி வைத்துள்ளேன். அல்லாஹ் நாடினால் என் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் மரணிக்கிறாரோ அவருக்கு அது கிடைக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
339. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவர் பிரார்த்தித்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரார்த்தனை ஒன்று உண்டு. அது ஏற்றுக் கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டும்விட்டது. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்குப் பரிந்துரை செய்யப் பத்திரப் படுத்தி வைத்துவிட்டேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
340. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்துகொள்ள உரிமை உண்டு; அதை அவருக்கு ஏற்கப்பட்டும்விட்டது. நான் அல்லாஹ் நாடினால் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யத் தள்ளிவைக்க விரும்புகிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
341. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்ய பத்திரப்படுத்தி வைத்துவிட்டேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
342. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
343. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளளது.
அவற்றில், அறிவிப்பாளர் வகீஉ (ரஹ்) அவர்கள் "ஒவ்வோர் இறைத்தூதருக்கும் ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை வழங்கப்பட்டது" என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 1
344. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப் பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
345. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தார் தொடர்பாக ஒரு (சிறப்புப்) பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு. நான் எனது பிரார்த்தனையை, மறுமை நாளில் என் சமுதாயத்தாருக்காகப் பரிந்துரை செய்யப் பத்திரப்படுத்திவிட்டேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 87 நபி (ஸல்) அவர்கள் தம் சமுதாயத்தாருக்காகப் பிரார்த்தித்ததும், அவர்கள் மீதுள்ள பரிவால் அழுததும்.
346. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்கள் தொடர்பாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ள "இறைவா! நிச்சயமாக! இவை (சிலைகள்) மக்களில் அதிகம் பேரை வழிகெடுத்துவிட்டன;எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார்; எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவரை) நீயே மன்னிப்பவனாகவும் கருணைபுரிபவனாகவும் இருக்கின்றாய்" என்ற (14:36ஆவது) வசனத்தையும், ஈசா (அலை) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ள "(இப்போது) நீ இவர்களுக்கு வேதனை அளித்தால் இவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ இவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்" என்ற (5:118 ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள். அப்போது நபியவர்கள் தம்மிரு கைகளையும் உயர்த்தியவாறு "இறைவா! என் சமுதாயம்; என் சமுதாயம் (இவர்களைக் காப்பாற்றுவாயாக!)" என்று பிரார்த்தித்தார்கள்; அழுதார்கள். அப்போது வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் (வானவர் ஜிப்ரீலிடம்), "ஜிப்ரீலே! நீங்கள் முஹம்மதிடம் சென்று (உங்கள் இறைவனுக்கு எல்லாம் தெரியும்; என்றாலும்) "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?" என்று கேளுங்கள்" என்றான்.
அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று, அது குறித்துக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், -அல்லாஹ்வுக்குத் தெரியும்; என்றாலும்- தாம் கூறியவற்றை (மேற்கண்டவாறு) தெரிவித்தார்கள். அதற்கு அல்லாஹ், ""ஜிப்ரீலே! முஹம்மதிடம் சென்று, நாம் உம் சமுதாயத்தார் தொடர்பாக உம்மை திருப்தியடையச் செய்வோம்; உம்மை நாம் கவலையடையச் செய்யமாட்டோம்" என்று கூறுக என்றான்.
அத்தியாயம் : 1
பாடம் : 88 இறைமறுப்பாளராக இறந்தவர் நரகத்திற்கே செல்வார். எந்தப் பரிந்துரையும் அவருக்குக் கிடைக்காது; இறை நெருக்கம் பெற்றவர்கள் யாருடைய உறவும் அவருக்குப் பயனளிக்காது.
347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 89 "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீங்கள் எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம்.
348. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் இந்த (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷியரை (ஓரிடத்திற்கு) அழைத்தார்கள்.
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடினர். அப்போது பொதுவாகவும் தனித்தனியாகவும் பெயர் குறிப்பிட்டு,"கஅப் பின் லுஅய்யின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். முர்ரா பின் கஅபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து ஷம்சின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்து மனாஃபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹாஷிமின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள். (என் மகள்) ஃபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்! ஏனென்றால், அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களைக் காக்க என்னால் இயலாது. ஆயினும், உங்களுடன் எனக்கு இரத்த உறவு உண்டு. அதை நான் (காய்ந்துபோகவிடாமல்) பசுமையாக்குவேன் (உங்களுடைய உறவைப் பேணி நடந்துகொள்வேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
349. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
இருப்பினும், முந்தைய அறிவிப்பே நிறைவானதும் நிரப்பமானதும் ஆகும்.
அத்தியாயம் : 1
350. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஸஃபா" மலைக் குன்றின் மீதேறி, "முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! அப்துல் முத்தலிபின் மகள் ஸஃபிய்யாவே! அப்துல் முத்தலிபின் மக்களே! அல்லாஹ்விடமிருந்து வரும் (முடிவாகிவிட்ட சோதனை) எதிலிருந்தும் உங்களை என்னால் காக்க இயலாது. (வேண்டுமானால்) என் செல்வத்திலிருந்து நீங்கள் விரும்பியதை என்னிடம் கேளுங்கள் (தருகிறேன்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
351. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள்" எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "குறைஷிக் கூட்டத்தாரே! உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கிக் (காப்பாற்றிக்)கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒரு சிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது. அல்லாஹ்வின் தூதருடைய புதல்வி ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள்! (தருகிறேன்.) ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1