2318. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள், அல்லது ஐந்தாவது நாள் (மக்காவிற்கு) வந்தார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மேலும், அதில் "மக்கள் தயக்கம் காட்டுகிறார்கள்" எனும் வாசகத்தில் ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்கள் வெளியிட்ட ஐயம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2319. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி (மக்காவிற்கு) வந்தேன். இறையில்லாம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதற்கு முன்பே எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ஆகவே, (தவாஃபைத் தவிர உம்ராவின்) அனைத்துக் கிரியைகளையும் நிறைவேற்றிவிட்டு, ஹஜ்ஜுக்காக ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறினேன். (மினாவிலிருந்து) புறப்படும் (நஃப்ருடைய) நாளில் நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நீ (கஅபாவைச்) சுற்றி வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகும். (எனவே, நீ உம்ராச் செய்ய வேண்டிய தில்லை)" என்று சொன்னார்கள். ஆனால், அதை நான் ஏற்க மறுத்துவிட்டேன். ஆகவே, என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுடன் "தன்ஈமு"க்கு அனுப்பி வைத்தார்கள். நான் ஹஜ் முடிந்த பின் உம்ராச் செய்தேன்.
அத்தியாயம் : 15
2320. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனும் இடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. "அரஃபா"வில் தூய்மை அடைந்தேன். அப்போது என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ ஸஃபா மற்றும் மர்வாவில் சுற்றி (சயீ) வந்ததே உனது ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் போதுமானதாகிவிட்டது" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2321. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் நிறைவேற்றிவிட்டு) இரு நற்பலன்களுடன் திரும்பிச் செல்ல, நான் மட்டும் (ஹஜ்ஜை மாத்திரம் நிறைவேற்றி அதற்குரிய) ஒரு நற்பலனுடன் திரும்பிச் செல்வதா?" என்று கேட்டேன். எனவே, நபி (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களிடம் என்னைத் "தன்ஈமு"க்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்கள். அப்துர் ரஹ்மான் (ரலி) என்னைத் தமது ஒட்டகத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்(டு, தன்ஈமை நோக்கிப் பயணம் மேற்கொண்)டார். அப்போது நான் எனது முகத்திரையை உயர்த்தி, கழுத்து வழியாக அதைக் கழற்றலானேன். உடனே அவர் தமது ஒட்டகத்தை அடிப்பதைப் போன்று எனது காலில் அடித்தார். நான் அவரிடம், "(அந்நிய ஆண்கள்) எவரேனும் (என்னைப் பார்ப்பதைக்) காண்கிறீரா? (பிறகு ஏன் என்னை அடிக்கிறீர்?)" என்று கேட்டேன். பிறகு நான் (தன்ஈமில்) உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னேன். (உம்ரா முடிந்த பிறகு) நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தோம். அப்போது அவர்கள் "முஹஸ்ஸபி"ல் தங்கியிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
2322. அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களை எனது வாகனத்தில் எனக்குப் பின்னால் உட்காரவைத்து (அழைத்துச் சென்று) "தன்ஈமி"ல் உம்ரா மேற்கொள்ளச் செய்யுமாறு உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2323. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவை நோக்கி) வந்தோம். ஆயிஷா (ரலி) அவர்கள் உம்ராவிற்காக ("இஹ்ராம்" கட்டியவர்களாக) வந்தார்கள். நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "சரிஃப்" எனுமிடத்திற்கு வந்தபோது, ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நாங்கள் இறையில்லம் கஅபா,ஸஃபா மற்றும் மர்வா ஆகியவற்றைச் சுற்றினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், எங்களில் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
அப்போது நாங்கள், "(இஹ்ராமிலிருந்து விடுபட்டால் எங்களுக்கு) எதுவெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ளது?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "அனைத்துமே அனுமதிக்கப் பெற்றுள்ளன" என்றார்கள். ஆகவே, நாங்கள் (எங்கள்) மனைவி யருடன் தாம்பத்திய உறவு கொண்டோம். நறுமணம் பூசிக்கொண்டோம். (தைக்கப்பெற்ற) எங்கள் ஆடைகளை அணிந்து கொண்டோம். அன்றைய தினத்திற்கும் அரஃபாவுக்குமிடையே நான்கு இரவுகளே இருந்தன. பின்னர் நாங்கள் "தர்வியா" (துல்ஹஜ் எட்டாம்)நாளில் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றபோது, அவர்கள் அழுதுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது, "உனது பிரச்சினை என்ன?" என்று கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "எனது பிரச்சினை என்னவென்றால், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருக்க, நான் மட்டும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை; இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவுமில்லை. இப்போது மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகப் போய்க்கொண்டிருக்கின்றனர்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இ(ந்த மாதவிடாயான)து, பெண்கள்மீது அல்லாஹ் விதியாக்கியதாகும். ஆகவே, நீ குளித்துவிட்டுப் பின்னர் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி "தல்பியா" சொல்லிக்கொள்" என்றார்கள். அவ்வாறே அவர்கள் செய்துவிட்டு, தங்க வேண்டிய (புனித) இடங்களில் தங்கினார்கள். மாதவிடாயிலிருந்து தூய்மை யடைந்ததும் கஅபாவையும், ஸஃபா மற்றும் மர்வாவையும் சுற்றினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ உனது ஹஜ்ஜிலிருந்தும் உம்ராவிலிருந்தும் விடுபட்டு விட்டாய்" என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வராமலேயே ஹஜ் செய்து முடித்து விட்டேனே எனக் கவலைப்படுகிறேன்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் சகோதரரிடம்) "அப்துர் ரஹ்மானே! நீ இவரை அழைத்துச் சென்று, "தன்ஈமி"லிருந்து உம்ராச் செய்யவைப்பாயாக!" என்றார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்) "முஹஸ்ஸபி"ல் தங்கியிருந்த இரவில் இது நடந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில் லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள்..." என்பதிலிருந்தே ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2324. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜின்போது உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதமாக நடந்துகொள்ளும் மனிதராக இருந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் ஒன்றை ஆசைப்பட்டபோது, அவரது வழியிலேயே அவரை விட்டுவிட்டார்கள். அதனால்தான், அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களை "தன்ஈமி"ல் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டச் செய்தார்கள்" என அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், "எனவே, ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் செய்ததைப் போன்றே செய்வார்கள்" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2325. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி "தல்பியா" சொன்னவர்களாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். எங்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் இறையில்லத்தைச் சுற்றி வந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடினோம். அப்போது எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலால் ஆகி)க்கொள்ளட்டும்" என்றார்கள். நாங்கள், "எந்த வகையில் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "எல்லா வகையிலும் இஹ்ராமிலிருந்து விடுபடுங்கள்" என்றார்கள். ஆகவே, நாங்கள் மனைவியரிடம் சென்றோம் (தாம்பத்திய உறவு கொண்டோம்); (தைக்கப்பட்ட) ஆடைகளை அணிந்தோம்; நறுமணம் பூசிக்கொண்டோம். துல்ஹஜ் எட்டாவது நாள் (யவ்முத் தர்வியா) வந்தபோது, ஹஜ்ஜுக்காகத் தல்பியா கூறினோம். (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டிற்கும் சேர்த்து "இஹ்ராம்" கட்டியிருந்த) நாங்கள் ஏற்கெனவே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடியதே எங்களுக்குப் போதுமானதாக அமைந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களில் ஏழு பேர் ஓர் ஒட்டகத்திலும், ஏழு பேர் ஒரு மாட்டிலும் கூட்டுச் சேர்ந்து (பலியிட்டுக்)கொள்ள உத்தரவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2326. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (துல்ஹஜ் எட்டாவது நாளில்) மினாவை நோக்கிச் செல்லும் போது (ஹஜ்ஜுக்காக) "இஹ்ராம்" கட்டி, தல்பியா சொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, நாங்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "அல்அப்தஹ்" எனுமிடத்தில் (ஹஜ்ஜுக்காக) "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம்.
அத்தியாயம் : 15
2327. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் சேர்த்து (கிரான்) "இஹ்ராம்" கட்டியிருந்ததால் இரண்டுக்கும் சேர்த்து) ஒரேயொரு தடவையே தவிர, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி (சயீ) வரவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் ஆரம்பத்தில் சுற்றிவந்த (ஒரேயொரு தடவையே தவிர)" என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2328. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மக்கள் சிலருடன் இருந்தபோது, ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:
முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களான நாங்கள் தனியாக ஹஜ்ஜுக்காக மட்டும் "இஹ்ராம்" கட்டி "தல்பியா" சொன்னோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (ஹஜ்ஜுக்கு "இஹ்ராம்" கட்டியவர்களாக) வந்தார்கள். அப்போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுக் கொள்ளுமாறு எங்களுக்கு உத்தரவிட்டார்கள்: "இஹ்ராமிலிருந்து விடுபட்டு, (உங்கள்) மனைவியருடன் உடலுறவு கொள்ளுங்கள்" என்றார்கள்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடுவதை நபி (ஸல்) அவர்கள் கட்டாயமாக்கவில்லை. மாறாக, அதை அனுமதிக்கவே செய்தார்கள். -
தொடர்ந்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அப்போது நாங்கள், "நமக்கும் அரஃபாவுக்குமிடையே ஐந்து நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நாம் நம் மனைவியருடன் உறவுகொள்ள வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடுகிறார்களே! நம் இனஉறுப்புகளில் இந்திரியத் துளிகள் சொட்டிக்கொண்டிருக்க, (மனைவியருடன் கூடிய பின் உடனடியாக) நாம் அரஃபாவுக்குச் செல்வதா?" என்று (வியப்புடன்) பேசிக்கொண்டோம்.
- அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இதைக் கூறியபோது ஜாபிர் (ரலி) அவர்கள் தமது கையை அசைத்து சைகை செய்து காட்டியதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
(ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் பேசிக்கொண்டதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து, "நான் உங்களையெல்லாம் விட அல்லாஹ்விற்கு மிகவும் அஞ்சுபவனும், மிகவும் உண்மை பேசுபவனும், அதிகமாக நன்மை புரிபவனும் ஆவேன் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வந்திருக்காவிட்டால்,நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதைப் போன்று நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். (ஹஜ்ஜுடைய மாதத்தில் உம்ராச் செய்யலாம் என) நான் பின்னர் அறிந்ததை முன்னரே அறிந்திருந்தால், எனது பலிப்பிராணியை நான் கொண்டுவந்திருக்கமாட்டேன். எனவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள்!" என்றார்கள். நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்.
அப்போது (யமன் நாட்டில்) ஸகாத் வசூலிக்கும் நிர்வாகப் பொறுப்பில் இருந்த அலீ (ரலி) அவர்கள் (ஹஜ்ஜுக்கு) வந்தார்கள். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "நீர் எதற்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னீர்?" என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "நீர் இஹ்ராமிலேயே நீடித்து, (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானிப் பிராணியை அறுத்துப் பலியிடுவீராக!" என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள். அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்ளும் இச்சலுகை) இவ்வாண்டிற்கு மட்டுமா? அல்லது என்றைக்குமா?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "என்றைக்கும்தான்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2329. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம். நாங்கள் மக்காவிற்கு வந்ததும் எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அது எங்களுக்குச் சிரமமாகத் தோன்றியது; மனவேதனையும் அளித்தது. இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களுக்கு வானிலிருந்து ஏதேனும் செய்தி எட்டியதா, அல்லது மக்களின் தரப்பிலிருந்து போய்ச் சேர்ந்ததா என்று எங்களுக்குத் தெரியவில்லை. இந்நிலையில் அவர்கள், "மக்களே! நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். என்னுடன் பலிப்பிராணி இருந்திராவிட்டால் நீங்கள் செய்ததைப் போன்றே நானும் செய்திருப்பேன்" என்றார்கள். ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம்; மனைவியருடன் தாம்பத்திய உறவு கொண்டோம். (சாதாரணமாக) இஹ்ராமிலிருந்து விடுபட்டவர் செய்வதையெல்லாம் செய்தோம். துல் ஹஜ் எட்டாவது நாளானபோது,மக்காவிலிருந்து (மினாவை நோக்கிப்) புறப்படும் வேளையில் நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டி, "தல்பியா" சொன்னோம்.
அத்தியாயம் : 15
2330. அபூஷிஹாப் மூசா பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் துல்ஹஜ் பிறை எட்டுக்கு நான்கு நாட்களுக்கு முன்னால் உம்ராவிற்குப் பின் ஹஜ் (தமத்துஉ) செய்ய நாடி மக்காவிற்குச் சென்றேன். அப்போது மக்கள், "(இப்படி உம்ராவிற்குப் பின் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்தால்) உமது ஹஜ் தற்போது மக்காவாசிகளின் ஹஜ்ஜாக மாறிவிடுகிறது (குறைந்த நன்மையே உமக்குக் கிடைக்கும்)" என்று கூறினர். நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் என்னிடம் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் பலிப்பிராணியைக் கொண்டுவந்த ஆண்டில் நானும் அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றேன். அப்போது (அவர்களுடன் வந்த) மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்கு மட்டும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "நீங்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வா இடையே ஓடிவிட்டு,தலைமுடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டிக்கொள்ளுங்கள். நீங்கள் இதற்கு முன்னால் (ஹஜ்ஜுக்கு எனச்) செய்துவந்த இஹ்ராமை (உம்ராவை நிறைவு செய்து ஹஜ்ஜுக்குச் செய்யும்) "தமத்துஉ" ஆக மாற்றிக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
அதற்குத் தோழர்கள், "நாங்கள் ஹஜ் எனக் குறிப்பிட்ட இஹ்ராமை எவ்வாறு உம்ராவாக ஆக்கிக்கொள்வது?" என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் கட்டளையிடுவதைச் செய்யுங்கள். ஏனெனில், நான் என்னுடன் பலிப்பிராணியைக் கொண்டு வரவில்லையாயின், உங்களுக்கு நான் கட்டளையிட்டதைப் போன்றே நானும் செய்திருப்பேன். பலிப்பிராணி(யைக் கொண்டுவந்ததால் அது) உரிய இடத்தை அடைவதற்கு முன் (பலியிடும்வரை) நான் இஹ்ராமிலிருந்து விடுபடலாகாது" என்றார்கள். உடனே தோழர்கள் அவ்வாறே செய்தனர்.
அத்தியாயம் : 15
2331. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹஜ்ஜுக்காக "இஹ்ராம்" கட்டியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மக்காவுக்கு) வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொண்டு, இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பலிப் பிராணியிருந்ததால் தமது இஹ்ராமை உம்ராவாக ஆக்கிக்கொள்ள அவர்களால் இயலவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 18 ஹஜ்ஜுடன் உம்ராவும் செய்து பயனடைதல்.
2332. அபூநள்ரா முன்திர் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (ஹஜ் மாதத்தில் முதலில் உம்ராவிற்கு "இஹ்ராம்" கட்டி அதை நிறைவேற்றியவுடன் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, துல்ஹஜ் பிறை எட்டு அன்று மீண்டும் "இஹ்ராம்" கட்டி) ஹஜ்ஜுத் தமத்துஉ செய்யுமாறு உத்தரவிட்டுவந்தார்கள். அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் அதற்குத் தடை விதித்துவந்தார்கள். எனவே, நான் இதைப்பற்றி ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கூறி (தீர்ப்புக் கோரி)னேன். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், சரியான ஆளிடம்தான் இந்த விஷயம் வந்துள்ளது. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுத் தமத்துஉ செய்துள்ளோம். பின்னர் உமர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்தபோது அவர்கள், "அல்லாஹ் தன் தூதருக்கு, தான் நாடியதை தான் நாடிய ஒரு காரணத்திற்காக அனுமதித்து வந்தான். ஆனால், குர்ஆன் அதற்குரிய இடத்தில் உள்ளது. ஆகவே, அல்லாஹ்விற்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் அவன் உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளபடி முழுமையாக்குங்கள். இப்பெண்களின் திருமணத்தை உத்தரவாதப்படுத்துங்கள். இனி, தவணை முறையில் (குறிப்பிட்ட காலம்வரைக்கும் என்று) ஒரு பெண்ணை மணமுடித்தவர் (என்னிடம்) கொண்டு வரப்பட்டால், அவரைக் கல்லால் அடித்துக் கொல்லாமல் விடமாட்டேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. அதில், "...எனவே, உங்களது உம்ராவிலிருந்து ஹஜ்ஜைத் தனியாகப் பிரித்திடுங்கள். அதுவே உங்கள் ஹஜ்ஜையும் முழுமையாக்கும்; உங்கள் உம்ராவையும் முழுமையாக்கும்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2333. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "லப்பைக்க பில்ஹஜ்" எனத் தல்பியாச் சொன்னவர்களாக (ஹஜ்ஜுக்குச்) சென்றோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு வந்ததும்) அந்த இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 19 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்.
2334. முஹம்மத் பின் அலீ பின் அல் ஹுசைன் பின் அலீ பின் அபீதாலிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு முறை) ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஜாபிர் (ரலி) அவர்கள் (என்னுடன் வந்த) மக்களைப் பற்றி விசாரித்துவிட்டு இறுதியில் என்னைப் பற்றி விசாரித்தார்கள். "நான் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்களின் பேரன் முஹம்மத் பின் அலீ" என்று (என்னை) அறிமுகப்படுத்தினேன். உடனே ஜாபிர் (ரலி) அவர்கள், (அன்பொழுகத்) தமது கையை எனது தலையை நோக்கி நீட்டி, (பிறகு கையைக் கீழே கொண்டு சென்று) எனது அங்கியின் மேல் பொத்தானையும்,அடுத்து கீழ்ப் பொத்தானையும் கழற்றி, எனது நெஞ்சில் கையை வைத்தார்கள். -அப்போது நான் இளவயதுச் சிறுவனாக இருந்தேன்- மேலும், "என் சகோதரர் மகனே, வருக. நீர் விரும்பியதைப் பற்றி என்னிடம் கேள்" என்றார்கள். அவர்களிடம் சில விளக்கங்களைக் கேட்டேன். -அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள் கண்பார்வையற்றவராய் இருந்தார்கள்.- தொழுகை நேரம் வந்ததும் அவர்கள் தமது மேல் துண்டை போர்த்திக்கொண்டு எழுந்தார்கள். அவர்கள் அதைத் தமது தோள்மீது போடப் போட, அது சிறியதாக இருந்ததால் தோளில் உட்காராமல் அதன் இரு ஓரங்களும் கீழே விழுந்துகொண்டிருந்தன. அப்போது அவர்களது மேல்சட்டை அருகிலிருந்த ஒரு கொக்கியில் மாட்டப்பெற்றிருந்தது. பிறகு அவர்கள் (மேல்சட்டை அணியாமலேயே மேல்துண்டுடன்) எங்களுக்குத் தொழுவித்தார்கள்.
பிறகு அவர்களிடம் நான், "அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஒன்பது" எனத் தமது விரலால் சைகை செய்து காட்டிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிற்குச் சென்ற பின்) "ஒன்பது" ஆண்டுகள் ஹஜ் (கடமையாகததால் அதை) நிறைவேற்றாமலேயே தங்கியிருந்தார்கள். பத்தாவது ஆண்டில் மக்களிடையே "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஆண்டில்) ஹஜ் செய்யப்போகிறார்கள்" என அறிவிப்புச் செய்யவைத்தார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அவர்களைப் போன்றே தாமும் (ஹஜ்) கிரியைகளைச் செய்யும் நோக்கத்துடன் ஏராளமான மக்கள் மதீனாவிற்கு(த் திரண்டு) வந்தனர்.
பிறகு நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டோம். "துல்ஹுலைஃபா" எனும் இடத்திற்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது, (அபூபக்ர் (ரலி) அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்களுக்கு முஹம்மத் பின் அபீபக்ர் (ரலி) பிறந்தார். உடனே அஸ்மா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அபூபக்ர் (ரலி) அவர்களை) அனுப்பி "நான் எப்படி ("இஹ்ராம்") கட்ட வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீ குளித்துவிட்டு, (பிரசவப்போக்கு இருப்பதால்) ஒரு துணியால் கச்சை கட்டிக்கொண்டு, "இஹ்ராம்" கட்டிக்கொள்" என்று கூறியனுப்பினார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கிருந்த (துல்ஹுலைஃபா) பள்ளிவாசலில் தொழுதுவிட்டு, "கஸ்வா" எனும் ஒட்டகத்தில் ஏறினார்கள். (துல்ஹுலைஃபாவிற்கு அருகிலுள்ள) "அல்பைதாஉ" எனுமிடத்தில் அவர்களது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரானபோது நான் பார்த்தேன்; எனது பார்வையெட்டும் தூரத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னாலும், வலப் பக்கத்திலும், இடப் பக்கத்திலும், பின்னாலும் (ஏராளமான) மக்கள் வாகனத்திலும் கால்நடையாகவும் வந்து குழுமியிருப்பதைக் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு நடுவில் இருந்தார்கள். அப்போது அவர்களுக்குக் குர்ஆன் வசனங்கள் அருளப்பெற்றன. அவற்றின் விளக்கத்தை அவர்கள் அறிவார்கள். அவர்கள் எதைச் செய்தாலும் அதை நாங்களும் அப்படியே செய்தோம்.
அவர்கள் "லப்பைக். அல்லாஹும்ம லப்பைக். லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக். வல்முல்க லா ஷரீக்க லக் (இதோ, உன் அழைப்பேற்று வந்துவிட்டேன் இறைவா! உன் அழைப்பேற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகி றேன். உனக்கு இணை யாருமில்லை. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையாளர் எவருமில்லை)" என்று ஏகத்துவ உறுதிமொழியுடன் தல்பியாச் சொன்னார்கள். மக்கள், தாம் கூறிவருகின்ற முறையில் (சற்று கூடுதல் குறைவு வாசகங்களுடன்) தல்பியா கூறினர். ஆனால், அதில் எதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆட்சேபிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொடர்ந்து தமது தல்பியாவையே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
அப்போது நாங்கள் ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் எண்ணியிருக்கவில்லை. (ஹஜ் காலத்தில் செய்யும்) அந்த உம்ராவை நாங்கள் அறிந்திருக்கவுமில்லை. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக மூன்று முறையும், (சாதாரணமாக) நடந்தவாறு நான்கு முறையும் சுற்றிவந்தார்கள்.
பிறகு மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, "இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ளுங்கள்" (2:125) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள்.
- இவ்விரு அத்தியாயங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையில் ஓதினார்கள் என்றே ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து என் தந்தை முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என நான் அறிவேன் என்று அறிவிப்பாளர் ஜஅஃபர் பின் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்" அமைந்துள்ள மூலைக்குத் திரும்பிச் சென்று, அதில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். பின்னர் (அருகிலிருந்த) அந்த (ஸஃபா) வாசல் வழியாக "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிப் புறப்பட்டார்கள். ஸஃபாவை நெருங்கியதும் "ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" எனும் (2:158ஆவது) வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு, "அல்லாஹ் ஆரம்பமாகக் குறிப்பிட்டுள்ள இடத்திலிருந்தே நானும் ஆரம்பிக்கிறேன்" என்று சொன்னார்கள். அவ்வாறே, முதலில் "ஸஃபா" மலைக் குன்றை நோக்கிச் சென்று, அதன் மீது ஏறினார்கள். அப்போது அவர்களுக்கு இறையில்லம் கஅபா தென்பட்டது. உடனே "லாயிலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை), அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என ஓரிறை உறுதிமொழியும் தக்பீரும் சொன்னார்கள்.
மேலும், லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வ லஹுல் ஹம்து. வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, அன்ஜஸ வஅதஹு, வ நஸர அப்தஹு. வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையாக எவரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத் தவன். (அந்த) அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான். தன் அடியாருக்கு உதவி செய்துவிட்டான். தன்னந்தனியாக கூட்டணிக்குலங்கள் அனைத்தையும் தோற்கடித்துவிட்டான்)"என்றும் கூறினார்கள்.
பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (ஓடு பாதையில்) பிரார்த்தித்துவிட்டு, மேற்கண்டவாறு மூன்று முறை கூறினார்கள்.
பிறகு மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப்பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள்.
மர்வாவில் அவர்கள் தமது இறுதிச் சுற்றை முடித்ததும், "நான் (ஹஜ்ஜுடைய) மாதத்தில் உம்ராச் செய்யலாம் எனப்) பின்னர் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால், நான் பலிப்பிராணிகளை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்; இதை உம்ராவாக மாற்றியிருப்பேன். எனவே, பலிப்பிராணியைத் தம்முடன் கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தமது இஹ்ராமை உம்ராவாக மாற்றிக்கொள்ளட்டும்!" என்று சொன்னார்கள்.
அப்போது சுராக்கா பின் மாலிக் பின் ஜுஅஷும் (ரலி) அவர்கள் எழுந்து(வந்து), "அல்லாஹ்வின் தூதரே! இ(ச்சலுகையான)து, இந்த ஆண்டிற்கு மட்டுமா, அல்லது என்றைக்குமா?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் விரல்களில் ஒன்றை மற்றொன்றுடன் கோத்துக்கொண்டு, "ஹஜ்ஜுக்குள் உம்ரா நுழைந்து கொண்டது" என்று இரண்டு முறை கூறினார்கள். பிறகு (சுராக்கா (ரலி) அவர்களுக்கு), "இல்லை; என்றைக்கும் தான் (இச்சலுகை); என்றைக்கும் தான் (இச்சலுகை)" என்று விடையளித்தார்கள்.
(அந்த ஹஜ்ஜின்போது) அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்காகக் குர்பானி ஒட்டகங்களுடன் வந்தார்கள். அப்போது (அலீயின் துணைவி யார்) ஃபாத்திமா (ரலி) அவர்கள், சாயமிடப்பட்ட ஆடையணிந்து, கண்களுக்கு அஞ்சனம் தீட்டி இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பவர்களில் ஒருவராகக் காட்சியளித்தார்கள். அதை அலீ (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், "என் தந்தை (நபி) அவர்கள்தாம் இப்படிச் செய்யுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்" என்றார்கள்.
- அலீ (ரலி) அவர்கள் இராக்கிலிருந்தபோது (இதைப் பின்வருமாறு) குறிப்பிடுவார்கள்: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா செய்தது குறித்துப் புகார் செய்வதற்காகவும், ஃபாத்திமா கூறியபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் அவ்வாறு செய்யச் சொன்னார்களா என்று கேட்டறிவதற்காகவும் சென்றேன். ஃபாத்திமாமீது ஆட்சேபம் செய்ததை,அவர்களிடம் தெரிவித்தேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எனது குற்றச்சாட்டைக் கேட்டுவிட்டு), "அவர் (ஃபாத்திமா) சொன்னது உண்மையே; அவர் சொன்னது உண்மையே" என்றார்கள்.
பிறகு, "நீர் இஹ்ராம் கட்டி, ஹஜ் செய்ய முடிவு செய்தபோது என்ன (தல்பியா) சொன்னீர்?" என்று கேட்டார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "இறைவா! உன் தூதர் எதற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளார்களோ அதற்காகவே நானும் "இஹ்ராம்" கட்டினேன்"என்று (தல்பியா) சொன்னேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னுடன் பலிப்பிராணிகள் உள்ளன. எனவே, ("என்னைப் போன்றே" எனக்கூறி நீரும் இஹ்ராம் கட்டியுள்ளதால்) நீர் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டாம்"என்றார்கள்.-
தொடர்ந்து முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அலீ (ரலி) அவர்கள் யமனிலிருந்து கொண்டுவந்த பலிப்பிராணிகளையும் நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) கொண்டுவந்த பலிப் பிராணிகளையும் சேர்த்து மொத்தம் நூறு பலிப் பிராணிகள் சேர்ந்தன.
பிறகு மக்கள் அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டு, தலைமுடியைக் குறைத்துக் கொண்டனர்; நபி (ஸல்) அவர்களையும்,தம்முடன் பலிப்பிராணிகளைக் கொண்டுவந்திருந்த மக்களையும் தவிர! துல்ஹஜ் எட்டாவது நாள் வந்தபோது, மக்கள் மினாவை நோக்கிச் சென்றனர். அப்போது ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) "தல்பியா" கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச்சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள். பிறகு (அரஃபா அருகிலுள்ள) "நமிரா" எனுமிடத்தில் தமக்காக முடியினாலான கூடாரம் ஒன்று அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் (முஸ்தலிஃபாவிலுள்ள) "மஷ்அருல் ஹராம்" எனும் மேட்டுக்கு அருகில் தங்குவார்கள் எனக் குறைஷியர் பெரிதும் நம்பிக்கொண்டிருந்தனர். அறியாமைக் காலத்தில் குறைஷியர் அங்கு தங்குவது வழக்கம். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் கடந்து அரஃபாவிற்குச் சென்றுவிட்டார்கள். அங்கு "நமிரா"வில் தமக்காக அமைக்கப்பெற்றிருந்த கூடாரத்தைக் கண்டு அங்கு இறங்கித் தங்கினார்கள்.
சூரியன் உச்சி சாய்ந்ததும் "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் ("உரனா") பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்:
"உங்களது புனிதமிக்க இந்நகரத்தில் உங்களது புனிதமிக்க இம்மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்களுக்குப் புனிதமானவை ஆகும். அறிக! அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க்கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும். (அவற்றை நான் தள்ளுபடி செய்கிறேன்.) முதற்கட்டமாக, நம்மிடையே நடைபெற்ற கொலைகளில் ரபீஆ பின் அல்ஹாரிஸின் மகனது கொலைக்கான பழிவாங்கலை நான் தள்ளுபடி செய்கிறேன். அவன் பனூ சஅத் குலத்தாரிடையே பால்குடிப் பாலகனாக இருந்துவந்தான். அவனை ஹுதைல் குலத்தார் கொன்றுவிட்டனர். அறியாமைக் காலத்தில் இருந்த வட்டியும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்படுகிறது. (அவற்றையும் நான் தள்ளுபடி செய்கிறேன்.) நம்மவர் கொடுத்திருந்த வட்டிகளில் முதற்கட்டமாக (என் பெரிய தந்தை) அப்பாஸ் பின் அப்தில் முத்தலிபிற்கு வரவேண்டிய வட்டியை நான் தள்ளுபடி செய்கிறேன். அதில் (அசலைத் தவிர) கூடுதலான தொகை அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலத்தால் அவர்களை நீங்கள் (கைப்) பிடித்துள்ளீர்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்களது கற்பை நீங்கள் அனுமதிக்கப் பெற்றதாக ஆக்கியுள்ளீர்கள். அவர்களிடம் உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்கள் விரிப்பில் (அதாவது உங்களது வீட்டில்) அவர்கள் அனுமதிக்காமல் இருப்பதாகும். அவ்வாறு அவர்கள் அனுமதித்தால் காயம் ஏற்படாதவகையில் அவர்களை நீங்கள் அடிக்கலாம். உங்களிடம் அவர்களுக்குள்ள உரிமை யாதெனில்,முறையான உணவும் உடையும் அவர்களுக்கு நீங்கள் அளிப்பதாகும்.
உங்களிடையே நான் (மிக முக்கியமான) ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பலமாகப் பற்றிக்கொண்டால் நீங்கள் ஒருபோதும் வழிதவறவேமாட்டீர்கள். அது அல்லாஹ்வின் வேதமாகும்" என்று கூறிவிட்டு, "(மறுமை நாளில்) உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "நீங்கள் (இறைச்செய்திகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்துவிட்டீர்கள்; (உங்களது நபித்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்தார்மீது) அக்கறையுடன் நடந்துகொண்டீர்கள் என நாங்கள் சாட்சியமளிப்போம்" என்று கூறினர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சுட்டுவிரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு அதை மக்களை நோக்கித் தாழ்த்தி, "இறைவா! இதற்கு நீயே சாட்சி" என்று மூன்று முறை கூறினார்கள்.
பிறகு தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச்செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச்செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த ("ஜபலுர் ரஹ்மத்" மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது "கஸ்வா" எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்துவந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும்வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.
சூரியனின் பொன்னிறம் சற்று மறைந்து சூரியனின் தலைப்பகுதி மறைந்துவிட்ட பிறகு உசாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (தமது வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். "கஸ்வா" எனும் தமது ஒட்டகத்தின் கடிவாளத்தை அவர்கள் இறுக்க, அதன் தலை, (பயணி களைப்படையும்போது) கால் வைக்கும் வளையத்தில் பட்டது. அப்போது தமது வலக் கையால் சைகை செய்து, "மக்களே! நிதானம்! நிதானம்! (மெதுவாகச் செல்லுங்கள்)" என்றார்கள். ஒவ்வொரு மணல் மேட்டையும் அடையும் போது, ஒட்டகம் மேட்டில் ஏறும்வரை கடிவாளத்தைச் சற்றுத் தளர்த்தினார்கள். இவ்வாறு முஸ்தலிஃபாவிற்கு வந்ததும் அங்கு ஒரேயொரு "தொழுகை அறிவிப்பு"ம் இரு இகாமத்களும் சொல்லி மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் தொழவில்லை.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருக்களித்துப் படுத்திருந்துவிட்டு, ஃபஜ்ர் உதயமானதும் தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லி ஃபஜ்ர் தொழுவித்தார்கள். அப்போது அதிகாலை வெளிச்சம் நன்கு புலப்பட்டது. பிறகு "கஸ்வா" ஒட்டகத்தில் ஏறி, மஷ்அருல் ஹராமிற்கு ("குஸஹ்" மலைக்கு) வந்து, கிப்லாவை முன்னோக்கி இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் மிகப்பெரியவன் என்று (தக்பீரு)ம், லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று (தஹ்லீலு)ம், "அவன் தனித்தவன்" என்று (ஓரிறை உறுதிமொழியு)ம் கூறினார்கள். நன்கு விடியும்வரை அங்கேயே தங்கியிருந்தார்கள்.
பிறகு சூரியன் உதயமாவதற்கு முன் அங்கிருந்து புறப்பட்டார்கள். அப்போது ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் (வாகனத்தில்) அமர்த்திக்கொண்டு சென்றார்கள். -ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அழகிய முடியும் தோற்றமும் வெள்ளை நிறமும் உடைய வசீகரமான ஆண் மகனாக இருந்தார்கள்.- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டபோது,அவர்களைக் கடந்து பெண்கள் சிலர் சென்றனர். ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்களைக் கூர்ந்து பார்க்கலானார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது தமது கையை வைத்(து மறைத்)தார்கள். உடனே ஃபள்ல் (ரலி) அவர்கள் தமது முகத்தை வேறு பக்கம் திருப்பி (அப்பெண்களை)ப் பார்க்கலானார்கள். மீண்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையை மறு பக்கமும் கொண்டுசென்று, ஃபள்ல் (ரலி) அவர்களின் முகத்தின் மீது வைத்து, அப்பெண்களைப் பார்க்கவிடாமல் திருப்பினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்தலிஃபாவிற்கும் மினாவிற்கும் இடை யிலுள்ள) "பத்னு முஹஸ்ஸிர்" எனும் இடத்துக்கு வந்தபோது, தமது ஒட்டகத்தைச் சிறிது விரைவாகச் செலுத்தினார்கள். பின்னர் "ஜம்ரத்துல் அகபா" செல்லும் சாலையின் நடுவில் பயணம் செய்து, அந்த மரத்திற்கு அருகிலுள்ள "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று, சுண்டி எறியும் அளவிற்கு ஏழு சிறு கற்களை ஜம்ராவின் மீது எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லையும் எறியும்போது தக்பீர் கூறினார்கள். அந்தப் பள்ளத்தாக்கின் நடுவே நின்று கற்களை எறிந்தார்கள்.
பின்னர் மினாவிலுள்ள பலியிடும் இடத்திற்குச் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச்செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக்கொண்டார்கள்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அறுக்கப்பட்ட ஒவ்வோர் ஒட்டகத்திலிருந்தும் ஓர் இறைச்சித் துண்டு கொண்டுவரப்பட்டு, ஒரு பாத்திரத்திலிட்டுச் சமைக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அலீ (ரலி) அவர்களும் அதன் இறைச்சியை உண்டார்கள்; குழம்பைப் பருகினார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறி, ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்காக) இறையில்லம் கஅபாவை நோக்கிச் சென்றார்கள். மக்காவிலேயே லுஹ்ர் தொழுதுவிட்டு, அப்துல் முத்தலிப் மக்களிடம் சென்றார்கள். அப்போது அம்மக்கள் "ஸம்ஸம்" கிணற்றிலிருந்து நீரிறைத்து விநியோகித்துக்கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அப்துல் முத்தலிபின் மக்களே! நீரிறைத்து விநியோகியுங்கள். "ஸம்ஸம்" கிணற்றில் நீரிறை(த்து விநியோகிக்கும் பொறு)ப்பில் உங்களை மக்கள் மிகைத்து விடுவார்கள் என்று (அச்சம்) இல்லாவிட்டால், உங்களுடன் நானும் நீரிறைப்பேன்" என்று சொன்னார்கள்.அப்போது அவர்கள் ஒரு வாளித் தண்ணீரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொடுக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது நீரைப் பருகினார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2335. மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் அலீ பின் அல்ஹுசைன் பின் அலீ (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜைப் பற்றிக் கேட்டேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் அதில், "(அறியாமைக் காலத்தில்) அபூ சய்யாரா என்பவர் தமது சேணம் பூட்டப்படாத கழுதையில் அரபியரை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அழைத்துச் செல்பவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மஷ் அருல் ஹராமை"த் தாண்டிச் சென்றபோது, அந்த இடத்தோடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தைச் சுருக்கிக்கொள்வார்கள்; அதுதான் அவர்கள் தங்கும் இடமாக அமையும் என்பதில் அவர்கள் உறுதியோடு இருந்தனர். ஆனால்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அ(ங்கு தங்குவ) தற்கு முன்வரவில்லை. நேராக அரஃபா நோக்கிச் சென்று (அதன் அருகிலுள்ள "நமிரா"வில்தான்) தங்கினார்கள்" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 20 "அரஃபா" பெருவெளி முழுவதும் தங்குமிடம்தான் என்பது தொடர்பாக வந்துள்ளவை.
2336. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (மினாவில் மஸ்ஜிதுல் கைஃப் அருகிலுள்ள) இவ்விடத்தில் அறுத்துப் பலியிட்டேன். ஆனால், மினா முழுவதும் பலியிடும் இடமாகும். எனவே, (மினாவில்) நீங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பலியிட்டுக்கொள்ளுங்கள். நான் (அரஃபா நடுவிலுள்ள "ஜபலுர் ரஹ்மத்" மலைக்குக் கீழே) தங்கினேன். ஆனால், அரஃபா முழுவதும் தங்குமிடமாகும். நான் (முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" குன்றின் அருகில்) தங்கினேன். ஆனால், முஸ்தலிஃபா முழுவதும் தங்குமிடமாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2337. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா(விலுள்ள கஅபா)விற்கு வந்ததும் "ஹஜருல் அஸ்வது"க்குச் சென்று அதைத் தொட்டு முத்தமிட்டார்கள். பின்னர் வலப் புறமாக நடந்துசென்று (கஅபாவைச்) சுற்றலானார்கள். மூன்று சுற்றுகள் (தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாகவும் நான்கு சுற்றுகள் சாதாரணமாக நடந்தும் சுற்றினார்கள்.
அத்தியாயம் : 15