2238. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2239. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் இறைச்சியை அன்பளிப்பாக வழங்கினேன்"என ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2240. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களுக்கு ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார்கள். நபியவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். மேலும், "நாம் "இஹ்ராம்" கட்டியிருக்காவிட்டால், அதை உம்மிடமிருந்து ஏற்றிருப்போம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2241. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மன்ஸூர் பின் அல்முஅதமிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் ஒரு காலை அன்பளிப்பாக வழங்கினார்கள்" என்று காணப்படுகிறது. ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ரத்தம் சொட்டிக்கொண்டிருந்த காட்டுக் கழுதையின் பின் சப்பையை (அன்பளிப்பாக வழங்கினார்கள்)" என்று இடம் பெற்றுள்ளது. ஷுஅபா (ரஹ்) அவர்களது மற்றோர் அறிவிப்பில் "நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டுக் கழுதையின் விலாப் பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள்" என்று வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2242. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்த வேளையில், அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சி அன்பளிப்பாக வழங்கப்பட்டது குறித்து எனக்கு நீங்கள் எவ்வாறு அறிவித்தீர்கள்?" என நினைவுபடுத்துமாறு கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேட்டைப்பிராணியின் இறைச்சியில் ஒரு பகுதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நாம் இதை உண்ணமாட்டோம். (ஏனெனில்) நாம் "இஹ்ராம்" கட்டியுள்ளோம்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2243. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். எங்களில் "இஹ்ராம்" கட்டியவர்களும் இருந்தனர்; "இஹ்ராம்" கட்டாதவர்களும் இருந்தனர். (நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை.) நாங்கள் (மதீனாவிற்கு அருகிலுள்ள) "அல்காஹா" எனுமிடத்தில் இருந்தபோது, என் தோழர்கள் எதையோ உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். நான் கூர்ந்து பார்த்தபோது ஒரு காட்டுக் கழுதை தென்பட்டது. உடனே நான் என் குதிரையின் சேணத்தைப் பூட்டி, எனது ஈட்டியை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறினேன். அப்போது என் (கையிலிருந்து) சாட்டை கீழே விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு என் தோழர்களிடம் நான் கேட்டேன். அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் "அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த விஷயத்தில் உமக்கு எந்த உதவியும் செய்யமாட்டோம்" என்று கூறிவிட்டார்கள். எனவே, நானே இறங்கி அதை எடுத்துக்கொண்டு (குதிரையில்) ஏறி, மணல் மேட்டுக்கு அப்பாலிருந்த அந்தக் கழுதைக்குப் பின்னால் (மறைந்து) சென்று, அதை நோக்கி என் ஈட்டியை எறிந்தேன். பிறகு அதை அறுத்து என் தோழர்களிடம் கொண்டுவந்தேன். அப்போது அவர்களில் சிலர் "உண்ணுங்கள்" என்றனர். வேறு சிலர் "உண்ணாதீர்கள்" என்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முன்னால் (சென்று ஓரிடத்தில் தங்கி) இருந்தார்கள். ஆகவே, நான் எனது குதிரையை முடுக்கி,அவர்களிடம் போ(ய் அதை "இஹ்ராம்" கட்டியவர்கள் உண்பதைப் பற்றி வினவி)னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அது அனுமதிக்கப்பெற்றதுதான். எனவே, அதை உண்ணுங்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2244. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். மக்கா செல்லும் சாலை ஒன்றில் நான் இருந்தபோது, "இஹ்ராம்" கட்டியிருந்த என் தோழர்கள் சிலருடன் பின்தங்கி விட்டேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நான் (வழியில்) காட்டுக் கழுதையொன்றைக் கண்டு, எனது குதிரைமேல் அமர்ந்தேன். அப்போது என் தோழர்களிடம் என் சாட்டையை எடுத்துத் தரும்படி கேட்டேன். அவர்கள் ("இஹ்ராம்" கட்டியிருந்ததால் அதை எடுத்துத்தர) மறுத்துவிட்டார்கள். அவர்களிடம் எனது ஈட்டியை எடுத்துத் தரும்படி கேட்டேன். அதற்கும் அவர்கள் மறுத்துவிட்டார்கள். ஆகவே, நானே (இறங்கி) அதையெடுத்து அந்தக் கழுதையைத் தாக்கிக் கொன்றேன். நபித்தோழர்களில் சிலர் அதிலிருந்து உண்டார்கள். வேறுசிலர் (உண்ண) மறுத்துவிட்டனர். நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தபோது, அதைப் பற்றி அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதுவெல்லாம் அல்லாஹ் உங்களுக்கு உண்ணக் கொடுத்த உணவாகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2245. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "உங்களுடன் அதன் இறைச்சியிலிருந்து ஏதேனும் (எனக்கு எஞ்சி) உள்ளதா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2246. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா ஒப்பந்தம் நடந்த ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். என் தோழர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. "ஃகைகா" எனுமிடத்தில் எதிரிகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, (எதிரிகளை எதிர்கொள்ள) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முன்னே) சென்றார்கள். நான் மற்ற நபித்தோழர்களுடன் (சென்றுகொண்டு) இருந்தபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரிக்கலாயினர். நான் கூர்ந்து கவனித்தபோது, ஒரு காட்டுக் கழுதை எனக்குத் தென்பட்டது. உடனே நான் அதை ஈட்டியால் தாக்கி (ஓடவிடாமல்) நிறுத்திவிட்டேன். என் தோழர்களிடம் உதவி கோரினேன். ("இஹ்ராம்" கட்டியிருந்ததால்) அவர்கள் எனக்கு உதவ மறுத்துவிட்டனர். பிறகு அதன் இறைச்சியை நாங்கள் உண்டோம். இந்நிலையில் (எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடுவோமோ என்று நாங்கள் அஞ்சினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடி எனது குதிரையைச் சிறிது நேரம் விரைவாகவும் சிறிது நேரம் மெதுவாகவும் ஓட்டிச் சென்றேன். நள்ளிரவில் (வழியில்) நான் "பனூ ஃகிஃபார்" குலத்தைச் சேர்ந்த ஒருவரைச் சந்தித்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீர் எங்கே சந்தித்தீர்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அவர்களை "தஅஹின்" எனும் நீர்நிலையருகே (சந்தித்து) விட்டுவந்தேன். அப்போது அவர்கள் "சுக்யா" எனும் சிற்றூரில் மதிய ஓய்வெடுக்கப் போய்க்கொண்டிருந்தார்கள்" என்று கூறினார்.
நான் அவர்களைச் சென்றடைந்து, "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் தோழர்கள் உங்களுக்கு முகமன் (சலாம்) கூறினர். பயணத்தில் உங்களைப் பிரிந்துவிடுவோமோ என்று அவர்கள் அஞ்சினர். (எனவே, அவர்கள் வந்துசேரும்வரை) அவர்களுக்காக நீங்கள் காத்திருங்கள்" என்றேன். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காத்திருந்தார்கள். தொடர்ந்து நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் (ஒரு காட்டுக் கழுதையை) வேட்டையாடினேன். என்னிடம் அதில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடனிருந்த) மக்களிடம், "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அம்மக்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தனர்.
அத்தியாயம் : 15
2247. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலரை வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது, "கடற்கரை வழியாகச் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்" என்று கூறினார்கள். அவ்வாறே நபித்தோழர்கள் கடற்கரை வழியாகச் செல்லத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அவர்கள் திரும்பி வந்தபோது,என்னைத் தவிர அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இவ்வாறு அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, காட்டுக்கழுதைகளைக் கண்டனர். அவற்றை நான் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். பிறகு அவர்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர்; "நாம் "இஹ்ராம்"கட்டிக்கொண்டே (வேட்டைப் பிராணியின்) இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டோமே" என்று கூறினர்.
பிறகு அந்தக் கழுதையின் இறைச்சியில் எஞ்சியுள்ளதை எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம்; அபூகத்தாதா "இஹ்ராம்" கட்டியிருக்கவில்லை. இந்நிலையில் நாங்கள் (வழியில்) காட்டுக் கழுதையைக் கண்டோம். அபூகத்தாதா அவற்றைத் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி (வேட்டையாடி)னார். பின்னர் நாங்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியிலிருந்து சிறிதளவை உண்டோம். பிறகு "வேட்டையாடப்பெற்ற பிராணியின் இறைச்சியை இஹ்ராம் கட்டிய நிலையில் சாப்பிடுகிறோமே" என்று (எங்களிடையே) பேசிக் கொண்டோம். பிறகு அதன் இறைச்சியில் எஞ்சியதை எடுத்து வந்திருக்கிறோம்" என்று கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் எவரேனும் அதைத் தாக்குமாறு அவரைப் பணித்தாரா, அல்லது அதை நோக்கி எப்படியாவது சைகை செய்தாரா?" என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள் "இல்லை" என்றனர். "அப்படியானால் அதன் எஞ்சிய இறைச்சியை நீங்கள் உண்ணுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2248. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?" என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா" என்று எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 15
2249. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹுதைபியா (ஒப்பந்தப்) போருக்குச் சென்றேன். அப்போது மக்களில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் உம்ரா விற்காக "இஹ்ராம்" கட்டியிருந்தனர். நான் (வழியில்) ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடி என் தோழர்களுக்கு உண்ணக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று "எங்களிடம் அதன் இறைச்சியில் சிறிதளவு எஞ்சியுள்ளது" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உண்ணுங்கள்" என்றார்கள். அப்போது அவர்கள் அனைவரும் "இஹ்ராம்" கட்டியிருந்தனர்.
அத்தியாயம் : 15
2250. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஹ்ராம்" கட்டியவர்களாகப் புறப்பட்டோம். நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், "அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாங்கள், "அதன் கால் எங்களிடம் உள்ளது" என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்டார்கள்" என்றும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2251. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் "இஹ்ராம்" கட்டியிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் "இஹ்ராம்" கட்டாதிருந்தேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது ஏதேனும் உத்தரவிட்டாரா?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!" என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின் உண்ணுங்கள்" என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2252. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தோம். அப்போது அவர்களுக்கு (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரலி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எனவே, எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள் (குறை கூறவில்லை). மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 9 இஹ்ராம் கட்டியவர்களும் மற்றவர்களும் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியேயும் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்.
2253. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய்.
இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், "பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை. - இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும்.தேள், எலி, பருந்து, (நீர்க்)காகம்,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து,வெறிநாய் ஆகியவைதாம் அவை.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2257. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்களைப் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்ல உத்தரவிட்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15