பாடம் : 7 "இஹ்ராம்" கட்டும்போது நறுமணம் பூசுதல்.
2218. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது, அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது, கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2219. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போது அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும்போது அவர்கள், கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடுவதற்காகவும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2220. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்காக நான் அவர்களுக்கு நறுமணம் பூசுவேன்; அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் போதும், அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பு அவர்களுக்கு நான் நறுமணம் பூசுவேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2221. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும், அவர்கள் "இஹ்ராம்" கட்டும்போதும் அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன்.
இதை, காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2222. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜிற்காக "இஹ்ராம்" கட்டிய போதும் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதும் நான் எனது கையால் அவர்களுக்கு ("தரீரா" எனும்) வாசனைத் தூளைப் பூசிவிட்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2223. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது எதனால் அவர்களுக்கு நறுமணம் பூசினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மிக நல்ல வாசனைப் பொருளால் (நறுமணம் பூசிவிட்டேன்)" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2224. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன் என்னால் இயன்ற மிக நல்ல வாசனைப் பொருளை அவர்களுக்குப் பூசிவந்தேன். பின்னர் அவர்கள் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
அத்தியாயம் : 15
2225. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்கள் "இஹ்ராம்" கட்டியதற்காகவும், அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோது அவர்கள் "தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு முன்பும் எனக்குக் கிடைத்தவற்றில் மிக நல்ல நறுமணத்தை அவர்களுக்கு நான் பூசிவிட்டேன்.
அத்தியாயம் : 15
2226. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப் பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது" எனும் சொற்றொடர் இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "அது அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது பூசிய நறுமணமாகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தல்பியா" கூறியபோது, அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது அவர்களது தலை வகிட்டில் நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2230. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த நறுமணப்பொருள் ஒளிர்ந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அத்தியாயம் : 15
2231. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்ட விரும்பினால் தம்மிடம் இருப்பவற்றிலேயே மிக நல்ல மணமுடைய வாசனை (எண்ணெ)யைப் பூசிக்கொள்வார்கள். பின்னர் அவர்களின் தலையிலும் தாடியிலும் அந்த எண்ணெய் ஒளிர்வதை நான் காண்பேன்.
அத்தியாயம் : 15
2232. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியிருந்தபோது, அவர்களது தலை வகிட்டில் பூசியிருந்த கஸ்தூரியின் ஒளியை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2233. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டுவதற்கு முன்பும், துல்ஹஜ் பத்தாம் நாளில் அவர்கள் கஅபாவைச் சுற்றுவதற்கு ("தவாஃபுல் இஃபாளா" செய்வதற்கு) முன்பும் கஸ்தூரி கலந்த நறுமணப்பொருளை அவர்களுக்கு நான் பூசிவந்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2234. முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், ஒருவர் நறுமணப்பொருளைப் பயன்படுத்திவிட்டுக் காலையில் "இஹ்ராம்" கட்டியவராக இருப்பதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் "இஹ்ராம்" கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறினார்கள். பின்னர் நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று இப்னு உமர் (ரலி) அவர்கள் "நான் நறுமணம் கமழக் கமழக் காலையில் "இஹ்ராம்" கட்டியவனாக இருப்பதை விரும்பவில்லை. இவ்வாறு செய்வதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" எனக்கூறினார்கள் என்று தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டியபோது அவர்களுக்கு நான் நறுமணம் பூசிவிட்டேன். பின்னர் அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் காலையில் "இஹ்ராம்" கட்டியவராக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2235. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிடுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டுப் பின்னர் நறுமணம் கமழக் கமழ காலையில் "இஹ்ராம்" கட்டியிருப்பார்கள்.
அத்தியாயம் : 15
2236. முஹம்மத் பின் அல்முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், "நான் "இஹ்ராம்" கட்டியவனாக நறுமணம் கமழக் கமழக் காலை நேரத்தில் இருப்பதைவிட தாரைப் பூசிக்கொள்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்" என்று கூறியதை செவியுற்றேன். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நறுமணம் பூசிவிட்டேன். அவர்கள் தம் துணைவியரிடம் சென்றுவிட்டு வந்து பின்னர் இஹ்ராம் கட்டியவர்களாகக் காலையில் இருந்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 8 "இஹ்ராம்" கட்டியவர் வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
2237. ஸஅப் பின் ஜஸ்ஸாமா அல்லைஸீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலுள்ள) "அல்அப்வா" அல்லது "வத்தான்"எனுமிடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். எனது முகத்தில் ஏற்பட்ட (மாற்றத்)தை அவர்கள் கண்டபோது, "நாம் "இஹ்ராம்" கட்டியிருப்பதால் தான் இதை ஏற்க மறுத்தோம்" என்று கூறினார்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15