பாடம் : 2 ஹஜ் மற்றும் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டும் எல்லைகள்.
2198. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபாவையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் "இஹ்ராம்" கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த எல்லைகள், இ(ங்கு குறிப்பிடப்பெற்றுள்ள)வர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழிகளில் வருகின்ற மற்றவர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர்கள்,தாம் வசிக்கும் இடத்திலிருந்தே ("இஹ்ராம்" கட்டிக்கொள்வர்); மக்காவாசிகள் மக்காவிலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வர்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2199. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்(சிரியா)வாசிகளுக்கு அல்ஜுஹ்ஃபா வையும், நஜ்த்வாசிகளுக்குக் கர்னுல் மனாஸிலையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும் "இஹ்ராம்" கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த எல்லைகள், இவர்களுக்கும் ஹஜ் மற்றும் உம்ராவிற்காக இவ்வழியே வரக்கூடிய ஒவ்வொருவருக்கும் பொருந்தும்;அவர்கள் இவ்வூர்வாசிகளாக இல்லாவிட்டாலும் சரியே! இந்த எல்லைகளுக்குள் இருப்பவர், தாம் பயணம் புறப்படும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வார். எனவே, மக்காவாசிகள் மக்காவிலிருந்தே "இஹ்ராம்" கட்டிக்கொள்வர்.
அத்தியாயம் : 15
2200. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(தொடர்ந்து) யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குச் செய்தி எட்டியது.
அத்தியாயம் : 15
2201. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த் வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என (நபித் தோழர்களால்) எனக்குச் சொல்லப்பட்டது; (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நேரடியாக) நான் அதைச் செவியுறவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2202. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் துல்ஹுலைஃபா ஆகும். ஷாம்(சிரியா)வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் "மஹ்யஆ" ஆகும். அதுவே அல்ஜுஹ்ஃபா எனும் இடமாகும். நஜ்த்வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் "கர்ன்" ஆகும்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
"யமன்வாசிகள் "இஹ்ராம்" கட்டும் இடம் யலம்லம் ஆகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர்கள் (என்னிடம்) கூறினர்; (நேரடியாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இதைச் செவியுறவில்லை.
அத்தியாயம் : 15
2203. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், ஷாம்(சிரியா)வாசிகள் அல்ஜுஹ்ஃபாவிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும் "இஹ்ராம்"கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
யமன்வாசிகள் யலம்லமில் "இஹ்ராம்" கட்டுவார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2204. அபுஸ்ஸுபைர் (முஹம்மத் பின் முஸ்லிம் - ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் "இஹ்ராம்" கட்டும் இடம் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு கூறியதை நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என நான் எண்ணுகிறேன்.
அத்தியாயம் : 15
2205. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகள் துல்ஹுலைஃபாவிலும், மற்றொரு வழியான அல்ஜுஹ்ஃபாவிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள். இராக்வாசிகள் தாத்து இர்க்கிலும், நஜ்த்வாசிகள் கர்னிலும், யமன் வாசிகள் யலம்லமிலும் "இஹ்ராம்" கட்டுவார்கள்.
இதன் அறிவிப்பாளரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 3 தல்பியாவும், அதன் வழிமுறையும் நேரமும்.
2206. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும்.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இறைவா! உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். உனக்கு இணை துணை கிடையாது. உனக்கே எல்லாப் புகழும். அருட்கொடையும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு இணையானவர் எவருமிலர்.)
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக், வல்கைரு பி யதைக், லப்பைக் வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்று கூடுதலாகக் கூறுவார்கள்.
(பொருள்: இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். இதோ, உன் அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். உனக்கே நான் கீழ்ப்படிகின்றேன். நன்மைகள் உன் கைகளிலேயே உள்ளன. இதோ வந்துவிட்டேன். வேண்டுதல்கள் உன்னிடமே. நற்செயல்கள் உனக்காகவே.)
அத்தியாயம் : 15
2207. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது வாகன ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்த பிறகு "லப்பைக் அல்லாஹும்ம! லப்பைக் லப்பைக், லா ஷரீக்க லக்க லப்பைக், இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க வல்முல்க்க, லா ஷரீக்க லக்" என்று தல்பியா கூறுவார்கள்.
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
இதுவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்ன "தல்பியா" ஆகும் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள் என மக்கள் கூறினர்.
மேலும், இதனுடன் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "லப்பைக் லப்பைக் வ சஅதைக். வல்கைரு பியதைக் லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" என்றும் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாயிலிருந்து (நேரடியாகவே) தல்பியாவைக் கற்றேன்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2208. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையைக் களிம்பு தடவிப் படியவைத்திருந்த நிலையில் "லப்பைக் அல்லாஹும்ம லப்பைக், லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக். இன்னல் ஹம்த வந்நிஅமத்த லக்க, வல் முல்க்க லா ஷரீக்க லக்" என்று கூறியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது தல்பியாவில்) இதைவிடக் கூடுதலாக வேறெதையும் கூற மாட்டார்கள்.
இதன் அறிவிப்பாளரான சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பின்னர் துல்ஹுலைஃபா பள்ளிவாசல் அருகில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்ததும் இவ்வாறு தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள்" என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
மேலும் (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியவாறே தல்பியா கூறி "இஹ்ராம்" கட்டுவார்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்! லப்பைக் வ சஅதைக். வல்கைரு ஃபீ யதைக். லப்பைக். வர்ரஃக்பாஉ இலைக்க வல்அமல்" எனக் கூறுவார்கள் என்றும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2209. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பாளர்கள் (ஹஜ்ஜின்போது) "லப்பைக், லா ஷரீக்க லக்" (உன் அழைப்பை ஏற்றோம். உனக்கு இணை ஏதுமில்லை) என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்குக் கேடுதான். போதும்! போதும்! (இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்)" என்பார்கள். (ஏனெனில்,) அதன் பிறகு இணைவைப்பாளர்கள் "இல்லா ஷரீக்கன் ஹுவ லக்க. தம்லிகுஹு வ மா மலக் (ஆனால், உனக்கு ஓர் இணையாளன் இருக்கின்றான்; அவனுக்கு நீ எசமானன். அவன் எவருக்கும் எசமான் அல்லன்; அல்லது அவனுக்கும் அவனுடைய உடமைகளுக்கும் நீயே அதிபதி) என்றும் கூறுவார்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரும்போது, இவ்வாறு இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 4 மதீனாவாசிகள் துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் "இஹ்ராம்" கட்டவேண்டுமென வந்துள்ள கட்டளை.
2210. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இந்த "பைதாஉ" எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பள்ளிவாசல் -அதாவது துல்ஹுலைஃபா பள்ளிவாசலில்தான்- "இஹ்ராம்" கட்டினார்கள்.
அத்தியாயம் : 15
2211. சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "பைதாஉ" எனும் இடத்திலிருந்தே "இஹ்ராம்" கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டால் அவர்கள், "பைதாஉ எனும் இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஹ்ராம்" கட்டினார்கள் என நீங்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹுலைஃபா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) அந்த மரத்திற்குப் பக்கத்தில் தமது ஒட்டகம் சரியாக நிலைக்கு வந்தபோதே "இஹ்ராம்" கட்டினார்கள்" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 5 வாகனம் புறப்படுவதற்குத் தயாராகி நிற்கும்போது ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறல்.
2212. உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன். உங்கள் தோழர்களில் வேறெவரும் அவற்றைச் செய்வதை நான் பார்க்கவில்லை" என்று கூறினேன். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "அவை யாவை, இப்னு ஜுரைஜே?" என்று கேட்டார்கள். "(கஅபாவைச் சுற்றி வரும்போது அதன் மூலைகளில் "ஹஜருல் அஸ்வத்" மற்றும் "ருக்னுல் யமானீ" ஆகிய) இரு மூலைகளை மட்டுமே நீங்கள் தொடக்கண்டேன். மேலும், பதனிடப்பட்ட (முடி அகற்றப்பட்ட) தோல் காலணிகளை நீங்கள் அணிவதை நான் கண்டேன். நீங்கள் (உங்கள் ஆடைக்கு) மஞ்சள் சாயமிடுவதைக் கண்டேன். மேலும், நீங்கள் மக்காவில் இருக்கும்போது, மக்கள் (துல்ஹஜ் மாத) தலைப் பிறையைக் கண்டவுடன் "இஹ்ராம்" கட்டினாலும், நீங்கள் மட்டும் துல்ஹஜ் எட்டாம் நாள் (யவ்முத் தர்வியா) வரும்வரை "இஹ்ராம்" கட்டாமலிருப்பதை நான் கண்டேன் (இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?)" என்று கேட்டேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலளித்தார்கள்: கஅபாவின் மூலைகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு மூலைகளை மட்டுமே தொட்டதை நான் பார்த்தேன் (அதனால்தான் நானும் அவ்வாறு செய்கிறேன்). (முடி அகற்றப்பட்ட) செருப்புகளைப் பொறுத்தவரை,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முடியில்லாத காலணிகளை அணிவதையும் அதனுடன் அங்கத் தூய்மை (உளூ) செய்வதையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அவற்றை அணிவதை விரும்புகிறேன். மஞ்சள் நிறமோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதனால் (தமது ஆடைக்குச்) சாயமிடுவதை நான் பார்த்திருக்கிறேன். ஆகவே, நானும் அதனால் (எனது ஆடைக்குச்) சாயமிடுவதை விரும்புகிறேன். (துல்ஹஜ் எட்டாவது நாள்) "இஹ்ராம்" கட்டுவதோ, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்வரை ("இஹ்ராம்" கட்டி) "தல்பியா" கூறுவதை நான் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 15
2213. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையும் பன்னிரண்டு தடவைகள் நிறைவேற்றியுள்ளேன். நான் அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! நீங்கள் நான்கு விஷயங்களைச் செய்வதை நான் பார்த்தேன்"என உபைத் பின் ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஹதீஸ் ஆரம்பமாகிறது. ஆனால், "இஹ்ராம்" கட்டுவது தொடர்பான தகவல் வேறுவிதமாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 15
2214. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்து, ஒட்டகம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்போது, துல்ஹுலைஃபாவில் ("இஹ்ராம்" கட்டி) தல்பியா கூறுவார்கள்.
அத்தியாயம் : 15
2215. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகம் நிலைக்கு வந்து பயணத்திற்குத் தயாரான போது "தல்பியா" கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2216. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துல்ஹுலைஃபாவில் தமது வாகன ஒட்டகத்தில் ஏறி அமர்ந்து, அது நிலைக்கு வந்தபோது "தல்பியா" கூறியதை நான் பார்த்தேன்.
அத்தியாயம் : 15
பாடம் : 6 துல்ஹுலைஃபா பள்ளிவாசலில் தொழுதல்.
2217. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("இஹ்ராம்" கட்டி ஹஜ் கிரியைகளை) ஆரம்பித்த போது, இரவில் துல்ஹுலைஃபாவில் தங்கினார்கள்; அங்குள்ள பள்ளிவாசலில் தொழுதார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15