பாடம் : 1 ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்’’ இருத்தல்.
2178. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்து வந்தார்கள்.
அத்தியாயம் : 14
2179. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் "இஃதிகாஃப்" இருந்துவந்த இடத்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் எனக்குக் காட்டினார்கள்.
அத்தியாயம் : 14
2180. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருப்பார்கள்.
அத்தியாயம் : 14
2181. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருப்பார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 14
2182. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்துவந்தார்கள். அவர்களுக்குப் பின்னர் அவர்களுடைய துணைவியர் "இஃதிகாஃப்" இருந்தனர்.
அத்தியாயம் : 14
பாடம் : 2 இஃதிகாஃப் இருக்க முடிவு செய்தவர், இஃதிகாஃப் இருக்குமிடத்திற்குள் எப்போது நுழைய வேண்டும்?
2183. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இஃதிகாஃப்" மேற்கொள்ள நாடினால், ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டுப் பின்னர் "இஃதிகாஃப்" இருக்குமிடத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். (ஒருமுறை இஃதிகாஃப் இருப்பதற்காக) தமது கூடாராத்தை அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே கூடாரம் அமைக்கப்பட்டது. அவர்கள் ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கவே விரும்பினார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் (தமக்காக) ஒரு கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள்; (அவர்களுக்காகவும்) கூடாரம் அமைக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்களின் மற்றத் துணைவியரும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டனர்; அவர்களுக்காகவும் கூடாரம் அமைக்கப்பட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையை முடித்தபோது (பள்ளிவாசலுக்குள்) பல கூடாரங்களைக் கண்டார்கள். "(இதன்மூலம்) நீங்கள் நன்மையைத்தான் நாடினீர்களா?" என்று கேட்டுவிட்டு, தமது கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அகற்றப்பட்டது. (அந்த ஆண்டில்) ரமளான் மாதத்தில் இஃதிகாஃப் இருப்பதைக் கைவிட்டு, ஷவ்வால் மாதத்தின் முதல் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இப்னு உயைனா (ரஹ்), அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரஹ்), இப்னு இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி), ஸைனப் (ரலி) ஆகியோர் இஃதிகாஃப் இருப்பதற்காகக் கூடாரம் அமைத்தனர்" எனும் குறிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 14
பாடம் : 3 ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து நாட்களில் (வணக்க வழிபாடுகளில்) அதிக ஈடுபாடு காட்டல்.
2184. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ரமளான் மாதத்தின்) இறுதிப்பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாட்டின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள்; (வழிபாட்டில் ஈடுபடுவதற்காக) தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; (வழக்கத்தைவிட அதிகமாக வழிபாட்டில்) அதிகக் கவனம் செலுத்துவார்கள்; தமது கீழாடையை இறுக்கிக் கட்டிக் கொள்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 14
2185. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாடுகளில்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப்பத்து நாட்களில் காட்டுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 14
பாடம் : 4 துல்ஹஜ் மாதத்தின் பத்து நோன்புகள்.
2186. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்று ஒரு போதும் நான் கண்டதில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 14
2187. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் மாதத்தில்) பத்து நோன்புகள் நோற்றதில்லை.
உங்கள் கருத்து்
அத்தியாயம் : 14

பாடம் : 1 ஹஜ் அல்லது உம்ராவிற்காக ‘இஹ்ராம்’ கட்டியவருக்கு அனுமதிக்கப்பட்டவையும் அனுமதிக்கப்படாதவையும்; அவர் நறுமணம் பூசுவது தடை செய்யப்பட்டுள்ளதும்.
2188. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஹ்ராம்" கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(முழு நீளச்) சட்டைகள், தலைப் பாகைகள், முழுக் கால்சட்டைகள்,முக்காடுள்ள மேலங்கிகள் (புர்னுஸ்), காலுறைகள் (மோஸா) ஆகியவற்றை அணியாதீர்கள். காலணிகள் கிடைக்காதவர் மட்டும் காலுறைகள் அணிந்துகொள்ளட்டும். ஆனால், காலுறை இரண்டும் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும். குங்குமப்பூ மற்றும் "வர்ஸ்" ஆகிய வாசனைச் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட எந்த ஆடைகளையும் அணியாதீர்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2189. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், "இஹ்ராம்" கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "முழுநீளச் சட்டை, தலைப்பாகை, முக்காடுள்ள மேலங்கி, முழுக் கால்சட்டை, வர்ஸ் மற்றும் குங்குமப்பூ ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடை, காலுறைகள் ஆகியவற்றை "இஹ்ராம்" கட்டியவர் அணிய வேண்டாம். காலணிகள் கிடைக்காவிட்டால், காலுறைகள் அணியலாம். ஆனால், கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி காலுறைகளைக் கத்தரித்துக்கொள்ள வேண்டும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2190. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இஹ்ராம்" கட்டியவர் குங்குமப்பூ மற்றும் "வர்ஸ்" ஆகிய வாசனைச் செடிகளின் சாயம் இடப்பட்ட ஆடையை அணியக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். மேலும், "("இஹ்ராம்" கட்டியிருக்கும்போது) காலணிகள் கிடைக்காதவர், காலுறைகள் அணியட்டும்; காலுறைகளைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்துக் கொள்ளட்டும்" என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அத்தியாயம் : 15
2191. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உரையில், "கீழங்கி கிடைக்காத ("இஹ்ராம்" கட்டிய)ஒருவர் முழுக்கால் சட்டை அணிவார்; காலணிகள் கிடைக்காத ஒருவர் காலுறைகள் அணிவார்" என்று குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "நபி (ஸல்) அவர்கள் அரஃபா வில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டதை நான் செவியுற்றேன்" என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஷுஅபா (ரஹ்) அவர்களைத் தவிர மற்றவர்களது அறிவிப்பில் "அரஃபா உரையில் அவ்வாறு குறிப்பிட்டார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இஹ்ராமின்போது) காலணிகள் கிடைக்காதவர் காலுறைகளை அணியட்டும்; கீழங்கி கிடைக்காதவர் முழுக் கால்சட்டை அணியட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2193. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் (மக்காவிற்கு அருகிலுள்ள) "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, அவர்களிடம் நறுமணம் (அல்லது மஞ்சள் நிற அடையாளம்) பூசப்பட்ட மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், "நான் எனது உம்ராவில் என்ன செய்யவேண்டுமென உத்தரவிடுகிறீர்கள்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) வந்தது. உடனே அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். -(என் தந்தை) யஅலா (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன்" என்று கூறுவார்கள். - "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது அவர்களைப் பார்க்க நீர் விரும்புகிறீரா?" என உமர் (ரலி) அவர்கள் கேட்டுவிட்டு, (நபியவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை விலக்கினார்கள். நபி (ஸல்) அவர்கள் இளம் ஒட்டகம் குறட்டை விடுவதைப் போன்று குறட்டை விட்டுக்கொண்டிருந்ததை அப்போது நான் கண்டேன்.
பிறகு (அந்தச் சிரமநிலை) அவர்களைவிட்டு விலகியபோது, "என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். (அந்த மனிதர் வந்ததும்), " "உம்மீதுள்ள மஞ்சள் நிற அடையாளத்தை" அல்லது "நறுமணத்தின் அடையாளத்தை" கழுவிக்கொள்க. உமது அங்கியை களைந்துகொள்க. மேலும், நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2194. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, அதிகமாக நறுமணம் பூசப்பட்ட, தைக்கப்பட்ட அங்கி அணிந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவர், "(தைக்கப்பட்ட) இந்த அங்கி என்மீதிருக்கும் நிலையிலும், அதிகமாக நறுமணம் பூசியிருக்கும் நிலையிலும் நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிவிட்டேன்" என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உமது ஹஜ்ஜில் நீர் என்ன செய்வீர்?" என்று கேட்டார்கள். அவர், "இந்த ஆடையைக் களைந்துவிடுவேன்; என்மீதுள்ள இந்த நறுமணத்தைக் கழுவிக்கொள்வேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "உமது ஹஜ்ஜில் நீர் செய்வதை உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2195. ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது நான் அவர்களைப் பார்க்க வேண்டும் (என ஆசையாக உள்ளது)" என்று கூறுவார்கள்.
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "ஜிஅரானா" எனுமிடத்தில் தங்கியிருந்தார்கள். அவர்களுக்கு மேலே துணியொன்று நிழலுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அவர்களுடன் உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்ட அவர்களுடைய தோழர்களில் சிலரும் இருந்தனர்.
அப்போது அதிகமாக நறுமணம் பூசிய, கம்பளியாலான அங்கியணிந்த ஒரு மனிதர் வந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! அதிகமாக நறுமணம் பூசப்பட்ட அங்கியால் "இஹ்ராம்" கட்டியவர் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்.
அவரை நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, அமைதியாக இருந்தார்கள். அப்போது அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெற்றது. உடனே உமர் (ரலி) அவர்கள், "இங்கு வாருங்கள்" என சைகையால் (என் தந்தை) யஅலா (ரலி) அவர்களை அழைத்தார்கள்.
(என் தந்தை யஅலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:)
நான் சென்று (நபி (ஸல்) அவர்களுக்கு மேலே கட்டப்பட்டிருந்த துணிக்குள்) எனது தலையை நுழைத்தேன். நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் குறட்டை விட்ட நிலையில் சிறிது நேரம் காணப்பெற்றார்கள். பிறகு அவர்களைவிட்டு அந்த (சிரம)நிலை விலகியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். அந்த மனிதர் தேடப்பட்டு, அழைத்துவரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "உம்மீதுள்ள நறுமணத்தை மூன்றுமுறை கழுவிக்கொள்க. (தைக்கப்பட்டுள்ள உமது) அங்கியைக் களைந்து விடுக. (தைக்கப்படாத ஆடை அணிந்து கொள்க.) பிறகு உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2196. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "ஜிஅரானா" எனுமிடத்தில் இருந்தபோது, உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிய ஒரு மனிதர் அவர்களிடம் வந்தார். அவர் தமது தாடியிலும் தலையிலும் மஞ்சள் நிற நறுமணம் பூசியிருந்தார்; (தைக்கப்பட்ட) அங்கி அணிந்திருந்தார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் காணும் இந்த நிலையில் நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டியுள்ளேன்" என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் உமது அங்கியைக் களைந்துகொள்க; மஞ்சள் நிற நறுமணத்தைக் கழுவிக் கொள்க; உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்துகொள்க" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2197. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்களிடம் மேலங்கி அணிந்த ஒரு மனிதர் வந்தார். அவரது அங்கியில் நறுமணத்தின் அடையாளம் இருந்தது. அவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் உம்ராவிற்காக "இஹ்ராம்" கட்டிவிட்டேன். எனவே, நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் பதிலேதும் கூறாமல் அமைதியாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, (துணி போன்றவற்றால்) அவர்களது தலைக்கு மேல் நிழலிட்டு அவர்களை உமர் (ரலி) அவர்கள் மறைப்பார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது அவர்கள்மீது இடப்படும் துணிக்குள் நான் எனது தலையை நுழை(த்துப் பார்)க்க வேண்டுமென ஆசைப்படுகிறேன்" என்று சொல்லியிருந்தேன்.
இந்நிலையில் நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு அருளப்பெற்றபோது, உமர் (ரலி) அவர்கள் துணியால் அவர்களை மறைத்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அந்தத் துணிக்குள் எனது தலையை நுழைத்து, அவர்களைக் கூர்ந்து நோக்கினேன். நபி (ஸல்) அவர்களுக்கு (வஹீயின்போது ஏற்படும் சிரமநிலை அவர்களைவிட்டு) விலகியபோது, "சற்று முன்னர் என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே?" என்றார்கள். உடனே அவர்களிடம் அந்த மனிதர் (வந்து) நின்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உமது அங்கியைக் களைந்துகொள்க; உம்மீதுள்ள நறுமணத்தின் அடையாளத்தைக் கழுவிக்கொள்க. நீர் உமது ஹஜ்ஜில் செய்வதைப் போன்றே உமது உம்ராவிலும் செய்க" என்று கூறினார்கள்.7
அத்தியாயம் : 15