2158. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் "கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை எது? ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "கடமையான தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, நடுநிசியில் தொழுவதாகும். ரமளான் மாதநோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 39 ரமளான் நோன்பைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது விரும்பத்தக்கதாகும்.
2159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார்.
இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஅய்யூப் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 40 லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பும், அதைத் தேடுமாறு வந்துள்ள தூண்டலும், அது எந்த இரவு என்பது பற்றிய விளக்கமும், அதைத் தேடுவதற்கு ஏற்ற நேரமும்.
2160. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபித்தோழர்களில் சிலர், கனவில் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் ஒன்றில் "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி ஏழு இரவுகளில் ஒன்று என்பதில் உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதை நான் காண்கிறேன். ஆகவே, அதைத் தேடுபவர் (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் தேடிக்கொள்ளட்டும்!"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ர்" இரவை (ரமளானின்) இறுதி ஏழு இரவுகளில் (ஒன்றில்) தேடிக் கொள்ளுங்கள்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2162. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில் லைலத்துல் கத்ர் இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ரமளானின் இறுதிப் பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2163. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு தொடர்பாகக் கூறுகையில், "உங்களில் சிலர், (கனவில்) ரமளானின் முந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர்; உங்களில் வேறுசிலர் (கனவில்) ரமளானின் பிந்தைய ஏழு இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவு இருப்பதாகக் காட்டப்பெற்றனர். ஆகவே,நீங்கள் ரமளானின் பிந்தைய பத்தில் (ஒற்றைப்படையான இரவு ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அந்த (லைலத்துல் கத்ர்) இரவைத் தேடுபவர் ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடட்டும்!
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2166. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில், அல்லது இறுதி ஒன்பது இரவுகளில் (ஒன்றில்) "லைலத்துல் கத்ர்" இரவைத் தேடிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2167. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் (உறங்கிக் கொண்டிருந்தபோது கனவில்) "லைலத்துல் கத்ர்" இரவு எனக்குக் காட்டப்பெற்றது. பின்னர் என் வீட்டாரில் ஒருவர் என்னை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தபோது, அதை நான் மறக்கவைக்கப்பட்டேன்.
ஆகவே, (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹர்மலா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "பின்னர் அதை நான் மறந்துவிட்டேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2168. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ரமளான்) மாதத்தின் நடுப்பத்து நாட்களில் பள்ளிவாசலில் தங்கி (இஃதிகாஃப் வழிபாட்டில்) இருப்பார்கள். இருபதாவது இரவு முடிந்து இருபத்தொன்றாவது இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். அவர்களுடன் "இஃதிகாஃப்" இருப்பவர்களும் (தங்கள் இல்லம்) திரும்புவார்கள். இவ்வழக்கப்படி, ஒரு மாதத்தில் "இஃதிகாஃப்" இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் வழக்கமாக இல்லம் திரும்பும் இரவில் (இல்லம் திரும்பாமல் பள்ளிவாசலிலேயே) தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர் "நான் இந்த (நடு)ப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தேன். பிறகு இறுதிப்பத்து நாட்களிலும் "இஃதிகாஃப்" இருக்கவேண்டும் என எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடன் இந்த (நடுப்)பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தவர் அதே இடத்திலேயே தங்கி ("இஃதிகாஃப்") இருக்கட்டும். இந்த (லைலத்துல் கத்ர்) இரவை நான் (கனவில்) கண்டேன். பின்னர் அது எனக்கு மறக்கவைக்கப்பட்டது. எனவே, (ரமளானின்) இறுதிப்பத்தில் ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடிக்கொள்ளுங்கள். நான் ஈரமான களிமண்ணில் (லைலத்துல் கத்ர் இரவில்) சஜ்தாச் செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள்.
இருபத்தொன்றாவது நாள் இரவில் எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசல் கூரையிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் மழை நீர் சொட்டியது. அன்று காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுது விட்டுத் திரும்பும்போது அவர்களை நான் கண்டேன். அவர்களது முகத்தில் ஈரமான களிமண் படிந்திருந்தது.
அத்தியாயம் : 13
2169. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் ("அதே இடத்திலேயே தங்கி (இஃதிகாஃப்) இருக்கட்டும்" என்பதைக் குறிக்க "ஃபல்யபித் ஃபீ முஅத கிஃபிஹி" என்பதற்குப் பகரமாக) "ஃபல்யஸ்புத் ஃபீ முஅதகிஃபிஹி" எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
(அவர்களது முகத்தில் ஈரமான களிமண் என்பதற்குப் பதிலாக) "அவர்களது நெற்றியில் ஈரமான களிமண்" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 13
2170. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தார்கள். பின்னர் நடுப்பத்து நாட்களில் துருக்கி தோல் கூடாரமொன்றில் "இஃதிகாஃப்" இருந்தார்கள். அதன் நுழைவிடத்தில் (மறைப்பாக) பாயொன்று (நிறுத்தி வைக்கப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்தப் பாயை எடுத்துக் கூடாரத்தின் ஓரத்திற்கு நகர்த்தினார்கள். பிறகு தமது தலையை (கூடாரத்திற்கு) வெளியே நீட்டி மக்களிடம் பேசினார்கள். உடனே மக்கள் அவர்களுக்கு அருகில் நெருங்கிவந்தனர். "இந்த (ரமளானில் லைலத்துல் கத்ர்) இரவைத் தேடியவாறு நான் முதல் பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தேன். பின்னர் நடுப்பத்து நாட்களிலும் "இஃதிகாஃப்" இருந்தேன். பிறகு "அந்த இரவு இறுதிப் பத்து நாட்களில் உள்ளது" என (வானவர் மூலம்) என்னிடம் வந்து சொல்லப்பட்டது. ஆகவே, உங்களில் (இறுதிப்பத்து நாட்களில்) "இஃதிகாஃப்" இருக்க விரும்புகின்றவர் இஃதிகாஃப் இருக்கட்டும்" என்றார்கள்.
எனவே மக்களும் அவர்களுடன் "இஃதிகாஃப்" இருந்தனர். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் ஓர் ஒற்றைப்படையான இரவில் இருப்பதாக எனக்குக் காட்டப்பட்டது. நான் அன்று காலை களிமண்ணிலும் தண்ணீரிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று காட்டப்பட்டது" என்றும் கூறினார்கள். இருபத்தொன்றாவது நாள் காலையில் அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்காக நின்றபோது மழை பெய்தது. பள்ளிவாசல் கூரை ஒழுகியது. அப்போது நான் களிமண்ணையும் தண்ணீரையும் (பள்ளிவாசலுக்குள்) கண்டேன். சுப்ஹுத் தொழுகையை முடித்துப் புறப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் களிமண்ணும் தண்ணீரும் படிந்திருந்ததை நான் கண்டேன். அந்த "லைலத்துல் கத்ர்" இரவு (ரமளானின்) இறுதிப் பத்தில் இருபத்தொன்றாவது நாள் இரவாகவே அமைந்தது.
அத்தியாயம் : 13
2171. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) நாங்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என் நண்பராயிருந்தார்கள். அவர்களிடம், "நீங்கள் எங்களுடன் பேரீச்சந்தோப்புவரை புறப்பட்டுவரக் கூடாதா?" என்று கேட்டேன். உடனே புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் கறுப்புக் கம்பளியாடை அணிந்திருந்தார்கள். அவர்களிடம் "லைலத்துல் கத்ர் இரவு குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அவர்கள், "ஆம், நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் "இஃதிகாஃப்" இருந்தோம். இருபதாவது நாள் காலையில் நாங்கள் (பள்ளிவாசலில் இருந்து) வெளியேறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள்: எனக்கு லைலத்துல் கத்ர் இரவு (கனவில்) காட்டப் பெற்றது. ஆனால், அதை நான் மறந்துவிட்டேன். (அல்லது அதை மறக்கவைக்கப்பட்டேன்.) எனவே, ரமளானின் இறுதிப்பத்து நாட்களில் ஒற்றைப்படையான ஒவ்வோர் இரவிலும் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள். நான் (அந்த இரவில்) தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று எனக்குக் காட்டப்பெற்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "இஃதிகாஃப்" இருந்தவர் மறுபடியும் (பள்ளிவாசலுக்கு) வரட்டும்!" என்றார்கள்.
நாங்கள் மீண்டும் சென்றோம். அப்போது வானில் மழை மேகத்தின் ஒரு துண்டைக்கூட நாங்கள் காணவில்லை. (திடீரென) ஒரு மேகம் (திரண்டு) வந்தது; எங்களுக்கு மழை பெய்தது. பள்ளிவாசலின் கூரையிலிருந்து மழை நீர் சொட்டியது. அப்போதைய கூரை பேரீச்ச மட்டையால் வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக "இகாமத்" சொல்லப்பட்ட போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்ததை நான் கண்டேன். அவர்களது நெற்றியில் களிமண் படிந்திருந்ததைக் கண்டேன்.
- அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பிய போது அவர்களை நான் கண்டேன். அவர்களது நெற்றியிலும் மூக்கு நுனியிலும் களி மண்ணின் அடையாளம் இருந்தது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2172. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு "லைலத்துல் கத்ர்" இரவு பற்றிய குறிப்பு வெளிப்படுத்தப்படுவதற்கு முன்னர் ரமளான் மாதத்தின் நடுப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடியவாறு "இஃதிகாஃப்" இருந்தார்கள். நடுப்பத்து நாட்கள் முடிந்ததும் (தாம் வீற்றிருந்த) கூடாரத்தை அகற்றுமாறு உத்தரவிட, அவ்வாறே அது அகற்றப்பட்டது. பின்னர் அவர்களுக்கு "லைலத்துல் கத்ர்" இரவு இறுதிப்பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. எனவே, மீண்டும் கூடாரம் அமைக்குமாறு உத்தரவிட்டார்கள். மீண்டும் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு மக்களிடம் புறப்பட்டுவந்து, "மக்களே! லைலத்துல் கத்ர் பற்றிய குறிப்பு எனக்கு அறிவிக்கப்பட்டது. அதைப் பற்றிச் சொல்வதற்காக உங்களிடம் நான் புறப்பட்டுவந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவருடன் ஷைத்தானும் இருந்தான். அதனால் அதை(ப் பற்றிய குறிப்பை) நான் மறக்கவைக்கப்பட்டேன். ஆகவே, ரமளானின் இறுதிப் பத்தில் அந்த இரவை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்;ஒன்பது, ஏழு, ஐந்து ஆகிய இரவுகளில் அதை நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்!" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூநள்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூசயீத் (ரலி) அவர்களிடம் "அதன் எண்ணிக்கை பற்றி எங்களைவிட நீங்களே நன்கறிந்தவர்கள்" என்றேன். அதற்கு அவர்கள், "ஆம். உங்களைவிட நாங்களே அதற்குத் தகுதியானவர்கள்" என்றார்கள். நான், "ஒன்பது, ஏழு, ஐந்து என்பவை எவை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இருபத்தொன்றாவது இரவு முடிந்து, அதையடுத்து வரும் இருபத்து இரண்டாவது இரவே "ஒன்பது" ஆகும். இருபத்து மூன்றாவது இரவு முடிந்து அடுத்து வரும் (இருபத்து நான்காவது) இரவே "ஏழு" ஆகும். இருபத்து ஐந்தாவது இரவு முடிந்து அடுத்து வரும் இரவே "ஐந்து" ஆகும்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் கல்லாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("இரண்டு மனிதர்கள் தமது உரிமை குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்" என்பதற்குப் பகரமாக) "சச்சரவு செய்துகொண்டிருந்தனர்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2173. அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லைலத்துல் கத்ர் (எந்த இரவு என்பது) பற்றி எனக்குக் கனவில் காட்டப்பெற்றது. பின்னர் அதை மறக்கவும் செய்யப்பட்டேன். அன்று காலை நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சிரவணக்கம் (சஜ்தா) செய்வதைப் போன்று (கனவில்) கண்டேன்" என்று கூறினார்கள். இருபத்து மூன்றாவது நாள் இரவில் மழை பெய்தது. (அன்று காலையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு (சுப்ஹுத் தொழுகை) தொழுவித்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது தண்ணீர் மற்றும் களிமண்ணின் அடையாளம் அவர்களது நெற்றியிலும் மூக்கிலும் படிந்திருந்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளரான புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் (இருபத்து மூன்றாவது நாள் இரவில் என்பதைக் குறிக்க) "ஸலாஸின் வ இஷ்ரீன்" எனும் சொற்றொடரையே பயன்படுத்தினார்கள். (சில அறிவிப்புகளில் உள்ளதைப் போன்று "ஸலாஸின் வ இஷ்ரூன்" என்று குறிப்பிடவில்லை.)
அத்தியாயம் : 13
2174. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாதத்தின் இறுதிப்பத்து இரவுகளில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக்கொள்ளுங்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2175. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், "தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் "வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்" என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊதுக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! மக்கள் (மற்ற நாட்களில் வழி பாடுகளில் ஈடுபடாமல்) அசட்டு நம்பிக்கையோடு இருந்துவிடக்கூடாது என அவர்கள் கருதினார்கள் (போலும்)! லைலத்துல் கத்ர் இரவு ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இருபத்தேழாவது இரவுதான் என்பதை இப்னு மஸ்ஊத் அறிந்தே உள்ளார்கள்" என்று பதிலளித்தார்கள். பிறகு "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் "அது (ரமளானின்) இருபத்தேழாவது இரவே ஆகும்" என்று சத்தியமிட்டுச் சொன்னார்கள். நான், "அபுல் முன்திரே! எதை வைத்து அவ்வாறு கூறுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு உபை (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் "அன்றைய நாளில் (காலையில்) சூரியன் சுடரின்றி உதிக்கும்" என்று கூறினார்கள். அந்த அடையாளத்தின் மூலமே (அறிந்துகொண்டேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2176. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் "லைலத்துல் கத்ர்" இரவு குறித்துக் கூறுகையில், "அல்லாஹ்வின் மீதாணையாக! அது (எந்த இரவு என்பது) பற்றி நான் நன்கறிவேன்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: எனது அறிவுக்கு எட்டியவரையில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு இருபத்தேழாவது இரவேயாகும் (என்று உபை (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்) என்றே கருதுகிறேன்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று வழிபடுமாறு எங்களைப் பணித்த அந்த இரவு" எனும் இந்த வாசகத்தில்தான் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயம் தெரிவித்தார்கள். அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து என் நண்பர் ஒருவரே இதை எனக்கு அறிவித்தார் என ஷுஅபா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அத்தியாயம் : 13
2177. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் "லைலத்துல் கத்ர்" இரவு பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "உணவுத் தட்டின் பாதித்துண்டைப் போன்று நிலா தோன்றும் இரவே (லைலத்துல் கத்ர்) ஆகும் என்பதை உங்களில் நினைவில் கொள்பவர் யார்?" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பள்ளிவாசலில் தங்குதல் (இஃதிகாஃப்)
அத்தியாயம் : 13