2138. மேற்கண்ட ஹதீஸ் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒவ்வொரு மாதமும் மூன்று நோன்புகள் நோற்பீராக" என்பதற்குப் பின், "ஏனெனில் ஒவ்வொரு நற்செயலுக்குப் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உமக்கு உண்டு. இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், "நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று நான் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "வருடத்தில் பாதிநாள் (நோன்பு நோற்பது)" என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது. குர்ஆன் ஓதுவதைப் பற்றிய எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. "உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்ற இடத்தில் "உம் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்றே இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2139. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஒவ்வொரு மாதமும் (ஒருமுறை) குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போது நான், "(அதைவிடவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்று கூறினேன். "அப்படியானால் இருபது இரவுகளில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். அப்போதும் நான், "(அதை டவும் குறைந்த நாட்களில் குர்ஆனை முழுமையாக ஓதி முடிக்கும்) சக்தி எனக்கு உள்ளது" என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஏழு நாட்களில் (ஒருமுறை) ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட (ஓதுவதை) அதிகமாக்கிவிடாதீர்!" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2140. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வணங்கிவிட்டு, இறுதியில் இரவுத்தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2141. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் தொடர்ந்து (பகலெல்லாம்) நோன்பு நோற்பதாகவும் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. அப்போது "அவர்கள் என்னை அழைத்துவருமாறு ஆளனுப்பினார்கள்" அல்லது "நானாக அவர்களைச் சந்தித்தேன்." அவர்கள், "நீர், விடாமல் நோன்பு நோற்பதாகவும் (உறங்காமல்) இரவெல்லாம் நின்று தொழுவதாகவும் என்னிடம் கூறப்படுகிறதே! அவ்வாறு செய்யாதீர். ஏனெனில், உமது கண்ணுக்கு (நீர்) அளிக்க வேண்டிய பங்கு உண்டு; உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. உம் வீட்டாருக்கு அளிக்கவேண்டிய பங்கும் உண்டு. எனவே, (சில நாள்) நோன்பு நோற்று, (சில நாள்) நோன்பை விட்டுவிடுவீராக! (சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக! பத்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு நோற்றுக்கொள்வீராக! (மற்ற) ஒன்பது நாட்களுக்கும் உமக்கு நற்பலன் உண்டு" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! இதைவிட அதிகமாகச் செய்வதற்கு நான் சக்தி பெற்றுள்ளேன்" என்றேன். "அவ்வாறாயின் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக!" என்றார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்கள் எவ்வாறு நோன்பு நோற்பார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டுவிடுவார்கள். மேலும், (போர் முனையில்) எதிரிகளைச் சந்திக்கும்போது பின் வாங்கமாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (தாவூத் நபியின் வீரத்தை நான் பெறஇயலுமா?) இந்தக் குணத்திற்காக எனக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?" என்று கேட்டேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த உரையாடலுக்கிடையே) ஆயுள் நோன்பு நோற்பது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படிக் கூறினார்கள் என்பதை நான் அறியமாட்டேன். (ஆயினும், பின்வருமாறு கூறினார்கள் என்று நான் எண்ணுகிறேன்:) "காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்; காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர்" என்று நபியவர்கள் (மூன்று முறை) கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வரும் தகவலும் இடம்பெற்றுள்ளது:
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
இந்த ஹதீஸை (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிப்பவரான கவிஞர் அபுல்அப்பாஸ் அஸ்ஸாயிப் பின் ஃபர்ரூக் (ரஹ்) அவர்கள் மக்காவாசிகளில் ஒருவராவார்; நம்பத்தகுந்தவரும் நேர்மையானவரும் ஆவார்.
அத்தியாயம் : 13
2142. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் அம்ர்! நீர் இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்கிறீர் (என்று கேள்விப்பட்டேன்). நீர் இவ்வாறு செய்தால் உமது கண் சொருகிவிடும்; பலவீனமடைந்து விடும். காலமெல்லாம் நோன்பு நோற்றவர், நோன்பு நோற்றவர் அல்லர். மாதத்தில் மூன்று நோன்பு நோற்பது எல்லா மாதங்களிலும் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின், (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்பீராக! அவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; (போர் முனையில்) எதிரிகளைச் சந்தித்தால் பின்வாங்கமாட்டார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், ("கண் பலவீனமடைந்துவிடும்" என்பதற்குப் பகரமாக) "உடல் நலிந்துவிடும்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2143. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "நீர் இரவெல்லாம் நின்று வணங்கி பகலெல்லாம் நோன்பு நோற்பதாகக் கேள்விப்பட்டேனே (அது உண்மையா?)" என்று கேட்டார்கள். நான், "(உண்மைதான்) நான் அவ்வாறு செய்கிறேன்" என்றேன். அவர்கள், "இவ்வாறு நீர் செய்தால் உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது கண்ணுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உம் இல்லத்தாருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. எனவே, நீர் (சிறிது நேரம்) தொழுவீராக; (சிறிது நேரம்) உறங்குவீராக! (ஒரு நாள்) நோன்பு நோற்பீராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். தாவூத் (அலை) அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் நின்று வழிபடுவார்கள். (பிறகு) ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்பார்கள்; ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2145. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் ஆண்டில் பாதி நாட்கள் நோன்பு நோற்பார்கள். வலிவும் மாண்புமிக்க அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும். அவர்கள் பாதி இரவுவரை உறங்குவார்கள். பிறகு எழுந்து வழிபட்டு விட்டுப் பின்னர் இரவின் இறுதிப் பகுதியில் உறங்குவார்கள். இரவின் பாதி நேரம் கழிந்த பின்னர் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம் வழிபடுவார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம் "அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களா "தாவூத் (அலை) அவர்கள் இரவில் பாதி நேரம் கழிந்த பின் இரவின் மூன்றிலொரு பகுதி நேரம்வரை நின்று வழிபடுவார்கள்" என்று கூறுவார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2146. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபுல்மலீஹ் ஆமிர் பின் உசாமா (ரஹ்) அவர்கள் என்னிடம், "நான் உம்முடைய தந்தை (ஸைத் பின் அம்ர் -ரஹ்) அவர்களுடன் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு குறித்துச் சொல்லப்பட்டது. எனவே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக நான் ஈச்ச நாரால் நிரப்பப்பட்டிருந்த தோல் தலையணை ஒன்றை எடுத்துவைத்தேன். அவர்கள் (அதில் அமராமல்) தரையில் அமர்ந்தார்கள். தலையணை எனக்கும் அவர்களுக்கும் இடையில் கிடந்தது. அப்போது அவர்கள் என்னிடம், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள், "(மாதத்தில்) ஐந்து நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க இயலும்)" என்றேன். அவர்கள் "ஏழு நாட்கள் (நோற்றுக்கொள்)" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே....!" என்றேன். அவர்கள், "ஒன்பது நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். அவர்கள், "பதினோரு நாட்கள்..." என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (என்னால் இதைவிட அதிகமாக நோன்பு நோற்க முடியும்)" என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "தாவூத் (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்பான) எந்த நோன்பும் கிடையாது. வருடத்தின் பாதி நாட்கள் (நோன்பு நோற்றலே அது). ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்றலாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2147. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "(மாதத்தில்) ஒரு நாள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்ய முடியும்" என்றேன். அவர்கள், "மூன்று நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள்.நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அவர்கள், "நான்கு நாட்கள் நோன்பு நோற்பீராக! எஞ்சிய நாட்கள் நோன்பு நோற்றதற்குரிய நன்மையும் உமக்கு உண்டு" என்றார்கள். நான், "என்னால் இதைவிட அதிகமாகச் செய்யமுடியும்" என்றேன். அதற்கு, "அல்லாஹ்விடம் மிகச் சிறந்த நோன்பான தாவூத் (அலை) அவர்களின் நோன்பை நோற்றுக்கொள்வீராக! தாவூத் (அலை) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று,ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2148. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ் பின் அம்ர்! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வழிபடுவதாக எனக்குச் செய்தி எட்டியது. அவ்வாறு நீர் செய்யாதீர். ஏனெனில், உமது உடலுக்கு அளிக்கவேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உமது கண்ணுக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. உம் துணைவிக்கு வழங்க வேண்டிய பங்கும் உமக்கு உண்டு. (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள்) நோன்பை விட்டுவிடுவீராக! ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நோன்புகள் நோற்பீராக! இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சக்தி உள்ளது (என்னால் இதைவிட அதிகமான நோன்புகள் நோற்க முடியும்)" என்றேன். அவர்கள், "அப்படியானால் தாவூத் (அலை) அவர்கள் நோற்றதைப் போன்று நோன்பு நோற்பீராக; ஒரு நாள் நோன்பு நோற்பீராக! ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளரான சஈத் பின் மீனாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (முதுமையடைந்த) பின்னர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்த) அந்தச் சலுகையைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே" என்று கூறுவார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 36 மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாள், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாள், (வாரத்தில்) திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதும் விரும்பத்தக்கதாகும்.
2149. முஆதா அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுவந்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்" என்றார்கள். நான், "மாதத்தில் எ(ந்தெ)ந்த நாட்களில் நோன்பு நோற்றுவந்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு "தாம் நோன்பு நோற்பதற்கென மாதத்தில் எந்த நாளுக்கும் அவர்கள் (தனி) முக்கியத்துவம் அளித்ததில்லை" என ஆயிஷா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2150. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "நான் செவியுற்றுகொண்டிருக்க மற்றொரு மனிதரிடம்" "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப்பகுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். நபி (ஸல்) அவர்கள், "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2151. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் எவ்வாறு நோன்பு நோற்கின்றீர்கள்?" என்று கேட்டார். (அதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபமடைந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கோபத்தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம். நாங்கள் அல்லாஹ்விடம் அவனது கோபத்திலிருந்தும் அவனுடைய தூதரின் கோபத்திலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறோம்" என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கோபம் தணியும்வரை இவ்வாறு பல முறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரே! காலமெல்லாம் நோன்பு நோற்பவர் குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் "(முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர்; (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்க, "இவ்வாறு நோன்பு நோற்பதற்கு எவரால் இயலும்?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (திருப்பிக்) கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விட்டு விடுபவர் குறித்துத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு, "அதுதான் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று விடையளித்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள், "ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுபவர் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எனக்குச் சக்தி அளிக்கப்பட வேண்டும் என நான் விரும்பினேன்" என்று கூறினார்கள். பிறகு, "மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பது, ஆண்டுதோறும் ரமளானில் நோன்பு நோற்பது ஆகியன காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும். துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன். முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்குப் பாவப்பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2152. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அவர்களது நோன்பு பற்றிக் கேட்கப்பட்ட போது, அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களைத் தூதராகவும், எங்கள் உறுதிப் பிரமாணத்தை (முழுமையான) உறுதிமொழிப் பிரமாணமாகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டோம்" என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், காலமெல்லாம் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அ(வ்வாறு நோன்பு நோற்ப)வர் (முறைப்படி) நோன்பு நோற்றவருமல்லர். (முறைப்படி) நோன்பை விட்டவருமல்லர்" அல்லது "அவர் (முறைப்படி) நோன்பு நோற்கவுமில்லை; (முறைப்படி) நோன்பை விடவுமில்லை" என்று விடையளித்தார்கள்.
இரண்டு நாட்கள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அ(வ்வாறு நோன்பு நோற்ப)தற்கு எவரால் முடியும்?" என்று (திருப்பிக்) கேட்டார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று இரண்டு நாட்கள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "இதற்கான வலிமையை அல்லாஹ் நமக்கு அளித்தால் நன்றாயிருக்கும்!" என்றார்கள். ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவது பற்றிக் கேட்கப்பட்ட போது, "அதுதான் என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்" என்று சென்னார்கள்.
திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் "நான் நபியாக நியமிக்கப்பட்டேன்" அல்லது "எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்றார்கள். மேலும், "மாதந்தோறும் மூன்று நோன்புகள் நோற்பதும் ரமளான் தோறும் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாகும்" என்றும் கூறினார்கள். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்பது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "முந்தைய ஓராண்டிற்கும் பிந்தைய ஓராண்டிற்கும் அது பாவப் பரிகாரமாக அமையும்" என்றார்கள். ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு "அது கடந்த ஆண்டின் பாவப்பரிகாரமாகும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (பின்வருமாறு) காணப்படுகிறது: திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. வியாழக்கிழமை நோன்பு குறித்த செய்தியை நாம் சந்தேகத்திற்கிடமானதாகக் கருதியபோது, அதைப் பற்றி நாம் குறிப்பிடவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், திங்கட்கிழமை நோன்பு குறித்தே கூறப்பட்டுள்ளது; வியாழக்கிழமை பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
2153. அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், திங்கட்கிழமை நோன்பு நோற்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு "அன்றுதான் நான் பிறந்தேன்; அதில்தான் எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 37 ஷஅபான் மாத இறுதியில் நோன்பு நோற்றல்.
2154. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "என்னிடம்" அல்லது "மற்றொரு மனிதரிடம்", "நீர் ஷஅபான் மாதத்தின் இறுதியில் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். நான், "இல்லை" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2155. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர், "இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் அதற்குப் பகரமாக இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள்.
இதை முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2156. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், "இந்த மாதத்தின் -அதாவது ஷஅபான்- இறுதியில் ஏதேனும் நோன்பு நோற்றீரா?" என்று கேட்டார்கள். அம்மனிதர் "இல்லை" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீர் ரமளான் நோன்பை முடித்ததும் "ஒரு நாள்",அல்லது "இரண்டு நாட்கள்" நோன்பு நோற்பீராக!" என்று கூறினார்கள். (இங்கே அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயம் தெரிவிக்கிறார்கள்.) "இரண்டு நாட்கள்" என்று கூறியதாகவே நான் கருதுகிறேன் என்று அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 38 முஹர்ரம் நோன்பின் சிறப்பு.
2157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமளான் மாத நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு யாதெனில், அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதநோன்பாகும். கடமையாக்கப்பட்ட தொழுகைக்கு அடுத்தபடியாகச் சிறந்த தொழுகை, இரவுத் தொழுகை (தஹஜ்ஜுத்) ஆகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13