2118. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஆதமின் மைந்தனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு செயலும் அவனுக்கே உரியதாகும்; நோன்பைத் தவிர! நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் நாளில் அருவருப்பாக (ஆபாசமாக)ப் பேசவேண்டாம்; கூச்சலிட்டு சச்சரவு செய்யவேண்டாம். யாரேனும் அவரை ஏசினால் அல்லது வம்புக்கிழுத்தால் "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று அவர் கூறிவிடட்டும்! முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2119. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுடைய (மனிதனுடைய) ஒவ்வொரு நற்செயலுக்கும் ஒன்றுக்குப் பத்து முதல் எழுநூறு மடங்குகள்வரை நன்மைகள் வழங்கப்படுகின்றன; அல்லாஹ் கூறுகின்றான்: நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது உணர்வையும் உணவையும் கைவிடுகிறான் (என அல்லாஹ் கூறுகின்றான்). நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. அவர் நோன்பைத் துறக்கும்போது ஒரு மகிழ்ச்சியும், தம் இறைவனைச் சந்திக்கும் போது மற்றொரு மகிழ்ச்சியும் (அடைகிறார்). நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2120. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நோன்பு எனக்கு உரியதாகும். அதற்கு நானே நற்பலன் வழங்குவேன்" என அல்லாஹ் கூறுகின்றான். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்போது அவர் மகிழ்ச்சி அடைவார்; அல்லாஹ்வைச் சந்திக்கும்போதும் மகிழ்ச்சி அடைவார். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கதாகும்.
இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூசயீத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், "அவர் அல்லாஹ்வைச் சந்திக்கும்போது, அல்லாஹ் அவருக்கு நற்பலன் வழங்குவான்; அவர் மகிழ்ச்சி அடைவார்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் "ரய்யான்" எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும்; உடனே அவர்கள் அதன் வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள்.
இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 31 அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்போது) எந்த வித இடையூறும் கடமைதவறுதலும் ஏற்படாமல் நோன்பு நோற்கச் சக்தி பெற்றிருப்பவர் நோன்பு நோற்பதன் சிறப்பு.
2122. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போர் புரியச் செல்லும்போது) ஒருநாள் நோன்பு நோற்கும் அடியாரின் முகத்தை, அந்த ஒரு நாளுக்குப் பகரமாக எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் (அறப்போருக்குச் செல்லும்) ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால், அவரது முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு அப்புறப்படுத்திவிடுகிறான்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 32 கூடுதலான (நஃபில்) நோன்பு நோற்கும் முடிவை நண்பகலுக்கு முன் செய்தாலும் நோன்பு செல்லும். கூடுதலான நோன்பு நோற்றிருப்பவர் எவ்விதக் காரணமுமின்றி நோன்பை (இடையிலே) விட்டுவிடலாம்.
2124. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் (வந்து), "ஆயிஷா! உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் எதுவுமில்லை" என்றேன். உடனே "அவ்வாறாயின் நான் நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். பின்னர் "எங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டது" (அல்லது "எங்களைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிவந்தபோது, நான் "அல்லாஹ்வின் தூதரே! "நமக்கு ஓர் அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது" (அல்லது "நம்மைச் சந்திக்கச் சிலர் (அன்பளிப்புடன்) வந்தனர்"). (அந்த அன்பளிப்பிலிருந்து) சிறிதளவைத் தங்களுக்காக நான் எடுத்துவைத்துள்ளேன்" என்று சொன்னேன். அதற்கு அவர்கள் "என்ன அது?" என்று கேட்டார்கள். நான் "(பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் ஆகியவற்றால் தயாரிக்கப்படும்) "ஹைஸ்" எனும் பலகாரம்" என்று சொன்னேன். "அதைக் கொண்டு வா" என்று அவர்கள் சொன்னார்கள். நான் அதைக் கொண்டுவந்தேன். அவர்கள் உண்டார்கள். பிறகு "நான் இன்று காலையில் நோன்பு நோற்றி(ட எண்ணியி)ருந்தேன்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான தல்ஹா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் இந்த ஹதீஸை முஜாஹித் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், இ(வ்வாறு நோற்க எண்ணியிருந்த நோன்பை விட்டுவிடுவதான)து, ஒருவர் தமது செல்வத்திலிருந்து தர்மப் பொருளை எடுத்துவைப்பதைப் போன்றதுதான். அவர் நாடினால், (எடுத்து வைத்த) அதை வழங்கலாம்; நாடினால் தம்மிடமே அதை வைத்துக்கொள்ளலாம்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2125. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, "உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை" என்றோம். "அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்துகொள்கிறேன்" என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! நமக்கு "ஹைஸ்" எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது" என்றோம். அதற்கு அவர்கள், "எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்" என்று கூறிவிட்டு, அதை (வாங்கி)ச் சாப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 33 (நோன்பாளி) மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் நோன்பு முறியாது.
2126. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நோன்பு நோற்றுக்கொண்டு மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் நோன்பைத் தொடரட்டும். அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 34 நபி (ஸல்) அவர்கள் ரமளான் அல்லாத மாதத்தில் நோன்பு நோற்றதும், நோன்பே இல்லாமல் எந்த மாதத்தையும் வெறுமையாக விடாமலிருப்பது விரும்பத்தக்கதாகும் என்பதும்.
2127. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலாவது (மாதம் முழுக்க) நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளான் அல்லாத வேறெந்த குறிப்பிட்ட மாதத்திலும் (மாதம் முழுக்க) நோன்பு நோற்றதுமில்லை; ஒரு சில நாட்களாவது நோன்பு நோற்காமல் எந்த மாதத்தையும் (அடியோடு) விட்டதுமில்லை" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2128. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ரமளானைத் தவிர வேறு மாதங்களில்) ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்றார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் ஒருமாதம் முழுவதும் நோன்பு நோற்றதில்லை. அவர்கள் இறக்கும்வரை எந்தவொரு மாதத்திலும் ஒரு சில நாட்களேனும் நோன்பு நோற்காமல் இருந்ததில்லை" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 13
2129. அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்கிறார்களோ, நோன்பு நோற்கிறார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டிருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்களோ; நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். மேலும், அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து ரமளானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2130. இறைநம்பிக்கையார்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி) நோன்பை விடவே மாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; (இனி) அவர்கள் நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு அவர்கள் நோன்பு நோற்காமல் விட்டுவிடவும் செய்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிகமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை.
அத்தியாயம் : 13
2131. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்கிறார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள்; நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள். அவர்கள் ஷஅபானைத் தவிர வேறெந்த மாதத்திலும் அதிக நாட்கள் நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. ஷஅபான் மாதம் முழுவதும் அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள். ஷஅபானில் சில நாட்கள் மட்டும் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2132. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓராண்டில் ஷஅபான் மாதத்தைவிட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை. "நற்செயல்களில் உங்களால் இயன்றதையே செய்யுங்கள். நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படைய மாட்டான்" என்று அவர்கள் கூறுவார்கள். மேலும், "குறைவாக இருந்தாலும் தொடர்ந்து ஒருவர் செய்துவரும் நற்செயலே அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்" என்றும் அவர்கள் கூறுவார்கள்.
அத்தியாயம் : 13
2133. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானைத் தவிர வேறெந்த மாதத்திலும் மாதம் முழுக்க நோன்பு நோற்கமாட்டார்கள். நோன்பு நோற்கத் தொடங்கிவிட்டால், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இனி விடாமல் (தொடர்ந்து) நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்களோ" என்று ஒருவர் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். நோன்பை அவர்கள் விடத்தொடங்கினால், "அல்லாஹ்வின் மீதாணையாக! இனிமேல் நோன்பே நோற்கமாட்டார்களோ" என்று ஒருவர் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்ததிலிருந்து (ரமளானில் தவிர) தொடர்ந்து ஒரு மாதம் நோன்பு நோற்றதில்லை" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
2134. உஸ்மான் பின் ஹகீம் அல்அன்சாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் ரஜப் மாதத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டேன். (அப்போது நாங்கள் ரஜப் மாதத்தில் இருந்தோம்) அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இனி விடாமல்) நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்றுக்கொண்டே இருப்பார்கள். (இனி) நோன்பே நோற்கமாட்டார்களோ என்று நாங்கள் சொல்லுமளவிற்கு நோன்பு நோற்காமல் இருந்துவிடவும் செய்வார்கள்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2135. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்பார்களோ, நோன்பு நோற்றுக்கொண்டேயிருப்பார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்றுக் கொண்டே இருப்பார்கள். நோன்பே நோற்கமாட்டார்களோ, நோன்பே நோற்கமாட்டார்களோ என்று சொல்லப்படும் அளவிற்கு நோன்பு நோற்காமலும் இருந்து விடுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 35 இடரைச் சந்திப்பவர், கடமையைத் தவறவிடுபவர், இரு பெருநாட்கள் மற்றும் "அய்யாமுத் தஷ்ரீக்" ஆகிய நாட்களில்கூட விடாமல் நோன்பு நோற்பவர் ஆகியோர் காலமெல்லாம் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடையும், ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதன் சிறப்பும்.
2136. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் உயிரோடு வாழும்வரை பகலெல்லாம் நோன்பு நோற்பேன்; இரவெல்லாம் நின்று வழி படுவேன்" என்று நான் சொல்லிக்கொண்டிருந்த செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "நீர் இவ்வாறு கூறினீரா?" என்று கேட்டார்கள். "நான் அவ்வாறு கூறத்தான் செய்தேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அதற்கு அவர்கள், "இது உம்மால் முடியாது; (சில நாட்கள்) நோன்பு நோற்பீராக! (சில நாட்கள் நோன்பை) விட்டுவிடுவீராக! (இரவில் சிறிது நேரம்) உறங்குவீராக! (சிறிது நேரம்) நின்று வழிபடுவீராக! மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள்வீராக! ஏனெனில், ஒவ்வொரு நற்செயலுக்கும் பிரதியாக அதைப் போன்ற பத்து மடங்கு (நற்பலன்)கள் உண்டு. (இதன்படி மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது மாதம் முழுவதும் நோன்பு நோற்பதற்குச் சமமாகும்.) இது வருடமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்" என்று சொன்னார்கள்.
நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்யமுடியும்!" என்று கூறினேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, இரண்டு நாட்கள் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அவர்கள் கூறினார்கள். நான், "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னேன். "(அப்படியானால்) ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் நோன்பை விட்டுவிடுவீராக! இதுதான் (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். நோன்புகளில் இதுவே நடுநிலையானதாகும்" என்று கூறினார்கள். "என்னால் இதைவிடச் சிறப்பாக (கூடுதலாக)ச் செய்ய முடியும்" என்று நான் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதைவிடச் சிறந்தது எதுவுமில்லை" என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட மூன்று நாட்களை நான் ஏற்றுக் கொண்டிருப்பது, என் மனைவி மக்களையும் என் சொத்து பத்துக்களையும்விட எனக்கு மிகவும் விருப்பானதாகும் (என்பதை முதுமையடைந்துவிட்ட இந்நிலையில் உணர்கிறேன்).
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2137. யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் அப்துல்லாஹ் பின் யஸீத் (ரஹ்) அவர்களும் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்களிடம் சென்றோம். அவர்களை அழைத்துவருமாறு ஆளனுப்பிவிட்டு, அவர்கள் எங்களிடம் வரும்வரை அவர்களது வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பள்ளிவாசலில் நாங்கள் (காத்து) இருந்தோம். அவர்கள் எங்களிடம் வந்தபோது, "நீங்கள் நாடினால் (என் வீட்டுக்குள்) வரலாம்; நீங்கள் நாடினால் இங்கேயே அமரலாம்" என்றார்கள். நாங்கள், "இல்லை, இங்கேயே அமருகிறோம். எங்களுக்கு ஹதீஸ் அறிவியுங்கள்" என்றோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நான் பகலெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதியும் வந்தேன். அப்போது "என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது" அல்லது "(என்னை அழைத்து வருமாறு) அவர்கள் என்னிடம் ஆளனுப்பினார்கள்." நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் என்னிடம், "நீர் (பகற்)காலமெல்லாம் நோன்பு நோற்று, ஒவ்வோர் இரவிலும் குர்ஆன் முழுவதையும் ஓதிவருவதாக எனக்குச் செய்தி வந்ததே (அது உண்மையா)?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே! இதன் மூலம் நான் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை" என்றேன். அவர்கள், "ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உமக்குப் போதுமே!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். அவர்கள், "உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன. உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன. உமது உடலுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உண்டு. எனவே, இறைத்தூதர் தாவூத் (அலை) அவர்களைப் போன்று நோன்பு நோற்பீராக! ஏனெனில், தாவூத் (அலை) அவர்கள் மக்களிடையே மாபெரும் வணக்கசாலியாக இருந்தார்கள்" என்று கூறினார்கள்.
நான், "அல்லாஹ்வின் தூதரே! தாவூத் (அலை) அவர்களின் நோன்பு என்ன?" என்று கேட்டேன். "ஒரு நாள் நோன்பு நோற்று ஒரு நாள் நோன்பை விடுவதே அவர்களது நோன்பாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், "மாதத்திற்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்று கூறினார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்" என்றேன். "அவ்வாறாயின் இருபது நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்ய முடியும்" என்றேன். "அப்படியானால், பத்து நாட்களுக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக!" என்றார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என்னால் இதைவிடக் கூடுதலாகச் செய்யமுடியும்!" என்றேன். "அவ்வாறாயின் வாரத்துக்கு ஒரு தடவை குர்ஆனை ஓதி நிறைவு செய்வீராக! அதைவிட அதிகமாக்க வேண்டாம். ஏனெனில், உம் துணைவிக்குச் செய்யவேண்டிய கடமைகள் உமக்கு உள்ளன;உம் விருந்தினருக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆனால், நான் சிரமத்தை வலிந்து ஏற்றுக்கொண்டேன்; அதனால் என்மீது சிரமம் சுமத்தப்பட்டது. என்னிடம் நபி (ஸல்) அவர்கள், "உமக்குத் தெரியாது; உமது வயது நீளக்கூடும் (அப்போது தொடர்நோன்பும் தொடர்வழிபாடும் உம்மால் முடியாமல் போகலாம்)" என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று நான் ஆனேன். முதுமை அடைந்த பின், நபி (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்று நான் விரும்பினேன். (அந்த அளவிற்கு நான் பலவீனப்பட்டு விட்டேன்).
அத்தியாயம் : 13