2078. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், "அபூமுஹம்மதே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்" என்றார்கள். "நான் நோன்பு நோற்றிருக்கிறேன்" என்று நான் சொன்னேன். அவர்கள், "நாங்கள் (ஆரம்பக் காலத்தில்) அந்நாளில் நோன்பு நோற்றோம். பின்னர் அந்த நோன்பு கைவிடப்பட்டது" என்றார்கள்.
இதைக் கைஸ் பின் சகன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2079. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான், "அபூ அப்திர் ரஹ்மான், இன்று முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆயிற்றே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு (ஆஷூரா நாளில்) நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் நோன்பு கடமையானபோது அந்த (ஆஷூரா) நோன்பு கைவிடப்பட்டது. ஆகவே, நீங்கள் நோன்பை விட்டுவிட விரும்பினால் நீங்களும் (என்னுடன்) சாப்பிடலாம்" என்றார்கள்.
இதை அல்கமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2080. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்; அந்நோன்பை நோற்குமாறு எங்களை ஊக்குவிக்கவும் செய்வார்கள். அந்த நாளில் (நாங்கள் நோன்பு நோற்கிறோமா என) எங்களைக் கவனித்தும் வந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது, (ஆஷூரா நோன்பு நோற்குமாறு) எங்களுக்குக் கட்டளையிடவுமில்லை; எங்களுக்குத் தடைவிதிக்கவுமில்லை; அந்த நாளில் எங்களைக் கவனிக்கவுமில்லை.
அத்தியாயம் : 13
2081. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஒரு முறை (சிரியாவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது "மதீனாவாசிகளே, உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது, முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) ஆகும்; இந்நாளில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். உங்களில் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்; விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!" என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "இது போன்ற (ஆஷூரா) நாளில் நபி (ஸல்) அவர்கள் "நான் நோன்பு நோற்றுள்ளேன். எனவே, நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் காணப்படவில்லை.
அத்தியாயம் : 13
2082. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது குறித்து யூதர்களிடம் வினவப்பட்டபோது, "இந்த நாளில்தான் (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்களுக்கும் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கும் பிர்அவ்னுக்கெதிராக இறைவன் வெற்றியளித்தான். எனவே,இந்நாளைக் கண்ணியப்படுத்தும் முகமாகவே நாங்கள் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என யூதர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்களைவிட மூசாவுக்கு அதிக நெருக்கமுடையவர்கள் நாங்களே" என்று கூறிவிட்டு, ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "எனவே யூதர்களிடம் அது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2083. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது, யூதர்கள் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றிருப்பதைக் கண்டார்கள். "நீங்கள் நோன்பு நோற்றிருக்கும் இது என்ன நாள்?" என்று கேட்டார்கள். அதற்கு யூதர்கள், "இது ஒரு மகத்தான நாள்; இந்த நாளில்தான் மூசாவையும் அவருடைய சமுதாயத்தாரையும் இறைவன் காப்பாற்றி, ஃபிர்அவ்னையும் அவனுடைய சமுதாயத்தாரையும் (செங்கடலில்) மூழ்கடித்தான். எனவே, மூசா (அலை) அவர்கள் (இறைவனுக்கு) நன்றி தெரிவிக்கும் முகமாக (இந்நாளில்) நோன்பு நோற்றார்கள். ஆகவே, நாங்களும் இந்நாளில் நோன்பு நோற்கிறோம்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களைவிட நாங்களே மூசா (அலை) அவர்களுக்கு மிகவும் உரியவர்களும் நெருக்கமானவர்களும் ஆவோம்" என்று கூறினார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்நாளில்) தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையுமிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2084. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாளை (ஆஷூரா) யூதர்கள் கண்ணியப்படுத்தியும் பண்டிகை நாளாகக் கொண்டாடியும் வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2085. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது:
அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள்: கைபர்வாசிகள் (யூதர்கள்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர்; அந்நாளை அவர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடினர்; தங்களுடைய பெண்களுக்கு அந்நாளில் ஆபரணங்களையும் அழகிய ஆடைகளையும் அவர்கள் அணிவித்தனர். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "இந்நாளில் நீங்களும் நோன்பு நோறுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2086. உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) நோன்பு பற்றி வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நாட்களிலேயே இந்த (ஆஷூரா) நாளையும் மாதங்களிலேயே இந்த -ரமளான்- மாதத்தையும் தவிர வேறெதையும் சிறப்பாகத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்றதாக நான் அறியவில்லை" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 20 ஆஷூரா நோன்பை எந்த நாளில் நோற்க வேண்டும்?
2087. அல்ஹகம் பின் அல்அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "ஸம்ஸம்" கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக வைத்துச் சாய்ந்திருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன். "ஆஷூரா நோன்பு பற்றி எனக்குச் சொல்லுங்கள்!" என அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "முஹர்ரம் மாதத்தின் (முதல்) பிறையை நீர் கண்டதும் (அன்றிலிருந்து நாட்களை) எண்ணிக்கொள்வீராக! ஒன்பதாவது நாள் காலையில் நீர் நோன்பாளியாக இருப்பீராக!" என்று சொன்னார்கள். "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (ஆஷூரா) நோன்பை நோற்றார்களா?" என்று நான் கேட்டேன். அதற்கு, "ஆம்" என்று அவர்கள் விடையளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஸம்ஸம் கிணற்றுக்கருகில் தமது மேல்துண்டைத் தலையணையாக்கிச் சாய்ந்திருந்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நான் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்டேன்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2088. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2089. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்" அதாவது ஆஷூரா நாளில்" எனும் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 21 ஆஷூரா நாளில் (நோன்பு நோற்காமல்) சாப்பிட்டுவிட்டவர், அன்றைய தினத்தின் எஞ்சிய பகுதியில் உண்பதைத் தவிர்க்கட்டும்!
2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று "அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, "(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்" என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
அத்தியாயம் : 13
2092. காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) நோன்பு பற்றிக்கேட்டேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள்" என்று கூறியதாக மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார்செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம்.
அத்தியாயம் : 13
பாடம் : 22 நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2093. அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் வந்து (முதலில்) தொழுதுவிட்டுப் பின்னர் திரும்பி மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். ஒன்று,உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் ஆகும். மற்றொன்று உங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜுப்) பெருநாள் ஆகும்.
அத்தியாயம் : 13
2094. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்கக் கூடாதெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
2095. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் செவியுற்றேன். அது எனக்கு வியப்பூட்டவே, "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறாத ஒன்றை அவர்கள் கூறியதாகச் சொல்வேனா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது தகாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2096. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானி செய்யும் (ஹஜ்ஜுப் பெரு)நாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இதை யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2097. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "நான் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். அது ஹஜ்ஜுப் பெருநாளாக, அல்லது நோன்புப் பெருநாளாக அமைந்துவிட்டது" என்று சொன்னார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,உயர்ந்தோன் அல்லாஹ் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்பதைத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13