பாடம் : 42 "நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
161. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
162. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக வாளை உருவியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை சலமா பின் அல்அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
163. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 43 "நமக்கு மோசடி செய்தவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 44 (துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்வது, சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்வது, அறியாமைக் கால வழக்கப்படி புலம்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
165. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(துக்கத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவன், அல்லது சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவன், அல்லது அறியாமைக் கால வழக்கப்படி புலம்புகின்றவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு நுமைர், அபூபக்ர் பின் அபீஷைபா ஆகியோரது அறிவிப்பில் "அல்லது" என்பது இடம்பெறவில்லை. "அறைந்துகொள்பவனும் கிழித்துக்கொள்பவனும் புலம்புகின்றவனும்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
166. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ("அல்லது" என்பது இடம்பெறாமல்) "அறைந்துகொள்பவனும் கிழித்துக் கொள்பவனும் புலம்புகின்றவனும்" என்றே காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
167. அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் (தமது) கடுமையான (மரண) வேதனையில் மயக்கமடைந்துவிட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடிமீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூசா (ரலி) அவர்களால் அப்பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.
பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின்போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக்கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
- அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்), அபூபுர்தா பின் அபீமூசா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
அபூமூசா (ரலி) அவர்கள் (மரணப் படுக்கையில் இருந்தபோது) மயக்கமடைந்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியார் உம்மு அப்தில்லாஹ் சப்தமிட்டு (ஒப்பாரிவைத்து) அழுது கொண்டே (அங்கு) வந்தார். பிறகு மயக்கம் தெளிந்தபோது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(துக்கத்தில்) தலையை மழித்துக்கொண்டவர், ஓலமிட்டு அழுதவர், ஆடையைக் கிழித்துக்கொண்டவர் ஆகியோரிடமிருந்து நான் எனது பொறுப்பை விலகிக் கொண்டேன்" (எனக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது) என்று கூறியது உனக்குத் தெரியாதா?" என்று அபூமூசா (ரலி) அவர்கள் கேட்டார்கள். இந்த ஹதீஸைத் தம் துணைவியாருக்கு ஏற்கெனவே அபூமூசா (ரலி) அவர்கள் கூறியிருந்தார்கள். (எனவேதான் "உனக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள்.)
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் இயாள் அல்அஷ்அரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் எனது பொறுப்பை விலக்கிக்கொண்டேன்" என்பதற்கு பதிலாக "நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக) வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 45 கோள் சொல்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
168. அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்கள்) பேசிக்கொள்வதை (ஆட்சியாளர்வரைக் கொண்டுபோய்) கோள் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனும் செய்தி ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
169. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (மக்களிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர்வரைக் கொண்டு போய்ச் சேர்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் (ஒரு நாள்) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது மக்கள், "இதோ! இவர் (நமக்கிடையே நடக்கும்) உரையாடல்களை ஆட்சியாளர் வரைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர்களில் ஒருவர் என்று (ஒருவரைச் சுட்டிக்காட்டி) கூறினர். அந்த மனிதர் வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
170. ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு மனிதர் வந்து எங்கள் அருகில் உட்கார்ந்தார். உடனே ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் "இதோ! இந்த மனிதர் (நாம் பேசிக்கொள்ளும்) பல விஷயங்களை ஆட்சியாளர் வரைக் கொண்டு போய்ச் சொல்கிறார்" என்று கூறப்பட்டது. அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் அந்த மனிதருக்குக் கேட்கும் விதமாக, "கோள் சொல்கின்றவன் சொர்க்கம் செல்லமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 46 கீழங்கியை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டுவது,கொடுத்த நன்கொடையைச் சொல்லிக் காட்டுவது, பொய்ச் சத்தியம் செய்து சரக்கை விற்பனை செய்வது ஆகியன வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளன; (இந்த) மூன்று (செயல்களைச் செய்கின்ற) பேர்களிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; துன்பம் தரும் வேதனைதான் அவர்களுக்கு உண்டு.
171. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: 1. செய்த தருமத்தைச் சொல்லிக் காட்டுபவர். அவர் எதை வழங்கினாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்கமாட்டார். 2. பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர். 3. தமது கீழங்கியை (கணுக் காலுக்கும்) கீழே இறக்கிக் கட்டுபவர்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "(அந்த) மூன்று பேரிடம் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
172. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு:
ஒருவர், வனாந்தரத்தில் தேவைக்கு அதிகமாகத் தண்ணீரை வைத்திருந்தும், வழிப்போக்கனுக்கு வழங்காமல் அதைத் தடுப்பவர் ஆவார்.
இன்னொருவர், அஸ்ர் தொழுகைக்குப் பிறகு (மக்கள் கடைவீதியில் திரளும்போது) தமது வியாபாரப்பொருளை ஒருவரிடம் விற்பதற்காகத் தாம் இன்ன விலை கொடுத்து அப்பொருளை வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து அவரை நம்பவும் வைத்துவிட்டவர் ஆவார். ஆனால், உண்மை(யான விலை) வேறொன்றாக இருக்கும்.
மற்றொருவர், ஆட்சித் தலைவரிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தவர் ஆவார். ஆட்சித் தலைவரிடமிருந்து ஆதாயம் கிடைத்தால் (பிரமாணத்தின் அடிப்படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்துகொள்வார். கிடைக்காவிட்டால் விசுவாசமாக நடந்து கொள்ளமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறிரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஜரீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஒருவர் இன்னொருவரிடம் ஒரு பொருளுக்கு (இன்னின்னவாறு) விலை கூறினார்" என்று (சிறிது வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
174. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உள்ளது. ஒருவர், அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக்கொள்ளும் நோக்கத்துடன் (பொய்) சத்தியம் செய்தவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸின் தொடர்ச்சி மேற்கண்ட (173ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 47 தற்கொலை செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது; எந்தப் பொருளால் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் நரகத்தில் வேதனை செய்யப்படுவார்; (இறைவனுக்கு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக்கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக்கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
176. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்த்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருளின் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.
இதை அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது. ஓர் இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதற்குச் சமம். இவ்வுலகில் எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் அவர் வேதனை செய்யப்படுவார். யார் (தனது செல்வத்தை) அதிகமாக்கிக் கொள்வதற்காகப் பொய்வாதம் புரிகிறாரோ அவருக்கு அல்லாஹ் குறைவையே (இழப்பையே) அதிகப்படுத்துவான். யார் (நீதிபதி முன் அளிக்கும்) பிரமாண வாக்குமூலத்தின்போது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ (அவர் தம்மீது கோபம் கொண்ட நிலையிலேயே அல்லாஹ்வைச் சந்திப்பார்).
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
177. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது திட்டமிட்டுப் பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ அதன் மூலமே அல்லாஹ் அவரை நரக நெருப்பில் வேதனை செய்வான்.
இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸிலேயே மேற்கண்டவாறு இடம் பெற்றுள்ளது.
ஷுஅபா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸில், "யார் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறாரோ அவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தம்மைத்தாமே அறுத்துக்(கொண்டு தற்கொலை செய்து) கொள்கிறாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் அறுக்கப்படுவார்" என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
178. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம்.அப்(போரின்)போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்முடன்) இருந்த முஸ்லிம் என்று கருதப்பட்ட ஒருவரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த நபர் கடுமையாகப் போரிட்டார். அதனால் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன. அப்போது (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் யாரைப் பற்றி "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று சொன்னீர்களோ அவர் இன்றைய தினம் கடுமையாகப் போரிட்டு இறந்துவிட்டார்" என்று கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "அவர் நரகத்திற்குத்தான்" என்றார்கள். உடனே முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இக்கூற்றை) சந்தேகப்படும் அளவுக்குச் சென்றுவிட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, "அந்த மனிதர் (போரில்) இறக்கவில்லை. அவருக்குக் கடுமையான காயம்தான் ஏற்பட்டது" என்று கூறப்பட்டது. பின்னர் இரவு வந்தபோது அவரால் வலி பொறுக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், "அல்லாஹ் மிகவும் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியானும் அவனுடைய தூதரும் ஆவேன் என்று நான் உறுதி கூறுகிறேன்" என்றார்கள். பிறகு பிலால் (ரலி) அவர்களிடம் "(துன்பங்களை எல்லா நிலைகளிலும் சகித்துக்கொண்டு அடிபணிந்து வாழ்ந்த) முஸ்லிமான மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழைவார். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமும் வலுவூட்டுகிறான்" என்று மக்களிடையே அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அவ்வாறே பிலால் (ரலி) அவர்கள் மக்களிடையே அறிவிப்புச் செய்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
179. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபரில்) சந்தித்துப் போரிட்டனர். (ஒருநாள் போர் முடிந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் படையினரிடமும், எதிர் அணியினர் தம் படையினரிடமும் திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே ("குஸ்மான்" என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர் (எதிரிகளின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (மற்றும் பிரிந்து செல்லாத) எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று தமது வாளால் வெட்டி வீழ்த்திக்கொண்டிருந்தார். "இன்று இவரைப் போன்று நம்மில் வேறு யாரும் தேவையான அளவிற்கு (நிறைவாகப்) போரிடவில்லை" என்று மக்கள் பேசிக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் நரகவாசிகளில் ஒருவர்" என்று (அந்த வீரரைப் பற்றிக்) கூறினார்கள். உடனே மக்களில் ஒருவர், "நான் அவருடன் தொடர்ந்து செல்லப் போகிறேன்" என்று கூறிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார்.
அந்த வீரர் நிற்கும்போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்துசென்றால் அவருடன் இவரும் விரைந்துசென்றார். இந்நிலையில் அவ்வீரர் (போரில்) கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் (கூரான) மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையே வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை சாய்த்துக்கொண்டு தன்னை மாய்த்துக்கொண்டார். (பின்தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதிகூறுகின்றேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்களல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே, நான் "அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு" என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடிப் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்துப் பின்தொடர்ந்தேன்.) அவர் (ஒரு கட்டத்தில் எதிரிகளால்) மிகக் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்துபோக விரும்பி, தனது வாளின் கீழ்முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது சாய்த்துக்கொண்டு தன்னையே மாய்த்துக்கொண்டார்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். அவ்வாறே ஒரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
180. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்தியபோது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்துபோனார். உங்கள் இறைவன் "(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக் கொண்டதால்) அவன்மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்" என்று கூறினான்.
(இதை ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)
பிறகு ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 1