பாடம் : 37 இறைவனுக்கு இணைவைப்பதுதான் பாவங்களிலேயே மிகவும் மோசமானது. அதற்கடுத்த பெரும் பாவம் எது என்பது பற்றிய விளக்கம்.
141. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பதுதான், (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் (சட்டபூர்வமான) உரிமையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 38 பெரும் பாவங்களும் மிகப்பெரும் பாவங்களும்.
143. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (மூன்று முறை) கேட்டு விட்டு, "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, "பொய் சாட்சியம் சொல்வது" அல்லது "பொய் பேசுவது" ஆகியவை (தாம் அவை)" என்று கூறினார்கள். அப்போது சாய்ந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து இ(றுதியாகச் சொன்ன)தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள் "அவர்கள் நிறுத்திக் கொள்ளக்கூடாதா!" என்று கூறினோம்.
அத்தியாயம் : 1
144. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலைசெய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்" அல்லது "பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது". அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.
பிறகு "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டுவிட்டு, "பொய் பேசுவது" அல்லது "பொய் சாட்சியம் கூறுவது" தான் (அது) என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பொய் சாட்சியம்" என்றே நான் பெரிதும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 1
145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
146. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 39 தற்பெருமை கூடாது; தற்பெருமை என்றால் என்ன?
147. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
148. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
149. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 40 அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்தவர் சொர்க்கம் செல்வார். இணைவைப்பாளராக இறந்து போனவர் நரகம் செல்வார்.
150. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்" என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
151. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் அவனைச் சந்திக்கிறாரோ அவர் சொர்க்கம் செல்வார். யார் அவனுக்கு இணைவைத்தவராக அவனைச் சந்திக்கிறாரோ அவர் நரகம் செல்வார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹஜ்ஜாஜ் பின் அஷ்ஷாயிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்" என்று (முத்தஸிலாகவு)ம், அபூஅய்யூப் அல்ஃகைலானீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது" என்று (முன்கத்திஉ ஆகவு)ம் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
153. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து "உங்கள் சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கம் செல்வார்" என்று நற்செய்தி கூறினார். உடனே நான், "அவர் விபசாரம் செய்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் "விபசாரம் செய்தாலும் திருடினாலும் சரியே" என்று பதிலளித்தார்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
154. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் வெள்ளை ஆடை அணிந்தபடி உறங்கிக்கொண்டிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு மீண்டும் நான் அவர்களிடம் சென்றேன். அப்போதும் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு (மீண்டும்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் விழித்திருந்தார்கள். நான் அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை("லா இலாஹ இல்லல்லாஹ்") என்று சொல்லி, பிறகு அதே நம்பிக்கையில் இறந்துவிடும் எந்த அடியாரும் சொர்க்கம் புகுந்தே தீருவார்" என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நான், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள். நான் (மீண்டும்) "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலுமா?" என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அவர் விபசாரம் புரிந்தாலும் திருடினாலும் சரியே (சொர்க்கம் புகுந்தே தீருவார்)" என்று சொன்னார்கள்.- இவ்வாறு மூன்று தடவை நடந்தது. நான்காவது தடவை "(அவர் சொர்க்கம் புகுந்தே தீருவார்.) அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! (அதாவது நீர் இதை விரும்பாவிட்டாலும் சரியே)" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் அபுல்அஸ்வத் அத்தீலீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் "அபூதர்ரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று கூறியபடியே புறப்பட்டுச் சென்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 41 இறைமறுப்பாளர் ஒருவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (கலிமாச்) சொன்னதற்குப் பிறகு அவரைக் கொலை செய்வது கூடாது.
155. மிக்தாத் பின் அம்ர் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "இறை மறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன். அவன் என்னிடம் சண்டையிட்டான். அப்போது அவன் என் கைகளில் ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு, அவன் என்னை விட்டு ஓடிப்போய் ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து)கொண்டு, "அல்லாஹ்வுக்கு அடிபணிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்" என்று சொன்னான். இதை அவன் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) அவனைக் கொல்லாதே!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதரே! அவன் எனது கையைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகுதானே இதைச் சொன்னான்!" என்று கேட்டேன்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்து விடுவான். அந்த வார்த்தையைச் சொல்வதற்கு முன் அவனிருந்த (குற்றவாளி எனும்) நிலைக்கு நீ சென்றுவிடுவாய்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
156. மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "நான் அவனைக் கொல்வதற்கு முற்படும் போது அவன் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று கூறினான். (இதற்குப் பிறகு அவனை நான் கொல்லலாமா? என்று மிக்தாத் (ரலி) அவர்கள் வினவினார்கள்) என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
157. அதாஉ பின் யஸீத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பனூ ஸுஹ்ரா குலத்தாரின் நட்புக் குலத்தைச் சேர்ந்தவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் பங்கேற்றவருமான மிக்தாத் பின் அம்ர் பின் அல்அஸ்வத் அல்கிந்தீ (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்: இறைமறுப்பாளர்களில் ஒருவனை நான் சந்தித்தேன்..." என்று கேட்டார்கள்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட (155ஆவது) ஹதீஸிலுள்ளதைப் போன்றே உபைதுல்லாஹ் பின் அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
158. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பிரிவொன்றில் அனுப்பி வைத்தார்கள். ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்காத்" கூட்டத்தாரிடம் நாங்கள் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில் அவர்களை நாங்கள் தோற்கடித்தோம்.) அப்போது நான் ஒருவரைச் சந்தித்தேன். (அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது) அவர், "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொன்னார். நான் (எனது ஈட்டியால்) அவரைத் தாக்கி(க் கொன்று)விட்டேன். ஆனால் அது என் மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. (திரும்பி வந்தபோது) நான் இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "லா இலாஹ இல்லல்லாஹ் என்று அவர் சொன்ன பிறகுமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். "ஆயுதத்தை அஞ்சித்தான் அவர் இவ்வாறு சொன்னார், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். "அதை அவர் (உளப்பூர்வமாக) சொன்னாரா இல்லையா என்று அறிய அவருடைய இதயத்தை நீ பிளந்து பார்த்தாயா?" என்று (கடிந்து) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் (அதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றிராமல்) அன்றைய தினத்தில் இஸ்லாத்தை ஏற்றிருந்தால் நன்றாயிருந்திருக்குமே என்றுகூட ஆசைப்பட்டேன்.
எனவேதான் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! எந்த முஸ்லிமுடன் நான் போரிடுவதாக இருந்தாலும் அவருடன் இந்தச் "சின்ன வயிற்றுக்காரர்" -உசாமா- போரிடாதவரை போரிடமாட்டேன்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் (சஅத் (ரலி) அவர்களிடம்), "(பூமியிலிருந்து) குழப்பம் நீங்கி, கீழ்ப்படிதல் முற்றிலுமாக அல்லாஹ்வுக்கென்றே ஆகிவிடும்வரை அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள்" (8:39) என்று அல்லாஹ் கூறவில்லையா? என்று கேட்டார். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) குழப்பம் முற்றிலும் நீங்கிவிட வேண்டுமென்பதற்காக நாங்கள் போரிட்டோம். ஆனால், நீரும் உம் தோழர்களும் குழப்பம் உருவாக வேண்டுமென்பதற்காகப் போரை விரும்புகிறீர்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
159. உசாமா பின் ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த "ஹுரக்கா" கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களை நாங்கள் தோற்கடித்தோம். அப்போது நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் போய்ச்சேர்ந்தோம். அவரை நாங்கள் சுற்றி வளைத்துக்கொண்டபோது, அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" (அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக்கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்றுவிட்டேன். நாங்கள் (திரும்பி) வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி எட்டவே அவர்கள் என்னிடம், "உசாமா! அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று கேட்டார்கள். நான், "அவர் உயிரைப் பாதுகாக்கவே (அவ்வாறு கூறினார்)" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள் "அவர் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்?" என்று (மீண்டும்) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான் "(அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமே; (பாவம் மன்னிக்கப்பட்டிருக்குமே!)" என்றுகூட ஆசைப்பட்டேன்.
அத்தியாயம் : 1
160. ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களது காலத்தில் நடந்த சண்டையின் போது ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அஸ்அஸ் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் "எனக்காக உங்களுடைய சகோதரர்களில் சிலரை ஒன்றுகூட்டுங்கள். அவர்களிடம் நான் பேச வேண்டும்" என்று சொல்லி அனுப்பினார்கள். (தம் சகோதரர்களை அழைத்து வருமாறு) அஸ்அஸ் ஒரு தூதுவரை அவர்களிடம் அனுப்பினார். அவ்வாறே அவர்கள் ஒன்றுகூடியதும் (அவர்களிடம்) மஞ்சள் நிற முக்காட்டு ஆடை ஒன்றை அணிந்து கொண்டு ஜுன்தப் (ரலி) அவர்கள் வந்து "நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை (தொடர்ந்து) பேசுங்கள்" என்று சொன்னார்கள். அதையடுத்து அவர்கள் ஒவ்வொருவராக பேசிக்கொண்டே வந்து ஜுன்தப் (ரலி) அவர்கள் பேச வேண்டிய முறை வந்தபோது அவர்கள் தமது தலையிலிருந்த முக்காட்டை விலக்கிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: நான் உங்களிடம் வரும்போது உங்களுக்கு உங்களுடைய நபியின் செய்தி ஒன்றை அறிவிக்க வேண்டும் என நான் எண்ணியிருக்கவில்லை. (ஆனால், அறிவிக்க வேண்டுமென இப்போது விரும்புகிறேன்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இணைவைப்பாளர்களில் ஒரு கூட்டத்தாரை நோக்கி முஸ்லிம்களின் படைப் பிரிவொன்றை அனுப்பிவைத்தார்கள். அவர்கள் (அக்கூட்டத்தாரிடம் சென்று) அவர்களை(ப் போர்க்களத்தில்) சந்தித்தனர். அப்போது இணைவைப்பாளர்களில் ஒரு மனிதர் முஸ்லிம்களில் எவரையேனும் தாக்க முற்படும்போதெல்லாம் (குறி தவறாமல்) தாக்கிக் கொலை செய்துகொண்டிந்தார். இந்நிலையில் முஸ்லிம்களில் ஒருவர் (அவர் உசாமா பின் ஸைத் என்றே நாங்கள் பேசிக்கொண்டதுண்டு) அந்த எதிரி அயர்ந்துபோகும் நேரத்திற்காகக் காத்திருந்தார். (அந்த நேரமும் வந்தது.) அந்த மனிதர்மீது இவர் வாளை உயர்த்தியபோது அவர் (தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழியை) கூறினார். ஆனால் (அதைப் பொருட்படுத்தாமல்) உசாமா (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கொன்றுவிட்டார்கள். (அந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்.) அந்த வெற்றியை அறிவிப்பதற்காக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் அந்தப் போரின் நிலவரம் குறித்து விசாரித்தார்கள். அப்போது அவர் நடந்த நிகழ்ச்சிகளையும் (கொல்லப்பட்ட) அந்த மனிதர் நடந்துகொண்ட விதம் பற்றியும் தெரிவித்தார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் உசாமா (ரலி) அவர்களை வரவழைத்து அவர்களிடம் "ஏன் அவரைக் கொன்றாய்?" என்று கேட்டார்கள். உசாமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அந்த மனிதர் முஸ்லிம்களுக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்தினார்.இன்னார் இன்னாரை அவர் கொன்றுவிட்டார் (சிலருடைய பெயரை உசாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டார்கள்) ஆகவே, நான் அவரைத் தாக்கினேன். அவர் வாளைக் கண்டதும் (பயந்துபோய்) "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று (ஏகத்துவ உறுதிமொழி) கூறினார்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை நீ கொன்றுவிட்டாயா?" என்று கேட்டார்கள். உசாமா, "ஆம்" என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர் ஏற்றுக்கொண்ட ஏகத்துவ உறுதிமொழியான) "லா இலாஹ இல்லல்லாஹ்" மறுமை நாளில் (உனக்கெதிரான சாட்சியாக) வரும்போது நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று கேட்டார்கள். இதைவிட அதிகமாக வேறெதையும் கேட்காமல், "லா இலாஹா இல்லல்லாஹ்" மறுமை நாளில் வரும் போது நீ என்ன செய்யப்போகிறாய்?" என்றே (திரும்பத் திரும்ப) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 1