பாடம் : 30 பரம்பரையைக் குறை கூறுவதையும், (இறந்தவருக்காக) ஒப்பாரி வைப்பதையும் இறைமறுப்பு என்று குறிப்பிடுவது.
121. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களிடம் உள்ள இரு குணங்கள் இறை மறுப்பாகும்: 1. பரம்பரையைக் குறை கூறுவது. 2. இறந்தவருக்காக ஒப்பாரிவைப்பது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 31 (எசமானைவிட்டு) ஓடிப்போன அடிமையை "இறைமறுப்பாளன்” என்று குறிப்பிடுவது.
122. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
எந்த அடிமை தன் எசமானர்களிடமிருந்து ஓடிப்போகிறானோ அவன் அவர்களிடம் திரும்பி வரும்வரை இறைமறுப்பாளனாகவே இருக்கிறான்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மன்ஸூர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (மேற்கண்ட ஹதீஸ் ஜரீர் (ரலி) அவர்களது சொந்தக் கருத்தல்ல. மாறாக,) நபி (ஸல்) அவர்கள் கூறியது என்றே (எனக்கு) அறிவிக்கப்பட்டது. ஆயினும், (குழப்பவாதிகளான முஃதஸிலா மற்றும் காரிஜிய்யாக்கள் நிறைந்துள்ள) இந்த பஸ்ரா நகரில் என் வாயிலாக இது அறிவிக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
அத்தியாயம் : 1
123. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த அடிமை (தன் எசமானிடமிருந்து) ஓடிப் போகிறானோ அவனைவிட்டு (இறைவனின்) பொறுப்பு(ம் பாதுகாப்பும்) நீங்கிவிடுகிறது.
இதை ஜரீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
124. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அடிமை (தன் எசமானிடமிருந்து) ஓடிப் போய்விட்டால் அவனுடைய எந்தத் தொழுகையும் ஏற்றுக்கொள்ளப்படாது. (தொழுகையின் நன்மை கிடைக்காது.)
இதை ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 32 நட்சத்திர இயக்கத்தால்தான் நமக்கு மழை பொழிந்தது என்று கூறுவது இறைமறுப்பாகும்.
125. ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹுதைபியா" எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். (அன்றிரவு மழை பெய்திருந்தது.) தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று கூறினர்.
அப்போது "என் அடியார்களில் என்னை நம்பக்கூடியவர்களும் உள்ளனர்; (என்னை) மறுக்கக்கூடியவர்களும் உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்கள் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர். "இன்ன இன்ன நட்சத்திரத்தினால்தான் எங்களுக்கு மழை பொழிந்தது" எனக் கூறியவர்களோ என்னை மறுத்து நட்சத்திரத்தை நம்பியவர்கள் ஆவர்" என அல்லாஹ் சொன்னான்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 1
126. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?" என (மக்களிடம்) கேட்டார்கள். பிறகு, "என் அடியார்களுக்கு நான் என் அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் ஒரு சாரார் "(இதற்கெல்லாம் காரணம்) நட்சத்திரங்கள்தாம்; நட்சத்திரங்களாலேயே (இது எங்களுக்குக் கிடைத்தது)" என்று கூறி, அந்த அருட்செல்வத்தின் விஷயத்தில் நன்றி கெட்டவர்களாய் நடந்துகொள்ளாமல் இருந்ததில்லை (என்று அல்லாஹ் சொன்னான்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் வானிலிருந்து ஏதேனும் ஒரு வளத்தை இறக்கும்போதெல்லாம் மக்களில் ஒரு சாரார் அதன் விஷயத்தில் நன்றி கொன்றவர்களாய் மாறிவிடாமல் இருந்ததில்லை. (வானிலிருந்து) அல்லாஹ் மழை பொழிவிக்கிறான். அவர்களோ, "இன்ன இன்ன நட்சத்திரம் தான் (மழை பொழிவித்தது)" என்று கூறுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், முஹம்மத் பின் சலமா அல்முராதீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இன்ன இன்ன நட்சத்திரங்களால்தான் (மழை பொழிந்தது என்று அவர்கள் கூறுகின்றனர்)" என வந்துள்ளது.
அத்தியாயம் : 1
127. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் (ஒரு நாள்) மழை பெய்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களில் நன்றியுள்ளவர்களும் உள்ளனர். நன்றி கெட்டவர்களும் உள்ளனர். (மழை பொழியும் போது) இது அல்லாஹ்வின் கருணை என்று (சிலர்) கூறுகின்றனர். வேறு சிலரோ, இன்ன இன்ன நட்சத்திர இயக்கம் மெய்யாகிவிட்டது என்று கூறுகின்றனர்" என்றார்கள்.
அப்போதுதான், "நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்" என்று தொடங்கி, "(இறைவன் வழங்கிய) உங்கள் வாழ்வாதாரத்திற்கு (நன்றியாக) உங்களது அவிசுவாசத்தை ஆக்குகின்றீர்களா?" என்று முடியும் இறைவசனங்கள் (56:75-82) அருளப்பெற்றன.
அத்தியாயம் : 1
பாடம் : 33 அன்சாரிகளையும் அலீ (ரலி) அவர்களையும் நேசிப்பது இறைநம்பிக்கையும் அதன் அடையாளங்களில் ஒன்றும் ஆகும்; அவர்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பதன் ஆதாரம்.
128. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நயவஞ்சகனின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்; இறைநம்பிக்கையாளரின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளை நேசிப்பது இறைநம்பிக்கையின் அடையாளமாகும்; அவர்களை வெறுப்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
129. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகள் தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் அவர்களை நேசிக்கமாட்டார்கள்; நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அவர்களை வெறுக்கமாட்டார்கள். யார் அவர்களை நேசிக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். யார் அவர்களை வெறுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் வெறுக்கிறான்" என்று குறிப்பிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் (இதை எனக்கு அறிவித்த) அதீ பின் ஸாபித் (ரஹ்) அவர்களிடம், "இதை பராஉ (ரலி) அவர்களிடமிருந்தா செவியுற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(ஆம்;) எனக்குத்தான் அவர்கள் அறிவித்தார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
130. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்சாரிகளை வெறுக்கமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்ட எவரும் அன்சாரிகளை வெறுக்கமாட்டார்.
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
131. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
எவன் வித்துக்களைப் பிளந்தானோ, உயிர்களைப் படைத்தானோ அவன்மீது ஆணையாக! உம்மீ நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) என்னிடம் அறுதியிட்டுக் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் என்னை (அலீயை) நேசிக்கமாட்டார்கள். நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் என்னை வெறுக்கமாட்டார்கள்.
இதை ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 34 வணக்க வழிபாடுகள் குறைவதால் இறைநம்பிக்கையும் குறையும்; நன்றி மறத்தல், உரிமை மீறல் போன்ற இறைமறுப்பு அல்லாத செயல்களுக்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படும்.
132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), "பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, "நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 35 தொழுகையைக் கைவிடுவதற்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஆதமுக்குச் சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது.) ஆனால், நான் (அதற்கு) மாறுசெய்தேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
134. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவதுதான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்தொடர் வேறுபடுகிறது.)
அத்தியாயம் : 1
பாடம் : 36 அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.
135. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். "பிறகு எது (சிறந்தது)?" என்று கேட்கப்பட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். "பிறகு எது (சிறந்தது)?" எனக் கேட்கப்பட்டபோது, "(பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வது" எனும் இடத்தில்) "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்வது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
136. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)" என்று பதிலளித்தார்கள்."அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லை யென்றால்...?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிலவற்றைக்கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்ளும் ஒரு நல்லறம்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில் ("தொழில் செய்பவனுக்கு உதவி செய்க" என்பதற்கு பதிலாக) "பலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
137. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். (நபி அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று) அவர்கள்மீது பரிவுகாட்டியே நான் மேலும் மேலும் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அத்தியாயம் : 1
138. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! (நற்)செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டேன். அதற்கு, "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
அத்தியாயம் : 1
139. வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ! இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பிறகு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டபோது, "பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் அவர்களும் எனக்கு அதிகமாகச் சொல்லியிருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் சாடை காட்டினார்கள்; அன்னாரது பெயரை எங்களிடம் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1