181. ஹசன் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் (இந்த நபிமொழியை பஸ்ராவிலுள்ள) இந்தப் பள்ளிவாசலில் எமக்கு அறிவித்தார்கள். (அவர்கள் அறிவித்ததிலிருந்து அதை) நாம் மறக்கவில்லை; ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைத்திருப்பார்களோ என்ற அச்சமும் நமக்கு இல்லை. ஜுன்தப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்:
"உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே வாழ்ந்த ஒரு மனிதரின் உடலில் கொப்புளம் கிளம்பியது" என்று தொடங்கி (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளதைப் போன்றே அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 48 (பங்கிடப்படாத போர்ச்செல்வம் போன்ற பொதுச் சொத்துகளை) கையாடல் செய்வது வன்மையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இறைநம்பிக்கை கொண்டவரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்.
182. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் தினத்தன்று நபித்தோழர்களில் சிலர் "இன்னார் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆகி விட்டார், இன்னார் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறிக்கொண்டேவந்து இறுதியாக ஒரு மனிதரைப் பற்றி "இன்னாரும் உயிர்த்தியாகி ஆகிவிட்டார்" என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இல்லை! (போர்ச்செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவற்றிலிருந்து) கோடுபோட்ட வண்ணப் போர்வை ஒன்றை அவர் எடுத்துக்கொண்ட காரணத்தால் அவரை நான் நரகத்தில் கண்டேன் (எனவே அவரை உயிர்த்தியாகி என்று கூறாதீர்கள்)" என்றார்கள்.
பிறகு (என்னிடம்) "கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்றார்கள். அவ்வாறே நானும் சென்று, "அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று (மக்களிடையே) அறிவித்தேன்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
183. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். அல்லாஹ் எங்களுக்கு வெற்றியளித்தான். அப்போ(ரின்போ)து நாங்கள் தங்கத்தையோ வெள்ளியையோ போர்ச் செல்வங்களாகப் பெறவில்லை. உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றையே போர்ச்செல்வங்களாகப் பெற்றோம். பிறகு நாங்கள் (மதீனா அருகிலுள்ள) "வாதீ(அல்குரா)" எனுமிடத்தை நோக்கி நடந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய (மித்அம் என்றழைக்கப்படும்) ஓர் அடிமையும் இருந்தார். அவரை "பனுள்ளுபைப்" குலத்திலுள்ள ஜுதாம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அவர் "ரிஃபாஆ பின் ஸைத்" என்று அழைக்கப் பட்டார்.
நாங்கள் அந்த (வாதில் குரா) பள்ளத்தாக்கில் இறங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அந்த அடிமை எழுந்து அவர்களது சிவிகையை (ஒட்டகத்திலிருந்து) இறக்கிக் கொண்டிருந்தார். அப்போது (எங்கிருந்தோ வந்த) ஓர் அம்பால் அவர் தாக்கப்பட்டார். அதுவே அவரது இறப்புக்குக் காரணமாக அமைந்தது. அப்போது நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்துவிட்டது. வாழ்த்துகள்!" என்று கூறினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை, என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! கைபர் போரில் கிடைத்த போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன்பே அவர் எடுத்துக்கொண்ட போர்வை அவருக்கு நரக நெருப்பாக எரிந்துகொண்டிருக்கிறது" என்று கூறினார்கள்.
(இதைக் கேட்ட) மக்கள் திடுக்குற்றனர். அப்போது ஒரு மனிதர் "ஒரு செருப்பு வாரை" அல்லது "இரண்டு செருப்பு வார்களை"க் கொண்டு வந்து "(இதை) நான் கைபர் போரின்போது எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இது சாதாரண செருப்பு வார் அன்று; இதைத் திருப்பித் தராமல் இருந்திருந்தால் இதுவே) "நரகத்தின் செருப்பு வார்" அல்லது "நரகத்தின் இரு செருப்பு வார்கள்" ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 49 "தற்கொலை செய்துகொண்டவர் இறைமறுப்பாளர் (காஃபிர்) அல்லர்" என்பதற்கான ஆதாரம்.
184. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தாருக்குக் கோட்டை ஒன்றிருந்தது. தவ்ஸ் குலத்தைச் சேர்ந்த துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! (தாங்கள் ஹிஜ்ரத் செய்யும்போது எதிரிகளிடமிருந்து உங்களைத்) தற்காத்துக்கொள்ள உறுதியான கோட்டை கொத்தளம் தங்களுக்கு வேண்டுமா? (அத்தகைய கோட்டை தவ்ஸ் குலத்தாரின் வசிப்பிடத்தில் உள்ளது)" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இணங்கவில்லை. (அந்த வாய்ப்பை மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கென அல்லாஹ் வழங்கியிருந்ததே அதற்குக் காரணமாகும். நபி (ஸல்) அவர்கள் நாடு துறந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்களும் நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். துஃபைல் (ரலி) அவர்களுடன் அவர்களுடைய சமூகத்தைச் சேர்ந்த ஒரு மனிதரும் நாடு துறந்து சென்றார். (அவர்கள் மதீனாவிற்குச் சென்றபோது) மதீனாவின் தட்பவெப்பநிலை அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த மனிதர் நோய்வாய்ப்பட்டுவிட்டார். (நோயின் வேதனை பொறுக்க முடியாமல்) பதறிப்போன அந்த மனிதர் தம்முடைய பெரிய அம்புகளை எடுத்துத் தமது கை நாடியை அறுத்துக் கொண்டார். கைகளிலிருந்து இரத்தம் கொட்டியது. இறுதியில் அவர் இறந்துவிட்டார். அவரைத் துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் கனவில் கண்டார்கள். அவர் நல்ல நிலையில் தான் இருந்தார். ஆனால், அவருடைய இரு கைகளும் போர்த்தி மூடப்பட்டு இருப்பதைக் கண்டார்கள். அவரிடம், "உம்மிடம் உம்முடைய இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான்?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "நான் நபி (ஸல்) அவர்களிடம் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்ததால் அல்லாஹ் எனக்கு மன்னிப்பு அளித்தான்" என்று பதிலளித்தார். துஃபைல் (ரலி) அவர்கள், "ஏன் உம்மிரு கைகளும் போர்த்தி மூடப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டார்கள். "நீ வீணாக்கிய உனது கையை நாம் சீராக்கமாட்டோம்" என்று (இறைவனின் தரப்பிலிருந்து) என்னிடம் கூறப்பட்டது" என்று அவர் சொன்னார்.
துஃபைல் (ரலி) அவர்கள் இக்கனவு பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! அவருடைய இரு கைகளுக்கும் மன்னிப்பு அளிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 50 மறுமை நாள் நெருங்கும்போது ஒரு காற்று வீசும்; எவருடைய உள்ளத்தில் சிறிதளவு இறைநம்பிக்கை இருக்குமோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றும்.
185. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மறுமை நாள் நெருங்கும்போது) யமன் நாட்டி(ன் திசையி)லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான். எவரது உள்ளத்தில் "கடுகளவு" அல்லது "அணுவளவு" இறைநம்பிக்கை உள்ளதோ அவ(ரது உயி)ரை அது கைப்பற்றிக் கொள்ளும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூஅல்கமா அல்ஃபர்வீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கடுகளவு" என்றும் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அணுவளவு" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 51 குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரியும்படி வந்துள்ள தூண்டுதல்.
186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 52 இறைநம்பிக்கையாளர் தமது (நற்)செயல் அழிந்துவிடுமோ என அஞ்சுதல்.
187. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!" எனும் இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். "நான் நரகவாசிகளில் ஒருவன்" என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்துகிடந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம், "அபூ அம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள் ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.
அப்போது ஸாபித் (ரலி) அவர்கள், "இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்" என்று கூறினார்கள். இதை சஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
188. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்கள் அன்சாரிகளின் பேச்சாளராக இருந்தார். இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றபோது..." என்று தொடங்கி மற்றவை மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பேதும் இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "உங்கள் குரல்களை நபியின் குரலைவிட உயர்த்தாதீர்கள் எனும் (49:2ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது..." என்று ஹதீஸ் தொடங்குகிறது. அந்த ஹதீஸிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதிலும் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை. அதில் "எங்களிடையே நடமாடிய ஒரு சொர்க்கவாசியாகவே நாங்கள் ஸாபித் (ரலி) அவர்களைக் கருதிவந்தோம்" என்று (அனஸ் (ரலி) அவர்கள்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 53 அறியாமைக் காலத்தில் செய்த (தீய) செயல்களுக்காக ஒருவர் (மறுமையில்) தண்டிக்கப்படுவாரா?
189. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காகத் தண்டிக்கப்படுவோமா, அல்லாஹ்வின் தூதரே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் இஸ்லாத்தில் (இணைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப் படமாட்டார். யார் (இஸ்லாத்தில் நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகவும் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு) செய்த தவறுகளுக்காகவும் (மறுமையில்) தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
190. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "யார் இஸ்லாத்தில் (நுழைந்து தொடர்ந்து) நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றுக்காக தண்டிக்கப்படமாட்டார். யார் இஸ்லாத்தில் (நுழைந்த பிறகு "இறைமறுப்பு" எனும்) தீமை புரிகிறாரோ அவர் (இஸ்லாத்தைத் தழுவுவதற்கு) முன் செய்த தவறுகளுக்காகவும் (இஸ்லாத்தை ஏற்ற பின் செய்த இந்த) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
191. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 54 முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடுகிறது. ஹிஜ்ரத்தும் ஹஜ்ஜும் அவ்வாறுதான்.
192. அப்துர் ரஹ்மான் பின் ஷுமாசா அல்மஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள். பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். அப்போது அவர்களுடைய புதல்வர், "அருமைத் தந்தையே! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா?" என்று கேட்டார். உடனே அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் தமது முகத்தை (தம் புதல்வரை நோக்கி)த் திருப்பி (பின்வருமாறு) கூறினார்கள்: "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும். நான் (என் வாழ்நாளில்) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன்.
(முதலாவது கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன். என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன்.
(இரண்டாவது கட்டத்தில்) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று "உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், "அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?" என்று கேட்டார்கள். நான், "சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்" என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?" என்று கேட்டார்கள். "என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் (மார்க்கத்திற்காக நாடுதுறத்தல்) முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?" என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை; எனது பார்வைக்கு அவர்களை விட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை. அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையினால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை. அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது. ஏனெனில், நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவிலலை. அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன்.
பிறகு (மூன்றாவது கட்டத்தில்) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம். அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது. எனவே, நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது. என்னை (குழிக்குக்குள் வைத்து) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள். பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள். உங்களால் நான் ஆசுவாசமடைவேன்; என் இறைவனின் தூதர்க(ளான வானவர்க)ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
193. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்பவர்களில் சிலர், நிறைய கொலைகளைப் புரிந்திருந்தனர்; விபசாரம் அதிகமாகச் செய்திருந்தனர். பிறகு (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் கூறிவருகின்ற (போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்துவிட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வோம்)" என்று கூறினர்.
அப்போது, "(ரஹ்மானின் உண்மையான அடியார்களான) அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரம் புரிவதில்லை. ஆகவே, யார் இவற்றைச் செய்கிறாரோ அவர் தண்டனை அடைய நேரிடும்" எனும் (25:68ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், "(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறித் தமக்குத் தாமே அநீதியிழைத்துக்கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணைமீது அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்..." எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 55 இஸ்லாத்தைத் தழுவுதற்கு முன் இறைமறுப்பாளர் ஒருவர் செய்த (நற்)செயலின் நிலையென்ன?
194. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் செய்துவந்த நல்லறங்களைப் பற்றித் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்? அவற்றுக்கு (மறுமையில்) எனக்கு (நற்பலன்) ஏதும் உண்டா?" என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று எனக்கு பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
195. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் தானதர்மம், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணுதல் ஆகிய நல்லறங்களைப் புரிந்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில்) நற்பலன் ஏதும் உண்டா, கூறுங்கள்?" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்" என்று பதிலளித்தார்கள்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில் (நன்மையை நாடி) பல நற்பணிகள் ஆற்றிவந்தேன். (அவற்றுக்கு மறுமையில் எனக்குப் பிரதிபலன் உண்டா?)" என்று கேட்டேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்கான பிரதிபலன்)களுடன்தான் இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்(; உமக்கு நற்பலன் உண்டு)" என்று பதிலளித்தார்கள். அப்போது நான் "அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் செய்துவந்த நற்செயல் எதையும் இஸ்லாத்திலும் செய்யாமல் இருக்கமாட்டேன்" என்று கூறினேன்.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
196. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள்; நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்; அவ்வாறே அன்னார் இஸ்லாத்தைத் தழுவிய பிறகும் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள். நூறு பயண ஒட்டகங்களை தர்மம் செய்தார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று மேற்கண்ட ஹதீஸிலுள்ளவாறு கேட்டார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 56 இறைநம்பிக்கையின் வாய்மையும் தூய்மையும்.
197. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு" எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. மேலும், அவர்கள் "எங்களில் யார்தாம் தமக்குத் தாமே அநீதி இழைக்காதவர்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அநீதி என்பதற்கு நீங்கள் நினைக்கின்ற அர்த்தம் இல்லை. உண்மையில் (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் "என் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே. அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது தான் மாபெரும் அநீதியாகும்" என்று சொன்ன(தாக 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறியிருப்ப)துதான் அதற்குப் பொருள் ஆகும்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
198. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 57 தூயவனான அல்லாஹ், அவரவர் ஆற்றலுக்கு ஏற்பவே சுமைகளைத் தருகின்றான்.
199. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன; உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக்கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். அவன் நாடியவர்களை மன்னிப்பான்; அவன் நாடியவர்களை வேதனை செய்வான். இன்னும் அல்லாஹ் அனைத்துப் பொருள்கள்மீதும் ஆற்றல் உள்ளவன் ஆவான்" எனும் (2:284ஆவது) வசனம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, மண்டியிட்டு அமர்ந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் சக்திக்குட்பட்ட தொழுகை, நோன்பு, அறப்போர், தர்மம் (ஸகாத்) ஆகியவற்றைச் செய்யுமாறு நாங்கள் உத்தரவிடப்பட்டோம். ஆனால், (இப்போது) தங்களுக்கு (மேற்கண்ட) இந்த வசனம் அருளப்பெற்றுள்ளது. இது எங்கள் சக்திக்கு மீறியதாயிற்றே?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களுக்கு முந்தைய இரு வேதக்காரர்(களான யூதர்களும் கிறிஸ்தவர்)களும் கூறியதைப் போன்று "செவியுற்றோம்; மாறு செய்தோம்" என்று நீங்களும் கூற விரும்புகின்றீர்களா? வேண்டாம்.(அவ்வாறு கூறிவிடாதீர்கள். மாறாக,) "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். இன்னும் உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றே கூறுங்கள்" என்றார்கள். அவ்வாறே மக்கள், "எங்கள் அதிபதியே! (உன் கட்டளைகளை) நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். (எங்களின்) மீட்சியும் உன்னிடமே உள்ளது" என்று கூறினர். மக்கள் இவ்வாறு சொல்லச் சொல்ல அவர்களின் நாவு (இறைவனுக்குப்) பணிந்தது (உள்ளமும்தான்).
அதைத் தொடர்ந்து அல்லாஹ், "(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை நம்புகின்றார். நம்பிக்கையாளர்களும் (நம்புகின்றனர்). (இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். (மேலும் கூறுகின்றனர்:) அவனுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் (சிலரை ஏற்று சிலரை மறுத்து) நாங்கள் வேற்றுமை காட்டமாட்டோம். "எங்கள் அதிபதியே! நாங்கள் செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம். உன்னிடம் மன்னிப்புக் கோருகின்றோம். உன்னிடமே (எங்களின்) மீட்சியும் உள்ளது" என்றும் அவர்கள் வேண்டுகிறார்கள்" எனும் (2:285ஆவது) வசனத்தை அருளினான்.
ஆக, மக்கள் இவ்வாறு செயல்பட்டதையடுத்து அல்லாஹ், ("உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும் மறைத்தாலும் உங்களிடம் அல்லாஹ் விசாரணை செய்வான்" எனும்) முந்திய வசனத்(தின் சட்டத்)தை மாற்றி (அதற்கு பதிலாகப்) பின்வரும் வசனத்தை அருளினான்: எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பை அல்லாஹ் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களை தண்டித்து விடாதே! (2:286). "ஆகட்டும்! (அவ்வாறே செய்கிறேன்)" என்றான் அல்லாஹ்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்திவிடாதே!" அப்போதும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் சக்திக்கு மீறிய (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள்மீது சுமத்திவிடாதே!" அதற்கும் "ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்; மறுக்கின்ற கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!" அதற்கும் "சரி! ஆகட்டும்!" என்றான் அல்லாஹ்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
200. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"உங்கள் மனத்திலுள்ளவற்றை நீங்கள் வெளியிட்டாலும், அவற்றை மறைத்துக் கொண்டாலும் அவற்றைப் பற்றியும் அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான்" எனும் இந்த (2:284ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, மக்களின் உள்ளத்தில் முன்பு ஏற்பட்டிராத (கலக்கம்) ஒன்று அப்போது ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், "செவியுற்றோம்; கீழ்ப்படிந்தோம்; எங்களை ஒப்படைத்தோம்" (சமிஃனா, வ அதஃனா, வ சல்லம்னா) என்று கூறுங்கள்" என்றார்கள்.
உடனே (மக்களும் அவ்வாறு செய்யவே) அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் நம்பிக்கையை ஊட்டினான். மேலும், "அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அது தாங்கிக்கொள்ள முடியாத பொறுப்பைச் சுமத்துவதில்லை; அது சம்பாதித்த நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே. (நம்பிக்கையாளர்களே!) "எங்கள் அதிபதியே! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!" (என்று பிரார்த்தியுங்கள்)" எனும் (2:286ஆவது) வசனத் தொடரை அல்லாஹ் அருளினான். (அவ்வாறே மக்கள் பிரார்த்தித்ததும்) அல்லாஹ் "(உங்கள் பிரார்த்தனையை ஏற்று) அவ்வாறே செய்தேன்" என்றான்.
"எங்கள் அதிபதியே! எங்களுக்கு முன் சென்றோர்மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள்மீது சுமத்தாதிருப்பாயாக!" "அவ்வாறே செய்தேன்" என்றான் அல்லாஹ்.
"எங்கள் பாவங்களை நீக்கி, எங்களை மன்னித்தருள்வாயாக! எங்கள்மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் காவலன்" அதற்கும் அல்லாஹ் "அவ்வாறே செய்தேன்" என்றான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1