1255. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்வார்கள்.
அத்தியாயம் : 6
1256. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுவார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1257. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் இருந்தவாறு கூடுதல் (நஃபில்) தொழுகைகளைத் தொழுவார்கள்; அப்போது அவர்கள் எத்திசையை முன்னோக்கியிருப்பினும் சரியே! (அவ்வாறே) வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ள்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்).
இதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1258. ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1259. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்து திரும்பியபோது அவர்களை நாங்கள் எதிர் கொண்டோம்; "அய்னுத் தம்ர்” எனும் இடத்தில் அவர்களை நாங்கள் சந்தித்தோம். அப்போது அவர்கள் கழுதையின் மீதமர்ந்தவாறு (கூடுதலான தொழுகைகள்) தொழுவதை நான் கண்டேன். அவர்களுடைய முகம் (கிப்லா அல்லாத) வேறு திசை நோக்கி அமைந்திருந்தது. - இவ்விடத்தில் அறிவிப்பாளர் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் கிப்லாவுக்கு இடப் பக்கம் நோக்கி சைகை செய்துகாட்டினார்கள்.- அப்போது அவர்களிடம் நான் "நீங்கள் கிப்லா அல்லாத வேறு திசை நோக்கித் தொழுவதை நான் கண்டேனே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) இவ்வாறு செய்வதை நான் பார்த்திராவிட்டால் நானும் இவ்வாறு செய்திருக்க மாட்டேன்" என்று விடையüத்தார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 5 பயணத்தில் இரு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழலாம்.
1260. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1261. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (வானில்) செம்மேகம் மறைந்த பின் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்; "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்" என்றும் அவர்கள் குறிப்பிடுவார்கள்
.
அத்தியாயம் : 6
1262. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1263. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் புறப்படுவதாக
இருந்தால் மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1264. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்வதற்கு முன் பயணம் மேற்கொண்டால் லுஹர் தொழுகையை அஸ்ர் நேரம்வரைத் தாமதப்படுத்தி, பின்பு (ஓரிடத்தில்) இறங்கி லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள். பயணம் புறப்படுவதற்கு முன் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்து விட்டால் லுஹர் தொழுதுவிட்டே பயணம் மேற்கொள்வார்கள்.
அத்தியாயம் : 6
1265. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் இரு தொழுகைகளைச் சேர்த்துத் தொழ விரும்பினால், லுஹர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம் வரும்வரைத் தாமதப்படுத்துவார்கள்; பிறகு லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள்.
அத்தியாயம் : 6
1266. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் லுஹ்ர் தொழுகையை அஸ்ரின் ஆரம்ப நேரம்வரைத் தாமதப்படுத்தி, லுஹரையும் அஸ்ரையும் சேர்த்துத் தொழுவார்கள்; மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி, மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து செம்மேகம் மறையும்போது தொழுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 6 உள்ளூரிலேயே இரு தொழுகைகளைச் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதல்.
1267. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது (போர் அபாயம் மிகுந்த) அச்ச நிலையிலோ பயணத்திலோ அவர்கள் இருக்கவில்லை.
அத்தியாயம் : 6
1268. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது (அவர்கள்) அச்ச நிலையிலோ பயணத்திலோ இருக்கவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு சயீத் (ரஹ்) அவர்கள், "நீர் என்னிடம் கேட்டதைப் போன்றே நானும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தம் சமுதாயத்தாரில் எவருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள் (எனவேதான் இவ்வாறு செய்தார்கள்)" என விடையளித்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1269. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்காக மேற்கொண்ட பயணத்தின்போது லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரு நேரத்திலும், மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரு நேரத்திலும் தொழுதார்கள்.
இதன் அறிவிப்பாளரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸஸ்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1270. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குப் புறப்பட்டுச் சென்றோம். அப்போது அவர்கள் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.
அத்தியாயம் : 6
1271. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரின்போது லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்;மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஆமிர் பின் வாஸிலா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) முஆத் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக்கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்" என விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1272. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்;மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், வகீஉ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்தில் இவ்வாறு செய்தார்கள்?" என்று கேட்கப்பட்டதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருதினார்கள்" என விடையளித்ததாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1273. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் எட்டு ரக்அத் (கொண்ட லுஹர், அஸ்ர் ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்;ஏழு ரக்அத் (கொண்ட மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகை)களை ஒரே நேரத்தில் தொழுதிருக்கிறேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம்), "அபுஷ் ஷஅஸா அவர்களே! நபி (ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையைத் தாமதப்படுத்தி அஸ்ரின் ஆரம்ப நேரத்திலும், மஃக்ரிப் தொழுகையைத் தாமதப்படுத்தி இஷாவின் ஆரம்ப நேரத்திலும் தொழுதிருப்பார்கள் என நான் எண்ணுகிறேன்" என்றேன். அதற்கு "நானும் அவ்வாறே எண்ணுகிறேன்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1274. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹரையும் அஸ்ரையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) எட்டு ரக்அத்களும்,மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்து ஒரே நேரத்தில்) ஏழு ரக்அத்களும் தொழுதார்கள்.
அத்தியாயம் : 6