1219. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை (ஆரம்பத்தில்) சொந்த ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (இரண்டு இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹர், அஸ்ர், இஷா ஆகியவற்றில் இரண்டு ரக்அத்கள்) கூடுதலாக்கப்பட்டன.
அத்தியாயம் : 6
1220. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது இரண்டு ரக்அத்களாகக் கடமையாக்கினான். பின்னர் சொந்த ஊரில் தொழும் (லுஹர், அஸ்ர், இஷா ஆகிய) தொழுகைகளை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தினான்; பயணத் தொழுகை முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறு (இரண்டு ரக்அத்தாகவே) நீடித்தது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1221. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
தொழுகை, ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை (இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது;சொந்த ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப்படுத்தப்பட்டது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடம், "ஆயிஷா (ரலி) அவர்களின் நிலைப்பாடு என்ன (அவர்கள் ஏன் பயணத்தில் சுருக்கித் தொழாமல்) முழுமையாகத் தொழுதார்கள்?" என்று கேட்டேன். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், "(இது தொடர்பாக) உஸ்மான் (ரலி) அவர்கள் அளித்த விளக்கத்தைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களும் விளக்கம் அளித்துவந்தார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1222. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "நீங்கள் பூமியில் பயணம் செய்தால், இறைமறுப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவார்கள் என நீங்கள் அஞ்சும்போது, தொழுகையைச் சுருக்கித் தொழுவதில் உங்கள்மீது தவறேதுமில்லை" (4:101)என்றுதானே அல்லாஹ் கூறுகின்றான்! தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டதே? என்று கேட்டேன்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு(ம் ஐயமும்) எனக்கும் ஏற்பட்டது. எனவே, இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்போது "(இது) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடை (சலுகை) ஆகும். அவனது கொடையை ஏற்றுக்கொள்ளுங்கள்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1223. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் சொந்த ஊரிலிருக்கும்போது நான்கு ரக்அத்களாகவும்,பயணத்திலிருக்கும் போது இரண்டு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் ஒரு ரக்அத்தாகவும் தொழுகையைக் கடமையாக்கினான்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1224. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களது நாவின் மூலம் தொழுகையை பயணிக்கு இரண்டு ரக்அத்களாகவும், உள்ளூரிலிருப்பவருக்கு நான்கு ரக்அத்களாகவும், அச்ச நிலையில் (இருப்பவருக்கு) ஒரு ரக்அத்தாகவும் கடமையாக்கினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1225. மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "(வெளியூர்வாசியான) நான் மக்காவில் இருக்கும் போது இமாமுடன் தொழாமல் (தனித்துத் தொழுபவனாக) இருந்தால் எவ்வாறு தொழவேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைப்படி இரண்டு ரக்அத்களாக (தொழுது கொள்ளுங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1226. ஹஃப்ஸ் பின் ஆஸிம் பின் உமர் பின் அல்கத்தாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு பயணத்தில் என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்களுடன் மக்கா செல்லும் பாதையில் இருந்தேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு இரண்டு ரக்அத்களாகத் தொழுவித்தார்கள். பிறகு தமது ஓய்விடம் நோக்கிச் சென்றார்கள். நாங்களும் அவர்களுடன் சென்றோம்; அவர்கள் அமர்ந்தபோது அவர்களுடன் நாங்களும் அமர்ந்தோம். அப்போது தாம் தொழுதுவிட்டு வந்த இடத்தைத் தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சிலர் நின்றுகொண்டிருந்தனர். உடனே, "இவர்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். "கூடுதலான தொழுகைகளைத் தொழுதுகொண்டிருக்கிறார்கள்" என்று நான் பதிலளித்தேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "(பயணத்தில்) கூடுதலான தொழுகைகளை நான் தொழுபவனாக இருந்தால் எனது (கடமையான) தொழுகையை முழுமைப்படுத்தியிருப்பேன். என் சகோதரர் (ஆஸிமின்) மகனே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் இருந்திருக்கிறேன். அவர்கள் பயணத்தின்போது (கடமையான) இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாக (வேறெந்த முன், பின் சுன்னத்களையும்) தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).
நான் அபூபக்ர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். (பயணத்தில்) அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களது உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). நான் உமர் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழமாட்டார்கள். அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும்வரை (அவ்வாறே செய்தார்கள்). பிறகு நான் உஸ்மான் (ரலி) அவர்களுடனும் இருந்திருக்கிறேன். அவர்களும் இரண்டு ரக்அத்களைவிடக் கூடுதலாகத் தொழுததில்லை. அவரகளின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை (அவ்வாறே செய்தார்கள்).அல்லாஹ்வோ, "அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" (33:21) என்று கூறுகின்றான்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1227. ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிப்பதற்காக (என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நான் பயணத்தில் (முன் பின் சுன்னத்களான) கூடுதல் தொழுகைகள் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்கள் (இந்தக்) கூடுதலான தொழுகைகள் தொழுவதை நான் பார்த்ததேயில்லை. நான் (பயணத்தில்) உபரியான தொழுகைகளைத் தொழுபவனாயிருந்தால் (கடமையான தொழுகையையே) முழுமைப்படுத்தியிருப்பேன். உயர்ந்தோன் அல்லாஹ்வோ, "அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரி இருக்கிறது" (33:21) என்று கூறுகின்றான்" என்றார்கள்.
அத்தியாயம் : 6
1228. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதார்கள். - இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1229. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹ்ர் தொழுதேன்; (மக்காவுக்குச் செல்லும் வழியில்) துல்ஹுலைஃபாவில் அவர்களுடன் இரண்டு ரக்அத்கள் அஸ்ர் தொழுதேன்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1230. யஹ்யா பின் யஸீத் அல்ஹுனாயீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையைச் சுருக்கித் தொழுவது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மூன்று மைல்" அல்லது "மூன்று ஃபர்ஸக்" தொலைதூரத்திற்குப் பயணம் புறப்பட்டால் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்" என்று பதிலளித்தார்கள். இந்த இடத்தில் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்களே ("மூன்று மைல்கள்" அல்லது "மூன்று ஃபர்ஸக்" என) ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1231. ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷுரஹ்பீல் பின் அஸ்ஸிம்த் (ரஹ்) அவர்களுடன் பதினேழு அல்லது பதினெட்டு மைல் தொலைவிலிருந்த ஓர் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அவர்கள் இரண்டு ரக்அத்களே தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான் (அது பற்றிக்) கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்:
உமர் (ரலி) அவர்கள் துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நான் கண்டேன். உமர் (ரலி) அவர்களிடம் நான் அதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே நானும் செய்கிறேன்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1232. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "இப்னுஸ் ஸிம்த் (அவர்களுடன் புறப்பட்டேன்...)" என்று உள்ளது. ஷுரஹ்பீல் எனும் அவர்களது பெயர் இடம்பெறவில்லை. மேலும் "அவர் பதினெட்டு மைல் தொலைவிலுள்ள ஹிம்ஸ் நாட்டின் "தூமீன்" எனும் பகுதிக்குச் சென்றார்கள்" என்று (அதிகப்படியாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1233. யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து (ஹஜ்ஜுக்காக) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம். அவர்கள் திரும்பி வரும்வரை (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள்" என்று கூறினார்கள். உடனே நான் (அனஸ் (ரலி) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் எத்தனை நாட்கள் தங்கினார்கள்?" என்று கேட்டேன். அதற்குப் "பத்து (நாட்கள்)" என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நாங்கள் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம்..." என்று ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டோம்"எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 2 மினாவில் சுருக்கித் தொழுதல்.
1234. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா உள்ளிட்ட இடங்களில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் (அவ்வாறே தொழுவார்கள்). உஸ்மான் (ரலி) அவர்களும் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதார்கள். பின்னர் அன்னார் (சுருக்கித் தொழாமல்) முழுமையாகவே தொழுதார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் "மினாவில்" என்றே இடம்பெற்றுள்ளது. "அது உள்ளிட்ட இடங்களில்" என்ற குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1235. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகையைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள். அவர்களுக்குப் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களும், அபூபக்ருக்குப் பிறகு உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்கள் தமது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் (இரண்டு ரக்அத்களே தொழுதனர்). பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் (சுருக்கித் தொழாமல்) நான்கு ரக்அத்கள் தொழுதார்கள்.(இதன் அறிவிப்பாளரான) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (மினாவில்) இமாமைப் பின்பற்றித் தொழுதால் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள்; தனியாகத் தொழும்போது (சுருக்கி) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1236. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மினாவில், பயணத்திலிருப்பவர் தொழுவதைப் போன்று (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி இரண்டு ரக்அத்களாகத்) தொழுதார்கள். (அவ்வாறே) அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் (தொழுதார்கள்). உஸ்மான் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) "எட்டு ஆண்டுகள்" அல்லது "ஆறு ஆண்டுகள்" (அவ்வாறே தொழுதார்கள்).(இதன் அறிவிப்பாளரான) ஹஃப்ஸ் பின் ஆஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(என் தந்தையின் சகோதரர்) இப்னு உமர் (ரலி) அவர்கள் மினாவில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டுப் பிறகு தமது படுக்கைக்கு வருவார்கள். அப்போது அவர்களிடம் நான், "என் தந்தையின் சகோதரரே! நீங்கள் (கடமையான) இந்தத் தொழுகைக்குப் பின் (கூடுதலான) இரண்டு ரக்அத்கள் தொழுதால் என்ன!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் (அவ்வாறு) தொழுவதாயிருந்தால் கடமையான தொழுகையை (நான்கு ரக்அத்களாகவே) முழுமைப்படுத்தியிருப்பேன்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "மினாவில்" என்ற குறிப்பில்லை. மாறாக, "பயணத்தில் (அவ்வாறு) தொழுதார்கள்" என்றே காணப்படுகின்றது.
அத்தியாயம் : 6
1237. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் (ரலி) அவர்கள் மினாவில் (இரண்டு ரக்அத்களாகச் சுருக்காமல்) நான்கு ரக்அத்களாகவே எங்களுக்குத் தொழுவித்தார்கள். இது பற்றி (அத்தொழுகையில் கலந்துகொண்ட) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வினவப்பட்டபோது "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்புபவர்களாய் உள்ளோம்) என்று கூறிவிட்டு, "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடனும் மினாவில் இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். இப்போது நான் (உஸ்மான் (ரலி) அவர்களுடன் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1238. ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதிருக்கிறேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்புடனும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தனர்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6