1239. ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மினாவில் (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை இரண்டு ரக்அத்களாகத்) தொழுதேன். அந்நாளில் மக்கள் முன்னெப்போதும் இருந்திராத அளவுக்கு அதிகமாக இருந்தார்கள்; அதாவது "விடைபெறும்" ஹஜ்ஜின்போது (நான்கு ரக்அத்கள் கொண்ட தொழுகைகளை) இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.
முஸ்லிம் (ஆகிய நான்) கூறுகின்றேன்: (இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) ஹாரிஸா பின் வஹ்ப் அல்குஸாஈ (ரலி) அவர்கள் உபைதுல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஆவார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 3 மழை நேரத்தில் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளலாம்.
1240. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அப்போது "அலா ஸல்லூ ஃபிர்ரிஹால்" (ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்றும் அறிவிப்புச் செய்தார்கள். பிறகு "(கடுங்)குளிரும் மழையும் உள்ள இரவில் "ஒரு முக்கிய அறிவிப்பு! நீங்கள் (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு தொழுகை அறிவிப்பாளரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்" என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1241. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் குளிரும் காற்றும் மழையும் நிறைந்த ஓர் இரவில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அறிவிப்பின் இறுதியில் "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்; இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிரோ மழையோ உள்ள இரவில் பயணம் செய்யும்போது தொழுகை அறிவிப்பாளரிடம் "நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்" என்று அறிவிக்குமாறு கட்டளையிடுவார்கள்" என்றும் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 6
1242. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்காவுக்கு அருகிலுள்ள) "லஜ்னான்" எனும் மலைப் பகுதியில் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், "ஓர் அறிவிப்பு! நீங்கள் உங்கள் இருப்பிடங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு முறை அறிவித்தார்கள். இரண்டாம் முறை அறிவித்ததாக அதில் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 6
1243. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!" என்று கூறினார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1244. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்... அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும் "ஹய்ய அலஸ் ஸலாஹ்" (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், "ஸல்லூ ஃபீ புயூத்திக்கும்" (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!" என்றார்கள். இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள். ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1245. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "சகதியுடைய ஒரு (மழை) நாளில் எங்களுக்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உரையாற்றினார்கள்..."என்று ஹதீஸ் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஜுமுஆ பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை. "என்னைவிடச் சிறந்தவர் இவ்வாறு செய்தார்" என்பதற்குப் பின் "அதாவது நபி (ஸல்) அவர்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அதாவது நபி (ஸல்) அவர்கள்" எனும் விளக்கக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1246. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், "மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை அன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய தொழுகை அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்தார்" என்று கூறினார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "சேற்றிலும் சகதியிலும் நீங்கள் நடந்துவருவதை நான் விரும்பவில்லை" என்று கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1247. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறினார்கள். அது மழை பெய்த ஒரு வெள்ளிக்கிழமை... என்னைவிடச் சிறந்தவர் -அதாவது நபி (ஸல்) அவர்கள்- இவ்வாறு செய்தார்கள்.
அத்தியாயம் : 6
1248. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், மழை பெய்த வெள்ளிக்கிழமை அன்று இப்னு இப்பாஸ் (ரலி) அவர்கள் தம் தொழுகை அறிவிப்பாளரிடம் தொழுகை அறிவிப்புச் செய்யுமாறு கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து (நேரடியாகச்) செவியேற்கவில்லை என வுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 4 பயணத்தில் வாகனத்திலிருப்பவர், வாகனம் செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகளைத் தொழலாம்.
1249. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது (ஒட்டகத்தின் மீதமர்ந்தவாறு) ஒட்டகம் செல்லும் திசையை நோக்கிக் கூடுதலான (நஃபில்) தொழுகை தொழுபவர்களாக இருந்தார்கள்.
அத்தியாயம் : 6
1250. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் அமர்ந்து, அது செல்லும் திசையை நோக்கித் தொழுதுவந்தார்கள்.
அத்தியாயம் : 6
1251. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 6
1252. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், அப்துல்லாஹ் பின் அல்முபாரக் மற்றும் இப்னு அபீசாயிதா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், "பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் "நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்" (2:115) எனும் வசனத்தை ஓதிக் காட்டிவிட்டு,இது தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1253. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழுதையில் இருந்தவாறு தொழுவதை நான் கண்டேன். அப்போது அவர்கள் கைபரை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 6
1254. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஓர் இரவில்) மக்கா செல்லும் சாலையில் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து நான் அஞ்சியபோது (எனது வாகனத்திலிருந்து) இறங்கி "வித்ர்” தொழுதேன். பிறகு அவர்களுடன் போய்ச் சேர்ந்துகொண்டேன். இப்னு உமர் (ரலி) அவர்கள், "(இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர்?" என்று கேட்டார்கள். நான் "சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) குறித்து அஞ்சினேன். எனவே (வாகனத்திலிருந்து) இறங்கி "வித்ர்” தொழுதேன்" என்று கூறினேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு நான், "ஆம் (உள்ளது), அல்லாஹ்வின் மீதாணையாக!" என்றேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுதிருக்கிறார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1255. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து அது செல்லும் திசையில் தொழுவார்கள்.
(இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறு செய்வார்கள்.
அத்தியாயம் : 6
1256. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து வித்ர் தொழுவார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1257. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் இருந்தவாறு கூடுதல் (நஃபில்) தொழுகைகளைத் தொழுவார்கள்; அப்போது அவர்கள் எத்திசையை முன்னோக்கியிருப்பினும் சரியே! (அவ்வாறே) வாகனத்தில் இருந்தவாறு வித்ரும் தொழுவார்கள். ஆனால், கடமையான (ஃபர்ள்) தொழுகைகளை வாகனத்தின் மீதமர்ந்து தொழமாட்டார்கள். (இறங்கித்தான் தொழுவார்கள்).
இதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1258. ஆமிர் பின் ரபீஆ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் பயணம் செய்யும்போது தமது வாகனத்தின் முதுகிலமர்ந்தவாறு அது செல்லும் திசையில் கூடுதலான (நஃபில்) தொழுகைகள் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்.
இதை அப்துல்லாஹ் பின் ஆமிர் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6