1199. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஃரு மஊனா" (எனுமிடத்தில் பிராசாரத்திற்காச் சென்ற தம்) தோழர்களைக் கொன்றவர்களுக்கு எதிராக அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான் மற்றும் லிஹ்யான் ஆகிய குலத்தாருக்கு எதிராக (முப்பது (நாட்கள்) வைகறை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் அல்லாஹ் ஒரு வசனத்தை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணைப்படி) நீக்கப்பட்டுவிட்டது:
"நாங்கள் எங்கள் இறைவனிடம் வந்து சேர்ந்துவிட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்" என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்துவிடுங்கள்" என்பதே அந்த வசனம்.
அத்தியாயம் : 5
1200. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், ருகூஉவிற்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) ஓதினார்கள்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1201. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூஉவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், "உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறுசெய்துவிட்டார்கள்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1202. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் ஃபஜ்ர் தொழுகையில் ருகூஉக்குப் பின்னால் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் பனூ உஸய்யா குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 5
1203. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் (ரலி) அவர்களிடம், "குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ருகூஉக்கு முன்பா அல்லது அதற்குப் பின்பா (எப்போது ஓதப்பட்டது)?" என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் "ருகூஉக்கு முன்புதான்" என்று பதிலளித்தர்கள். நான் "ருகூஉக்குப் பின்னர்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என்று சிலர் கூறுகின்றனரே?" என்று கேட்டேன் அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் (ருகூஉவிற்குப் பிறகு) குனூத் ஓதினார்கள். அதில் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட தம் தோழர்களை (பிஃரு மஊனா எனுமிடத்தில்) கொன்ற மக்களுக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1204. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிஃரு மஊனா" நாளில் கொல்லப்பட்ட குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) என்றழைக்கப்பட்ட எழுபது பேருக்காக மன வேதனைப்பட்டதைப் போன்று தாம் அனுப்பிவைத்த வேறு எந்தப் படைப்பிரிவினருக்காகவும் (அவர்கள் உயிர் நீத்தபோது) மனவேதனைப்பட்டதில்லை. அவர்களைக் கொன்றவர்களுக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருமாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சற்று கூடுதல் குறைவுடன் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1205. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒருமாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரைச் சபித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1206. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒருமாதம் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராகப் பிரார்த்தித்து குனூத் (எனும் சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதினார்கள். பின்னர் அ(வ்வாறு பிரார்த்திப்ப)தை விட்டுவிட்டார்கள்.
அத்தியாயம் : 5
1207. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப்பிரார்த்தனை) ஓதிவந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1208. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையிலும் மஃக்ரிப் தொழுகையிலும் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்.
அத்தியாயம் : 5
1209. குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் "இறைவா! பனூ லிஹ்யான், ரிஅல், தக்வான் மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்ட உஸய்யா ஆகிய குலத்தாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக;அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக!" என்றும் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 5
1210. குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ருகூஉவிலிருந்து தலையை உயர்த்திய பிறகு "ஃகிஃபார் குலத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! அஸ்லம் குலத்தாரை அல்லாஹ் பாதுகாப்பானாக! உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர். இறைவா! பனூ லிஹ்யான் குலத்தாரை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! ரிஅல் மற்றும் தக்வான் குலத்தாரையும் நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு சஜ்தாவிற்குச் சென்றார்கள். (கொடுஞ்செயல் புரியும்) இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "இறைமறுப்பாளர்களைச் சபிக்கும் நடைமுறை இதை முன்னிட்டே ஏற்படுத்தப்பட்டது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
பாடம் : 56 தவறிப்போன தொழுகையை நிறைவேற்றுவதும், அதை உடனடியாக நிறைவேற்றுவது விரும்பத்தக்கது என்பதும்.
1211. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரிலிருந்து திரும்பியபோது இரவு முழுவதும் பயணம் செய்தார்கள். இறுதியில் அவர்களுக்கு உறக்கம் வந்துவிடவே (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்களிடம் "இன்றிரவு எமக்காக நீர் காவல் புரிவீராக!" என்றார்கள். பிலால் (ரலி) அவர்கள் (கண் விழித்து) அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அளவு தொழுதார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (படுத்து) உறங்கினார்கள். வைகறை நேரம் (ஃபஜ்ர்) நெருங்கிய வேளையில் பிலால் (ரலி) அவர்கள் வைகறை (கிழக்கு)த் திசையை முன்னோக்கியபடி தமது வாகன (ஒட்டக)த்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்கள். அப்போது தம்மையும் அறியாமல் சாய்ந்தபடியே கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களோ, பிலால் (ரலி) அவர்களோ, நபித்தோழர்களில் எவருமோ சூரிய ஒளி தம்மீது படும்வரை விழிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். பதறியபடியே அவர்கள் "பிலால்!" என்றழைத்தார்கள். பிலால் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தங்களைத் தழுவிக்கொண்ட அதே (உறக்கம்)தான் என்னையும் தழுவிக்கொண்டது" என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) "உங்கள் வாகனங்களைச் செலுத்துங்கள்" என்று கூற, உடனே மக்கள் தம் வாகனங்களைச் செலுத்தி சிறிது தூரம் சென்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறங்கி) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிலால் (ரலி) அவர்களிடம் (பாங்கு மற்றும்) இகாமத் சொல்லச் சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் இகாமத் சொன்னதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். தொழுது முடிந்ததும், "தொழுகையை மறந்துவிட்டவர் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில் அல்லாஹ், "என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக!" (20:14) என்று கூறுகின்றான்" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
)மேற்கண்ட 20:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள "லி திக்ரீ" எனும் சொற்றொடரை) இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் "லித்திக்ரா" (நினைவுகூருவதற்காக) என்று ஓதுவார்கள்.
அத்தியாயம் : 5
1212. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) இரவில் நபி (ஸல்) அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் (யாரும்) விழிக்கவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் (எழுந்து), "ஒவ்வொருவரும் தமது வாகனத்தின் தலையைப் பிடித்து(க்கொண்டு இந்த இடத்தை விட்டு நகர்ந்து) செல்லட்டும். ஏனெனில், இந்த இடத்தில் நம்மிடம் ஷைத்தான் வந்துவிட்டான்" என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள், பிறகு இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட, வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1213. அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் போரிலிருந்து திரும்பும்போது)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது "இன்று மாலையும் இரவும் நீங்கள் பயணம் செய்து இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நாளை (காலை) நீங்கள் நீர்நிலையைச் சென்றடைவீர்கள்" என்று கூறினார்கள். அவ்வாறே மக்கள் யாரும் யாரையும் திரும்பிப் பார்க்காமல் (விரைவாகப்) பயணம் செய்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுநிசி நேரம்வரைப் பயணம் செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இலேசாக உறக்கம் வரவே, அவர்கள் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்து கொண்டார்கள். பிறகு தொடர்ந்து பயணம் செய்து இரவின் பெரும்பகுதி கடந்தபோது (மீண்டும்) உறங்கித் தமது வாகனத்திலிருந்து சாய்ந்தார்கள். அப்போதும் நான் அவர்களது உறக்கத்தைக் கலைக்காமல் அவர்களைத் தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அதையடுத்து அவர்கள் தமது வாகனத்தில் நேராக அமர்ந்துகொண்டார்கள். பிறகு இன்னும் (சிறிது தூரம்) பயணம் செய்து இரவின் இறுதிப் பகுதியானபோது முன்னர் இரு முறை சாய்ந்ததைவிட மிகப் பலமாகச் சாய்ந்து கீழே விழப்போனார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று அவர்களை (மீண்டும்) தாங்கிப் பிடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தி, "யார் அது?" என்று கேட்டார்கள். "அபூகத்தாதா" என்றேன். "நீங்கள் எப்போதிருந்து என்னருகில் பயணம் செய்துவருகிறீர்கள்?" என்று கேட்டார்கள். நான் "இரவிலிருந்து இவ்வாறு உங்கள் அருகிலேயே பயணம் செய்து வருகிறேன்" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரை நீங்கள் காத்த காரணத்தால் அல்லாஹ்வும் உங்களைக் காப்பானாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
பிறகு "நாம் மக்களைவிட்டு மறைந்து (வெகு தொலைவிற்கு வந்து)விட்டோம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?" எனக் கேட்டார்கள். பின்னர் "மக்களில் யாரேனும் தென்படுகிறார்களா (என்று பாருங்கள்!)?" என்றார்கள். நான், "இதோ ஒரு பயணி" என்றேன். பிறகு "இதோ மற்றொரு பயணி" என்றேன். இறுதியில் நாங்கள் ஏழு பயணிகள் ஒன்றுசேர்ந்து விட்டோம்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பயண வழியிலிருந்து விலகி (ஓரிடத்திற்குச் சென்று உறங்குவதற்காகத்) தமது தலையை (ஓரிடத்தில்) சாய்த்தார்கள். பிறகு, "நீங்கள் எமது தொழுகையைக் காக்கவேண்டும் (நான் உறங்கிவிட்டால் என்னை உறக்கத்திலிருந்து எழுப்ப வேண்டும்)" என்றார்கள். (ஆனால், நாங்கள் அனைவரும் உறங்கி விட்டோம்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம் முதலில் கண் விழித்தார்கள். அப்போது சூரிய ஒளி அவர்களது முதுகில் பட்டது. உடனே நாங்கள் திடுக்கிட்டு விழித்தெழுந்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்) "(இங்கிருந்து உடனே உங்கள் வாகனங்களில்) ஏறிப் புறப்படுங்கள்" என்றார்கள். உடனே நாங்கள் வாகனங்களில் ஏறிப் புறப்பட்டோம். சூரியன் நன்கு உதயமான பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) இறங்கினார்கள். பிறகு தண்ணீர் குவளையைக் கொண்டுவரச் சொன்னார்கள். அந்தக் குவளை என்னிடத்தில்தான் இருந்தது. அதில் சிறிதளவு தண்ணீரும் இருந்தது. பிறகு அதிலிருந்த தண்ணீரால் சிக்கனமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதில் சிறிதளவு தண்ணீர் எஞ்சியது. என்னிடம், "நமக்காக உமது தண்ணீர் குவளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள். விரைவில் இதில் ஒரு (அதிசய) சம்பவம் நிகழவிருக்கிறது" என்றார்கள்.
அடுத்து பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுதார்கள். பின்னர் அதிகாலைத் தொழுகையைத் தொழுதார்கள். (இதையெல்லாம்) ஒவ்வொரு நாளும் செய்வதைப் போன்றே அவர்கள் செய்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தார்கள். நாங்களும் வாகனத்தில் ஏறி அவர்களுடன் சென்றோம். அப்போது எங்களில் சிலர் சிலரிடம் "நமது தொழுகை விஷயத்தில் நாம் செய்துவிட்ட குறைபாட்டிற்குப் பரிகாரம் என்ன?" என்று இரகசியமாகப் பேசிக்கொண்டோம். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அறிவீர்: என்னிடம் உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறதல்லவா?" என்று கேட்டுவிட்டு, "அறிவீர்: உறக்கத்தால் குறைபாடு ஏற்பட்டுவிடுவதில்லை; குறைபாடெல்லாம் ஒரு தொழுகையை மறுதொழுகை நேரம் வரும்வரை தொழாமல் இருப்பதுதான். இவ்வாறு செய்துவிட்டவர் அது பற்றிய உணர்வு வந்தவுடன் தொழுதுகொள்ளட்டும். மறுநாளாகிவிட்டால் அந்த நாளின் தொழுகையை உரிய நேரத்தில் தொழுதுகொள்ளட்டும்"என்றார்கள்.
பிறகு "மக்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?" என்று (தம்முடன் இருந்த தோழர்களிடம்) கேட்டுவிட்டு, "மக்கள் தங்களுடைய நபியைக் காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள்; அபூபக்ரும் உமரும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உங்களைப் பின்னால் விட்டுவிட்டுச் சென்றுவிடமாட்டார்கள்" என்று கூறுவார்கள். ஆனால், மற்றவர்களோ, "(இல்லை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு முன்பே சென்றுவிட்டார்கள்" என்று கூறுவார்கள். மக்கள் அபூபக்ர் மற்றும் உமர் ஆகிய இருவருக்கும் கட்டுப்பட்டு நடந்தால் அவர்கள் நேர்வழியடைவார்கள்" என்று கூறினார்கள்.
பிறகு நாங்கள் மக்களிடம் நண்பகல் நேரத்தில் சென்றடைந்தோம். அப்போது (வெப்பத்தால்) பொருட்களெல்லாம் சூடேறி விட்டிருந்தன. மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அழிந்தோம்; எங்களுக்கு (கடுமையான) தாகம் ஏற்பட்டுள்ளது"என்று கூறினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்கு எந்த அழிவும் இல்லை" என்றார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "எனது சிறிய பாத்திரத்தை எடுத்து வாருங்கள்!" என்று கூறி அந்த நீர்குவளையைக் கேட்டார்கள். பின்னர் (அதிலிருந்து சிறிது தண்ணீரை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊற்ற,அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். மக்கள் அந்தக் குவளையில் தண்ணீரைக் கண்டதுதான் தாமதம், (அதைப் பெறுவதற்காக முண்டியடித்து) அதன் மீது விழுந்தனர். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இங்கிதம் பேணுங்கள். உங்கள் அனைவரின் தாகமும் தீரும்" என்றார்கள். அவவாறே மக்கள் நடந்துகொண்டனர்.
இவ்விதம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்ற அதை நான் மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருந்தேன். இறுதியில் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் தவிர வேறெவரும் மிஞ்சவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றியபடி என்னிடம் "நீங்கள் பருகுங்கள்!" என்றார்கள். நான் "தாங்கள் பருகாதவரை நான் பருகமாட்டேன், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களுக்குத் தண்ணீர் புகட்டுபவரே அவர்களில் இறுதியாகப் பருக வேண்டும்" என்றார்கள். ஆகவே, நான் பருகினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் பருகினார்கள். பிறகு மக்கள் தாகம் தணிந்து மகிழ்ச்சியடைந்தவர்களாக அந்த நீரை நோக்கி வந்தனர்.
இதன் அறிவிப்பாளரான அப்துல்லாஹ் பின் ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் இந்த ஹதீஸை ஜுமுஆப் பள்ளிவாசலில் அறிவித்துக்கொண்டிருந்தேன். அப்போது (அங்கிருந்த) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "இளைஞரே! நீங்கள் என்ன அறிவிக்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். ஏனெனில்,அன்றிரவு பயணம் செய்த குழுவினரில் நானும் ஒருவனாவேன்" என்றார்கள். நான், "அப்படியானால், நீங்கள்தாம் இந்த ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்" என்றேன். அதற்கு இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நீங்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்?" என்று கேட்டார்கள். நான், "அன்சாரிகளில் (மதீனாவாசிகளில்) ஒருவன்" என்றேன். அதற்கு அவர்கள், "அப்படியானால் நீங்களே அறிவியுங்கள். (அன்சாரிகளாகிய) நீங்கள்தாம் உங்களது ஹதீஸ் தொடர்பாக நன்கு அறிவீர்கள்" என்றார்கள். ஆகவே, நான் மக்களிடம் (இந்த ஹதீஸை) அறிவித்தேன். அப்போது இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், "அன்றிரவு (பயணத்தில்) நானும் கலந்துகொண்டேன். ஆனால், நீங்கள் இதை மனனமிட்டதைப் போன்று வேறெவரும் மனனமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை" என்றார்கள்.
அத்தியாயம் : 5
1214. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் நானும் அவர்களுடன் இருந்தேன். அன்று நாங்கள் இரவு முழுவதும் பயணம் செய்தோம். அதிகாலை நேரம் நெருங்கியபோது நாங்கள் (ஓரிடத்தில் இறங்கி) ஓய்வெடுத்தோம். அப்போது எங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து, சூரியன் உதயமாகும்வரை உறங்கிவிட்டோம். எங்களில் அபூபக்ர் (ரலி) அவர்கள்தாம் முதலில் விழித்தார்கள். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகவே கண்விழிக்காதவரை அவர்களை நாங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பமாட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் நின்று உரத்த குரலில் தக்பீர் கூறலானார்கள். (உமர் (ரலி) அவர்களின் தக்பீரைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விழித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையை உயர்த்தியபோது சூரியன் உதித்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள் உடனே "இங்கிருந்து புறப்படுங்கள்" என்று கூறினார்கள். பிறகு எங்களுடன் பயணம் புறப்பட்டார்கள். சூரியன் நன்கு பிரகாசித்த பிறகு ஓரிடத்தில் இறங்கி எங்களுக்கு வைகறைத் தொழுகை (ஃபஜ்ர்) தொழுவித்தார்கள்.
அப்போது ஒருவர் எங்களுடன் தொழாமல் மக்களைவிட்டு விலகியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் "இன்னாரே! நீங்கள் எங்களுடன் தொழாமலிருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டார்கள், அதற்கு அந்த மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது (குளிப்பதற்கு தண்ணீர் இல்லை)" என்றார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மண்ணில் "தயம்மும்" செய்துகொள்ளுமாறு) உத்தரவிட, அவ்வாறே அவர் மண்ணில் "தயம்மும்" செய்துகொண்டு தொழுதார். பிறகு என்னைத் தம் முன்னிருந்த ஒரு பயணக் குழுவினருடன் சேர்ந்து தண்ணீர் தேடிவருமாறு வேகப்படுத்தினார்கள். அப்போது எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டிருந்தது. அவ்வாறே நாங்கள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெண் தண்ணீர் நிரம்பிய இரு தோல் பைகளுக்கிடையே தன் கால்களைத் தொங்கவிட்டபடி (ஒட்டகத்தில் வந்துகொண்டு) இருந்தாள்.
நாங்கள் அப்பெண்ணிடம், "தண்ணீர் எங்கே (கிடைக்கும்)?" என்று கேட்டோம், அதற்கு அப்பெண், "அது வெகுதொலைவில் உள்ளது. (இங்கு எங்கும்) உங்களுக்குத் தண்ணீர் கிடையாது" என்றாள். நாங்கள் "உன் குடும்பத்தா(ர் தங்கியி)ருக்கும் (இந்த இடத்திற்கும்) தண்ணீரு(ள்ள இடத்து)க்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது?" என்று கேட்டோம். அதற்கு அப்பெண், "ஒரு பகல் ஓர் இரவு பயண தூரம்" என்று பதிலளித்தாள்.
நாங்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீ நட!" என்றோம். அதற்கு அவள், "அல்லாஹ்வின் தூதரா (யார் அவர்)?" என்று கேட்டாள். நாங்கள் என்ன சொல்லியும் அந்தப் பெண்ணை எங்களால் (தண்ணீர் தர) இசைய வைக்கமுடியவில்லை. இறுதியில் அவளை அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துக்கொண்டு வந்தோம். அப்பெண்ணை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் கொண்டு நிறுத்திய போது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் கேட்டார்கள். அவள் எங்களிடம் சொன்னதைப் போன்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் சொன்னாள். மேலும், அவள் (தண்ணீர் சுமக்கும் தனது ஒட்டகத்திலிருந்தபடி) தான் அநாதைக் குழந்தைகளின் தாய் என்று கூறினாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது ஒட்டகத்தை (மண்டியிடச் செய்யுமாறு) கூற, அவ்வாறே அது மண்டியிட்டுப் படுக்கவைக்கப்பட்டது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாய் கொப்புளித்து அந்தத் தண்ணீர் பைகளின் மேவாயினூடே உமிழ்ந்தார்கள். பிறகு அந்த ஒட்டகத்தைக் கிளப்பிவிட (அது எங்கள் அருகில் வந்தது.) நாங்கள் தண்ணீர் அருந்தினோம். அப்போது நாங்கள் நாற்பது பேரும் தாகத்துடன் இருந்தோம். தாகம்தீர நீரருந்தினோம். மேலும், எங்களிடமிருந்த தோல் பாத்திரங்கள், கோப்பைகள் ஆகியவற்றில் தண்ணீரை நிரப்பிக்கொண்டோம். (குளியல் கடமையாகிருந்த) எங்கள் தோழரைக் குளிக்கவைத்தோம். ஆனால், நாங்கள் எங்கள் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் புகட்டவில்லை. (ஆயினும்) அவ்விரு தண்ணீர் பைகளும் ஊதி வெடித்துவிடுமளவுக்கு நீர் நிரம்பியிருந்தது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களிடமுள்ள (உணவுப் பண்டத்)தைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். நாங்கள் அந்தப் பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் திரட்டினோம். பின்னர் அவற்றை ஒரு பையில் வைத்துக் கட்டி, அவளிடம் "நீ சென்று உன் குடும்பத்தாருக்கு இதை ஊட்டுவாயாக! உனது தண்ணீரில் சிறிதும் நாங்கள் குறைத்துவிடவில்லை என்பதை அறிந்துகொள்வாயாக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்பெண் தன் குடும்பத்தாரிடம் சென்று, "நான் மனிதர்களில் மிக வசீகரமான ஒருவரைச் சந்தித்தேன். அல்லது அவர் கூறியதைப் போன்று அவர் ஓர் இறைத்தூதர்தாம். அவரிடம் இப்படி இப்படி (அற்புதம்) நிகழ்ந்தது" என்று கூறினாள். இதையொட்டி அந்தப் பெண்ணால் அவளைச் சுற்றிலும் வாழ்ந்த வீட்டார்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டினான். அவளும் அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.
- இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு (நாள்) இரவில் பயணித்தோம். இரவின் இறுதிப் பகுதியில் அதிகாலைக்கு முன்பாக ஓரிடத்தில் ஒரு தூக்கம் தூங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான தூக்கம் வேறெதுவும் இருக்க முடியாது. (அந்த ஆழ்ந்த உறக்கத்திலிருந்து) எங்களைச் சூரிய வெப்பம் தான் விழிக்கச் செய்தது.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே சிறிது கூடுதல் குறைவு வார்த்தைகளுடன் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த ஹதீஸில் பின்வருமாறும் இடம்பெற்றுள்ளது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் விழித்து மக்களின் நிலையைக் கண்டபோது உரத்த குரலில் தக்பீர் சொன்னார்கள் (உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலுடையவராயும் நெஞ்சுரம் வாய்ந்தவராயும் இருந்தார்கள்) அவ்வாறு உமர் (ரலி) அவர்கள் உரத்த குரலில் தக்பீர் சொல்வதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்விழித்தார்கள். விழித்தெழுந்தவுடன் அவர்களிடம் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட(உறக்கத்)தைப் பற்றி முறையிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பிரச்சினை இல்லை; இங்கிருந்து புறப்படுங்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 5
1215. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் இருந்தால் இரவின் இறுதிப்பகுதியில் ஓய்வெடுப்பார்கள். அப்போது தமது வலப் பக்கத்தில் சாய்ந்து படுப்பார்கள். அதிகாலைக்குச் சற்று முன்பாக ஓய்வெடுத்தால் தமது காலை நட்டு வைத்து தம் உள்ளங்கைகள் மீது தலையை வை(த்து மல்லாந்து படுத்திரு)ப்பார்கள்.
அத்தியாயம் : 5
1216. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதை அவர் தொழட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கத்தாதா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக" எனும் (20:14ஆவது) வசனமும் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை" எனும் குறிப்பு இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 5
1217. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
1218. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழாமல் உறங்கிவிட்டால், அல்லது கவனமில்லாமல் இருந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுதுகொள்ளட்டும். ஏனெனில், "என்னை நினைவுகூரும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக'' என (20:14ஆவது வசனத்தில்) அல்லாஹ் கூறுகின்றான்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 5