பாடம் : 51 பள்ளிவாசல்களுக்கு அதிகக் காலடிகள் எடுத்துவைத்து (வெகு தொலைவிலிருந்து) செல்வதன் சிறப்பு.
1179. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகுதொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் தொழக்காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கிவிடுபவரைவிட அதிக நன்மை அடைபவராவார்.
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக்காத்திருக்கிறாரோ" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1180. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இருந்தார். (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அவரைவிட வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் வேறு எவரையும் நான் அறிந்திருக்கவில்லை. அவர் எந்தவொரு தொழுகையையும் தவறவிடமாட்டார். எனவே அவரிடம், "நீங்கள் ஒரு கழுதை வாங்கிக்கொண்டால் நன்றாயிருக்குமே! அதன் மீது பயணம் செய்து காரிருளிலும் கடும் வெப்பத்திலும் (தொழுகைக்கு) வரலாமே?" என்று "கேட்கப்பட்டது" அல்லது "(அவ்வாறு) நான் கேட்டேன்". அதற்கு அவர், "எனது இல்லம் பள்ளிவாசலுக்கு அருகிலேயே அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. (ஏனெனில்,) நான் பள்ளிவாசலுக்கு நடந்துவருவதும் (பள்ளி வாசலில் இருந்து) இல்லத்தாரிடம் திரும்பிச் செல்வதும் எனக்கு (நன்மைகளாக)ப் பதிவு செய்யப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன்" என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை அனைத்தையும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு வழங்கிவிட்டான்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது
- உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் ஒருவருடைய வீடு மதீனாவிலேயே (பள்ளிவாசலுக்கு) வெகு தொலைவில் அமைந்திருந்தது. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எல்லாத் தொழுகைகளிலும் தவறாமல் கலந்துகொள்வார். நாங்கள் அவருக்காக (வெகு தொலைவிலிருந்து சிரமப்பட்டு வருகிறாரே என்று) அனுதாபப்பட்டோம். இதையடுத்து அவரிடம் நான், "இன்னாரே! நீங்கள் கழுதையொன்றை வாங்கி (அதில் பயணம் செய்து வருவீரா)னால் நன்றாயிருக்குமே! கடும் வெப்பத்திலிருந்தும் விஷஜந்துக்களிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ளலாமே?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அறிவீர்: அல்லாஹ்வின் மீதாணையாக! எனது இல்லம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இல்லத்துடன் (மஸ்ஜிதுந் நபவீ அருகிலேயே கயிறுகளால் இணைத்துக்) கட்டப்பட்டிருக்க வேண்டும் என நான் விரும்பவில்லை"என்று கூறினார். அவர் அவ்வாறு கூறியது எனக்கு மிகுந்த மன வேதனையளிக்கவே நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்(து விசாரித்)தார்கள். அவர் முன்பு (என்னிடம்) கூறியதைப் போன்றே கூறினார். மேலும், தம் கால் சுவடுகளுக்கு நன்மை பதிவு செய்யப்பட வேண்டுமெனத் தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் எதிர்பார்த்த நன்மை உங்களுக்கு உண்டு" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1181. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்கள் குடியிருப்புகள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குத் தொலைவில் அமைந்திருந்தன. ஆகவே, நாங்கள் எங்கள் வீடுகளை விற்றுவிட்டுப் பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், "உங்களது ஒவ்வொரு காலடிக்கும் உங்களுக்கு ஒரு தகுதி உண்டு" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1182. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைச் சுற்றி காலி மனைகள் இருந்தன. பனூசலிமா குலத்தார் பள்ளிவாசலுக்கு அருகிலேயே குடியேற விரும்பினர். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "நீங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேறப்போவதாக நான் அறிந்தேனே (அது உண்மையா)?"என்று கேட்டார்கள். அதற்கு பனூசலிமா குலத்தார் "ஆம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவ்வாறு விரும்பினோம்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்; உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும்! உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்" என்று (இரு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 5
1183. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூசலிமா குலத்தார் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்கு அருகில் குடியேற விரும்பினர். அப்போது (பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த) மனைகள் காலியாக இருந்தன. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது அவர்கள், "பனூசலிமா குலத்தாரே! உங்கள் குடியிருப்புகள் அங்கேயே இருக்கட்டும். உங்கள் காலடிகள் (அளவுக்கு நன்மைகள்) பதிவு செய்யப்படும்" என்று கூறினார்கள். பனூசலிமா குலத்தார், "நாங்கள் அவ்வாறு குடியேறியிருந்தால் எங்களுக்கு அது மகிழச்சியளித்திருக்காது" என்று கூறினர்.
அத்தியாயம் : 5
பாடம் : 52 தொழுகைக்காக நடந்துசெல்வதால் தவறுகள் மன்னிக்கப்படுகின்றன; தகுதிகள் உயர்த்தப்படுகின்றன.
1184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தமது வீட்டிலேயே அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு இறைக் கட்டளை(களான தொழுகை)களில் ஒன்றை நிறைவேற்றுவதற்காக இறையில்லங்களில் ஒன்றை நோக்கி நடந்து செல்கிறாரோ, (அவர் எடுத்துவைக்கும்) இரு காலடிகளில் ஒன்று அவருடைய தவறுகளில் ஒன்றை அழித்துவிடுகிறது; மற்றொன்று அவருடைய தகுதியை உயர்த்தி விடுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
.
அத்தியாயம் : 5
1185. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவருடைய (வீட்டு) வாசலில் ஓர் ஆறு (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை நீராடுகிறார். இந்நிலையில் அவரது உடலில் அழுக்கேதும் இருக்குமா?" என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் "அவரது உடலில் அழுக்கேதும் இராது" என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது தான் ஐவேளைத் தொழுகைகளின் நிலையாகும். அ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் தவறுகளை அழிக்கிறான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1186. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஐவேளைத் தொழுகையின் நிலையானது, உங்கள் வீட்டு வாசலில் ஓடும் ஆழமான நதிக்கு ஒத்திருக்கிறது. அதில் அவர் நாள்தோறும் ஐந்து முறை குளித்துவருகிறார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "(அவ்வாறு ஐந்து முறை குளித்தால்) அவரது உடலில் அழுக்கெதையும் அது விட்டுவைக்குமா?" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதாக) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
1187. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் பள்ளிவாசலுக்குக் காலையிலோ மாலையிலோ சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை (அல்லது விருந்தை)த் தயார் செய்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 53 சுப்ஹுத் தொழுகைக்குப் பின் (சூரிய உதயம்வரை) தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பதன் சிறப்பும் பள்ளிவாசல்களின் சிறப்பும்.
1188. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1189. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழுதுவிட்டு தொழுத இடத்திலேயே சூரியன் நன்கு உதயமாகும்வரை அமர்ந்திருப்பார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நன்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1190. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் ஊரிலுள்ள இடங்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான இடம் பள்ளிவாசலாகும். ஓர் ஊரிலுள்ள இடங்களிலேயே அல்லாஹ்வின் வெறுப்பிற்குரிய இடம் கடைத்தெருவாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 54 தொழவைப்பதற்கு (இமாமத்) அதிகத் தகுதியுடையவர் யார்?
1191. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் மூன்று பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்; அவர்களில் நன்கு ஓதத் தெரிந்தவரே அவர்களுக்குத் தொழுவிக்க அதிகத் தகுதியுடையவர் ஆவார்.- இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1192. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரே மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். மக்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் நபிவழியை நன்கு அறிந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அதிலும் அவர்கள் சமஅளவு அறிவுடையோராய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்திருப்பின் அவர்களில் முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர் (தலைமை தாங்கித் தொழுவிப்பார்). ஒருவர் மற்றொரு மனிதருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்தில் (அவருடைய அனுமதியின்றி) தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒரு மனிதருக்குரிய வீட்டில் அவரது விரிப்பின் மீது அவருடைய அனுமதியின்றி அமர வேண்டாம்.
இதை அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அபூசயீத் அல்அஷஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "முதலில் இஸ்லாத்தைத் தழுவியவர்" என்பதற்கு பதிலாக "அவர்களில் வயதில் மூத்தவர்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1193. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் "அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிர" அல்லது "அவரது அனுமதியின்றி" அவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
1194. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
)பனூலைஸ் தூதுக் குழுவில்) ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களிடம் இருபது நாட்கள் தங்கினோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருணை உள்ளம் கொண்டவராகவும் இளகிய மனம் படைத்தவராகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தாரிடம் (திரும்பிச்) செல்ல ஆசைப்படுகிறோம் என எண்ணிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஊரில்) நாங்கள் விட்டுவந்த எங்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரித்தார்கள். நாங்கள் அவர்களைப் பற்றித் தெரிவித்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் திரும்பிச்சென்று அவர்களிடையே தங்கியிருந்து அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுங்கள். (கடமைகளை நிறைவேற்றும்படி) அவர்களைப் பணியுங்கள். தொழுகை (நேரம்) வந்ததும் உங்களில் ஒருவர் தொழுகை அறிவிப்புச் செய்யட்டும்; பிறகு உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மாலிக் பின் அல் ஹுவைரிஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் (என் குலத்தார்) சிலருடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நாங்கள் ஒத்த வயதுடைய இளைஞர்களாய் இருந்தோம்" என்று மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 5
1195. மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் நண்பர் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (அவர்களிடம் சில நாட்கள் தங்கியிருந்து விட்டு) அவர்களிடமிருந்து திரும்பிச்செல்ல விரும்பிய போது எங்களிடம் அவர்கள் "தொழுகை (நேரம்) வந்துவிட்டால் தொழுகை அறிவிப்புச் செய்யுங்கள். பிறகு இகாமத் சொல்லுங்கள். உங்களில் (வயதில்) மூத்தவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் காலித் அல்ஹத்தாஉ (ரஹ்) அவர்கள் "இருவரும் சமஅளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தனர்" என்று கூடுதலாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 55 முஸ்லிம்களுக்கு ஏதேனும் சோதனை (பேரழிவு) ஏற்பட்டால் எல்லாத் தொழுகைகளிலும் "குனூத்" (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதுவது விரும்பத் தக்கதாகும்.
1196. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் (குர்ஆன்) ஓதிய பின் தக்பீர் சொல்(லி ருகூஉ செய்)வார்கள். பிறகு ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) "ரப்பனா வ லக்கல் ஹம்து" (எங்கள் இறைவா! உனக்கே புகழ் அனைத்தும்) என்று கூறுவார்கள். பிறகு நின்றவாறு (பின்வரும் "குனூத்"தை) ஓதுவார்கள்:
இறைவா! வலீத் பின் அல்வலீத், சலமா பின் ஹிஷாம், அய்யாஷ் பின் அபீரபீஆ ஆகியோரையும் (மக்காவிலுள்ள) ஒடுக்கப்பட்ட இறைநம்பிக்கையாளர்களையும் நீ காப்பாற்றுவாயாக! இறைவா, (கடும் பகை கொண்ட) முளர் குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏற்படுத்துவாயாக! இறைவா! லிஹ்யான், ரிஅல், தக்வான், உஸய்யா ஆகிய குலத்தாரை நீ உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! உஸய்யா குலத்தார் (பெயருக்கேற்ப) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்துவிட்டனர்.
பிறகு "அவர்களை அல்லாஹ் மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும்வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை" எனும் (3:128ஆவது) இறைவசனம் அருளப்பெற்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள் என நமக்குச் செய்தி எட்டியது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1197. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஒரு மாத காலம் ருகூஉவிற்குப் பிறகு குனூத் (எனும் சோதனைக் காலப்பிராத்தனை) ஓதினார்கள். அவர்கள் "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" என்று கூறியதும் பின்வருமாறு குனூத் ஓதுவார்கள்:
இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப் பட்டவர்களை நீ காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உனது பிடியை இறுக்குவாயாக! இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!
தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
இதன் பின்னர் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு பிரார்த்திப்பதை விட்டுவிட்டதை நான் பார்த்தேன். உடனே நான் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த (ஒடுக்கப்பட்ட) மக்களுக்காகப் பிரார்த்திப்பதை விட்டுவிட்டதாகக் கருதுகிறேன்" என்றேன். அப்போது, "(மக்காவில் சிக்கிக்கொண்டிருந்த) அவர்கள் (மதீனாவுக்குத் தப்பி) வந்துவிட்டதை நீங்கள் பார்க்கவில்லையா?" என்று கேட்கப்பட்டது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஷா தொழுதுகொண்டிருந்த போது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்"என்று சொல்லிவிட்டு, பிறகு சஜ்தாச் செய்வதற்கு முன்பாக, "இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபிஆவைக் காப்பாற்றுவாயாக...!" என்று தொடங்கி, "(நபி) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்ச ஆண்டுகளைப் போன்று" என்பது வரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ள குறிப்புகள் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
1198. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் மீதாணையாக! கிட்டத்தட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்ததைப் போன்றே நான் உங்களுக்குக் தொழுவிக்கிறேன்" என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகியத் தொழுகைகளில் குனூத் (சோதனைக்காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள். அதில் இறை நம்பிக்கையாளர்களுக்கு சார்பாகவும் (கொடுஞ் செயல்புரிந்த) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.
அத்தியாயம் : 5