953. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஆனால், ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. ("பள்ளிவாசலின்" என்ற குறிப்பு இல்லை).
அத்தியாயம் : 5
954. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறு கல்(லை எடுத்து அதன்) மூலம் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு "ஒரு மனிதர் (தொழும்போது உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) தமது வலப் பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் உமிழ வேண்டாம்" என்று தடை விதித்தார்கள். "மாறாக, தமது இடப் பக்கத்தில் அல்லது தம் பாதங்களுக்கு அடியில் அவர் உமிழ்ந்துகொள்ளட்டும்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ,(காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலுள்ள சுவரில் "எச்சிலை” அல்லது "மூக்குச் சளியை" அல்லது "காறல் சளியைக்” கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப் படுத்தி)னார்கள்.
அத்தியாயம் : 5
955. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாவில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே அவர்கள் மக்களை முன்னோக்கி, "உங்களில் ஒருவருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர் தம் இறைவனை முன்னோக்கி நின்று கொண்டு அவனுக்கு முன்னேயே காறி உமிழுகின்றார். உங்களில் ஒருவர் தமது முகத்திற்கெதிரே உமிழப்படுவதை விரும்புவாரா? உங்களில் ஒருவருக்கு உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும். அது முடியாவிட்டால் அவர் இவ்வாறு செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான காசிம் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தமது ஆடையி(ன் ஓர் ஓரத்தி)ல் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹுஷைம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையின் (ஓர் ஓரத்தில் உமிழ்ந்து) அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
958. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் பள்ளிவாசலுக்குள் உமிழ்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.
அத்தியாயம் : 5
959. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் நற்செயல்களும் தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. சாலையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற்செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளிவாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
960. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் சளியை உமிழ்ந்ததை நான் பார்த்தேன். பின்னர் அதைத் தமது காலணியால் (தரையில்) தேய்த்தார்கள்.
அத்தியாயம் : 5
961. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் சளியை உமிழ்ந்துவிட்டு அதைத் தமது இடது கால் காலணியால் தேய்த்து விட்டார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 15 காலணி அணிந்துகொண்டே தொழலாம்.
962. அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 16 (கண்ணைக் கவரும்) வேலைப்பாடு மிக்க ஆடை அணிந்து தொழுவது வெறுக்கப் பட்டதாகும் .
963. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் முன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
964. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், "இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டுசெல்லுங்கள். (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள். ஏனெனில், சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
965. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை (தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 17 உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவது வெறுக்கப் பட்டதாகும்; சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழுவதும் வெறுக்கப் பட்டதாகும்.
966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேர உணவு முன்னே காத்திருக்கத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுமானால் நீங்கள் முதலில் உணவை உண்ணுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன்னால் (உங்கள் முன்) இரவு நேர உணவு வைக்கப்படுமானால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழுகையை நிறைவேற்றுங்கள்.) உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
967. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
968. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு முன்னால் இரவு நேர உணவு வைக்கப்பட்டுவிட, தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் முதலில் உணவை உண்ணுங்கள். அதை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
969. இப்னு அபீஅத்தீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் அபீஅத்தீக் பின் அப்திர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், "உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்" என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், "எங்கே (போகிறாய்)?" என்று கேட்க, காசிம் "நான் தொழப்போகிறேன்" என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், "உட்கார்!" என்றார்கள். காசிம் "நான் தொழப்போகிறேன்" என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் "அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
பாடம் : 18 )சமைக்கப்படாத) வெள்ளைப் பூண்டு, வெங்காயம், சீமைப் பூண்டு போன்ற துர்வாடையுள்ளவற்றைச் சாப்பிட்டவர் அதன் வாடை போவதற்கு முன் பள்ளிவாசலுக்குச் செல்லலாகாது. அவரைப் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றலாம்.
970. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, "இந்தச் செடியிலிருந்து விளைகின்றதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாம்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஒரு போரின்போது" என்று காணப்படுகிறது. "கைபர் போரின்போது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5
971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்தச் செடியிலிருந்து விளைவதை (அதாவது வெள்ளைப் பூண்டை) சாப்பிட்டவர் அதன் வாடை விலகாதவரை நம்முடைய பள்ளிவாசல்களை நெருங்க வேண்டாம்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
972. அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம் வெள்ளைப் பூண்டு குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இந்தச் செடியிலிருந்து (விளையும் பூண்டைச்) சாப்பிட்டவர் நம்மை நெருங்கவோ நம்முடன் தொழவோ வேண்டாம்" எனச் சொன்னார்கள்" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 5