52. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போது எங்களிடையேயிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நெடுநேரமாகியும் அவர்கள் எங்களிடம் (திரும்பி) வரவில்லை. அவர்களுக்கு (எதிரிகளால்) ஏதேனும் ஆபத்து நேர்ந்து விட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; நாங்கள் பீதி அடைந்தவர்களாக (அங்கிருந்து) எழுந்தோம். பீதியுற்றவர்களில் நானே முதல் ஆளாக இருந்தேன். எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன். பனூ நஜ்ஜார் குலத்தைச் சேர்ந்த அன்சாரிகளுக்குச் சொந்தமான ஒரு தோட்டத்திற்கு வந்து சேர்ந்தேன். அத்தோட்டத்தின் வாசல் எங்கே என்று (தேடியவனாக) அதைச் சுற்றி வந்தேன். ஆனால் (அதன் வாசலை) நான் காணவில்லை. அத்தோட்டத்திற்கு வெளியே இன்னொரு தோட்டத்திலிருந்து வாய்க்கால் ஒன்று அதனுள் சென்று கொண்டிருந்தது. உடனே நான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று (என் உடலைக்) குறுக்கிக் கொண்டு (அந்த வாய்க்கால் வழியே தோட்டத்திற்குள்) நுழைந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "அபூஹுரைராவா?" என்று கேட்டார்கள். நான், "ஆம், அல்லாஹ்வின் தூதரே!" என்றேன். "என்ன விஷயம்?" என்று கேட்டார்கள். "நீங்கள் எங்களிடையே இருந்து கொண்டிருந்தீர்கள். (திடீரென) எழுந்து சென்றீர்கள். நெடுநேரமாகியும் நீங்கள் எங்களிடம் திரும்பவில்லை. எனவே, (எதிரிகளால்) ஏதேனும் உங்களுக்கு ஆபத்து நேர்ந்துவிட்டதோ என்று நாங்கள் அஞ்சினோம்; பீதியுற்றோம். நான்தான் பீதியுற்றவர்களில் முதல் ஆளாவேன். எனவேதான் குள்ளநரி உடலைக் குறுக்குவதைப் போன்று உடலைக் குறுக்கிக்கொண்டு இந்தத் தோட்டத்திற்கு வந்தேன். இதோ மக்கள் என் பின்னால் வந்துகொண்டிருக்கிறார்கள்" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா!" (என்று என்னை அழைத்து) தம் காலணிகள் இரண்டையும் என்னிடம் கொடுத்து, "இவ்விரு காலணிகளையும் கொண்டு செல்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சான்று கூறுகின்றாரோ அவரைத் தோட்டத்திற்கு அப்பால் நீ சந்தித்தால் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்!" என்று கூறினார்கள்.
நான் உமர் (ரலி) அவர்களையே முதலில் சந்தித்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இவை என்ன காலணிகள்,அபூஹுரைரா?" என்று கேட்டார்கள். அதற்கு நான் "இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய காலணிகள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தமது உள்ளத்தால் உறுதியாக நம்பிச் சாட்சியம் கூறுகின்ற எவரை நான் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்ற நற்செய்தி கூறுமாறு சொல்லி, இக்காலணிகளை (ஆதாரமாக)க் கொடுத்து என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்" என்று சொன்னேன். உடனே உமர் (ரலி) அவர்கள் தமது கரத்தால் எனது மார்பில் அடித்தார்கள். நான் மல்லாந்து விழுந்தேன். "திரும்பிச் செல்லுங்கள், அபூஹுரைரா!" என்று சொன்னார்கள். உடனே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த உமரும் அங்கே எனக்குப் பின்னால் வந்து நின்றார். என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அபூஹுரைரா! உமக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள்.
நான், "உமரைச் சந்தித்து நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பிய விஷயத்தை அவரிடம் தெரிவித்தேன். அவர் என் மார்பில் ஓர் அடி அடித்தார். நான் மல்லாந்து விழுந்துவிட்டேன். பிறகு, "திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறினார்" என்றேன். அப்போது உமர் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமரே! ஏன் இவ்வாறு செய்தீர்?" என்று கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று உள்ளத்தால் உறுதிகொண்ட நிலையில் சாட்சியம் சொல்பவர் எவரைச் சந்தித்தாலும் அவருக்குச் சொர்க்கம் கிடைக்கவிருக்கிறது என்று நற்செய்தி சொல்லுமாறு கூறி உங்கள் காலணிகளைக் கொடுத்து நீங்கள்தாம் அபூஹுரைராவை அனுப்பிவைத்தீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். உமர் (ரலி) அவர்கள், "அவ்வாறு செய்யாதீர்கள்! ஏனெனில், மக்கள் அதையே நம்பி (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன். அவர்கள் (நற்)செயல் புரிய விட்டுவிடுங்கள்" என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறே அவர்களை விட்டுவிடுங்கள் (அவர்கள் நற்செயல் புரியட்டும்)" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
53. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை "முஆத்!" என்று அழைத்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன்(கூறுங்கள்)" என்று முஆத் பதிலளித்தார்கள். (சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ! உங்களுக்குக் கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். (இன்னும் சிறிது தூரம் சென்ற பின்) "முஆத்!" என்று (மீண்டும்) அழைத்தார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் (கூறுங்கள்)" என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிகூறுகின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை" என்று கூறினார்கள். முஆத் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இதை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா? (இதைக் கேட்டு அவர்கள்) மகிழ்ச்சி அடைவார்களே!" என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(வேண்டாம்) இவ்வாறு நீர் அறிவித்தால் மக்கள் இதையே நம்பிக் கொண்டு (நற்செயல்களில் ஈடுபடாமல்) இருந்துவிடுவார்கள்" என்று கூறினார்கள்.
(கல்வியை மறைத்த) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது இறப்பின்போதுதான் இதை முஆத் (ரலி) அவர்கள் (மக்களிடையே) அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
54. மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, "தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)" என்றேன். அப்போது இத்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
என் பார்வையில் ஏதோ ஏற்பட்டு (என் கண்பார்வை போய்)விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "நீங்கள் வந்து என் வீட்டில் தொழ வேண்டும். அதை நான் தொழுமிடமாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். எனவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் அல்லாஹ் நாடிய சிலரும் (மறுநாள் என் வீட்டுக்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து வீட்டி(ன் ஒரு மூலையி)ல் தொழுது கொண்டிருந்தார்கள். நபித் தோழர்களோ தம்மிடையே (நயவஞ்சகர்களைப் பற்றியும் அவர்களால் தங்களுக்கு ஏற்படும் தொந்தரவு பற்றியும்) பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு அதில் மாலிக் பின் துக்ஷுன் அவர்களுக்குப் பெரும் பங்கிருப்பதாகக் கூறினர்.
அவருக்கெதிராக நபியவர்கள் பிரார்த்தித்து அவர் அழிந்துபோக வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அவருக்கு ஏதேனும் கேடு நேரவேண்டும் என்றும் விரும்பினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் அவர் (மாலிக் பின் துக்ஷும்) சாட்சியம் கூறவில்லையா?" என்று கேட்டார்கள். மக்கள், "அவர் அவ்வாறு (சாட்சியம்) கூறுகிறார். ஆனால், அது அவருடைய இதயத்தில் இல்லையே?" என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் என்றும் சாட்சியம் கூறும் ஒருவர் "நரகத்தில் நுழையமாட்டார்" அல்லது "நரகம் அவரைத் தீண்டாது" " என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸை (மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்களிடமிருந்து) அறிவிக்கும் அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த ஹதீஸ் என்னை வியப்படையச் செய்தது. ஆகவே, நான் என் புதல்வரிடம் "இதை எழுதி வைத்துக்கொள்" என்று கூறினேன். அவ்வாறே அவர் அதை எழுதி வைத்துக் கொண்டார்.
அத்தியாயம் : 1
55. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:
எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி "(என் வீட்டுக்கு) நீங்கள் வந்து எனக்காக நான் தொழுமிடம் ஒன்றை அறிவியுங்கள்" என்று கூறினேன். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மக்களும் (என் வீட்டுக்கு) வந்தனர். அப்போது மக்களில் மாலிக் பின் துக்ஷும் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதரைப் பற்றி விமர்சிக்கப்பட்டது. (இவ்வாறு கூறிவிட்டு) சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களின் மேற்கண்ட அறிவிப்பிலுள்ளதைப் போன்றே தொடர்ந்து கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 11 அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறை நம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச் செய்திருந்தாலும் சரியே- என்பதற்கான ஆதாரம்.
56. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறை நம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார்.
இதை அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 12 இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில் உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு ஆகியவை பற்றிய விளக்கம்.
57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
59. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும் நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள்.
அப்போது "(அவரை விட்டுவிடு!) நாணம் இறை நம்பிக்கையில் அடங்கும்" என்று நபியவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
"நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் தம் சகோதரருக்கு நாணப்படுவது தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்" என்று அந்த அறிவிப்பு (சிறு வித்தியாசத்துடன்) தொடங்குகிறது.
அத்தியாயம் : 1
60. அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் "நாணம் நன்மையே தரும்" என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "சில (வகை) நாணத்தில் கம்பீரம் உண்டு; சில (வகை) நாணத்தில் மன அமைதி உண்டு எனத் தத்துவ(ப் புத்தக)த்தில் எழுதப்பட்டுள்ளது" என்று கூறினார். அப்போது (அவரிடம்) இம்ரான் (ரலி) அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கூறியது) பற்றி உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் ஏடுகளில் உள்ளவை குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே!" என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
61. அபூகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள் "நாணம், முழுக்க முழுக்க நன்மையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என எங்களுக்கு அறிவித்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள், "நாங்கள் "சில நூல்களில்" அல்லது "தத்துவ(ப் புத்தகத்)தில்" அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் சில (வகை) நாணத்தில் மன அமைதியும் கம்பீரமும் உண்டு. மற்றச் சில வகையில் பலவீனம் உண்டு என்று (எழுதப்பட்டிருப்பதைக்) காண்கிறோம்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இம்ரான் (ரலி) அவர்கள் தம் கண்கள் சிவக்கும் அளவிற்குக் கோபமடைந்தார்கள். "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாணம் முழுக்க நன்மைதான் என்று) கூறியதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அதற்கு எதிர்க்கருத்து கூறுகின்றீர்களே!" என்று சொல்லி விட்டுத் தாம் முன்பு சொன்ன ஹதீஸையே மீண்டும் சொன்னார்கள். புஷைர் அவர்களும் முன்பு தாம் சொன்னதையே மீண்டும் கூறினார்கள். அப்போதும் இம்ரான் (ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள். நாங்கள், "அபூநுஜைதே! அவர் நம்மைச் சார்ந்தவர்தாம். அவரிடம் (கொள்கைக்) குறைபாடு ஏதுமில்லை" என்று கூறி (இம்ரான் அவர்களை சமாதானப் படுத்தி)க்கொண்டிருந்தோம்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 13 இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம்.
62. சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 14 இஸ்லாம் கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது பற்றிய விளக்கமும்.
63. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப்பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகம் அற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
64. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (முஸ்லிம்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
65. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
66. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய பண்பே சிறந்தது)" என்று பதிலளித்தார்கள். மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்லிம்களில் சிறந்தவர் யார் என்று கேட்கப்பட்டது" என்று ஹதீஸ் ஆரம்பிக்கிறது. மீதி மேற்கண்டவாறே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 15 இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம்.
67. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராய் இருப்பது.
2. அவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை நெருப்பில் தாம் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று அவர் வெறுப்பது.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
68. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்து கொள்வார்.
1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொண்டிருப்பது.
2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட நேசத்திற்குரியோராவது.
3. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே அவர் விரும்புவது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அனஸ் (ரலி) அவர்கள் வழியாக மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் மேற்கண்ட ஹதீஸ் வந்துள்ளது.
அதில் "மீண்டும் யூதராகவோ கிறிஸ்தவராகவோ தாம் மாறுவதைவிட (நெருப்பில் வீசப்படுவதை அவர் விரும்புவது)" என்று (சிறு மாற்றத்துடன்) ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 16 மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலாம் என்பதும்.
69. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கு தம் குடும்பத்தார்,தமது செல்வம்,ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை “எந்த அடியாரும் அல்லது எந்த மனிதரும்,இறை நம்பிக்கையுள்ளவராக ஆகமாட்டார்.-இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
70. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருக்கு,அவருடைய குழந்தைகள்,பெற்றோர்,மற்ற மக்கள் அனைவரையும் விட நான் அதிகம் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார்.”-இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 17 தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது,இறை நம்பிக்கையின் அடையாளக் குணங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரம்.
71. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1