5155. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் (நற்)செயலைச் செய்துகொண்டே வருவார். பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும். ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் (தீய)செயலைச் செய்துகொண்டே வருவார். பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5156. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர், மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்துகொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராய் இருப்பார். ஒரு மனிதர், மக்களின் பார்வையில் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே இருப்பார். (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராய் இருப்பார்.
இதை சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
பாடம் : 2 ஆதம் (அலை) அவர்களுக்கும் மூசா (அலை) அவர்களுக்கும் இடையே நடந்த தர்க்கம்.
5157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்துகொண்டார்கள். மூசா (அலை) அவர்கள், "ஆதம் அவர்களே! எங்கள் தந்தையான நீங்கள் (உங்கள் பாவத்தின் காரணத்தால்) எங்களை இழப்புக்குள்ளாக்கிவிட்டீர்கள்;சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிட்டீர்கள்" என்று சொன்னார்கள்.
அதற்கு மூசாவிடம் ஆதம் (அலை) அவர்கள், "நீர்தான் மூசாவா? அல்லாஹ், தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான்; அவன் தனது கையால் உமக்காக (வேதத்தை) எழுதினான். (இத்தகைய) நீங்கள், அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?" என்று கேட்டார்கள்.
(இந்த பதில் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள்;தோற்கடித்துவிட்டார்கள்" என (இரண்டு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இப்னு அபீஉமர் அல்மக்கீ (ரஹ்), அஹ்மத் பின் அப்தா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகளில் ஒன்றில், "வரைந்தான்" ("கத்த") என இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் "அவன் தனது கரத்தால் உமக்காக "தவ்ராத்"தை எழுதினான்" என்று ஆதம் (அலை) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5158. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். (அதில்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள். ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள், "நீங்கள்தான் மனிதர்களை வழி தவறச்செய்து, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிய ஆதமா?" என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் அனைத்துப் பொருட்களைப் பற்றிய அறிவையும் வழங்கி, தனது தூதுத்துவத்தால் மற்ற மக்களைவிடத் தேர்ந்தெடுத்த மனிதர் நீர்தானே?" என்று கேட்டார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்" என்று கூறினார்கள். "அவ்வாறாயின், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீரா?" என்று கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம் மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்.)
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தம் இறைவன் அருகில் தர்க்கம் செய்தார்கள். அப்போது மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்து விட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் தனது கையால் உங்களைப் படைத்து, உங்களுக்குள் தனது உயிரை ஊதி, தன் வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்து, உங்களைச் சொர்க்கத்தில் குடியிருக்கச்செய்த ஆதம் நீங்கள்தானே! பிறகு நீங்கள் உங்களது பாவத்தின் மூலம் (உங்கள் வழித் தோன்றல்களான) மனிதர்களை பூமிக்கு இறங்கச் செய்துவிட்டீர்கள்" என்று கூறினார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னிடம் உரையாடவும் உம்மைத் தேர்ந்தெடுத்து, அனைத்துப் பொருட்களைப் பற்றிய விளக்கமும் உள்ள பலகைகளை உமக்கு வழங்கி, தன் அருகில் வரச்செய்து இரகசியமாக உரையாடிய மூசா நீர்தானே! நான் படைக்கப்படுவதற்கு எத்தனை ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் தவ்ராத்தை எழுதியதாக நீர் கண்டீர்?" என்று கேட்டார்கள்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால்" என்று பதிலளித்தார்கள். "அதில், ஆதம் தம் இறைவனுக்கு மாறுசெய்தார். எனவே, அவர் வழி தவறினார் என்று எழுதப்பட்டிருந்ததா?" என்று கேட்டார்.
அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்" என்றார்கள். "அவ்வாறாயின், என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே எதை நான் செய்வேன் என்று இறைவன் என்மீது விதியாக்கிவிட்டானோ அதைச் செய்ததற்காக என்னை நீங்கள் பழிக்கிறீரா?" என்று ஆதம் (அலை) அவர்கள் கேட்டார்கள்.
(இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் தோற்கடித்துவிட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் தர்க்கம் செய்தார்கள். அப்போது ஆதம் (அலை) அவர்களிடம் மூசா (அலை) அவர்கள், "உங்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்ற உங்கள் தவறே காரணமாக அமைந்ததே அந்த ஆதம் நீங்கள்தானா?" என்று கேட்டார்கள்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "நீங்கள், அல்லாஹ் தன் தூதுத்துவச் செய்திகளை தெரிவிக்கவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மூசாதானே? அவ்வாறிருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என்மீது விதிக்கப்பட்டுவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கிறீர்களே (ஏன்)?" என்று கேட்டார்கள். (இந்தக் கேள்வியின் மூலம்) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் வென்றுவிட்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
5160. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.
இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "(அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 46
பாடம் : 3 உயர்ந்தோன் அல்லாஹ் மனிதர்களின் உள்ளங்களைத் தான் நாடிய வகையில் மாற்றுகிறான்.
5161. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆதமின் மக்களின் (மனிதர்களின்) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன. அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான்" என்று கூறிவிட்டு, "இறைவா! உள்ளங்களைத் திருப்புகின்றவனே! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
பாடம் : 4 ஒவ்வொன்றும் விதியின்படியே (நடக்கிறது).
5162. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"ஒவ்வொன்றும் விதியின்படியே" என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒவ்வொரு பொருளும் விதியின்படியே."இயலாமை, புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட” அல்லது "புத்திசாலித்தனம், இயலாமை ஆகியவை உள்பட" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் என்று கூறியதைக் கேட்டுள்ளேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
5163. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) குறைஷி இணைவைப்பாளர்கள் விதி தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விவாதிக்க வந்தனர். அப்போது, "அவர்கள் நரகத்தில் முகம்குப்புற இழுத்துவரப்படும் நாளில் "நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்" (என்று கூறப்படும்). ஒவ்வொரு பொருளையும் நாம் திட்டமிட்டபடியே படைத்துள்ளோம்" (54:48,49) எனும் இறைவசனங்கள் அருளப்பெற்றன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
பாடம் : 5 விபசாரம் முதலானவற்றில் மனிதனுக்குள்ள பங்கு விதியில் எழுதப்பட்டுவிட்டது.
5164. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் ஆதமின் மக(ன் மனித)னுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். (மனிதனின் கண்ணும் நாவும்கூட விபசாரம் செய்கின்றன.) கண்ணின் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவின் விபசாரம் (ஆபாசமான) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸை விடச் சிறு பாவங்களுக்கு எடுத்துக்காட்டாக வேறெதையும் நான் காணவில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
5165. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனாகவே உள்ளான். கண்கள் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபசாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபசாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபசாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
பாடம் : 6 "எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன" என்பதன் பொருளும், இறைமறுப்பாளர்கள் மற்றும் முஸ்லிம்களின் இறந்துவிட்ட குழந்தைகளின் நிலையும்.
5166. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போன்று), பெற்றோர்கள்தான் குழந்தைகளை (ஓரிறை மார்க்கத்திலிருந்து திருப்பி) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால், "இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன் மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றலும் இல்லை" (30:30) எனும் வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "ஒரு விலங்கு விலங்கைப் பெற்றெடுத்ததைப் போன்றே" எனும் (வாசகம்) இடம் பெற்றுள்ளது. "முழு வளர்ச்சி பெற்ற" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லாக் குழந்தைகளும் இயற்கை(யின் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன" என்று கூறினார்கள். நீங்கள் "இது அல்லாஹ்வின் இயற்கையான மார்க்கம். இதன்மீதே மனிதர்களை அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றலும் இல்லை. இதுவே நேரான மார்க்கம்" (30:30) எனும் வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 46
5167. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தான் அவர்களை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ, இணைவைப்பாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்" என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கு முன்னர் (அறியாப் பருவத்திலேயே) இறந்துவிட்டால், அதன் நிலை (என்ன என்பது) பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "எல்லாக் குழந்தைகளும் (இயற்கை) மார்க்கத்தில் இருக்கும் நிலையில்தான் பிறக்கின்றன" என இப்னு நுமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "இந்த (இயற்கை) மார்க்கத்தில்தான் பிறக்கின்றன; அதைப் பற்றி (அதாவது தனது நிலையைப் பற்றி) அதன் நாவு தெளிவுபடுத்தும்வரை" என்று காணப்படுகிறது.
அபூமூஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "பிறக்கின்ற எந்தக் குழந்தையும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன; அதன் நாவு அதைப் பற்றி பேசும்வரை" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5168. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளும் இந்த இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள்தான் அவர்களை யூதர்களாகவும் கிறித்தவர்களாகவும் ஆக்கிவிடுகின்றனர். ஒரு விலங்கு (முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப்) பெற்றெடுப்பதைப் போன்றுதான் (இது). நீங்கள் அதன் நாக்கு, மூக்கு போன்ற உறுப்புகளை வெட்டிச் சேதப்படுத்தாத வரை நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் அது பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கூறினார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! சிறிய வயதில் இறந்துவிட்டவரின் நிலை பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46
5169. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கிறான். அவனுடைய பெற்றோர்கள்தான் பின்னர் அவனை யூதனாகவோ கிறித்தவனாகவோ அக்னி ஆராதனையாளனாகவோ ஆக்கிவிடுகின்றனர். அவர்கள் இருவரும் முஸ்லிம்களாயிருந்தால், அவனும் முஸ்லிமாகிவிடுகிறான். தாயின் வயிற்றிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் விலாப்புறத்திலும் ஷைத்தான் குத்துகிறான்; மர்யமையும் அவருடைய புதல்வர் (ஈசா) அவர்களையும் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5170. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், இணைவைப்போரின் குழந்தைகள் குறித்து ("அவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது" என்று) கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உயிருடன் வாழ்ந்தால்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்" என்று விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் ஷுஐப் (ரஹ்), மஅகில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "இணைவைப்பாளர்களின் சந்ததிகள் பற்றிக் கேட்கப்பட்டது" என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 46
5171. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இணைவைப்பாளர்களின் குழந்தைகள் சிறிய வயதிலேயே இறந்துவிட்டால், அவர்களின் நிலை என்ன என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(உயிருடன் வாழ்ந்தால்) அவர்கள் எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்"என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 46
5172. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இணைவைப்போரின் குழந்தைகள் (இறந்து விட்டால் அவர்களின் முடிவு யாது என்பது) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் படைத்தபோதே, அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிவான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46
5173. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"களிர்" அவர்கள் கொன்றுவிட்ட சிறுவன் (இறை)மறுப்பாளனாகவே படைக்கப்பட்டான். அவன் (உயிருடன்) வாழ்ந்திருந்தால் தன் பெற்றோரை வழிகேட்டிலும் (இறை)மறுப்பிலும் தள்ளிவிட்டிருப்பான்.
இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 46
5174. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) ஒரு குழந்தை இறந்துபோனது. அப்போது நான், "அதற்கு நல்வாழ்த்துகள்! அது சொர்க்கத்தின் சிட்டுக்குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி" என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியாதா? அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்தபோதே, அதற்கெனச் சிலரையும் இதற்கெனச் சிலரையும் படைத்துவிட்டான்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 46