4540. ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)" என்றேன். "பாடு" என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு" என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு"என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
- மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் "உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
அத்தியாயம் : 41
4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4542. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன...
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் சொல்தான்.
(கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர்கள் யாத்த பாடல்களிலேயே மிக உண்மையானது,
"அறிக!
அல்லாஹ்வைத் தவிர
அனைத்துப் பொருட்களுமே
அழியக்கூடியவையே"
எனும் பாடல்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41
4545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல் (கவிஞர்) லபீத் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடியவையே" எனும் சொல்தான். - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த அறிவிப்பில், இதைவிடக் கூடுதலான தகவல் இல்லை.
அத்தியாயம் : 41
4546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சிறந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "புரையோடும் அளவுக்கு" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 41
4547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 41
4548. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்" எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 41
பாடம் : 1 பகடைக்காய் விளையாட்டு ("நர்த ஷீர்") தடை செய்யப்பட்டதாகும்.
4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.
இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 41

4550. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (உறக்கத்தில்) பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை.
இறுதியில் (ஒரு நாள்) நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சந்தித்து அவர்களிடம் அதைப் பற்றித் தெரிவித்தேன். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானி டமிருந்து வருவதாகும். உங்களில் ஒருவர் தாம் விரும்பாத (தீய கனவு) ஒன்றைக் கண்டால் அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்; அதிலிருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் அவர் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அவருக்கு அது எந்தத் தீங்கும் இழைத்திட இயலாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நான் பல கனவுகளைக் கண்டுவந்தேன். அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும்,அதற்காக நான் போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கவில்லை" என்று அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் கூறிய குறிப்பு (ஆரம்பத்தில்) இடம்பெறவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யூனுஸ் (ரஹ்), மஅமர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், "அதனால் எனக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டது"எனும் குறிப்பு இல்லை. யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பட்டும்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4551. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே,உங்களில் ஒருவர் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை (கனவில்) கண்டால் (கண் விழிக்கும்போது) தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு, அதன் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். (இப்படிச் செய்தால்) அதனால் அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கத்தாதா (ரலி) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றேன்.
இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்து விட்)ட காரணத்தால், மலையைவிடக் கனமான ஒரு கனவை நான் கண்டாலும்கூட அதை நான் பொருட்படுத்துவதில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ், அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், அபூ சலமா (ரஹ்) அவர்களின் (இறுதிக்) கூற்று இடம்பெறவில்லை. முஹம்மத் பின் ரும்ஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "மேலும், அவர் முன்பு படுத்திருந்த பக்கத்திலிருந்து திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 42
4552. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஒருவர் கனவு ஒன்றைக் கண்டு அதில் எதையேனும் அவர் வெறுத்தால், அவர் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அப்படிச் செய்தால் அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும், அதைப் பற்றி யாரிடமும் அவர் தெரிவிக்க வேண்டாம். அழகிய கனவு ஒன்றை அவர் கண்டால், அவர் ஆனந்தமடையட்டும். அதைப் பற்றி தமது நேசத்திற்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
இதை அபூகத்தாதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 42
4553. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃவ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பல கனவுகளைக் கண்டு, அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இந்நிலையில் நான் அபூகத்தாதா (ரலி) அவர்களைச் சத்தித்(து அது குறித்து தெரிவித்)தேன்.
அப்போது அவர்கள் கூறினார்கள்: நானும் பல கனவுகளைக் கண்டு உடல்நலம் பாதிக்கப் பட்டுவந்தேன். இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகின்ற கனவொன்றைக் கண்டால் தமது நேசத்துக்குரியவரைத் தவிர வேறு யாரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம். அவர், தாம் விரும்பாததைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அந்தக் கனவின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரட்டும். அந்தக் கனவைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்த முடியாது" என்று கூறியதைக் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால் தமது இடப் பக்கத்தில் மூன்று முறை துப்பிவிட்டு,ஷைத்தானிடமிருந்து (காக்குமாறு) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரிவிட்டு, வேறு பக்கத்தில் திரும்பிப் படுத்துக்கொள்ளட்டும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4555. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும்.
கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (கால் விலங்கு மற்றும் கழுத்து விலங்கு பற்றிய) இறுதிக் குறிப்பு ஹதீஸிலேயே உள்ளதா, அல்லது அறிவிப்பாளர் இப்ன சீரீன் (ரஹ்) அவர்களின் கூற்றா என்பது எனக்குத் தெரியவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: காலில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை என் மனம் விரும்புகிறது. கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன். கால் விலங்கு மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதைக் குறிக்கும். நபி (ஸல்) அவர்கள், "இறை நம்பிக்கையாளர் காணும் நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" என்று கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "காலம் சுருங்கிவிட்டால்..." என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. அதில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பு இல்லை.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை நான் வெறுக்கிறேன்" என்பது, இறுதிவரையுள்ள தகவலை விளக்க இடைச்சேர்ப்பாக ("இத்ராஜ்") அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. அதில் "நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்" எனும் நபி (ஸல்) அவர்களின் கூற்று இடம் பெறவில்லை.
அத்தியாயம் : 42
4556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.- இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் வாயிலாக நேரடியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு "முஸ்லிம் காணும்" அல்லது "அவருக்குக் காட்டப்படும்" நல்ல கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு நல்ல மனிதரின் கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 42
4558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல கனவு நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "நபித்துவத்தின் எழுபது பாகங்களில் ஒன்றாகும்" என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாக நான் கருதுகிறேன் என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டதாகக் காணப்படுகிறது.
தொடர்ச்சி:-
அத்தியாயம் : 42
பாடம் : 1 "கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.
4559. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 42