3953. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடை விதித்தார்கள்" என்று அப்துல்லாஹ் பின் அல் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவ்வாறு சிறிய கற்களைச் சுண்டியெறிவதால் அது எதிரியை வீழ்த்திவிடவோ வேட்டைப் பிராணியை வேட்டையாடிவிடவோ செய்வதில்லை. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம்" என்று கூறினார்கள்" என்றும் அப்துல்லாஹ் பின் அல்முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அது எதிரியை வீழ்த்தி விடாது" என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. "கண்ணைப் பறித்துவிடலாம்" எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 34
3954. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தம் நண்பர் ஒருவர் சிறிய கற்களைச் சுண்டி விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்ட அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள், அவ்வாறு விளையாட வேண்டாமெனத் தடுத்தார்கள். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடைசெய்தார்கள். அவ்வாறு சுண்டியெறிவதால் எந்தப் பிராணியையும் வேட்டையாடவும் முடியாது; எந்த எதிரியையும் வீழ்த்தவும் முடியாது. மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம் என்று கூறினார்கள்" என்றார்கள்.
பிறகு மறுபடியும் அந்த நண்பர் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாடினார். அப்போது அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறிய கற்களைச் சுண்டியெறிந்து விளையாட வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று நான் உனக்குச் சொல்கிறேன். நீ மறுபடியும் சிறிய கற்களைச் சுண்டியெறிகிறாயே! (இனி) நான் உன்னிடம் ஒருபோதும் பேசமாட்டேன்" என்று கூறிவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 11 பிராணிகளை அறுக்கும்போதும், (மரண தண்டனைக் கைதிகளுக்கு) மரண தண்டனை நிறைவேற்றும் போதும் எளிய முறையைக் கையாளுமாறும், கத்தியை கூர்மையாகத் தீட்டிக் கொள்ளுமாறும் வந்துள்ள கட்டளை.
3955. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரண்டு விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து மனனமிட்டுள்ளேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எல்லாவற்றிலும் எளிய முறையை விதியாக்கியுள்ளான். எனவே,கொல்லும்போதும் எளிய முறையில் கொல்லுங்கள். அறுக்கும்போதும் எளிய முறையில் அறுங்கள். உங்களில் ஒருவர் அறுப்பதற்கு முன் கத்தியைத் தீட்டிக்கொள்ளட்டும். அறுக்கப்படும் பிராணியை ஆசுவாசப்படுத்தட்டும்.
- மேற்கண்ட ஹதீஸ் ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
பாடம் : 12 விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வது தடை செய்யப்பட்டதாகும்.
3956. ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒரு தடவை) என் பாட்டனார் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களுடன் (பஸ்ராவின் துணை ஆளுநரான) ஹகம் பின் அய்யூபின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு சிலர், கோழியொன்றைக் கட்டி வைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்தனர். இதைக் கண்ட அனஸ் (ரலி) அவர்கள், "விலங்குகளைக் கட்டிவைத்து அம்பெய்து கொல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்காதீர்கள்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 34
3957. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள், கோழி ஒன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்து கொண்டிருந்த சிலரைக் கடந்து சென்றார்கள். இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சிதறியோடிவிட்டனர். இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) இப்னு உமர் (ரலி) அவர்கள், பறவையொன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்த குறைஷி இளைஞர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்கள் (குறி) தவறவிடும் அம்புகள் ஒவ்வொன்றும் பறவையின் உரிமையாளருக்கு உரியவை என முடிவு செய்திருந்தனர்.
இப்னு உமர் (ரலி) அவர்களைக் கண்டவுடன் அவர்கள் சிதறியோடிவிட்டனர். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள், "இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ் சபித்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிரினத்தையும் இலக்காக ஆக்கியவனைச் சபித்தார்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 34
3958. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(அம்பெய்து பயிற்சி பெறுவதற்காக) எந்த உயிர் பிராணியும் கட்டிவைத்துக் கொல்லப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 34

பாடம் : 1 குர்பானி கொடுக்கப்படும் நேரம்.
3959. ஜுன்தப் பின் (அப்தில்லாஹ் பின்) சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் துல்ஹஜ் பத்தாவது நாளன்று (பெருநாள் தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் (பெருநாள்) தொழுகையைத் தொழுது சலாம் கொடுத்தார்களோ இல்லையோ, அங்கு குர்பானிப் பிராணிகளின் இறைச்சியைக் கண்டார்கள். நபியவர்கள் தொழுது முடிப்பதற்கு முன்பே அவை அறுக்கப்பட்டிருந்தன. எனவே, "தாம் தொழுவதற்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டவர்" அல்லது "நாம் தொழுவதற்கு முன்பே (குர்பானியை அறுத்துவிட்டவர்)" அதற்குப் பதிலாக மற்றொரு பிராணியை அறுக்கட்டும். (தொழுகை முடியும்வரை) அறுக்காமலிருந்தவர் தொழுகைக்குப் பின் அல்லாஹ்வின் பெயர் ("பிஸ்மில்லாஹ்...")சொல்லி அறுக்கட்டும்!" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3960. ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஈதுல் அள்ஹா அன்று (பெருநாள் தொழுகையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் மக்களுக்குத் தொழுவித்து முடித்ததும் குர்பானி கொடுக்கப்பட்ட ஆடுகளைக் கண்டார்கள்.
அப்போது "தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டவர், அதற்குப் பதிலாக மற்றோர் ஆட்டை அறுக்கட்டும். (தொழுகை முடியும்வரை) அறுக்காமலிருந்தவர், இப்போது (தொழுகை முடிந்தபின்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்!" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "அல்லாஹ்வின் பெயர் சொல்லி" எனும் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 35
3961. ஜுன்தப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாளன்று (தொழுகையில்) கலந்துகொண்டேன். அவர்கள் (குத்பா-உரை நிகழ்த்துவதற்கு முன்பே) தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, "தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர், அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தொழுகைக்குப் பின்) அறுக்கட்டும். (தொழுகைக்கு முன்பே) அறுக்காமலிருந்தவர் (தொழுகை முடிந்தவுடன்) அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்!" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஜுன்தப் பின் சுஃப்யான் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3962. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாய்மாமா அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடுதான். (குர்பானி ஆடன்று)" என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு (குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கட்டுமா?)" என்று வினவினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்ற மக்களுக்குப் பொருந்தாது" என்று சொல்லிவிட்டு, "தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர்,தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3963. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என் தாய்மாமா அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள், குர்பானி கொடுப்பதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டு, "அல்லாஹ்வின் தூதரே! இது, (பிறரிடம்) இறைச்சி (கேட்பது) விரும்பத்தகாத நாளாகும். நான் என் குடும்பத்தாருக்கும் அண்டை வீட்டாருக்கும் என் வீட்டாருக்கும் உணவளிப்பதற்காக (தொழுகைக்கு) முன்பே அறுத்துவிட்டேன்" என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மீண்டும் ஒரு பிராணியை அறுத்து (குர்பானி) கொடுப்பீராக!" என்று சொன்னார்கள். அபூபுர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய பால்குடி மறவாத பெட்டை வெள்ளாட்டுக் குட்டி உள்ளது. அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது (அதை இப்போது குர்பானி கொடுக்கட்டுமா?)" என்று வினவினார்கள். அதற்கு "அது (தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) உம்முடைய இரு குர்பானிகளில் சிறந்ததாகும். ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது" என்று சொன்னார்கள்.
- பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது "(பெருநாள் தொழுகை) தொழாத வரை உங்களில் யாரும் அறுத்துப் பலியிடவேண்டாம்" என்று கூறினார்கள். அப்போது என் தாய்மாமா (அபூபுர்தா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! இது, (பிறரிடம்) இறைச்சி (கேட்பது) விரும்பத்தகாத நாளாகும்..." என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று வினவினார்கள்.
அத்தியாயம் : 35
3964. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளன்று நிகழ்த்திய உரையில்), "யார் நமது தொழுகையைத் தொழுது, நமது தொழும் திசையை (கிப்லா) முன்னோக்கி, நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்" என்று சொன்னார்கள்.
அப்போது என் தாய்மாமா (அபூபுர்தா (ரலி) அவர்கள்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மகனுக்காக (தொழுகைக்கு) முன்பே குர்பானி கொடுத்துவிட்டேனே?" என்று கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது நீங்கள் உங்களுடைய வீட்டாருக்காக அவசரப்பட்டு அறுத்துவிட்ட ஒன்றாகும். (அது குர்பானியாகாது)" என்று கூறினார்கள்.
அதற்கு என் தாய்மாமா, "என்னிடம் இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஆடொன்று உள்ளது (அதை நான் அறுக்கலாமா?)" என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து குர்பானி கொடுப்பீராக! அது (உமது) குர்பானிப் பிராணியில் சிறந்ததாகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3965. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஈதுல் அள்ஹா பெருநாளன்று) "இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது யாதெனில், முதலில் நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம். பிறகு தொழுகையிலிருந்து திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்போம். இதை யார் செய்கிறாரோ அவர் நமது வழியை அடைந்து கொண்டவர் ஆவார். (பெருநாள் தொழுகைக்கு முன்பே) யார் குர்பானிப் பிராணியை அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும். அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது" என்று சொன்னார்கள்.
(என் தாய்மாமா) அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டிருந்தார். அவர் (எழுந்து), "என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட (வெள்ளாட்டு) குட்டி ஒன்று இருக்கிறது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதை அறுத்து (குர்பானி கொடுத்து)விடுவீராக! உமக்குப் பின்னர் வேறெவருக்கும் அது செல்லாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று தொழுகைக்குப் பிறகு எங்களிடையே உரையாற்றினார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்றவை மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
3966. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது அவர்கள், "தொழுவதற்கு முன்பே யாரும் குர்பானி கொடுக்க வேண்டாம்" என்று கூறினார்கள். ஒரு மனிதர், "என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட பால்குடி மறவாத வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அது இரு இறைச்சி ஆடுகளைவிடச் சிறந்ததாகும்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாட்டுக் குட்டி உமக்குப் பிறகு வேறெவருக்கும் செல்லாது"என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 35
3967. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தாய்மாமா) அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "அதற்குப் பதிலாக வேறொன்றை அறு(த்துக் குர்பானி கொடு)ப்பீராக!" என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறெதுவுமில்லை.
-அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும்"என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) நான் எண்ணுகிறேன்.-
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதையே அதற்குப் பதிலாக அறுத்துக் கொள்வீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் இது செல்லாது" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்ததாகும் (என்று அபூபுர்தா (ரலி) அவர்கள் சொன்னதாக எனக்கு அறிவிக்கப்பட்டது என்று நான் எண்ணுகிறேன்)" என ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் கூறியுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 35
3968. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நஹ்ரு"டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று, "(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். உடனே ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! இது இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்" என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டை அயலாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பே அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். மேலும், தம்மிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு ஒன்று இருப்பதாகவும், அது இறைச்சி ஆடுகள் இரண்டைவிடச் சிறந்தது என்றும் அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா என்றும் கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள். இந்த அனுமதி அவரல்லாத மற்றவருக்கும் பொருந்துமா, அல்லது பொருந்தாதா என்பது எனக்குத் தெரியாது.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரு செம்மறியாட்டுக் கடாக்களின் பக்கம் சென்று அவ்விரண்டையும் அறுத்தார்கள். மக்கள் ஒரு சிறிய ஆட்டு மந்தைக்குச் சென்று (அதிலிருந்த) ஆடுகளைத் தமக்குள் பிரித்துக்கொண்ட(பின் குர்பானி கொடுத்த)னர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3969. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) தொழுதுவிட்டுப் பிறகு உரையாற்றினார்கள். அப்போது தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுத்து விட்டவர்களை மீண்டும் குர்பானி கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 35
3970. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது இறைச்சி மணம் வருவதைக் கண்டு குர்பானிப் பிராணிகளை (தொழுகைக்கு முன்பே) அறுக்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள். "யார் (தொழுகைக்கு முன்பே) குர்பானிப் பிராணியை அறுத்தாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்!" என்று கூறினார்கள். மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 35
பாடம் : 2 குர்பானிப் பிராணியின் வயது.
3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொடுங்கள். அது கிடைக்காவிட்டால் செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 35
3972. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் "நஹ்ரு" டைய (துல்ஹஜ் பத்தாவது) நாளன்று எங்களுக்கு (பெருநாள்) தொழுகை நடத்தினார்கள். அப்போது சிலர், நபி (ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட்டார்கள் என எண்ணி,முன்பே சென்று (தங்களுடைய குர்பானிப் பிராணிகளை) அறுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தாம் அறுப்பதற்கு முன்பே அறுத்துவிட்டவர் அதற்குப் பதிலாக மீண்டும் ஒரு பிராணியை அறுக்க வேண்டும். தாம் அறுப்பதற்கு முன் எவரும் அறுக்க வேண்டாமென்று உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 35