3145. ஹன்ழலா பின் கைஸ் அல்அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: குற்றமில்லை; நபி (ஸல்) அவர்களது காலத்தில் நீரோடை ஓரத்தில் விளைபவற்றை, அல்லது வாய்க்கால் முனையில் விளைபவற்றை, அல்லது விளைச்சலில் (குறிப்பிட்ட) சிலவற்றை எங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரிலேயே நிலத்தை வாடகைக்கு விட்டுவந்தனர். இதில் இவர் பாதிப்படைவார்; அவர் தப்பித்துக்கொள்வார். அல்லது இவர் தப்பித்துக்கொள்வார்; அவர் பாதிப்படைவார். இந்தக் குத்தகை முறையைத் தவிர வேறெதுவும் அவர்களிடம் இருக்கவில்லை.
ஆதலால்தான், அது கண்டிக்கப்பட்டது. அறியப்பட்ட ஒரு பொருள் பிணையாக்கப்படுமானால் அ(தற்காக நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தில் குற்றமில்லை.
அத்தியாயம் : 21
3146. ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளிலேயே நாங்கள்தாம் வயல்கள் அதிகம் உடையவர்களாக இருந்தோம். நாங்கள் விளைநிலத்தில் இ(ந்தப் பகுதியில் விளைவ)து எங்களுக்குரியது; அ(ந்தப் பகுதியில் விளைவ)து அவர்களுக்குரியது என நிபந்தனையிட்டு நிலத்தைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். சில வேளைகளில் இந்தப்பகுதி விளைச்சலைத் தரும்; அந்தப் பகுதி விளைச்சலைத் தராது. இவ்விதம் நிபந்தனையிட்டு குத்தகைக்கு விட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் எங்களைத் தடுத்தார்கள்; வெள்ளிக் (காசுகளுக்)குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அவர்கள் தடை செய்யவில்லை.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
பாடம் : 20 விளைச்சலில் ஒரு பகுதிக்குப் பதிலாக நிலத்தைக் குத்தகைக்கு விடுவதும் (முஸாரஆ) பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுவதும் (முஆஜரா).
3147. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் நிலத்தைக் குத்தகைக்கு விடுவது (முஸாரஆ) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "என்னிடம் ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள்" எனத் தெரிவித்தார்கள்" என விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்தார்கள்" என்று (பிரதிப் பெயர்ச்சொல்லுடன்) இடம்பெற்றுள்ளது. மேலும், "நான் இப்னு மஅகில் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன்" என்றே (குறிப்புப் பெயருடனேயே) இடம்பெற்றுள்ளது. அப்துல்லாஹ் எனும் (அவர்களது இயற்) பெயர் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 21
3148. அப்துல்லாஹ் பின் அஸ்ஸாயிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஅகில் (ரஹ்) அவர்களிடம் சென்று நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: "ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை (முஸாரஆ) தடை செய்தார்கள். பணத்திற்குப் பதிலாக நிலத்தை வாடகைக்கு விடுமாறு (முஆஜரா) உத்தரவிட்டார்கள். மேலும் "அதனால் குற்றமில்லை" என்றும் கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 21
பாடம் : 21 (பயிரிட்டுக்கொள்ள) நிலத்தை இரவலாக வழங்கல்.
3149. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், "என்னை ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களின் புதல்வரிடம் அழைத்துச் செல்லுங்கள். அவர்களிடம் அவர்களுடைய தந்தை ராஃபிஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நிலக்குத்தகை கூடாது என) அறிவித்த ஹதீஸைப் பற்றிக் கேளுங்கள் (அல்லது நான் கேட்க வேண்டும்)" என்றேன். இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் என்னைக் கடிந்துகொண்டார்கள்.
மேலும், அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பொதுவாக) அ(வ்வாறு நிலத்தைக் குத்தகைக்கு விடுவ)தைத் தடை செய்தார்கள் என நான் அறிந்திருந்தால், அதை நான் செய்திருக்க மாட்டேன். இது இவ்வாறிருக்க, இதைப் பற்றி மக்களில் நன்கு அறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட குத்தகைத் தொகையை வாங்கிக்கொள்வதைவிட, தம் சகோதரருக்கு இரவலாக (பயன்படுத்திக் கொள்ளுமாறு அதை)க் கொடுத்துவிடுவது சிறந்ததாகும்" என்று கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 21
3150. அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள், விளைச்சலில் ஒரு பகுதியைத் தமக்குத் தந்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் நிலத்தைக் குத்தகைக்கு (முகாபரா) விட்டு வந்தார்கள். நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், "அபூஅப்திர் ரஹ்மான்! இந்த "முகாபரா"வை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் "முகாபரா"வைத் தடை செய்தார்கள் என மக்கள் எண்ணுகிறார்கள்" என்று சொன்னேன்.
இதைக் கேட்ட தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அம்ரே! மக்களில் இதைப் பற்றி நன்கறிந்தவர் (இப்னு அப்பாஸ்) என்னிடம், "நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்யவில்லை. உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து குறிப்பிட்ட தொகையைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு அதை இரவலாகத் தருவதே சிறந்ததாகும் என்றே கூறினார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3151. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமது நிலத்தைக் குத்தகைக்குவிட்டு இன்னின்ன (குறிப்பிட்ட பணத்)தைப் பெறுவதைவிட, தம் சகோதரருக்கு இரவலாகத் தருவதே சிறந்ததாகும்.
இதன் அறிவிப்பாளரான இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இதுவே "ஹக்ல்" ஆகும்; அன்சாரிகளின் பேச்சு வழக்கில் இதையே "முஹாகலா" என்பர்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 21
3152. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரிடம் (உபரியாக) நிலம் உள்ளதோ அவர் (கைமாறு கருதாமல்) தம் சகோதரருக்கு இரவலாக அதை(ப் பயிரிட)க் கொடுப்பதே சிறந்ததாகும்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 21

பாடம் : 1 விளையும் கனிகள் மற்றும் தானியங்களில் ஒரு பகுதியைக் கொடுத்துவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் தோப்பைக் குத்தகைக்கு விடுவது.
3153. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை (இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3154. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான பழங்கள் மற்றும் தானியங்களில் பாதியை (தமது அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுக்கு வழங்கினார்கள். (இந்த வருமானத்திலிருந்தே) தம் துணைவியருக்கு வருடாந்திரச் செலவுத் தொகையாக பேரீச்சம் பழத்தில் எண்பது "வஸ்க்"குகளும் தொலி நீக்கப்படாத கோதுமையில் இருபது "வஸ்க்"குகளும் வழங்கிவந்தார்கள்.
உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, (யூதர்களை நாடு கடத்திவிட்டு) கைபர் நிலங்களை (மக்களிடையே) பங்கிட்டுக் கொடுத்தார்கள்; நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குத் தாம் (கைபரில்) நிலங்களையும் பாசன நீரையும் ஒதுக்கீடு செய்யவோ, அல்லது (வழக்கம் போலவே பேரீச்ச பழங்களிலும் கோதுமையிலும்) குறிப்பிட்ட "வஸ்க்"கு களுக்கு ஒவ்வோர் ஆண்டும் பொறுப்பேற்றுக்கொள்ளவோ தயார் என அறிவித்து உமர் (ரலி) அவர்கள் விருப்பமளித்தார்கள்.
(இதில்) நபியவர்களின் துணைவியர் இரு வேறு நிலைகளை மேற்கொண்டனர். அவர்களில் சிலர், நிலத்தையும் பாசன நீரையும் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். வேறுசிலர், ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட "வஸ்க்"குகளைப் பெற்றுக்கொள்வதைத் தேர்ந்தெடுத்தனர். நிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் அடங்குவர்.
அத்தியாயம் : 22
3155. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரில் உள்ள மரங்களையும் நிலங்களையும் "அவற்றின் விளைச்சலான தானியங்கள் மற்றும் பழங்களில் பாதியை (இஸ்லாமிய அரசுக்கு)க் கொடுத்துவிட வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபர்வாசிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்" என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆயினும், இந்த அறிவிப்பில், "ஆயிஷா (ரலி) அவர்களும் ஹஃப்ஸா (ரலி) அவர்களும் நிலத்தையும் பாசன நீரையும் தேர்ந்தெடுத்தவர்களில் அடங்குவர்" எனும் குறிப்பு இடம் பெறவில்லை. மேலும், இதில் "உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் துணைவியருக்குத் தாம் நிலங்களை ஒதுக்கீடு செய்யத் தயார் என அறிவித்து விருப்பமளித்தார்கள்" என இடம்பெற்றுள்ளது. பாசன நீரைப் பற்றிய குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 22
3156. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது, யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "நாங்கள் இங்கேயே தங்கி,இந்த நிலத்தில் பயிரிட்டு உழைக்கிறோம். இவற்றின் விளைச்சலான பழங்கள், தானியங்கள் ஆகியவற்றில் பாதியைப் பெற்றுக்கொள்கிறோம் (மீதிப்பாதியை அரசுக்குத் தந்துவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும் (காலம்)வரை நீங்கள் இங்கேயே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள்.
மற்ற விவரங்கள் மேற்கண்ட இரு ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த அறிவிப்பில், "கைபர் விளைச்சலில் கிடைத்த பழங்கள் (ஐந்து பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, போர்வீரர்களின்) பங்குகளுக்கேற்ப பங்கிடப்பட்டுவந்தன. ஐந்தில் ஒரு பாகத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துவந்தார்கள்" எனும் தகவல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 22
3157. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபர் வாழ் யூதர்களிடம் "அவர்கள் தம் நிலங்களில் தமது சொந்தச் செலவில் பயிரிட்டு உழைக்க வேண்டும்; விளையும் கனிகளில் பாதியை அல்லாஹ்வின் தூதரிடம் (பொது நிதியத்துக்காக) வழங்க வேண்டும்" எனும் நிபந்தனையின் பேரில் கைபரின் பேரீச்சமரங்களையும் நிலங்களையும் ஒப்படைத்தார்கள்.
அத்தியாயம் : 22
3158. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் யூதர்களையும் கிறித்தவர்களையும் "ஹிஜாஸ்" மாநிலத்திலிருந்து நாடு கடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோதே அங்கிருந்த யூதர்களை வெளியேற்றிவிட விரும்பினார்கள். ஏனெனில், அந்தப் பிரதேசம் வெற்றிகொள்ளப்பட்ட பின் அது அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் முஸ்லிம்களுக்கும் உரியதாகிவிட்டிருந்தது. ஆகவேதான், யூதர்களை அங்கிருந்து வெளியேற்ற விரும்பினார்கள். இந்நிலையில், யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "நாங்கள் இங்கேயே தங்கி, இந்த நிலங்களில் பயிரிட்டு உழைக்கும் பொறுப்பை ஏற்கிறோம். இவற்றின் விளைச்சலில் பாதியைப் பெற்றுக் கொள்கிறோம் (மீதியை மதீனா அரசுக்குச் செலுத்திவிடுகிறோம்); இதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
அவ்வாறே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதன்படி நாம் விரும்பும்வரை நீங்கள் இங்கே தங்கிப் பயிரிட அனுமதிக்கிறோம்" என்று கூறினார்கள். ஆகவே, உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் அந்த யூதர்களை "தைமா" "அரீஹா" (ஜெரிக்கோ) ஆகிய பகுதிகளுக்கு நாடுகடத்தி அனுப்பும்வரை அவர்கள் அங்கேயே (நிலங்களைப் பயிரிட்டு, வரி செலுத்தி) வசித்துவந்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
பாடம் : 2 மரம் நடுதல், பயிர் செய்தல் ஆகியவற்றின் சிறப்பு.
3159. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால் நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து வன விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். - இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 22
3160. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு முபஷ்ஷிர் அல்அன்சாரிய்யா (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்பிற்குச் சென்றார்கள். உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்களிடம், "இந்தப் பேரீச்ச மரங்களை நட்டுவைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறைமறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டுவைத்தார்)" என்று விடையளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒருவர் மரமொன்றை நட்டுவைத்து, அல்லது விதையொன்றை விதைத்துப் பயிர் செய்து அதிலிருந்து (வரும் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு மனிதனோ கால்நடையோ அல்லது (உயிரினம்) ஏதேனும் ஒன்றோ உண்டால், அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3161. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமான மனிதர் ஒரு மரத்தை நட்டுவைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து ஒரு வனவிலங்கோ அல்லது ஒரு பறவையோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றோ உண்டால், அதனால் அவருக்கு ஒரு (தர்மம் செய்ததற்கான) நன்மை கிடைக்காமல் இருப்பதில்லை.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22
3162. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் உம்மு மஅபத் (ரலி) அவர்களது பேரீச்சந்தோப்புக்குச் சென்றார்கள். அவரிடம், "உம்மு மஅபதே! இந்தப் பேரீச்சமரங்களை நட்டு வைத்தது யார்? முஸ்லிமா அல்லது இறை மறுப்பாளரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இல்லை; ஒரு முஸ்லிம்தாம் (நட்டு வைத்தார்)" என்று விடையளித்தார். நபி (ஸல்) அவர்கள், "முஸ்லிம் ஒரு மரத்தை நட்டுவைத்து, அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது ஒரு கால்நடையோ அல்லது ஒரு பறவையோ உண்டால், மறுமைநாள்வரை அது அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 22
3163. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் அம்ருந் நாகித் (ரஹ்) அவர்கள், அம்மார் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும், அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பிலும் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்" என்று இடம் பெற்றுள்ளது.
முஹம்மத் பின் ஃபுளைல் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களின் துணைவியார் கூறினார்" என இடம்பெற்றுள்ளது.
அபூமுஆவியா (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் சில நேரங்களில் "உம்மு முபஷ்ஷிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து கூறினார்கள்" எனவும், வேறு சில நேரங்களில் அவ்வாறு (உம்மு முபஷ்ஷிர் பெயர்) கூறாமலும் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவருமே மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ளதைப் போன்றே அறிவித்துள்ளனர்.
அத்தியாயம் : 22
3164. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது கனிகளை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால்,அதன் காரணத்தால் ஒரு தர்மம் (செய்ததற்கான பிரதிபலன்) அவருக்குக் கிடைக்காமல் இராது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 22