2985. சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, "ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்? ஆஸிமே! எனக்காக இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் (இது குறித்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை; அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குப் பெருத்த மன வேதனை அளித்தன.
ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பிவந்தபோது, அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து, "ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிரை நோக்கி, "நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை" என்றார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓயமாட்டேன்" என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள்.
பிறகு, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்,சொல்லுங்கள்?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் (வசனம்) அருளப்பெற்றுவிட்டது. ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்துவாரும்" என்றார்கள்.
(பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தபோது,அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தனர். அவர்கள் "லிஆன்” செய்து முடித்தபோது, உவைமிர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால், இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன்" என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.
இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
பிறகு இதுவே சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆனது.
அத்தியாயம் : 19
2986. மேற்கண்ட ஹதீஸ் சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் அல்அன்சாரி (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
மேலும், அதில் "உவைமிர் (ரலி) அவர்கள் தம் மனைவியைவிட்டுப் பிரிந்துகொண்டதே பின்னர் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொள்ளும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆயிற்று" என்பது விளக்க இடைச்சேர்ப்பாக இடம்பெற்றுள்ளது. மேலும், "லிஆன் நடந்தபோது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த ஆண் குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்ன பெண்ணின் மகன் என்று) அழைக்கப்படலாயிற்று. பின்னர் அப்பெண்ணிடமிருந்து மகனும் மகனிடமிருந்து அப்பெண்ணும் அவர்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடைமுறையும் வந்தது" என்று அதிகப்படியாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
2987. மேற்கண்ட ஹதீஸ் பனூ சாஇதா குலத்தவரான சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அன்சாரிகளில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால்...” என்று கேட்டார்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே தொடருகின்றன.
இந்த அறிவிப்பில், "எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்துச் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்து கொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன்" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மேலும், "(லிஆன் பிரமாணம் முடிந்ததும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையிலேயே அவளை விட்டும் அவர் பிரிந்துகொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "இதுவே "லிஆன்” செய்யும் ஒவ்வொரு தம்பதியரைப் பிரித்துவைக்கும் வழிமுறையாகும்” என்று கூறினார்கள் என்பதும் இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
2988. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது ஆட்சிக்காலத்தில் என்னிடம் "சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியர் பிரித்துவைக்கப்படுவார்களா? (அல்லது "லிஆன்” பிரமாணத்தை மொழிந்ததும் தானாக மணவிலக்கு ஏற்பட்டுவிடுமா?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, நான் (கூஃபாவிலிருந்து) புறப்பட்டு மக்காவிலிருந்த இப்னு உமர் (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அவர்களுடைய பணியாளிடம், "எனக்காக (உள்ளே வர) அனுமதி கேள்"என்றேன். "அவர்கள் மதிய ஓய்வு மேற்கொண்டிருக்கிறார்கள்" என அவர் பதிலளித்தார். எனது குரலைக் கேட்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், "இப்னு ஜுபைரா?" என்று கேட்டார்கள். நான் "ஆம்” என்றேன். "உள்ளே வாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ அலுவல்தான் உங்களை இந்த நேரத்தில் (என்னிடம்) கொண்டுவந்து சேர்த்திருக்க வேண்டும்" என்று கூறினார்கள்.
நான் உள்ளே சென்றேன். அப்போது அவர்கள் ஒட்டகத்தின் மேல் விரிக்கப்படும் விரிப்பொன்றை விரித்து, பேரீச்சநார் நிரப்பப்பட்ட ஒரு தலையணையில் சாய்ந்திருந்தார்கள். நான், "அபூ அப்திர் ரஹ்மான்! பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொண்ட தம்பதியர் பிரித்து வைக்கப்படுவார்களா?" என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)! ஆம். (அவர்கள் "லிஆன்” செய்த பிறகு பிரித்துவைக்கப்படுவார்கள்); இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) முதன் முதலில் கேட்டவர் இன்ன மனிதரின் புதல்வர் இன்ன மனிதர் ஆவார். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தம் மனைவி (அந்நிய ஆடவனுடன்) மானக்கேடான செயலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்? (அதை) அவர் (வெளியே) சொன்னால், ஒரு பெரிய விஷயத்தைச் சொன்னவராகி விடுவார். மௌனமாக இருந்தாலும்,அதைப் போன்ற ஒரு விஷயத்தில் மௌனமாக இருந்தவராகிவிடுவாரே?" என்று கேட்டார். அதற்குப் பதிலேதும் சொல்லாமல் நபி (ஸல்) அவர்கள் அமைதியாக இருந்தார்கள். அதன் பின்னர் அவர் கேட்டது (போன்றே ஒரு நிகழ்ச்சி) நடந்தபோது, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் எதைப் பற்றித் தங்களிடம் கேட்டேனோ அதன் மூலம் நானே சோதிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறினார். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், "தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாம் உண்மையாளர் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்" என்று தொடங்கி, "தன்மீது அல்லாஹ்வின் கோபம் ஏற்படட்டும் என்று ஐந்தாவதாக (கூறுவாள்)" (24:6-9) என்பது வரையிலான வசனங்களை அருளினான்.
அவற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மனிதருக்கு ஓதிக் காட்டி, அவருக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனைகளை) நினைவூட்டினார்கள்; "இம்மையின் தண்டனை மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அந்த மனிதர் "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நான் அவள்மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லவில்லை" என்றார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அழைத்து அவளுக்கு அறிவுரை கூறினார்கள்; (அல்லாஹ்வின் தண்டனையை) நினைவூட்டினார்கள்; "இம்மையின் தண்டனை மறுமையின் தண்டனையைவிட மிக எளிதானதாகும்” என்றும் தெரிவித்தார்கள். அதற்கு அப்பெண், "இல்லை; தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் பொய்யர்" என்று கூறினாள். எனவே, முதலில் அந்த ஆணிடமிருந்து (சாப அழைப்புப் பிரமாணத்தை) நபியவர்கள் ஆரம்பித்தார்கள். அவர் (தமது குற்றச்சாட்டில்) தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான்கு முறை உறுதிமொழிந்தார். ஐந்தாவது முறையில், (தனது குற்றச்சாட்டில்) தான் பொய்யராக இருந்தால் "அல்லாஹ்வின் சாபம் என்மீது உண்டாகட்டும்” என்று அவர் கூறினார்.
இரண்டாவதாக அந்தப் பெண்ணை அழைத்தார்கள். அவள் (தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வகையில்) "அவர் பொய்யர் ஆவார்” என நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உறுதிமொழிந்தாள். ஐந்தாவதாக "அவர் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளராக இருந்தால் என்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” என்று அவள் கூறினாள். பிறகு இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொண்ட தம்பதியர் பற்றி முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களது (ஆட்சிக்) காலத்தில் என்னிடம் வினவப்பட்டது. அதற்கு என்ன பதிலளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 19
2989. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட தம்பதியரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள்மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை" என்று சொன்னார்கள். உடனே அவர், "அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மணக்கொடையாக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப்பெற்றுக் கொள்ளலாமா)?" என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள்மீது நீர் பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக்கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகுதூரத்தில் உள்ளது" என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
2990. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (சாப அழைப்புப் பிரமாணத்திற்குப் பின்) பிரித்துவைத்தார்கள். பிறகு, "உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா?" என்று கேட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின் வருமாறு ஹதீஸ் ஆரம்பமாகிறது:
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) பற்றிக் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 19
2991. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஸ்அப் பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள், சாப அழைப்புப் பிரமாணம் செய்து கொண்ட தம்பதியரைப் பிரித்து வைக்கவில்லை. ஆகவே, இது குறித்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியர்) இருவரைப் பிரித்து வைத்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
2992. யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஒரு மனிதர் தம் மனைவியிடம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்தார்; பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரித்து வைத்தார்கள்; மேலும், குழந்தையைத் தாயிடம் சேர்த்தார்கள்" என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் தங்களுக்கு அறிவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள் "ஆம்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
2993. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்யவைத்தார்கள். பின்னர் அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
2994. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒரு மனிதர் வந்து, "தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்ட ஒருவர், (அது குறித்துப்) பேசினால் அவருக்கு நீங்கள் (அவதூறுச் சட்டப்படி) சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்று விட்டால், (பழிவாங்கல் சட்டப்படி) அவரை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அவர் மௌனமாக இருந்துவிட வேண்டும் என்றால்,ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு மௌனமாக இருக்க வேண்டுமா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்பேன்" என்று சொன்னார்.
மறுநாள் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அது குறித்து வினவினார்: "தம் மனைவியுடன் (அந்நிய) ஆண் ஒருவன் (தகாத உறவில்) இருப்பதைக் கண்ட ஒருவர், (அது தொடர்பாகப்) பேசினால் அவருக்கு நீங்கள் சாட்டையடி வழங்குவீர்களா? அல்லது அவனை அவர் கொன்றுவிட்டால், நீங்கள் அவரைக் கொன்றுவிடுவீர்களா?அல்லது அவர் மௌனமாக இருப்பதானால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு மௌனமாக இருந்துவிட வேண்டியதுதானா?" என்று கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! (இந்தப் பிரச்சினையில் தெளிவின் வாசலைத்) திறந்திடுவாயாக!" என்று பிரார்த்திக்கலானார்கள். அப்போதுதான் "தம்மைத் தவிர வேறு சாட்சிகள் இல்லாத நிலையில் தம் மனைவியர்மீது பழி சுமத்துவோர், தாங்கள் உண்மையாளர்கள் என்று அல்லாஹ்வின் மீது நான்கு தடவை (சத்தியம் செய்து) சாட்சியமளிக்க வேண்டும்" (24:6-9) என்று தொடங்கும் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) தொடர்பான வசனங்கள் அருளப்பெற்றன.
பின்னர் மக்களில் அந்த மனிதரே (தமது சொந்த வாழ்வில்) அந்தப் பிரச்சினையின் மூலம் சோதிக்கப்பட்டார். எனவே,அவரும் அவருடைய மனைவியும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சாப அழைப்புப் பிரமாணத்தை மொழிந்தனர். அந்த ஆண், தாம் உண்மையாளர் என அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான்கு தடவைகள் சாட்சியமளித்தார். பிறகு ஐந்தாவது தடவையில் அவர் "நான் பொய்யனாயிருந்தால் என்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று சாபமிட்டார்.
பின்னர் அந்தப் பெண் சாப அழைப்புப் பிரமாணத்தைச் சொல்லப்போனாள். அப்போது அவளிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சற்று பொறு!” என்றார்கள். ஆனால், அவள் மறுத்துவிட்டு, சாப அழைப்புப் பிரமாணத்தை மொழிந்தாள். பின்னர் அவர்கள் இருவரும் திரும்பிச் சென்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவள் தொங்கும் முடிகள் கொண்ட கறுப்பு நிறக்குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடும்" என்றார்கள். அவ்வாறே அப்பெண் தொங்கிய முடியுடைய கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
2995. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் (லிஆன் பற்றிக்) கேட்டேன். (ஏனெனில்,) அதைப் பற்றிய அறிவு அவர்களிடம் இருப்பதாக நான் கருதினேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள், (கர்ப்பவதியான) தம் மனைவிக்கு ஷரீக் பின் சஹ்மா என்பாருடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்கள். ஷரீக் பின் சஹ்மா, பராஉ பின் மாலிக் (ரலி) அவர்களின் (பால்குடி) தாய்வழிச் சகோதரராய் இருந்தார். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களே இஸ்லாத்தில் ஆரம்பமாக "லிஆன்” செய்தவர் ஆவார்கள். ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் செய்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்தப் பெண்ணைக் கவனித்துவாருங்கள்; இவள் (சுருள் சுருளாக இல்லாமல்) படிந்த தொங்கலான முடியுடைய, கலங்கிய கண்களுடைய வெள்ளை நிறக்குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஹிலால் பின் உமய்யாவுக்கு உரியதாகும்; சுருட்டை முடியுடைய, மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால், அது ஷரீக் பின் சஹ்மாவுக்கு உரியதாகும்" என்றார்கள். பின்னர் அப்பெண் சுருட்டை முடியுடைய மெலிந்த கணைக் கால்கள் கொண்ட கறுப்பு நிறக் குழந்தையையே பெற்றெடுத்தாள் என எனக்குத் தகவல் எட்டியது.
அத்தியாயம் : 19
2996. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
சாப அழைப்புப் பிரமாணம் (நடைமுறையில் வருவதற்கு முன் ஒரு முறை மனைவிமீது கணவன் விபசாரக்குற்றம் சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆவேசமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச்சென்றார். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், "நான் (ஆவேசமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
பின்னர் ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அவர் தம் மனைவியை எந்த நிலையில் கண்டார் என்பதைப் பற்றித் தெரிவித்தார்கள்.
(குற்றச்சாட்டைக் கொண்டுவந்த) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறமுடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானராகவும், படிந்த முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும், அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும், கணைக்கால் புடைத்தவராகவும் இருந்தார்.
(இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைக் தருவாயாக!" என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்ய வைத்தார்கள்.
(இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்ட) அவையில் இருந்த ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னது இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்து கொண்டே தகாத உறவு கொண்டுவந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்)" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில், "அதிகச் சதைப்பிடிப்பு உள்ளவராகவும்” என்பதற்குப் பின் "கடும் சுருள் முடியுடையவராகவும் இருந்தார்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
2997. காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் "நான் சாட்சியல்லாமல் (ஒருவருக்குக்) கல்லெறி தண்டனை நிறைவேற்றுபவனாயிருந்தால் இதோ இவளுக்கு நிறை வேற்றியிருப்பேன்” என்று கூறியது அவ்விருவர் தொடர்பாகத்தானா?" என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இல்லை; அவள் தகாத உறவில் ஈடுபட்டாள் எனப் பகிரங்கமாகப் பேசப்பட்டுவந்த பெண் ஆவாள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் இப்னு அபீஉமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "(பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொண்ட அந்தத் தம்பதியர் குறித்து) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்டேன்" என ஹதீஸ் ஆரம்பமாகிறது.
அத்தியாயம் : 19
2998. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா அல்அன்சாரி (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா, சொல்லுங்கள்?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை (கொல்லக் கூடாது)" என்று பதிலளித்தார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "இல்லை (அவனைக் கொல்லத்தான் தோன்றும்); சத்திய (மார்க்க)த்தால் தங்களைக் கண்ணியப்படுத்தியவன் மீது ஆணையாக!" என்றார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
2999. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரும்வரை நான் அவனுக்காகக் காத்திருக்க வேண்டியது தானா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
3000. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருப்பதைக் கண்டால், நான்கு சாட்சிகளைக் கொண்டு வரும்வரை நான் அவனைத் தொடக்கூடாதா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்" என்றார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "இல்லை; தங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! நானாக இருந்தால்,அதற்கு முன்பே வாளால் அவனை வெட்டிவிடுவேன்" என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்! அவர் ரோஷக்காரர். ஆனால், நான் அவரை விட ரோஷக்காரன்; அல்லாஹ் என்னைவிட ரோஷக்காரன்" என்றார்கள்.
அத்தியாயம் : 19
3001. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "என் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்ட நிலையில்) இருக்க நான் கண்டால், வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்" என்று சொல்ல, இந்தச்செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், "சஅத் அவர்களின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரைவிட அதிக ரோஷமுள்ளவன்; அல்லாஹ் என்னைவிடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ்வின் ரோஷம் காரணமாகவே அவன் வெளிப்படையான மற்றும் மறைவான எல்லா மானக் கேடான செயல்களையும் தடை செய்துள்ளான். அல்லாஹ்வைவிட ரோஷக்காரர் வேறெவருமில்லை; (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புகின்றவர் அல்லாஹ்வைவிட வேறெவரும் இல்லை. ஆகவேதான், (தன்) தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் (இவ்விரு அம்சங்களுடன்) அல்லாஹ் அனுப்பிவைத்தான். அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர். அதனால்தான், அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
3002. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ ஃபஸாரா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான குழந்தையைப் பிரசவித்துள்ளாள் (அது என் குழந்தையா என்பதில் எனக்குச் சந்தேகம் உள்ளது)" என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அவர், "ஆம்" என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு" என்றார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர், "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எப்படி வந்தது?" என்று நபியவர்கள் கேட்க, அவர் "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம்" என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், "(உன்னுடைய) இந்தக் குழந்தையும் அதன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
3003. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் மஅமர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர் "அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி கறுப்பான மகனைப் பிரசவித்துள்ளாள்” என்று, அது தனது குழந்தை அல்ல என்பதைப் போன்று சாடையாகக் கேட்டார்" என்று இடம்பெற்றுள்ளது. ஹதீஸின் இறுதியில் "அவன் தம்முடையவன் அல்லன் என்று மறுக்க அவரை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்க வில்லை" என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 19
3004. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்துள்ளாள்; அவனை நான் (என் மகன் என ஏற்க மனத்தளவில்) மறுத்துவிட்டேன்" என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?" என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி "ஆம்” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள் "அவற்றின் நிறம் என்ன?" என்று கேட்டார்கள். அவர் "சிவப்பு” என்று சொன்னார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "ஆம்" என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு எப்படி வந்தது?" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "அந்த ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!" என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(உன்னுடைய) இந்த மகனும் அவன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக்கூடும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 19