2478. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். பிறகு, "இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்" என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 48 (ஹாஜிகள்) துல்ஹஜ் பத்தாம் நாளில் முஸ்தலிஃபாவில் சுப்ஹுத் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) அதிக இருட்டிலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே அவ்வாறு ஆரம்ப நேரத்தில் தொழ வேண்டும்.
2479. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு)நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன் இருட்டிலேயே தொழுதது" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 49 பெண்கள் (முதியோர், நோயாளிகள்) உள்ளிட்ட பலவீனர்களை, கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே இரவின் இறுதியில் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது விரும்பத்தக்கதாகும்; மற்றவர்கள் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றும்வரை முஸ்தலிஃபாவிலேயே தங்கியிருப்பது விரும்பத்தக்கதாகும்.
2480. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குத்) தாம் புறப்பட்டுச் செல்ல சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்தலிஃபா இரவில் அனுமதி கேட்டார்கள்- (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை சுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு அவர்கள் (சுப்ஹுத் தொழுதுவிட்டுப்) புறப்படவே நாங்களும் புறப்பட்டுச் சென்றோம்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று முன்பே சென்றதைப் போன்று, நானும் அனுமதி பெற்றிருந்தால் வேறெந்த மகிழ்ச்சியையும்விட அது எனக்கு மிகவும் உவப்பானதாய் இருந்திருக்கும்.
இதன் அறிவிப்பாளரான காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இந்த ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள "ஸபிதா" எனும் சொல்லுக்கு "கனத்த உடலுடையவர்" என்று பொருள்.
அத்தியாயம் : 15
2481. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
சவ்தா (ரலி) அவர்கள் கனத்த உடலுடைய மெதுவாக நடக்கும் பெண்ணாக இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதிகேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.
சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!
இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஆயிஷா (ரலி) அவர்கள் இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2482. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் சுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே "ஜம்ரா"வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்" என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், "சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 15
2483. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2484. அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா இல்லத்தின் அருகே இருந்தபோது, என்னிடம் "சந்திரன் மறைந்துவிட்டதா?" என்று கேட்டார்கள். நான் "இல்லை" என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு "மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?"என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் "ஆம் (மறைந்துவிட்டது)" என்றேன். "என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு" என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் "ஜம்ரா"வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், "அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்" என்றேன். அவர்கள், "(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்" என்று சொன்னார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "இல்லை, மகனே! அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள், பயணத்திலிருந்த தம் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2485. சாலிம் பின் ஷவ்வால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2486. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் இவ்வாறே செய்துவந்தோம். (அதாவது) "ஜம்உ" விலிருந்து மினாவிற்கு இருளிலேயே (விடியலுக்கு முன்பே) புறப்பட்டுச் செல்வோம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அம்ர் பின் முஹம்மத் அந்நாகித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ("ஜம்உ" என்ப தன் மற்றொரு பெயரான) "முஸ்தலிஃபா விலிருந்து..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2487. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பலவீனர்(களான பெண்)களுடன்" அல்லது "பயணச் சுமைகளுடன்" என்னையும் "ஜம்உ" (முஸ்தலிஃபா)விலிருந்து (மினாவிற்கு) இரவிலேயே அனுப்பிவைத்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2488. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவன் ஆவேன்.
இதை உபைதுல்லாஹ் பின் அபீயஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2489. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் குடும்பத்துப் பலவீனர்களை முன்கூட்டியே (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள். அவர்களில் நானும் ஒருவனாயிருந்தேன்.
இதை அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
2490. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே தம் பயணச்சாமான்களுடன் என்னை (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்கு) அனுப்பி வைத்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள் என அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவு நன்கு இருக்கவே) நீண்ட இரவில் என்னை (மினாவிற்கு) அனுப்பிவைத்தார்கள்" என்று கூறினார்கள் எனும் செய்தி தங்களுக்கு எட்டியதா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள் "இல்லை; மேற்கண்டவாறு அதிகாலைக்கு முந்தைய (சஹர்) நேரத்திலேயே என்னை அனுப்பிவைத்தார்கள் என்று மட்டுமே கூறினார்கள்" என்றார்கள். நான் அவரிடம், "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நாங்கள் ஃபஜ்ருக்கு முன்பே ஜம்ராவில் கல்லெறிந்தோம் என்று கூறினார்களா?" என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்று விடையளித்தார்கள். "ஃபஜ்ரை எங்கு தொழுவித்தார்கள்?" என்று நான் கேட்க, "இல்லை; மேற்கண்டவாறு மட்டுமே கூறினார்கள்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2491. சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பிவிடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் "மஷ்அருல் ஹராம்" எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் "ஜம்ரா"வில் கல்லெறிவர். "(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதி யளித்துள்ளார்கள்"என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 50 "பத்னுல் வாதி" பள்ளத்தில் மக்கா தமக்கு இடப் பக்கமிருக்கும்படி நின்று, "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல்லெறிவதும், ஒவ்வொரு கல்லை எறியும்போது தக்பீர் கூறுவதும்.
2492. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தில் நின்று "ஜம்ரத்துல் அகபா"வின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், "மக்கள் மேற்பரப்பில் நின்றல்லவா கல்லை எறிகின்றனர்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது ஆணையாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ (அந்த அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2493. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீதிருந்தபடி, "ஜிப்ரீல் (அலை) அவர்கள் தொகுத்தளித்த முறைப்படி குர்ஆனைத் தொகு(த்துப் பதிவு செய்யு)ங்கள். (அல்பகரா அத்தியாயம், அந்நிசா அத்தியாயம், ஆலு இம்ரான் அத்தியாயம் என்றெல்லாம் கூறுவதைத் தவிர்த்து) பசுமாட்டைப் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், மகளிர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம், இம்ரானின் சந்ததியர் பற்றிக் குறிப்பிடும் அத்தியாயம் (எனப் பெயரிட்டு, குர்ஆன் வசனங்களை ஜிப்ரீல் கொண்டுவந்த வரிசை முறைப்படி பதிவு செய்யுங்கள்)" என்றார்.
நான் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களைச் சந்ததித்தபோது ஹஜ்ஜாஜ் கூறியதைத் தெரிவித்தேன். அப்போது இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜாஜைக் கடிந்துரைத்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நான் (ஹஜ்ஜின் போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (மினாவில்) "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்று அதனை ஒட்டியுள்ள "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் இறங்கி ஜம்ராவை நோக்கி நின்று அதன் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீரும் கூறினார்கள். அப்போது அவர்களிடம் நான், "அபூஅப்திர் ரஹ்மான்! மக்கள் இப்பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்றவாறு கல்லை எறிகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல் பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்று விடையளித்தார்கள்.
- மேற்கண்ட செய்தி மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "ஹஜ்ஜாஜ், "அல்பகரா அத்தியாயம் எனச் சொல்லாதீர்கள்" என்று கூறியதைக் கேட்டேன் என அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாக அறிவிப்பு ஆரம்பிக்கிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட அறிவிப்பில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 15
2494. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடன் ஹஜ் செய்தேன். அவர்கள் இறையில்லம் கஅபா தமக்கு இடப்பக்கமாகவும், மினா தமக்கு வலப்பக்கமாகவும் இருக்கும்படி (பத்னுல் வாதி பள்ளத்தாக்கில்) நின்று ஜம்ராவின் மீது ஏழு சிறு கற்களை எறிந்தார்கள். மேலும், "அல்பகரா அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் (கல்லை எறிந்தபடி) நின்றிருந்த இடம் இதுதான்" என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2495. மேற்கண்ட செய்தி மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "ஜம்ரத்துல் அகபா"விற்குச் சென்ற போது..." என்று அறிவிப்பு தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2496. அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஹஜ்ஜின்போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "பத்னுல் வாதி" பள்ளத்தாக்கில் நின்று (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் "மக்கள் பள்ளத்தாக்கின் மேற்பரப்பில் நின்று ஜம்ராவின் மீது கல்லை எறிகின்றனரே? (ஆனால் தாங்கள் பள்ளத்தில் நின்று கல்லை எறிகின்றீர்களே?)" என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! "அல்பகரா" அத்தியாயம் எவருக்கு அருளப்பெற்றதோ அவர்கள் இங்கிருந்ததுதான் (ஜம்ராவின் மீது) கல்லை எறிந்தார்கள்" என்று பதிலளித்தார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 51 நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் வாகனத்தில் அமர்ந்தவாறு "ஜம்ரத்துல் அகபா"வின் மீது கல் எறிவது விரும்பத் தக்கதாகும் என்பதும், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து) கற்றுக்கொள்ளுங்கள்" என்ற நபி (ஸல்) அவர்களின் சொல்லின் விளக்கமும்.
2497. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத்துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா,) செய்யமாட்டேனா என்பதை அறியமாட்டேன்" என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15