2428. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) தொங்கோட்டம் ஓடியதும், இறையில்லத்தைச் சுற்றிவரும் போது விரைந்து நடந்ததும் இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
பாடம் : 40 (கஅபாவின்) இரு யமனிய மூலைகளைத் தொட்டு முத்தமிடலே விரும்பத் தக்கதாகும்; மற்ற இரு (ஷாமிய) மூலைகளை அல்ல.
2429. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இரு யமனிய மூலைகளைத் தவிர,இறையில்லம் கஅபாவில் வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2430. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்" மூலையையும், அதையொட்டி ஜுமஹியரின் குடியிருப்புகளை நோக்கி அமைந்துள்ள (ருக்னுல் யமானீ) மூலையையும் தவிர வேறெந்த மூலைகளையும் தொட்டு முத்தமிட மாட்டார்கள்.
அத்தியாயம் : 15
2431. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவில்) ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய இரு மூலைகளைத் தவிர வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிடமாட்டார்கள்.
அத்தியாயம் : 15
2432. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கூட்ட நெரிசலுள்ள நேரத்திலும் கூட்ட நெரிசலற்ற நேரத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருக்னுல் யமானீ, ஹஜருல் அஸ்வத் ஆகிய இவ்விரு மூலைகளையும் தொட்டு முத்தமிட்டதைப் பார்த்ததிலிருந்து நானும் அவ்விரண்டு மூலைகளையும் முத்தமிடுவதைக் கைவிட்டதில்லை.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2433. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத் தமது கையால் தொட்டு, பின்னர் தமது கையை முத்தமிட்டதை நான் கண்டேன். மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததை நான் பார்த்ததிலிருந்து நானும் அவ்வாறு செய்வதைக் கைவிட்ட தில்லை" என இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2434. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ ஆகிய) இவ்விரு யமனிய மூலைகளைத் தவிர (கஅபாவின்) வேறெந்த இடத்தையும் தொட்டு முத்தமிட்டதை நான் கண்டதில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 41 தவாஃபின்போது ஹஜருல் அஸ்வத்தை முத்தமிடுவது விரும்பத்தக்கதாகும்.
2435. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டு விட்டு, "அல்லாஹ்வின் மீதாணையாக! நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2436. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, "நான் உன்னை முத்தமிடுகிறேன். (ஆனால்,) நீ ஒரு கல் என்பதை நான் நன்கு அறிவேன். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டேன். (எனவே நானும் உன்னை முத்தமிட்டேன்)" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2437. அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முன்தலை வழுக்கையானவர் (அதாவது உமர் (ரலி) அவர்கள்), ஹஜருல் அஸ்வதை முத்தமிடும் போது, "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உன்னை முத்தமிடுகிறேன். நீ தீங்கோ நன்மையோ செய்ய முடியாத ஒரு கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் உன்னை முத்தமிட்டிருக்கமாட்டேன்"என்று கூறியதை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் முஹம்மத் பின் அபீபக்ர் அல்முகத்தமீ, அபூகாமில் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "சின்ன வழுக்கத் தலையரை நான் பார்த்தேன்" என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 15
2438. ஆபிஸ் பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முத்தமிட்டுவிட்டு, "நான் உன்னை முத்தமிடுகிறேன்; நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிடுவதை நான் கண்டிராவிட்டால் நான் உன்னை முத்தமிட்டிருக்க மாட்டேன்" என்று கூறியதை நான் கண்டேன்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2439. சுவைத் பின் ஃகஃபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வதை முகம் பதித்து முத்தமிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடுகொண்டிருந்ததை நான் கண்டேன். (எனவே உன்னை நான் முத்தமிடுகிறேன்)" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட தகவல் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "ஆயினும், அபுல்காசிம் (முஹம்மத் - ஸல்) அவர்கள் உன்னிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை நான் கண்டேன்" என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது; "முகம் பதித்தார்கள்" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
பாடம் : 42 ஒட்டகம் முதலான வாகனப் பிராணிகள் மீதமர்ந்து தவாஃப் செய்யலாம்; வாகனத்திலிருப்பவர் முனை வளைந்த கைத்தடி போன்றவற்றால் ஹஜருல் அஸ்வதைத் தொ(ட்டு முத்தமி)டலாம்.
2440. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீதமர்ந்து தவாஃப் செய்தார்கள். அப்போது,முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2441. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லத்தைச் சுற்றிவந்தார்கள்; அப்போது அவர்கள் தமது முனை வளைந்த கைத்தடியால் ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். மக்கள் தம்மைப் பார்(த்து ஹஜ்ஜின் கிரியைகளைப் படி)க்க வேண்டும்; தம்மிடம் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும்;அதற்கேற்ப தாம் மக்களின் பார்வையில் படவேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.
அத்தியாயம் : 15
2442. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது வாகனத்தின் மீதமர்ந்து இறையில்லம் கஅபாவையும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையேயும் சுற்றிவந்தார்கள். மக்கள் தம்மைப் பார்(த்து ஹஜ்ஜின் கிரியைகளைப் படி)க்க வேண்டும்; தம்மிடம் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும்; (அதற்கேற்ப) தாம் மக்களின் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே (வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்). ஏனெனில், அப்போது மக்கள் (திரளாக) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அலீ பின் கஷ்ரம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "தம்மிடம் அவர்கள் (மார்க்க விளக்கங்கள்) கேட்க வேண்டும் என்பதற்காக" என்பது மட்டும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 15
2443. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "விடைபெறும்" ஹஜ்ஜின்போது தமது ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்; அப்போது (கைத்தடியால்) ஹஜருல் அஸ்வதைத் தொட்(டு, முத்தமிட்)டார்கள். (கூட்ட நெரிசலில்) தம்மைவிட்டு மக்கள் விரட்டியடிக்கப்படுவதை அவர்கள் வெறுத்ததே அ(வர்கள் வாகனத்தில் அமர்ந்திருந்த)தற்குக் காரணமாகும்.
அத்தியாயம் : 15
2444. அபுத்துஃபைல் அலீ பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்தபோது ஹஜருல் அஸ்வதைத் தம்மிடமிருந்த முனை வளைந்த கைத்தடியால் தொட்டு, அந்தக் கைத்தடியை முத்தமிட்டதை நான் கண்டேன்.
அத்தியாயம் : 15
2445. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நான் உடல் நலிவுற்றுள்ளேன்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், "நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றிவருவாயாக!" என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றிவந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அத்தூர்" எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் (சுப்ஹுத் தொழுகை) தொழுதுகொண்டிருந்தார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 43 ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடுவது ("சயீ" செய்வது) முக்கியக் கடமையாகும்; அதைச் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது.
2446. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "ஒருவர் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் அவர்மீது குற்றமில்லை என்று நான் கருதுகிறேன்" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?" என்று கேட்டார்கள். நான், "ஏனெனில், அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) என்று கூறுகின்றான்" என்றேன்.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத மனிதரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமையாக்கமாட்டான். அவ்விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்றமில்லை என்றிருந்தால், நீ கூறும் கருத்து வரும். ("சுற்றுவது குற்றமன்று" என்றே குர்ஆனில் வந்துள்ளது.) இந்த வசனம் ஏன் அருளப்பெற்றதென உனக்குத் தெரியுமா?அறியாமைக் காலத்தில் அன்சாரிகள் கடலோரத்தில் அமைந்திருந்த "இசாஃப்", "நாயிலா" ஆகிய சிலைகளுக்காக "இஹ்ராம்" கட்டிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றுவர்; பின்னர் தலையை மழித்துக் கொள்வர். இஸ்லாம் வந்தபோது அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதை அன்சாரிகள் வெறுத்தனர். அறியாமைக் காலத்தில் தாம் செய்துவந்த ஒரு காரியம் என்பதால் அவர்கள் அதை வெறுத்தனர். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள்" என்று தொடங்கும் (2:158ஆவது) வசனத்தை இறுதிவரை அருளினான். பின்னர் அன்சாரிகள் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2447. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், "நான் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராமலிருப்பதில் என்மீது குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன்" என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், "ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?" என்று கேட்டார்கள். நான், "ஏனெனில் அல்லாஹ் "ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று" (2:158) என்று கூறுகின்றான்" என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: "அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை" என்றிருந்தால் நீ கூறும் கருத்து வரும். அன்சாரிகள் சிலர் தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது. அவர்கள் அறியாமைக் காலத்தில் "இஹ்ராம்" கட்டினால் (மதீனாவிற்கு அருகில் "முஷல்லல்"எனும் குன்றிலிருந்த) "மனாத்" எனும் சிலைக்காக "இஹ்ராம்" கட்டுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கருதவில்லை.
நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்தபோது அதைப் பற்றி நபியவர்களிடம் தெரிவித்தனர். அப்போதுதான் அல்லாஹ் இந்த (2:158ஆவது) வசனத்தை அருளினான். என் ஆயுள் மீது அறுதியாக! ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராதவரின் ஹஜ்ஜை அல்லாஹ் முழுமையாக்குவதில்லை.
அத்தியாயம் : 15