பாடம் : 36 ரமளான் மாதத்தில் உம்ராச் செய்வதன் சிறப்பு.
2408. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "எங்களிடம் நீர் இறைப்பதற்கான இரண்டு ஒட்டகங்கள் மட்டுமே உள்ளன; ஓர் ஒட்டகத்தில் என் கணவரும் மகனும் ஏறி ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர். மற்றோர் ஒட்டகத்தை எங்களுக்காக அவர் விட்டுச் சென்றுள்ளார். அதன் மூலம் நாங்கள் நீர் இறைத்துக்கொண்டிருக்கிறோம்" என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ரமளான் மாதம் வந்துவிட்டால் அப்போது நீ உம்ராச் செய்துகொள். ஏனெனில், ரமளானில் உம்ராச் செய்வது ஹஜ்ஜுக்கு நிகரான (பலனுடைய)தாகும்" என்று கூறினார்கள்.
இதன் அறிவிப்பாளர் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அப்பெண்ணின் பெயரைக் குறிப்பிட்டார்கள்; ஆனால், அதை நான் மறந்துவிட்டேன்.
அத்தியாயம் : 15
2409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்மு சினான் எனப்படும் ஓர் அன்சாரிப் பெண்ணிடம், "நீ எங்களுடன் ஹஜ் செய்வதற்கு உனக்கு என்ன தடை?" என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி, "என் பிள்ளையின் தந்தையிடம் (அதாவது என் கணவரிடம்) தண்ணீர் இறைக்கும் இரு ஒட்டகங்கள் இருந்தன. ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டனர்; மற்றொன்றில் எங்களின் அடிமை தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறார்" என்றார். நபி (ஸல்) அவர்கள், "ரமளானில் செய்யப்படும் ஓர் உம்ரா ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்; அல்லது என்னோடு ஹஜ் செய்வதற்கு நிகரானதாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 37 மக்காவினுள் மேற்புறக்கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைவதும் கீழ்ப்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறுவதும் விரும்பத் தக்கதாகும்; (பொதுவாக) ஓர் ஊருக்குள் நுழையும் வழி ஒன்றாகவும், வெளியேறும் வழி வேறொன்றாகவும் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
2410. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அஷ்ஷஜரா" எனும் இடத்தின் வழியாக (மதீனாவிலிருந்து) வெளியேறுவார்கள். (திரும்பும்போது) "அல் முஅர்ரஸ்" எனும் இடத்தின் வழியாக நுழைவார்கள். மக்காவிற்குள் செல்லும்போது மேற்புறக்கணவாய் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து, கீழ்ப்புறக் கணவாய் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறுவார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்பத்ஹாவிலுள்ள அஸ்ஸனிய்யத்துல் உல்யா வழியாக நுழைவார்கள்" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2411. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்கு வந்த போது, அதன் மேற்புறம் (அஸ்ஸனிய்யத்துல் உல்யா) வழியாக நுழைந்து அதன் கீழ்ப்புறம் (அஸ்ஸனிய்யத்துஸ் ஸுஃப்லா) வழியாக வெளியேறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2412. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலுள்ள "கதாஉ" (எனும் கணவாய்) வழியாக நுழைந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் (மேற்பகுதியிலுள்ள "கதாஉ", கீழ்ப் பகுதியிலுள்ள "குதாஉ" ஆகிய) அவ்விரண்டு வழிகளிலும் நுழைவார்கள்; பெரும்பாலும் "கதாஉ" (எனும் கணவாய்) வழியாகவே நுழைவார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 38 மக்காவினுள் நுழைய விரும்புகின்றவர் "தூத் தவா" எனும் இடத்தில் இரவில் தங்குவதும், மக்காவினுள் நுழைவதற்காகக் குளிப்பதும், பகல் நேரத்தில் அதனுள் நுழைவதும் விரும்பத்தக்கவையாகும்.
2413. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "தூத் தவா" எனுமிடத்தில் இரவில் தங்கி விட்டுக் காலையில் மக்காவில் நுழைந்தார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு உமர் (ரலி) அவர்களும் அவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "சுப்ஹுத் தொழுகும் வரை தங்கியிருப்பார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 15
2414. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தால், "தூத் தவா"வில் இரவில் தங்காமல் இருக்கமாட்டார்கள். காலையில் (சுப்ஹுத் தொழுது) குளித்துவிட்டுப் பின்னர் பகல் நேரத்தில் மக்காவினுள் நுழைவார்கள். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே செய்வார்கள் என அவர்கள் குறிப்பிடுவார்கள்.
அத்தியாயம் : 15
2415. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும்போது "தூத் தவா" எனும் இடத்தில் இறங்குவார்கள்;சுப்ஹுத் தொழும்வரை அங்கேயே இரவில் தங்கியிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மீது அமைந்துள்ளது. அங்கு தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடம் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமன்று. அந்தப் பள்ளி வாசலுக்குக் கீழ்ப்புறமாக அமைந்துள்ள கெட்டியான மேடே (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத) அந்த இடமாகும்.
அத்தியாயம் : 15
2416. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ("தூத் தவா"வில்) கஅபாவின் திசையில் அமைந்த ஓர் உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கி (அல்லாஹ்வை வணங்கி)னார்கள். (அதாவது தற்போது) அங்கு கட்டப்பட்டுள்ள பள்ளிவாசலை, மேட்டுப் புறத்தில் அமைந்த தொழும் இடத்திற்கு இடப்பக்கமாக ஆக்கிக்கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இடம், கறுப்பு மேட்டிற்குக் கீழே சுமார் பத்து முழம் தள்ளி இருந்தது. உமக்கும் கஅபாவிற்கும் இடையே அமைந்த உயரமான மலையின் இரு குன்றுகளை நோக்கித் தொழுதார்கள். - இதை நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 15
பாடம் : 39 உம்ராவின் தவாஃபிலும், ஹஜ்ஜின் முதல் தவாஃபிலும் விரைந்து நடப்பது ("ரமல்" செய்வது) விரும்பத்தக்கதாகும்.
2417. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் முதல் தவாஃப் செய்யும் போது, (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதரணமாக) நடப்பார்கள். ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போது "பத்னுல் மசீல்" பகுதியில் மட்டும் விரைந்து நடப்பார்கள்.
இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்வார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2418. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ அல்லது உம்ராவிற்காகவோ (மக்காவிற்கு) வந்ததும் முதலில் தவாஃப் செய்வார்கள்; அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதராணமாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள்.
அத்தியாயம் : 15
2419. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது அவர்களை நான் பார்த்தேன்; அவர்கள் முதலாவது தவாஃபில் "ஹஜருல் அஸ்வதை"த் தொட்டு முத்தமிட்டார்கள். ஏழு சுற்றுகளில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.
அத்தியாயம் : 15
2420. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகளில் "ஹஜருல் அஸ்வத்" முதல் (மறுபடியும்) "ஹஜருல் அஸ்வத்"வரை விரைவாக நடந்தார்கள். (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதரணமாக) நடந்தார்கள்.
அத்தியாயம் : 15
2421. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் (கஅபாவைச் சுற்றி வரும்போது) "ஹஜருல் அஸ்வத்" முதல் "ஹஜருல் அஸ்வத்" வரை விரைவாக நடந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறே செய்தார்கள் என்றும் கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2422. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வதி"லிருந்து "ஹஜருல் அஸ் வத்"வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்ததை நான் பார்த்தேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2423. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தவாஃபின்போது) "ஹஜருல் அஸ்வதி"லிருந்து "ஹஜருல் அஸ்வத்"வரை தவாஃபின் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 15
2424. அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பதும் பிந்திய நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடப்பதுமான இந்த "ரமல்" பற்றி என்ன கருதுகிறீர்கள்? அது நபிவழியா? ஏனெனில், உங்களுடைய சமூகத்தார் அதை நபிவழியெனக் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள்.
நான் "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல் (லின் பொருள்) என்ன?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு வந்தபோது இணைவைப்பாளர்கள், "முஹம்மதும் அவருடைய தோழர்களும் (மதீனாவிற்குப் போய்) மெலிந்துவிட்டதால் அவர்களால் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வர முடியாது" என்று கூறினர். நபியவர்கள் மீது இணைவைப்பாளர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் தவாஃபின்போது (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடக்குமாறும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடக்குமாறும் கட்டளையிட்டார்கள்" என்றார்கள்.
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "வாகனத்தில் அமர்ந்தவாறு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவது (சயீ) பற்றி எனக்குக் கூறுங்கள். அது நபிவழியா? ஏனெனில், உங்கள் சமூகத்தார் அதையும் நபிவழியெனக் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள். நான், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும் எனும் உங்களுடைய சொல்(லின் பொருள்) என்ன?" என்று கேட்டேன்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜுக்காக மக்கா வந்தபோது) அவர்களைச் சுற்றிலும் ஏராளமான மக்கள் "இதோ முஹம்மத்; இதோ முஹம்மத்" எனக் கூறியவாறு திரண்டுவிட்டனர். இல்லங்களிலிருந்து இளம்பெண்கள்கூட வெளியே வந்து விட்டனர். (பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்பாக மக்கள் அடிக்கப்ப(ட்டு விரட்டப்ப)டுவதில்லை. எனவே, ஏராளமான மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டதால் வாகனத்தில் (அமர்ந்தவாறு ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி) வந்தார்கள். ஆயினும், (அதனிடையே காலால்) நடப்பதும் ஓடுவதுமே சிறந்ததாகும்"என்றார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்காவாசிகள் பொறாமை கொண்ட சமுதாயத்தாராய் இருந்தனர்" என்று இடம் பெற்றுள்ளது. "அவர்கள் பொறாமை கொண்டவர்களாய் இருந்தனர்" எனும் (வினைச் சொல்) வாசகம் இல்லை.
அத்தியாயம் : 15
2425. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃபின் போதும், ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவரும்போதும் விரைந்து நடந்தார்கள். (எனவே) அது நபிவழியாகும் என உங்களுடைய சமூகத்தார் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள் சொல்வது உண்மையும் பொய்யுமாகும்" என்றார்கள்.
அத்தியாயம் : 15
2426. அபுத்துஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்ததாகவே எண்ணுகிறேன்"என்றேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அதைப் பற்றி எனக்கு விவரமாகச் சொல்லுங்கள்" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மர்வா" அருகில் (அதைச் சுற்றிவரும்போது) ஓர் ஒட்டகத்தின் மீதிருந்ததை நான் கண்டேன். அப்போது அவர்களைச் சுற்றி ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்" என்றேன். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "அவர்கள்தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள். அவர்களைவிட்டு மக்கள் விரட்டப்படவோ வலுக்கட்டாயப் படுத்தப்படவோ மாட்டார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 15
2427. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் (உம்ரத்துல் களாவிற்காக மக்காவிற்கு) வந்தபோது,யஸ்ரிபின் (மதீனாவின்) காய்ச்சலால் உடல் நலிவுற்றிருந்தனர். அப்போது (மக்கா நகர) இணைவைப்பாளர்கள், "நாளைய தினம் (மதீனாவின்) காய்ச்சலால் நலிவடைந்து, அதனால் சிரமத்தைச் சந்தித்த ஒரு கூட்டத்தார் உங்களிடம் வரப்போகிறார்கள்" என்று (ஏளனமாகப்) பேசிக்கொண்டனர்.
அதன்படி இணைவைப்பாளர்கள் (கஅபாவிற்கு அருகிலுள்ள அரை வட்டப்பகுதியான) ஹிஜ்ரை ஒட்டிய இடத்தில் உட்கார்ந்துகொண்(டு நபித்தோழர்களைப் பார்வையிட்)டனர். அப்போது இணைவைப்பாளர்களுக்குத் தமது பலத்தைக் காட்டுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைச் சுற்றிவரும்போது முதல்) மூன்று சுற்றுகள் விரைந்து நடக்குமாறும்,ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே (மெதுவாக) நடந்து செல்லுமாறும் கட்டளையிட்டார்கள்.
அப்போது இணைவைப்பாளர்கள், "(மதீனாவின்) காய்ச்சலால் இவர்கள் பலவீனமடைந்துள்ளனர் என நீங்கள் கருதினீர்கள். இவர்களோ இன்னின்னதைவிட பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்" என்று (தம்மிடையே) பேசிக்கொண்டனர். தவாஃபின் அனைத்துச் சுற்றுகளிலும் விரைந்து நடக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம்,மக்கள்மீது கொண்ட இரக்கமேயாகும்.
அத்தியாயம் : 15