2088. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2089. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்" என்று இடம்பெற்றுள்ளது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்" அதாவது ஆஷூரா நாளில்" எனும் குறிப்புடன் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 21 ஆஷூரா நாளில் (நோன்பு நோற்காமல்) சாப்பிட்டுவிட்டவர், அன்றைய தினத்தின் எஞ்சிய பகுதியில் உண்பதைத் தவிர்க்கட்டும்!
2090. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று "அஸ்லம்" குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, "(இன்று) நோன்பு நோற்காமலிருப்பவர், நோன்பு நோற்கட்டும்; சாப்பிட்டுவிட்டவர், இரவுவரை தமது நோன்பை நிறைவு செய்யட்டும்" என்று மக்களிடையே அறிவிக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2091. ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளன்று காலையில் மதீனா புறநகரிலுள்ள அன்சாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி "(இன்று) காலையில் நோன்பாளியாக இருப்பவர், தமது நோன்பைத் தொடரட்டும்;நோன்பு நோற்காமல் காலைப் பொழுதை அடைந்தவர் இன்றைய தினத்தின் எஞ்சிய பொழுதை (நோன்பிருந்து) நிறைவு செய்யட்டும்" என்று அறிவிக்கச்செய்தார்கள்.
நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் -அல்லாஹ் நாடினால்- நோன்பு நோற்கச்செய்வோம். நாங்கள் பள்ளிவாசலுக்குச் செல்லும்போது, கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகச் செய்து, அவர்களில் ஒருவன் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு துறக்கும் நேரம்வரை (அவன் பசியை மறந்திருப்பதற்காக) அவனிடம் அந்த விளையாட்டுப் பொருளைக் கொடுப்போம்.
அத்தியாயம் : 13
2092. காலித் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்களிடம், ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) நோன்பு பற்றிக்கேட்டேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளின் கிராமங்களுக்குத் தம் தூதுவர்களை அனுப்பினார்கள்" என்று கூறியதாக மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இருப்பினும், அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: நாங்கள் கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காகத் தயார்செய்து, அவற்றை எங்களுடன் எடுத்துச்செல்வோம். சிறுவர்கள் எங்களிடம் உணவு கேட்பார்களானால், விளையாட்டுப் பொருளைக் கொடுத்து, அவர்கள் நோன்பை நிறைவு செய்யும்வரை கவனத்தைத் திசைதிருப்புவோம்.
அத்தியாயம் : 13
பாடம் : 22 நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2093. அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (ஹஜ்ஜுப்) பெருநாள் தொழுகையில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்துகொண்டேன். அவர்கள் வந்து (முதலில்) தொழுதுவிட்டுப் பின்னர் திரும்பி மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். ஒன்று,உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் ஆகும். மற்றொன்று உங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண்ணும் (ஹஜ்ஜுப்) பெருநாள் ஆகும்.
அத்தியாயம் : 13
2094. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள், நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்கக் கூடாதெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
2095. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை நான் செவியுற்றேன். அது எனக்கு வியப்பூட்டவே, "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுறாத ஒன்றை அவர்கள் கூறியதாகச் சொல்வேனா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்பது தகாது" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2096. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானி செய்யும் (ஹஜ்ஜுப் பெரு)நாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.
இதை யஹ்யா பின் உமாரா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2097. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "நான் ஒரு நாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்துள்ளேன். அது ஹஜ்ஜுப் பெருநாளாக, அல்லது நோன்புப் பெருநாளாக அமைந்துவிட்டது" என்று சொன்னார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,உயர்ந்தோன் அல்லாஹ் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுமாறு கட்டளையிட்டுள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்பதைத் தடை விதித்துள்ளார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2098. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 23 "அய்யாமுத் தஷ்ரீக்" (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நோன்பு நோற்பதற்கு வந்துள்ள தடை.
2099. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
இதை நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் நுபைஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அறிவிப்பாளர் காலித் அல்ஹத்தா (ரஹ்) அவர்கள், நான் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த அபுல்மலீஹ் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, அவர்களிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அப்போது மேற்கண்ட ஹதீஸை அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். மேலும், ("பருகுவதற்கும்" என்பதற்குப் பின்னால்) "இறைவனை நினைவுகூர்(ந்து திக்ர் செய்)வதற்கும் உரிய நாளாகும்" என்பதை அதிகப்படியாக அறிவித்தார்கள்" என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2100. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் "அய்யாமுத் தஷ்ரீக்" நாட்களில் அனுப்பி, "இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்; "மினா"வின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "எங்கள் இருவரையும் அறிவிக்கச் செய்தார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
பாடம் : 24 வெள்ளிக்கிழமை (ஒரு நாள்) மட்டும் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதன்று.
2101. முஹம்மத் பின் அப்பாத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்துகொண்டிருந்த ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், "வெள்ளிக்கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு "ஆம், இந்த இல்லத்தின் அதிபதிமீது ஆணையாக!" என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2102. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவைமட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 25 "நோன்பு நோற்கச் சக்தி பெற்றவர்கள் (நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்" எனும் (2:184ஆவது) இறைவசன(த்தின் சட்ட)ம், "உங்களில் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் (2:185ஆவது) வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்பதன் விளக்கம்.
2104. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
"நோன்பு நோற்பதற்குச் சக்தி உள்ளவர்கள் (நோன்பு நோற்காமல் விட்டுவிட்டால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கவேண்டும்" எனும் இந்த (2:184ஆவது) வசனம் அருளப்பெற்றபோது, நாடியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள ("உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்"என்ற 2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
2105. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ரமளான் மாதத்தில் நாடினால் நோன்பு நோற்போம்; நாடினால் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டு, அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளித்து வந்தோம். இறுதியில் (அந்த நடைமுறையை மாற்றுகின்ற) "உங்களில் அந்த மாதத்தை அடைந்தவர் அதில் நோன்பு நோற்கட்டும்" எனும் இந்த (2:185ஆவது) வசனம் அருளப்பெற்றது.
அத்தியாயம் : 13
பாடம் : 26 ரமளானில் விடுபட்ட நோன்பை ஷஅபான் மாதத்தில் "களா"ச் செய்தல்.
2106. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு ரமளானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஅபான் மாதத்தில் தவிர வேறெதிலும் என்னால் (களாவாக) நிறைவேற்றமுடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்குக் காரணம்.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும் அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உடைய தேவைகளைக் கவனிக்க வேண்டி) இருந்ததே காரணம்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் யஹ்யா (ரஹ்) அவர்களிடமிருந்தே இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களிடம் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இருந்த (பணி) நிலையே அதற்குக் காரணம் என நான் எண்ணுகிறேன்" என யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டது பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2107. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களுடைய துணைவியரான) எங்களில் ஒருவருக்கு ரமளான் நோன்பு தவறிவிடும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இருந்ததால்) அதை அவரால் ஷஅபான் மாதம் வராதவரை "களா"ச் செய்ய முடியாது.
அத்தியாயம் : 13