2038. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட (2036ஆவது) ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2039. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளானில் (பகலில் தாம்பத்திய உறவு கொண்டு) நோன்பை முறித்துவிட்டார். ஓர் அடிமையை விடுதலை செய்யவேண்டும்; அல்லது (தொடர்ந்து) இரு மாதங்கள் நோன்பு நோற்கவேண்டும்; அல்லது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் என அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2040. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் கரிந்துபோனேன்" என்றார். "ஏன் (உமக்கு என்ன நேர்ந்தது)?" என்று அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ரமளானில் பகலில் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக!" என்று சொன்னார்கள். அவர், "என்னிடம் ஏதும் இல்லையே?" என்றார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கேயே) அமர்ந்திருக்குமாறு உத்தரவிட்டார்கள். பின்னர் உணவுப்பொருட்கள் உள்ள இரண்டு பெரிய கூடைகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்(து சேர்ந்)தன. அதை(ப் பெற்று) தர்மம் செய்யுமாறு அம்மனிதருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2041. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஹதீஸின் ஆரம்பத்தில் "தர்மம் செய்வீராக, தர்மம் செய்வீராக" என்பதும் "பகலில்" எனும் குறிப்பும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 13
2042. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் ரமளானில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பள்ளிவாசலுக்கு வந்து, "நான் கரிந்துபோனேன், அல்லாஹ்வின் தூதரே! நான் கரிந்துபோனேன்" என்றார். "அவருக்கு என்ன ஆயிற்று?" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் வினவினார்கள். அவர், "நான் (நோன்பு நோற்றுக்கொண்டு) என் மனைவியுடன் (பகலில்) தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தர்மம் செய்வீராக!" என்றார்கள்.
அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! நபியே! (தர்மம் செய்ய) என்னிடம் எதுவும் இல்லை. அதற்கான சக்தியும் எனக்கு இல்லை" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அமர்வீராக" என்றார்கள். அவர் அமர்ந்தார். அவர் அமர்ந்திருந்தபோது மற்றொரு மனிதர் ஒரு கழுதையை ஓட்டிக்கொண்டு (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்) வந்தார். அதன் மீது உணவுப்பொருட்கள் இருந்தன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்னர் கரிந்துபோனவர் எங்கே?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் எழுந்து நின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இதை(ப் பெற்று) தர்மம் செய்வீராக!" என்றார்கள். அவர், "அல்லாஹ்வின் தூதரே! எங்களைவிட்டு மற்றவர்களுக்கா (தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்)? அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்களே பசியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை?" என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறாயின், அதை நீங்களே உண்ணுங்கள்!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 15 ரமளான் மாதத்தில் பயணம் செய்பவர் நோன்பு நோற்பதும் நோற்காமலிருப்பதும் செல்லும்; அவரது பயணம் பாவ(நோக்க)மில்லாமல் இரண்டு நாள் பயணத்தொலைவோ அதைவிட அதிகமாகவோ இருக்கவேண்டும். (பயணத்தில்) இடையூறின்றி நோன்பு நோற்கச் சக்தி உள்ளவர் நோன்பு நோற்பதும், சிரமப்படுகின்றவர் நோன்பை விட்டுவிடுவதும் சிறந்ததாகும்.
2043. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளானில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "அல்கதீத்" எனும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். (பொதுவாக) நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் யஹ்யா பின் யஹ்யா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதியாகச் சொன்னதையே கடைப்பிடிக்கப்படும்" எனக் கூறியவர் யார் என்று எனக்குத் தெரியாது என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், (பயணத்தில்) நோன்பை விடுவதே நபி (ஸல்) அவர்களின் இரு செயல்களில் இறுதியானதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் இறுதியானது, அதற்கடுத்து இறுதியானது எதுவோ அதுவே எடுத்துக்கொள்ளப்படும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த ஆண்டு) ரமளான் பதிமூன்றாம் நாள் காலையில் மக்காவில் இருந்தார்கள்" என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செயல்களில் பிந்தியதை, அடுத்து பிந்தியதையே பின்பற்றுவார்கள். பிந்தியது, முந்தியதைக் காலாவதியாக்கக்கூடியதும் இறுதி செய்யப்பட்டதுமாகும் என்று கருதுவார்கள்" என இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். "உஸ்ஃபான்" எனும் இடத்தை அடைந்ததும் குடிநீருள்ள பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி, மக்கள் காண்பதற்காக பகல் நேரத்திலேயே அதை அருந்தி நோன்பை விட்டார்கள். இறுதியில் மக்காவிற்குள் நுழை(யும்வரை நோன்பு நோற்கமாலேயே இரு)ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். எனவே, (நோன்பு நோற்க) விரும்புகின்றவர் நோன்பு நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் விட்டுவிடவும் செய்யலாம்.
அத்தியாயம் : 13
2044. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பயணத்தில்) நோன்பு நோற்றிருப்பவரையும் குறை கூறாதீர்; விட்டுவிட்டவரையும் குறை கூறாதீர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; விட்டும் இருக்கிறார்கள்.
அத்தியாயம் : 13
2045. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவெற்றி ஆண்டில் ரமளான் மாதத்தில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு நோற்றார்கள். மக்களும் அவர்களுடன் நோன்பு நோற்றனர். "குராஉல் ஃகமீம்" எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொல்லி மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்திக் காட்டிய பின் அருந்தினார்கள். அதன் பிறகு அவர்களிடம், "மக்களில் சிலர் நோன்புடனேயே இருக்கின்றனர்" என்று சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்; இத்தகையோரே (எனக்கு) மாறுசெய்பவர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 13
2046. மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "மக்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது. இதையொட்டியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் தண்ணீர் பாத்திரத்தைக் கொண்டுவரச் சொன்னார்கள்" என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2047. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப்பட்டு, அவரைச் சுற்றிலும் மக்கள் குழுமியிருந்ததைக் கண்டார்கள். அப்போது "இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். "இவர் நோன்பு நோற்றிருக்கிறார்" என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பயணத்தில் நீங்கள் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கண்டார்கள்" என்று ஹதீஸ் தொடங்குகிறது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே வந்துள்ளது.
அதில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவித்துள்ளார்கள்: அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் "அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள சலுகையைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக அறிவித்தார்கள். அது பற்றி அவர்களிடம் நான் கேட்டபோது, அது அவர்களது நினைவில் இருக்கவில்லை.
அத்தியாயம் : 13
2048. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது.
நாங்கள் ரமளான் மாதம் பதினாறாவது நாள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து போர் புரிந்தோம். அப்போது எங்களில் சிலர் நோன்பு நோற்றிருந்தனர். வேறுசிலர் நோன்பு நோற்காமலிருந்தனர். அப்போது நோன்பு நோற்றிருந்தவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை சொல்லவில்லை.
அத்தியாயம் : 13
2049. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், சுலைமான் பின் தர்கான் அத்தைமீ, உமர் பின் ஆமிர், ஹிஷாம் பின் அபீஅப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "(ரமளான் மாதம்) பதினெட்டாவது நாள் அன்று" என்றும், சஈத் பின் அபீ அரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பன்னிரண்டாவது நாள் அன்று" என்றும், ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பதினேழாவது நாள், அல்லது பத்தொன்பதாவது நாள் அன்று" என்றும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2050. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் பயணம் செய்திருக்கிறோம். அப்போது நோன்பு நோற்றவர் நோற்றதற்காகவோ, நோன்பு நோற்காதவர் நோற்காததற்காகவோ குறை கூறப்படவில்லை.
அத்தியாயம் : 13
2051. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் போர் புரிந்திருக்கிறோம். எங்களில் நோன்பு நோற்றவரும் இருந்தார்; நோன்பு நோற்காதவரும் இருந்தார். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவர்மீதோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவர்மீதோ அதிருப்தி கொள்ளமாட்டார். (பயணத்தில்) சக்தி இருப்பவர் நோன்பு நோற்றால் அதுவும் நன்றே;பலவீனம் உள்ளவர் நோன்பை விட்டால் அதுவும் நன்றே என்று தான் நபித்தோழர்கள் கருதினர்.
அத்தியாயம் : 13
2052. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) மற்றும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்துள்ளோம். அப்போது, (எங்களில்) சிலர் நோன்பு நோற்பார்கள்;சிலர் நோன்பு நோற்கமாட்டார்கள். இவர்களில் யாரும் மற்றவரைக் குறை கூறமாட்டார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2053. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், ரமளானில் பயணத்தின்போது நோன்பு நோற்பது குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளானில் பயணம் செய்தோம். அப்போது. நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறியதில்லை" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2054. ஹுமைத் பின் அபீஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (பயணம்) புறப்பட்டேன். (பயணத்தில்) நோன்பு நோற்றிருந்தேன். அப்போது மக்கள் என்னிடம், "(பயணத்தில் நோன்பு நோற்காதீர்.) பின்னர் (ஊர் திரும்பியபின்) நோற்றுக் கொள்ளுங்கள்!" என்றார்கள். அதற்கு நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் பயணம் செய்யும்போது (சிலர் நோன்பு நோற்பர். சிலர் நோற்பதில்லை. அப்போது) நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறமாட்டார்" என என்னிடம் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றேன்.
பின்னர் நான் இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது அவர்கள் "மேற்கண்டவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 16 பயணத்தில் நோன்பைக் கைவிட்ட ஒருவர், பொதுப்பணி ஆற்றினால் கிடைக்கும் நன்மை.
2055. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஒரு) பயணத்திலிருந்தோம். அப்போது எங்களில் நோன்பு நோற்றவர்களும் இருந்தனர்; நோன்பு நோற்காதவர்களும் இருந்தனர். அப்போது வெப்பமிக்க ஒரு நாளில் ஓர் இடத்தில் இறங்கித் தங்கினோம். எங்களில் மேல்துண்டு வைத்திருந்தவரே (அன்று) அதிகமாக நிழலைப் பெற்றார். தமது கரத்தால் வெயிலை மறைத்துக் கொண்டோரும் எங்களில் இருந்தனர். நோன்பு நோற்றிருந்தவர்கள் செயலற்றுப்போயினர். நோன்பு நோற்காதிருந்தவர்கள் எழுந்து (செயல்படத் தொடங்கினர்.) கூடாரங்களை நிறுவினர்; வாகன (ஒட்டக)ங்களுக்கு நீர் புகட்டினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மையைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2056. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது (அவர்களுடனிருந்த) சிலர் நோன்பு நோற்றனர்;வேறுசிலர் நோன்பு நோற்காமல் விட்டு விட்டனர். நோன்பு நோற்காதவர்கள் மும்முரமாகப் பணி புரிந்துகொண்டிருந்தார்கள். நோன்பு நோற்றிருந்தவர்கள் ஒருசில வேலைகளை(க் கூட)ச் செய்யமுடியாமல் பலவீனமடைந்தனர். இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்று நோன்பு நோற்காதவர்கள் நன்மைகளைத் தட்டிச் சென்றுவிட்டனர்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2057. கஸஆ பின் யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களைச் சுற்றி நிறைய மக்கள் குழுமியிருந்தனர். (அவர்கள் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்கள்.) மக்கள் கலைந்துசென்றதும் நான், "இவர்கள் கேட்டதையெல்லாம் உங்களிடம் நான் கேட்கமாட்டேன்" என்று கூறிவிட்டு, பயணத்தில் நோன்பு நோற்பது பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) மக்காவுக்குப் பயணம் செய்தோம். அப்போது நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். (வழியில்) ஓரிடத்தில் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்கள் எதிரிகளை நெருங்கிவிட்டீர்கள். இந்நிலையில் நீங்கள் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும்" என்று கூறினார்கள். இது ஒரு சலுகையாகவே இருந்தது. எனவே, எங்களில் சிலர் நோன்பு நோற்றனர்; வேறுசிலர் நோன்பை விட்டுவிட்டனர். பிறகு மற்றோர் இடத்தில் நாங்கள் இறங்கி(த் தங்கி)னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் (நாளைக்) காலையில் எதிரிகளைச் சந்திக்கப்போகிறீர்கள்கள். இந்நிலையில் நோன்பை விட்டுவிடுவதே உங்களுக்கு வலுசேர்க்கும். எனவே, நோன்பை விட்டுவிடுங்கள்" என்று சொன்னார்கள். இது ஒரு கட்டளையாகவே இருந்தது. ஆகவே, நாங்கள் நோன்பை விட்டுவிட்டோம். அதன் பின்னர் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பயணத்தில் நோன்பு நோற்பவர்களாகவே இருந்தோம்.
அத்தியாயம் : 13