1390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், இரவின் முதல் மூன்றிலொரு பகுதி கழியும்வரை தாமதித்துவிட்டுப் பின்னர் கீழ் வானிற்கு இறங்குகின்றான். "(என்னிடம்) பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? தவ்பாச் செய்பவர் எவரும் உண்டா? கேட்பவர் எவரும் உண்டா? பிரார்த்திப்பவர் எவரும் உண்டா?" என அதிகாலை புலரும்வரை கேட்கின்றான்.
இதை அபூசயீத் (ரலி) மற்றும் அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர்.
இந்த ஹதீஸ் இவ்விரு நபித்தோழர்களிடமிருந்து தலா மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் தலா இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
இவ்வறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸைவிட மேற்கண்ட அறிவிப்புகளில் வந்துள்ள ஹதீஸே முழுமையானதும் மிகுதியானதுமாகும்.
அத்தியாயம் : 6
பாடம் : 25 ரமளானில் இரவில் நின்று வணங்குமாறு வந்துள்ள ஆர்வமூட்டலும், அதுவே தராவீஹ் தொழுகை என்பதும்.
1391. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1392. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்றுவழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதன் மீது மக்களுக்கு ஆர்வமூட்டிவந்தார்கள். "எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும்போது இதே நிலையே நீடித்தது. அபூபக்ர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் ஆரம்பக் கட்டத்திலும் இந்த நிலையே இருந்தது.
அத்தியாயம் : 6
1393. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1394. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வழிபட, அது லைலத்துல் கத்ராகவே அமைந்து விட்டால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1395. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதனர். மறுநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களின் எண்ணிக்கை அதிகமானது. மூன்றாவது அல்லது நான்காவது இரவில் (அங்கு) மக்கள் திரண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரவில்லை. அதிகாலையானதும் "நீங்கள் செய்ததை நான் பார்த்(துக் கொண்டுதான் இருந்)தேன். இத்தொழுகை உங்கள்மீது கடமையாக்கப்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சியதுதான் உங்களிடம் வரவிடாமல் என்னைத் தடுத்துவிட்டது" என்று கூறினார்கள்.இது ஒரு ரமளான் மாதத்தில் நடந்ததாகும்.
அத்தியாயம் : 6
1396. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளிவாசலில் தொழுதார்கள். அப்போது மக்களில் சிலரும் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறுநாள்) முந்திய நாளைவிட அதிகமானோர் திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது இரவு புறப்பட்டுவந்(து தொழுவித்)தார்கள். மக்களும் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றி மக்கள் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவில் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழுதனர்.
நான்காம் நாள் இரவு வந்தபோது (மக்கள் அதிகரித்ததால்) பள்ளிவாசல் இடம் கொள்ளவில்லை. அன்றிரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லவில்லை. மக்களில் சிலர் "தொழுகை" என்று (நினைவூட்டிக்) கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் ஃபஜ்ர் தொழுகைக்குத்தான் சென்றார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் "அம்மா பஅத்" (இறை வாழ்த்துக்குப் பின்!) எனக் கூறிவிட்டு, "இரவில் நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் உங்கள்மீது இரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு, அதை உங்களால் நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என நான் அஞ்சினேன் (ஆகவேதான், நேற்றிரவு நான் வரவில்லை)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1397. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் "ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்வார்" என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலி) அவர்கள், "எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் "அல்லாஹ் நாடினால்" என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(து லைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்துவரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1398. ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவு பற்றி (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அந்த இரவைப் பற்றி நான் அறிவேன். அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; அது (ரமளானின்) இருபத்தி ஏழாம் இரவேயாகும் என்றே அநேகமாக நான் கருதுகிறேன்.
அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்) அவர்கள் "அந்த இரவில் நின்று வணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்" எனும் வார்த்தையில்தான் ஐயப்பாட்டுடன் அறிவிக்கிறார். மேலும், ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: என் நண்பர்களில் ஒருவர் அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) அவர்களிடமிருந்து இச்செய்தியை எனக்கு அறிவித்தார்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் ஐயப்பாட்டுடன் அறிவித்தது பற்றியும் அதற்குப் பின்னுள்ள குறிப்புகளும் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
பாடம் : 26 இரவுத் தொழுகையில் பிரார்த்திப்பதும் நின்று வணங்குவதும்.
1399. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவில் தங்கியிருந்தேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் எழுந்து இயற்கைக் கடனை நிறைவேற்றச் சென்றார்கள். பிறகு (வந்து) தம் முகத்தையும் கைகளையும் கழுவினார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் (சுருக்குக்) கயிற்றை அவிழ்த்தார்கள். பின்னர் (ஒன்றுக்கும்) அதிகமான முறைகள் உறுப்புகளைக் கழுவாமல், நடுநிலையாக அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள். அதை நிறைவாகச் செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள்.
நானும் (மெல்ல) எழுந்தேன். நான் அவர்களை நோட்டமிடுவதற்காக விழித்துக் கொண்டிருப்பதை அவர்கள் காண்பது எனக்கு விருப்பமில்லாததால் மெதுவாக எழுந்து அங்கத்தூய்மை செய்தேன். அப்போது அவர்கள் நின்று தொழ, நான் அவர்களின் இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என் கையைப் பிடித்துச் சுற்றி என்னைத் தமது வலப் பக்கத்திற்குக் கொண்டுவந்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இரவுத் தொழுகையைப் பதிமூன்று ரக்அத்களுடன் முடித்துக்கொண்டார்கள். பின்னர் ஒருக்களித்துப் படுத்துக் குறட்டைவிட்டபடி உறங்கினார்கள். உறங்கும்போது குறட்டைவிடுவது அவர்களது வழக்கமாகும். பினனர் பிலால் (ரலி) அவர்கள் வந்து அவர்களை (ஃபஜ்ர்) தொழுகைக்காக அழைத்தார்கள். அவர்கள் எழுந்து (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பிரார்த்தனையில் (பின்வருமாறு) கூறிக்கொண்டிருந்தார்கள்:
அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ ஃபீ சம்ஈ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் யசாரீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ அழ்ழிம் லீ நூரா.
)பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை வலிமையாக்குவாயாக).
)இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) குறைப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
)உடல் எனும்) பேழையிலுள்ள வேறு ஏழு பொருட்களிலும் ஒளியை ஏற்படுத்துமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களின் புதல்வர்களில் ஒருவரைச் சந்தித்தபோது அவற்றை எனக்கு அவர் அறிவித்தார்: என் நரம்பிலும் என் சதையிலும் என் இரத்தத்திலும் என் ரோமத்திலும் என் சருமத்திலும் (ஒளியை ஏற்படுத்துவாயாக) எனக் கூறிவிட்டு, மேலும் (மனம் மற்றும் நாவு ஆகிய) இரண்டையும் குறிப்பிட்டார்.
அத்தியாயம் : 6
1400. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயாரும் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையுமான மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓர் இரவில் தங்கினேன். நான் தலையணையின் அகலவாட்டில் (தலை வைத்துப்) படுத்துக்கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய வீட்டாரும் அதன் நீளவாட்டில் (தலை வைத்துப்) படுத்திருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை அல்லது அதற்குச் சற்று முன்புவரை அல்லது சற்று பின்புவரை உறங்கினார்கள். (பின்னர்) அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தமது கரத்தால் முகத்தில் தடவித் தூக்க(க் கலக்க)த்தைத் துடைக்கலானார்கள். பிறகு ஆலு இம்ரான் அத்தியாயத்தின் இறுதிப் பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு தண்ணீர் பையருகே சென்று (அதைச் சரித்து) அதிலிருந்து அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். செம்மையாக அங்கத்தூய்மை செய்துகொண்ட பின் தொழுவதற்காக நின்றார்கள்.
நானும் எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்று அங்கத் தூய்மை செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து, என் வலது காதைப் பிடித்துத் திருகி (தமது வலப் பக்கத்தில் நிறுத்தி)னார்கள். அப்போது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு வித்ர் தொழுதார்கள்.
பின்னர் தொழுகை அறிவிப்பாளர் வரும் வரை சாய்ந்து படுத்திருந்தார்கள். (அவர் வந்ததும்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹுடைய சுன்னத்) தொழுது விட்டு (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று (மக்களுக்கு) சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.
அத்தியாயம் : 6
1401. மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "பிறகு (தொங்கவிடப்பட்டிருந்த) பழைய தண்ணீர் பையை நோக்கிச் சென்று (அதைச் சரித்து) பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அதைச் செம்மையாகச் செய்தார்கள். அதற்காகச் சிறிதளவு தண்ணீரே ஊற்றினார்கள். பிறகு என்னை அசைத்து (உசுப்பி)விட்டார்கள். நான் எழுந்தேன்..." என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது. மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 6
1402. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) உறங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் (தங்கி) இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டுப் பிறகு நின்று தொழுதார்கள். நான் அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அந்த இரவில் அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் குறட்டைவிட்டு உறங்கினார்கள். (பொதுவாக) அவர்கள் உறங்கும்போது குறட்டைவிடுவார்கள். பின்னர் அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் வந்தபோது புறப்பட்டுச் சென்று (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே (சுப்ஹு) தொழு(வித்)தார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த ஹதீஸை நான் புகைர் பின் அல் அஷஜ்ஜு (ரஹ்) அவர்களிடம் அறிவித்தபோது அவர்கள், "இவ்வாறே எனக்கு குறைப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
1403. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) தங்கியிருந்தேன். அப்போது அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழும்போது என்னையும் எழுப்பிவிடுங்கள்!" என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகைக்காக) எழுந்த போது நான் எழுந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் எனது கையைப் பிடித்துத் தமது வலப் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள். நான் கண்ணயரும் போது எனது காதின் சோனையைப் பிடித்(து என்னை விழிக்கச் செய்)தார்கள். அப்போது பதினோரு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் கால்களை நட்டுவைத்துக் கைகளைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தவாறே உறங்கினார்கள். அப்போது அவர்களின் குறட்டைச் சப்தத்தை நான் கேட்டேன். ஃபஜ்ர் நேரமானதும் (சுப்ஹுடைய சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுதார்கள்.
அத்தியாயம் : 6
1404. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) ஓர் இரவு தங்கினேன். அந்த இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, கட்டித் தொங்க விடப்பட்டிருந்த தண்ணீர் பையிலிருந்து (தண்ணீரைச் சரித்து) சுருக்கமாக அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். (அவர்கள் சிறிதளவு தண்ணீரில் சுருக்கமாகவும் சிக்கனமாகவும் அங்கத் தூய்மை செய்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சைகையால் வர்ணிக்கலானார்கள்.) நானும் எழுந்து நபி (ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே (அங்கத் தூய்மை) செய்துவிட்டு வந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்றேன். உடனே அவர்கள் என்னை(ப் பிடித்து)ப் பின்பக்கமாகக் கொண்டுவந்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தலானார்கள்; பிறகு தொழுதார்கள். பின்னர், படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் வந்து (சுப்ஹுத்) தொழுகைக்காக அவர்களுக்கு அறிவிப்புக் கொடுத்தார்கள். அவர்கள் புறப்பட்டுச் சென்று (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே சுப்ஹுத் தொழு(வித்)தார்கள்.
)இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (உறங்கிய பின் புதிதாக அங்கத் தூய்மை செய்யாமல் தொழும்) இந்த முறை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் உரியதாகும். ஏனெனில் "நபி (ஸல்) அவர்களின் கண்கள் மட்டுமே உறங்குகின்றன; உள்ளம் உறங்குவதில்லை" என நமக்குச் செய்தி எட்டியுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1405. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் ஓர் இரவில் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் எப்படித் தொழுகிறார்கள் என்பதைக் கவனிக்கக் காத்திருந்தேன். அவர்கள் எழுந்து சென்று சிறுநீர் கழித்து விட்டுப் பிறகு (திரும்பிவந்து) தமது முகத்தையும் கைகளையும் கழுவிவிட்டு உறங்கினார்கள். பின்னர் எழுந்து தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்தார்கள். பிறகு உணவுத் தட்டில் அல்லது பெரிய பாத்திரத்தில் அதை ஊற்றி அதில் தமது கையை நுழைத்து நடுத்தரமாக அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். பிறகு நின்று தொழுதார்கள். நான் சென்று அவர்களுக்கு (இடப்) பக்கத்தில் நின்றுகொண்டேன். உடனே அவர்கள் என்னைப் பிடித்து தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்தினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிமூன்று ரக்அத்கள் தொழுது முடித்தார்கள். பிறகு குறட்டைவிட்டு உறங்கினார்கள். -(பொதுவாக) அவர்களது குறட்டைச் சப்தத்தை வைத்து அவர்கள் உறங்குகிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொள்வோம்.- பின்னர் (சுப்ஹுத்) தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்று தொழுதார்கள். அவர்கள் தமது "தொழுகையில்"அல்லது "சஜ்தாவில்" பின்வருமாறு கூறலானார்கள்:
அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வ ஃபீ சம்ஈ நூரன். வ ஃபீ பஸரீ நூரன். வ அன் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ அமாமீ நூரன். வ கல்ஃபீ நூரன். வ ஃபவ்கீ நூரன். வ தஹ்தீ நூரன். வஜ்அல்லீ நூரா/ வஜ்அல்னீ நூரா.
)பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. "எனக்கு (எல்லாத் திசைகளிலும்) ஒளியை ஏற்படுத்துவாயாக" (அல்லது) "என்னை ஒளிமயமாக்குவாயாக".(
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
)அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சலமா (ரஹ்) கூறினார்கள்:
நான் குறைப் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, "இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்..." என்று கூறிவிட்டு மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறு குறிப்பிட்டார்கள்" என்றார்கள். மேலும் "என்னை ஒளிமயமாக ஆக்குவாயாக" என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவு)ம் ஐயப்பாடின்றி அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 6
1406. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் "நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன்" என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஹதீஸ் தொடங்குகிறது.
அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகத்தையும் கைகளையும் கழுவியதாகக் குறிப்பு இல்லை. மாறாக, "பிறகு அவர்கள் தண்ணீர் பையருகே சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டார்கள். பிறகு நடுத்தரமாக அங்கத் தூய்மை செய்தார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து உறங்கினார்கள். பிறகு மீண்டும் எழுந்து அந்தத் தண்ணீர் பைக்குச் சென்று அதன் சுருக்கை அவிழ்த்துவிட்டுச் செம்மையாக -அதுதான் அங்கத் தூய்மை (உளூ) என்று கூறுமளவுக்கு (நிறைவாக) - அங்கத் தூய்மை செய்தார்கள். மேலும், "என் ஒளியை வலிமையாக்குவாயாக" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. "என்னை ஒளிமயமாக்குவாயாக" எனும் வாசகம் இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 6
1407. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் பின்வருமாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது:
நான் ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தங்கியிருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்ணீர் பையை நோக்கிச் சென்று அதிலிருந்து தண்ணீர் ஊற்றி அங்கத் தூய்மை செய்தார்கள்; அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்தவுமில்லை; அங்கத்தூய்மையில் குறைவைக்கவுமில்லை.
மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவாறே இடம்பெற்றுள்ளன. மேலும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்றைய இரவில் பத்தொன்பது விஷயங்களை இறைவனிடம் வேண்டினார்கள்" எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலமா பின் குஹைல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு அந்தப் பத்தொன்பது விஷயங்களையும் குறைப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.
அவற்றில் பன்னிரண்டு விஷயங்களை நான் மனனமிட்டுள்ளேன்; எஞ்சியவற்றை நான் மறந்துவிட்டேன். (அந்தப் பன்னிரண்டு விஷயங்கள் வருமாறு):
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஜ்அல் லீ ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிசானீ நூரன். வஃபீ சம்ஈ நூரன். வஃபீ பஸரீ நூரன். வ மின் ஃபவ்க்கீ நூரன். வ மின் தஹ்த்தீ நூரன். வ அய் யமீனீ நூரன். வ அன் ஷிமாலீ நூரன். வ மிம் பைனி யதைய்ய நூரன். வ மின் கல்ஃபீ நூரன். வஜ்அல் ஃபீ நஃப்சீ நூரன். வ அஃழிம் லீ நூரா" என்று வேண்டினார்கள்.
)பொருள்: இறைவா! என் இதயத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு வலப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு இடப் பக்கத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்து வாயாக. என் மனத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு ஒளியை வலிமையாக்குவாயாக).
அத்தியாயம் : 6
1408. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் மேற்கண்ட ஹதீஸில் உள்ளவை தவிர பின்வருவனவும் இடம்பெற்றுள்ளன.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் ஓர் இரவில் மைமூனா (ரலி) அவர்களது இல்லத்தில் உறங்கினேன். அந்த இரவில் நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களது இரவுத் தொழுகை எவ்வாறு உள்ளது என்பதை நோட்டமிடுவதற்காகவே (நான் அவர்களது இல்லத்தில் உறங்கினேன்). அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். பிறகு உறங்கினார்கள்.
இந்த அறிவிப்பில் "பின்னர் எழுந்து அங்கத்தூய்மை (உளூ) செய்தார்கள்; பல் துலக்கினார்கள்" எனும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1409. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஓர் இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களது இல்லத்தில்) உறங்கினேன். அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து பல் துலக்கி, அங்கத் தூய்மை (உளூ) செய்து, "திண்ணமாக வானங்கள் மற்றும் பூமியின் படைப்(பு அமைப்)பிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன" எனும் (3:190ஆவது) வசனத்தை, அந்த அத்தியாயத்தின் இறுதிவரை ஓதி முடித்தார்கள். பின்னர் எழுந்து நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவற்றில் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள்; ருகூஉச் செய்தார்கள்; சஜ்தாவும் செய்தார்கள். பிறகு திரும்பிச் சென்று குறட்டைவிட்டு உறங்கினார்கள். இவ்வாறே மூன்று முறை செய்து,
ஆறு ரக்அத்கள் தொழுதார்கள். ஒவ்வொரு தடவையும் பல் துலக்கி, அங்கத்தூய்மை செய்து இந்த வசனங்களை ஓதினார்கள். பிறகு மூன்று ரக்அத் வித்ர் தொழுதார்கள். தொழுகை அறிவிப்பாளர் (சுப்ஹுத் தொழுகைக்காக) அறிவிப்புச் செய்ததும் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்போது "அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரன். வஃபீ லிசானீ நூரன். வஜ்அல் ஃபீ சம்ஈ நூரன். வஜ்அல் ஃபீ பஸரீ நூரன். வஜ்அல் மின் கல்ஃபீ நூரன். வமின் அமாமீ நூரன். வஜ்அல் மின் ஃபவ்க்கீ நூரன். வமின் தஹ்த்தீ நூரன். அல்லாஹும்ம அஃத்தினீ நூரா" என்று கூறினார்கள்.
)பொருள்: இறைவா! என் இதயத்தில் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் நாவிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் செவியிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. என் பார்வையிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குப் பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு முன்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு மேலேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்குக் கீழேயும் ஒளியை ஏற்படுத்துவாயாக. இறைவா! எனக்கு ஒளியை வழங்குவாயாக).
அத்தியாயம் : 6