1370. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரவில் தொழுபவர் சுப்ஹுக்கு முன் தமது கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறே மக்களுக்குக் கட்டளையிட்டு வந்தார்கள்.
அத்தியாயம் : 6
1371. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வித்ர் தொழுகை, இரவின் இறுதிப் பகுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத்தாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1372. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வித்ர் தொழுகை இரவின் இறுதிப் பகுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத்தாகும்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1373. அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினேன். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "(வித்ர்) இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத்தாகும்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்" என்று விடையளித்தார்கள். அவ்வாறே இப்னு உமர் (ரலி) அவர்களிடமும் வினவினேன். அவர்களும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவின் இறுதியில் (தொழப்படும்) ஒரு ரக்அத் ஆகும்" என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1374. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் பள்ளிவாசலில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அழைத்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இரவுத் தொழுகையை எவ்வாறு ஒற்றைப்படையாக (வித்ராக) ஆக்குவேன்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(இரவில்) தொழுபவர் இரண்டிரண்டு ரக்அத்களாகவே தொழுதுவரட்டும். சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அவர் அறிந்தால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழட்டும்! முன்னர் அவர் தொழுதவற்றை அது ஒற்றைப்படையாக மாற்றிவிடும்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (இப்னு உமரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளரின் பெயர்) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் என்றே இடம்பெற்றுள்ளது. உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உமர் என்று வரவில்லை.
அத்தியாயம் : 6
1375. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் "காலைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள்; ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்" என்று கூறினார்கள். (உடனே) நான், " இதைப் பற்றி உங்களிடம் நான் கேட்கவில்லை" என்றேன். அதற்கு அவர்கள், "நீர் ஒரு விளங்காத மனிதர்; முழு ஹதீஸையும் சொல்ல என்னை விடமாட்டீரா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள். காலைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். (அவ்விரு ரக்அத்களிலும் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) இகாமத் சொல்லும் சப்தம் காதில் விழுவதைப் போன்று (சுருக்கமாகத் தொழுவார்கள்)" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், கலஃப் பின் ஹிஷாம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "காலைத் தொழுகை" என்பதற்கு பதிலாக (வெறும்) "காலை" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1376. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவின் இறுதிப் பகுதியில் ஒரு ரக்அத் வித்ர் தொழுவார்கள்" என்றும், "போதும்! போதும் (நிறுத்து!) நீர் ஒரு விளங்காத மனிதர்" என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாகவும் இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6
1377. உக்பா பின் ஹுரைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்; நீங்கள் சுப்ஹு நேரத்தை அடைந்துவிட்டதாகக் கண்டால் ஒரு ரக்அத் வித்ர் தொழுது கொள்ளுங்கள்!" என்று சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்களிடம், "இரண்டிரண்டு ரக்அத்கள் என்பதற்கு என்ன பொருள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "ஒவ்வோர் இரண்டு ரக்அத்திலும் சலாம் கொடுப்பதாகும்" என்று விளக்கமளித்தார்கள்.
அத்தியாயம் : 6
1378. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சுப்ஹை அடைவதற்கு முன் வித்ர் தொழுங்கள்!
இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1379. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வித்ர் தொழுகை பற்றி வினவினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹுக்கு முன் வித்ர் தொழுங்கள்!" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 21 இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுவோர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதிட வேண்டும்.
1380. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் இறுயில் எழ முடியாது என அஞ்சுபவர் இரவின் ஆரம்பப் பகுதியிலேயே வித்ர் தொழுதுவிடட்டும்! இரவின் இறுதியில் எழ முடியும் என நம்புகின்றவர் இரவின் இறுதியிலேயே வித்ர் தொழட்டும். ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் தொழும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1381. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யார் இரவின் இறுதியில் எழ முடியாது என அஞ்சுகிறாரோ அவர் (முதலில்) வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு உறங்கட்டும்! இரவில் தம்மால் எழ முடியும் என உறுதியாக நம்புகின்றவர் அதன் இறுதியில் வித்ர் தொழட்டும்! ஏனெனில், இரவின் இறுதி நேரத்தில் குர்ஆன் ஓதும்போது (வானவர்கள்) பங்கேற்கின்றனர். இதுவே சிறந்ததாகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 22 தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று தொழுவதாகும்.
1382. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகையில் மிகவும் சிறந்தது நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்.
இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1383. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "தொழுகையில் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நீண்ட நேரம் நின்று (ஓதித்) தொழுவதே ஆகும்" என்று விடையளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
பாடம் : 23 பிரார்த்தனை ஏற்கப்படும் நேரம் ஒன்று இரவில் உண்டு.
1384. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு; சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான மனிதர் இம்மை மற்றும் மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இவ்வாறு ஒவ்வோர் இரவிலும் நடக்கிறது.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1385. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவில் ஒரு (குறிப்பிட்ட) நேரம் உண்டு. ஒரு முஸ்லிமான அடியார் சரியாக அந்த நேரத்தில் இறைவனிடம் எந்த நன்மையை வேண்டினாலும் இறைவன் அவருக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை.- இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
பாடம் : 24 இரவின் இறுதி நேரத்தில் பிரார்த்திக்குமாறும் இறைவனை நினைவுகூர்ந்து போற்றுமாறும் வந்துள்ள ஆர்வமூட்டலும் அந்த நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனைகள் ஏற்கப்படும் என்பதும்.
1386. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலொரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்" என்று கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 6
1387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், ஒவ்வோர் இரவிலும் இரவின் முதல் மூன்றிலொரு பகுதி முடியும்போது, கீழ் வானிற்கு இறங்கிவந்து, "நானே அரசன்;நானே அரசன்! என்னிடம் பிரார்த்திப்பவர் எவருமுண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா? அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவரை நான் மன்னிக்கிறேன்"என்று கூறுகிறான். வைகறை (ஃபஜ்ர்) நேரம் புலரும்வரை இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1388. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்" என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 6
1389. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், நடு இரவில் அல்லது இரவின் இறுதி மூன்றிலொரு பகுதியில் கீழ் வானிற்கு இறங்குகிறான். "என்னிடம் பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். அல்லது என்னிடம் கேட்பவர் எவரும் உண்டா?அவருக்கு நான் கொடுக்கிறேன்" என்று கூறுகின்றான். பிறகு "(நான்) இல்லாதவனும் அல்லன்; (வாக்குமீறுவதன் மூலம்) அநீதி இழைப்பவனும் அல்லன். (இத்தகைய) எனக்கு (அழகிய) கடனளிப்பவர் யாரும் உண்டா?" என்று அல்லாஹ் கேட்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகின்றேன்:
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு மர்ஜானா என்பவர் சயீத் பின் அப்தில்லாஹ் ஆவார். மர்ஜானா என்பது,அவருடைய தாயாரின் பெயராகும்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "பிறகு உயர்வும் வளமும் மிக்க (இறை)வன் தன் கரங்களை விரித்தபடி "இல்லாதவனோ அநீதி இழைப்பவனோ அல்லாத (உங்கள் இறை)வனுக்கு (அழகிய) கடன் அளிப்பவர் யாரும் உண்டா?" என்று கூறுவான் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 6