பாடம் : 34 வணக்க வழிபாடுகள் குறைவதால் இறைநம்பிக்கையும் குறையும்; நன்றி மறத்தல், உரிமை மீறல் போன்ற இறைமறுப்பு அல்லாத செயல்களுக்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படும்.
132. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உரையாற்றுகையில்), "பெண்கள் சமுதாயமே! தானதர்மங்கள் செய்யுங்கள்; அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் கண்டேன்" என்று கூறினார்கள். அப்போது அங்கிருந்த புத்திசாலியான ஒரு பெண்மணி, "நரகவாசிகளில் அதிகம் பேராக நாங்கள் இருப்பதற்கு என்ன காரணம்? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதிகமாகச் சாபம் கொடுக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள்; அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர்களாகவும், அறிவிற் சிறந்தோரைக்கூட (கவர்ச்சியால்) வீழ்த்தக் கூடியவர்களாகவும் (பெண்களான) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் காணவில்லையே" என்று பதிலளித்தார்கள்.
அப்பெண்மணி, "அறிவிலும் மார்க்கத்திலும் எங்களுடைய குறைபாடு என்ன? அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அறிவிலுள்ள குறைபாடு யாதெனில், ஓர் ஆணின் சாட்சியத்திற்கு இரு பெண்களின் சாட்சியம் நிகராகிறது. இதுதான் (பெண்களின்) அறிவிலுள்ள குறைபாடாகும். (மாதவிடாய் ஏற்படும்) பல நாட்கள் அவள் தொழாமல் இருந்துகொண்டிருக்கிறாள்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்காமல் இருக்கிறாள். இதுதான் (அவளுடைய) மார்க்கத்திலுள்ள குறைபாடு" என்று கூறினார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸைப் போன்றே அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 35 தொழுகையைக் கைவிடுவதற்கும் "குஃப்ர்" எனும் சொல் ஆளப்படுவதுண்டு.
133. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மைந்தன் (மனிதன்) சஜ்தா (சிரவணக்கத்திற்கான) வசனத்தை ஓதி சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் ஷைத்தான் அழுதவாறே "அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் சிரவணக்கம் செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் சிரவணக்கம் செய்துவிட்டான். அவனுக்குச் சொர்க்கம் கிடைக்கப்போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்குச்) சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று கூறியபடி விலகிச்செல்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "(ஆதமுக்குச் சிரம்பணியும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது.) ஆனால், நான் (அதற்கு) மாறுசெய்தேன். எனவே, எனக்கு நரகம்தான்" என்று (சிறு வித்தியாசத்துடன்) இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
134. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவதுதான்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதன் அறிவிப்பாளர்தொடர் வேறுபடுகிறது.)
அத்தியாயம் : 1
பாடம் : 36 அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வதே (நற்)செயல்களில் மிகவும் சிறந்ததாகும்.
135. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்கப் பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வது" என்று கூறினார்கள். "பிறகு எது (சிறந்தது)?" என்று கேட்கப்பட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். "பிறகு எது (சிறந்தது)?" எனக் கேட்கப்பட்டபோது, "(பாவச் செயல் எதுவும் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஹம்மத் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ("அல்லாஹ்வை நம்பிக்கைகொள்வது" எனும் இடத்தில்) "அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்வது" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
136. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். நான், "எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தன் எசமானர்களிடம் பெறுமதி மிக்க, அதிக விலை கொண்ட அடிமைதான் (சிறந்தவன்)" என்று பதிலளித்தார்கள்."அ(த்தகைய அடிமையை விடுதலை செய்வ)து என்னால் இயலவில்லை யென்றால்...?"என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "தொழில் செய்பவருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என்று சொன்னார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! (நற்)செயல்களில் சிலவற்றைக்கூட என்னால் செய்ய இயலவில்லையென்றால் (நான் என்ன செய்வது?) கூறுங்கள்!" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இருங்கள்! ஏனெனில், அதுவும் நீங்கள் உங்களுக்குச் செய்துகொள்ளும் ஒரு நல்லறம்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்களிலும் வந்துள்ளது.
அவற்றில் ("தொழில் செய்பவனுக்கு உதவி செய்க" என்பதற்கு பதிலாக) "பலவீனருக்கு உதவி செய்க; அல்லது வேலை இல்லாதவருக்கு வேலை தருக" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
137. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "(நற்)செயல்களில் சிறந்தது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள். (நபி அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று) அவர்கள்மீது பரிவுகாட்டியே நான் மேலும் மேலும் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
அத்தியாயம் : 1
138. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் நபியே! (நற்)செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?" என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டேன். அதற்கு, "தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். "அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே!" என்று கேட்டபோது, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
அத்தியாயம் : 1
139. வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தைச் சுட்டிக் காட்டியவாறு அபூஅம்ர் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ! இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?" என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது" என்று கூறினார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பிறகு தாய் தந்தையருக்கு நன்மை புரிவது" என்றார்கள். நான், "பிறகு எது?" என்று கேட்டபோது, "பிறகு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது" என்றார்கள்.
இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால் அவர்களும் எனக்கு அதிகமாகச் சொல்லியிருப்பார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் சாடை காட்டினார்கள்; அன்னாரது பெயரை எங்களிடம் குறிப்பிடவில்லை" என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
140. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நற்செயல்களில்" அல்லது "நற்செயலில்" சிறந்தது உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவதும் தாய் தந்தையருக்கு நன்மை புரிவதுமாகும்
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 37 இறைவனுக்கு இணைவைப்பதுதான் பாவங்களிலேயே மிகவும் மோசமானது. அதற்கடுத்த பெரும் பாவம் எது என்பது பற்றிய விளக்கம்.
141. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது" என்று சொன்னார்கள். நான் அவர்களிடம், "நிச்சயமாக அது மிகப் பெரிய பாவம்தான்" என்று சொல்லிவிட்டு, "பிறகு எது?" என்று கேட்டேன். "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்க, அவர்கள், "உன்(மீது அபார நம்பிக்கைவைத்துள்ள) அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
142. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகப் பெரியது?" என்று கேட்டார். அதற்கு அவர்கள், "அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைவைப்பதுதான், (பெரும் பாவம்)" என்று பதிலளித்தார்கள். அவர், "பிறகு எது?" என்று கேட்டார். அவர்கள், "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொல்வது" என்று சொன்னார்கள். "பிறகு எது?" என்று அவர் கேட்க, "உன் அண்டை வீட்டானின் மனைவி(யைக் கவர்ந்து அவள்) உடன் நீ விபசாரம் செய்வது" என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், "மேலும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது என்று) அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் (சட்டபூர்வமான) உரிமையின்றி அவர்கள் கொலை செய்வதில்லை; மேலும், விபசாரமும் செய்வதில்லை. யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அவன் (தன் பாவத்திற்கான) தண்டனையைப் பெற்றே தீருவான்" எனும் (25:68ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 38 பெரும் பாவங்களும் மிகப்பெரும் பாவங்களும்.
143. அபூபக்ரா நுஃபைஉ பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "பெரும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று (மூன்று முறை) கேட்டு விட்டு, "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, "பொய் சாட்சியம் சொல்வது" அல்லது "பொய் பேசுவது" ஆகியவை (தாம் அவை)" என்று கூறினார்கள். அப்போது சாய்ந்துகொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து அமர்ந்து இ(றுதியாகச் சொன்ன)தை திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள் "அவர்கள் நிறுத்திக் கொள்ளக்கூடாதா!" என்று கூறினோம்.
அத்தியாயம் : 1
144. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, கொலைசெய்வது மற்றும் பொய் பேசுவது ஆகியவை பெரும்பாவங்களில் அடங்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
- அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெரும் பாவங்கள் பற்றிக் கூறினார்கள்" அல்லது "பெரும் பாவங்கள் குறித்து அவர்களிடம் வினவப்பட்டது". அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, கொலை செய்வது, பெற்றோரைப் புண்படுத்துவது ஆகியன (பெரும்பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.
பிறகு "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம் ஒன்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று கேட்டுவிட்டு, "பொய் பேசுவது" அல்லது "பொய் சாட்சியம் கூறுவது" தான் (அது) என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: "பொய் சாட்சியம்" என்றே நான் பெரிதும் கருதுகிறேன்.
அத்தியாயம் : 1
145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!" என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?" என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 1
146. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை ஏசுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தம் தாய் தந்தையரையே ஏசுவாரா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம். ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையை ஏசுவார். ஒருவர் இன்னொருவரின் தாயை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தாயை ஏசுவார். (ஆக, தம் பெற்றோர் ஏசப்படுவதற்கு இவரே காரணமாகிவிடுகிறார்)" என்று கூறினார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 39 தற்பெருமை கூடாது; தற்பெருமை என்றால் என்ன?
147. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் "யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை இருக்கிறதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்" என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், "தமது ஆடை அழகாக இருக்க வேண்டும்; தமது காலணி அழகாக இருக்க வேண்டும் என ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில் சேருமா?)" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அழகானவன்; அழகையே அவன் விரும்புகின்றான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும், மக்களைக் கேவலமாக மதிப்பதும்தான்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
148. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது உள்ளத்தில் கடுகு மணியளவு இறைநம்பிக்கையுள்ள எவரும் நரகத்தில் நுழைய மாட்டார். தமது உள்ளத்தில் கடுகு மணியளவு அகம்பாவமுள்ள எவரும் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
149. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 40 அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்தவர் சொர்க்கம் செல்வார். இணைவைப்பாளராக இறந்து போனவர் நரகம் செல்வார்.
150. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்" என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
151. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்" என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1