பாடம் : 1 இறைநம்பிக்கை (ஈமான்), அடிபணிதல் (இஸ்லாம்), அழகிய முறையில் செயலாற்றல் (இஹ்சான்) ஆகியவை பற்றிய விளக்கமும்; தூய்மையாளனும் உயர்ந்தோனுமாகிய அல்லாஹ் நிர்ணயித்துள்ள விதியை நம்புவதன் அவசியமும்; விதியை நம்பாதவனுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை' என்பதற்கான ஆதாரமும்; அவன் தொடர்பாக வந்துள்ள கண்டனமும். அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல் ஹஜ்ஜாஜ் அல்குஷைரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கிறோம். அவனைக் கொண்டே நாம் நிறைவடைகிறோம். வல்லமை மிக்க (அந்த) அல்லாஹ்வின் நல்லருள் இன்றி நாம் நல்வாய்ப்பினைப் பெற இயலாது.
1. யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்" அல்லது உம்ரா"ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப்பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன். அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்" என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.(இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்).
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)" என்று கூறினார்கள்.
அம்மனிதர்,மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்" என்று கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அத்தியாயம் : 1
2. யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மஅபத் பின் காலித் அல்ஜுஹனீ என்பார் விதி தொடர்பாக (மாறுபட்ட) கருத்தைத் தெரிவித்த போது அதை நாங்கள் ஆட்சேபித்தோம். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும் ஒரு தடவை ஹஜ்ஜுக்குச் சென்றோம்.
இதையடுத்து மேற்கண்ட ஹதீஸை அதன் அறிவிப்பாளர்தொடர் (இஸ்னாத்) உடன் அப்படியே முழுமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அதில் சிற்சில வார்த்தைகளில் கூடுதல் குறைவு உண்டு.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
3. அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் யஅமர் (ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) ஆகியோர், நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து அவர்கள் (மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம்" என்று கூறிவிட்டு, உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதைவிடச் சற்றுக் கூடுதலாகவும் சில இடங்களில் சற்றுக் குறைத்தும் அறிவித்தனர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
4. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
5. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்கள் முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர் (மலக்கு)களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்" (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்றார்கள்.
அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்" என்று பதிலளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதரே! மறுமை(நாள்) எப்போது வரும்?" என்று அம்மனிதர் கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். முழு ஆடையில்லாத, செருப்பணியாதவர்கள் எல்லாம் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பவர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டினால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது நிகழவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
பிறகு,நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கிறான். இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்)நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்" எனும் (31:34ஆவது) இறை வசனத்தை நபியவர்கள் ஓதிக் காட்டினார்கள்.
பின்னர் (கேள்வி கேட்ட) அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்" என்று சொன்னார்கள். மக்கள் உடனே அவரைத் திரும்ப அழைத்துவரச் செல்லலாயினர். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை. பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். மக்களுக்கு அவர்களது மார்க்கத்(தின் அடிப்படைத் தத்துவத்)தை கற்றுத் தருவதற்காக அவர் வந்திருந்தார்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
6. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களால் அறிவிக்கப்பெற்றுள்ளது. ஆயினும், அவர்களது அறிவிப்பில் (ஓர் அடிமைப் பெண் தன் எசமானைப் பெற்றெடுப்பாளாயின்..." என்பதற்கு பதிலாக) ஓர் அடிமைப் பெண் தன் கணவனைப் பெற்றெடுப்பாளாயின்..." என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்" என்று கூறினார்கள். மக்கள் அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள்.அப்போது (எங்கிருந்தோ) ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களின் முழங்கால்களுடன் ஒட்டி அமர்ந்து,அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று கேட்டார்.நபி (ஸல்) அவர்கள் (இஸ்லாம் என்பது), அல்லாஹ்வுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அம்மனிதர் உண்மைதான்" என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?" என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும்,விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்" என்றார்.
அல்லாஹ்வின் தூதரே! இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) என்றால் என்ன?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் அவனை நீங்கள் அஞ்சுவதாகும். ஏனெனில், நீங்கள் அவனைப் பார்த்துக்கொண்டிராவிட்டாலும் அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது நிகழும்?" என்று அம்மனிதர் கேட்க,நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்) கேள்வி கேட்பவரை விட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துரைக்கிறேன் என்றார்கள்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எசமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும் குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின் அரசர்களாய்க் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும்,ஆட்டுக்குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும். இவ்வாறு கூறிவிட்டு, நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது நிகழும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கி வைக்கின்றான். இன்னும் அவனே கர்ப்பங்களில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான்.தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; நுணுக்கமானவன்" எனும் (31:34ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
பிறகு (கேள்வி கேட்க வந்த) அம்மனிதர் எழுந்து (சென்று)விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த மனிதரை என்னிடம் திரும்ப அழைத்துவாருங்கள்" என்று கூறினார்கள்.
உடனே அவர் தேடப்பட்டார். ஆனால், மக்களால் அவரைக் காண இயலவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இ(ப்போது வந்துபோன)வர் (வானவர்)ஜிப்ரீல் (அலை) அவர்கள்தாம். நீங்கள் என்னிடம் (விளக்கம்) கேட்க முற்படாதபோது, (தம் வாயிலாக) நீங்கள் விளக்கம் பெற வேண்டும் என அவர் விரும்பினார். (அதற்காகவே அவர் வந்தார்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 2 இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றான தொழுகை பற்றிய விளக்கம்.
8. தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (அவர் சற்றுத் தொலைவில் இருந்ததால்) அவரது குரலை எங்களால் கேட்க முடிந்ததே தவிர, அவர் என்ன சொல்கிறார் என்பதை எங்களால் அறிய முடியவில்லை. பின்னர் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நெருங்கினார். அப்போதுதான் அவர் இஸ்லாத்தைப் பற்றி வினவுகிறார் என்று எங்களுக்குப் புரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நாளொன்றுக்கு) பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (நிறைவேற்றுவது இஸ்லாத்தின் விதியாகும்)" என்று பதிலளித்தார்கள். உடனே அவர், "இவற்றைத் தவிர வேறு (தொழுகைகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை;நீயாக விரும்பித்தொழும் (கூடுதலான) தொழுகையைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அடுத்து ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது (இஸ்லாத்தின் விதியாகும்) என நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு (நோன்புகள்) ஏதேனும் என்மீது (விதியாக்கப்பட்டு) உள்ளதா?" என்று கேட்க, "இல்லை; நீயாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மேலும், ஸகாத் (வழங்குவது இஸ்லாத்தின் விதி என்பது) பற்றியும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துக் கூறினார்கள். அவர், "இதைத் தவிர வேறு ஏதேனும் (தர்மம்) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா?" எனக் கேட்க, "இல்லை;நீயாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தர்மத்தைத் தவிர" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மனிதர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவுமாட்டேன்; இதைக் குறைக்கவுமாட்டேன்"என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 1
9. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும், (அவற்றின் இறுதியில்) "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் வெற்றியடைந்துவிட்டார்" அல்லது "அவருடைய தந்தை மீதாணையாக! அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 3 இஸ்லாத்தின் தூண்(களான முக்கியக் கடமை)கள் குறித்துக் கேட்டறிதல்.
10. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் குறித்துக் கேள்வி கேட்கக்கூடாதென தடை விதிக்கப்பட்டிருந்தோம். எனவே, (இந்தத் தடையை அறிந்திராத) கிராமவாசிகளில் (புத்திசாலியான) ஒருவர் வந்து நபியவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்; நாங்களும் அதைச் செவியுற வேண்டும் என்பது எங்கள் ஆசையாக இருந்தது. அவ்வாறே (ஒரு நாள்) கிராமவாசிகளில் ஒருவர் வந்து, முஹம்மதே! உங்கள் தூதர் ஒருவர் எங்களிடம் வந்து, அல்லாஹ் உங்களை (மனித இனம் முழுமைக்கும்) தூதராக அனுப்பியுள்ளான் என்று நீங்கள் கூறுவதாக எங்களிடம் சொன்னாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் உண்மைதான்" என்று கூறினார்கள்.
அந்தக் கிராமவாசி, வானத்தைப் படைத்தவன் யார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்று பதிலளித்தார்கள். பூமியைப் படைத்தவன் யார்?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்" என்றார்கள். இந்த மலைகளை நட்டுவைத்து அதிலுள்ளவற்றை உருவாக்கியவன் யார்?" என்று கிராமவாசி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்" என்றார்கள். அவர், அப்படியானால், வானத்தைப் படைத்து, பூமியையும் படைத்து. இந்த மலைகளை நட்டும்வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களைத் தூதராக அனுப்பினானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்று சொன்னார்கள்.
அவர் இரவிலும் பகலிலும் (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகள் எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளன என்று உங்கள் தூதர் கூறினாரே (அது உண்மையா)?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் உங்களுக்கு இவ்வாறு கட்டளையிட்டானா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள்.
தொடர்ந்து அவர், நாங்கள் எங்கள் செல்வங்களில் இருந்து ஸகாத் வழங்குவது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே!" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பி வைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று அந்தக் கிராமவாசி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்" என்றார்கள். அவர், ஒவ்வோர் ஆண்டும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது எங்கள்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று உங்கள் தூதர் கூறினாரே?" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்" என்றார்கள். உங்களைத் தூதராக அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அல்லாஹ்தான் இவ்வாறு உங்களுக்குக் கட்டளையிட்டானா?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள். மேலும் உங்கள் தூதர் எங்களில் வசதிபடைத்தோர் இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது (கடமையாக்கப்பட்டு) உள்ளது என்று கூறினாரே?" என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், உண்மைதான்"என்றார்கள்.
பிறகு அந்தக் கிராமவாசி, உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! இவற்றைவிட நான் அதிகமாக்கவுமாட்டேன்; இவற்றிலிருந்து (எதையும்) குறைக்கவும் மாட்டேன்" என்று கூறிவிட்டுத் திரும்பிச் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர் (தாம் கூறியதில்) உண்மையாளராக இருந்தால் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
11. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவசியமற்ற) சில விஷயங்கள் தொடர்பாகக் கேள்வி கேட்கக்கூடாதென நாங்கள் குர்ஆன் மூலம் தடை விதிக்கப்பெற்றிருந்தோம்" என்று கூறிவிட்டு, மேற்கண்ட ஹதீஸைப் போன்றே தொடர்ந்து அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 4 சொர்க்கம் செல்வதற்குக் காரணமாய் அமையும் இறைநம்பிக்கை (ஈமான்) பற்றிய விளக்கமும், தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர் சொர்க்கம் செல்வார் என்பது பற்றிய விளக்கமும்.
12. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பயணத்தில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கிராமவாசி ஒருவர் இடைமறித்து அவர்களது ஒட்டகத்தின் கடிவாளத்தை" அல்லது மூக்கணாங்கயிற்றைப்" பிடித்துக்கொண்டார். பிறகு அல்லாஹ்வின் தூதரே" அல்லது முஹம்மதே "என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்குமே அத்தகைய ஒரு (நற்)செயலை எனக்குத் தெரிவியுங்கள்!" என்று கேட்டார்.
நபி (ஸல்) அவர்கள் (ஏதும் பேசாமல்) அமைதியாக இருந்தார்கள். பிறகு தம் தோழர்களைக் கூர்ந்து பார்த்தார்கள். பின்னர் நிச்சயமாக இவர் நல்லருள் பெற்றுவிட்டார்" அல்லது நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்"" என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் நீர் என்ன சொன்னீர்?" என்று (அந்தக் கிராமவாசியிடம்) கேட்டார்கள். அவர் முன்பு கூறியதைப் போன்றே மீண்டும் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது;(கடமையான) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை வழங்க வேண்டும்; உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு, ஒட்டகத்தை விட்டுவிடுவீராக (நாங்கள் பயணத்தைத் தொடர வேண்டும்)" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
13. மேற்கண்ட ஹதீஸ் மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 1
14. அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள். நான் அதைச் செயல்படுத்தினால் அது என்னைச் சொர்க்கத்திற்கு நெருக்கமாகவும் நரகத்திலிருந்து விலக்கியும் வைக்கவேண்டும்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; (கடமையான) ஸகாத்தை நீங்கள் வழங்க வேண்டும்; உங்கள் உறவினரைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறினார்கள்.
அந்த மனிதர் திரும்பிச் சென்றதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் தமக்குக் கட்டளையிடப்பட்டவற்றைக் கடைப்பிடித்தால் கட்டாயம் இவர் சொர்க்கம் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
அவற்றில், அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதை இவர் கடைப்பிடித்தால்..." என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
15. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசி ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு (நற்)செயலை அறிவியுங்கள்! நான் அதைச் செயல்படுத்தினால் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வையே நீங்கள் வழிபட வேண்டும்; அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்கக் கூடாது; கடமையாக்கப்பட்ட தொழுகையை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்; கடமையாக்கப் பட்ட ஸகாத்தை நிறைவேற்ற வேண்டும்; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்" என்று கூறினார்கள்.
அதற்கு அந்த மனிதர், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு போதும் இதைவிட அதிகமாக எதையும் நான் செய்யமாட்டேன்; இதிலிருந்து எதையும் நான் குறைக்கவும் மாட்டேன்" என்று கூறினார்.
அவர் திரும்பிச் சென்றதும் நபி (ஸல்) அவர்கள், சொர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்ப்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் (இதோ!) இவரைப் பார்த்துக்கொள்ளட்டும்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
16. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் கடமையான தொழுகையை நிறைவேற்றி, (மார்க்கத்தில்) விலக்கப் பட்டவற்றை விலக்கப்பட்டவை என்றும் அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்தால் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா? கூறுங்கள்" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஆம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
17. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் நுஅமான் பின் கவ்கல் (ரலி) அவர்கள் இதைவிட அதிகமாக வேறெதையும் நான் செய்யமாட்டேன்" என்று கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 1
18. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கடமையான தொழுகைகளை நான் தொழுது, ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று, (மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து, இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?" என்று கேட்டார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம்" என்றார்கள். அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார்.
அத்தியாயம் : 1
பாடம் : 5 இஸ்லாத்தின் (ஐம்)பெரும் தூண்களான முக்கியக் கடமைகள் பற்றிய விளக்கம்.
19. சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாம் (எனும் மாளிகை) ஐந்து (தூண்கள்)மீது எழுப்பப்பட்டுள்ளது. அவை: 1.இறைவன் ஒருவன் என ஏற்பது. 2. தொழுகையைக் கடைப் பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. 5. ஹஜ் செய்வது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றார்கள்.
அப்போது ஒருவர், "(நான்காவதாக) ஹஜ் செய்வதையும் (ஐந்தாவதாக) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதையும்தானே (நபி அவர்கள் குறிப்பிட்டார்கள்)?" என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இல்லை. (நான்காவது) ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது, (ஐந்தாவது) ஹஜ் செய்வது" என்று கூறிவிட்டு, "இவ்வாறுதான் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றேன்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 1
20. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாம் ஐந்து (தூண்கள்)மீது நிறுவப்பட்டுள்ளது. அல்லாஹ்வையே வழிபட்டு, அவன் அல்லாதவற்றை நிராகரிப்பது;தொழுகையைக் கடைப்பிடிப்பது; ஸகாத் வழங்குவது; இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வவது; ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது. (ஆகியனவே அந்த ஐந்தும்.)
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1