பாடம் :1 நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்தே ஹதீஸ்களை அறிவிப்பதும், பொய்யர்களின் அறிவிப்புகளைக் கைவிடுவதும் கட்டாயமாகும் என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (அவர்கள் சொல்லாத ஒன்றைச் சொன்னதாகப்) பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள எச்சரிக்கையும். அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் பாலிப்பானாக! ஆதாரபூர்வமான அறிவிப்புகள் எவை, பலவீனமான அறிவிப்புகள் எவை, நம்பத்தகுந்த அறிவிப்பாளர் யார், சந்தேகத்திற்குள்ளான அறிவிப்பாளர் யார் எனப் பகுத்தறியும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவர் தாம் அறிந்த தரமான மற்றும் நேர்மையான அறிவிப்பாளர் அறிவித்துள்ள ஹதீஸ்களை மட்டுமே அறிவிப்பது அவசியமாகும். சந்தேகத்திற்கு உள்ளானவர்கள், புதிய வழக்கங்களில் பிடிவாதமாக இருப்பவர்கள் ஆகியோரால் அறிவிக்கப்பெற்ற ஹதீஸ்களைத் தவிர்ப்பதும் அவசியமாகும். நாம் கூறிய இக்கருத்தே சரியானதாகும் என்பதற்குப் பின்வரும் இறைவசனங்கள் சான்றுகளாகும்: அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக்கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்துவிடலாம்;பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கவலைப்படுபவர்களாக ஆவீர்கள் (49:6). அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் விரும்புகின்ற சாட்சிகளில் ஓர் ஆணும் இரு பெண்களும் சாட்சியம் அளிக்க வேண்டும் (2:282). உங்களில் இரு நேர்மையாளர்களைச் சாட்சிகளாக வைத்துக்கொள்ளுங்கள் (65:2). இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும் நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத் தக்கவை அல்ல என்று தெரிகிறது.தகவல் அறிவித்தல், சாட்சியம் அளித்தல் ஆகிய இவ்விரண்டின் பொருளும் சில கோணங்களில் வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலான விஷயங்களில் அவ்விரண்டும் ஒன்றுபட்டே இருக்கின்றன. கல்வியாளர்களிடம் தீயவனின் சாட்சியம் ஏற்கப்படாததைப் போன்றே, தீயவனின் தகவலும் அவர்கள் அனைவராலும் நிராகரிப்பட்டுள்ளது. தீயவன் கூறும் செய்திக்கு இடமில்லை எனக் குர்ஆன் சுட்டிக் காட்டியிருப்பதைப் போன்றே, மறுக்கப்பட்ட அறிவிப்பாளரின் ஹதீஸிற்கும் இடமில்லை என நபிமொழி சுட்டிக் காட்டுகிறது. இது குறித்து பிரபலமான நபிமொழி ஒன்று வந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னைப் பற்றி யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.இந்த ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தும் சமுரா பின் ஜுன்தப் (ரலி)அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்படுகிறது.
பாடம் : 2 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைப்பது தொடர்பாக வந்துள்ள கண்டனம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக)ப் பொய்யுரைக்காதீர்கள். ஏனெனில், என்னைக் குறித்து யார் பொய் கூறுகிறாரோ அவர் நரகம்தான் செல்வார்.இந்த ஹதீஸை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் தமது சொற்பொழிவில் அறிவித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்" என்று கூறியிருப்பதுதான் உங்களுக்கு நான் அதிக எண்ணிக்கையில் ஹதீஸ்களை அறிவிக்கவிடாமல் தடுக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னைப் பற்றி (நான் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக) யார் வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அலீ பின் ரபீஆ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூஃபா நகரின் ஆளுநராய் இருந்தபோது நான் (மஸ்ஜிது கூஃபா) பள்ளிவாசலுக்குச் சென்றேன். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர்மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தமது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும்" என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
- மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் "(நீங்கள்) என்மீது கூறும் பொய் மற்றவர் மீது நீங்கள் கூறும் பொய்யைப் போன்றதன்று" எனும் குறிப்பு இடம்பெறவில்லை.
பாடம் : 3 கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பது கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் வஹ்ப் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தெரிந்துகொள்! கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒரு மனிதர் (பொய்யிலிருந்து) தப்பமாட்டார்; கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிக்கும் ஒருவர் ஒருபோதும் (வழிகாட்டும்) தலைவராக இருக்கமாட்டார்" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.
இதை அபுல்அஹ்வஸ் அவ்ஃப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தாம் கேள்விப்பட்டவற்றில் (சந்தேகத்திற்குரிய) சிலவற்றையாவது (பிறருக்குத்) தெரிவிப்பதிலிருந்து வாய்மூடாதவரை அவர் பின்பற்றப்படும் தலைவராக ஆக முடியாது.
இதை முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுஃப்யான் பின் ஹுசைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் இயாஸ் பின் முஆவியா (ரஹ்) அவர்கள், குர்ஆனைக் கற்பதில் உங்களுக்கிருக்கும் ஈடுபாட்டை நான் அறிவேன். எனவே, குர்ஆனிலுள்ள ஓர் அத்தியாயத்தை எனக்கு ஓதிக்காட்டி விளக்கமளிப்பீராக! நீங்கள் கற்றதை நான் (சரி) பார்க்க வேண்டும்" என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். அப்போது அவர்கள் என்னிடம், நான் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். அதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.நிராகரிக்கப்பட்ட செய்திகளைக் கூறவேண்டாமென உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், அச்செய்திகளைக் கூறித் திரிகின்றவர் இழிவடையாமலும் பொய்யர் என இனங்காணப்படாமலும் இருத்தல் அரிது" என்றார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் ஒரு சமூகத்தாரிடம் அவர்களது அறிவுக்கு எட்டாத ஒரு விஷயத்தை அறிவிப்பதானது, அவர்களில் சிலரையேனும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் விடுவதில்லை.
இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்தத்தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
பாடம் : 4 பலவீனமான அறிவிப்பாளர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிப்பதற்கு வந்துள்ள தடையும், அவற்றை அறிவிப்பதிலிருந்து விலகிக்கொள்வதும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் இறுதிக் காலத்தவரிடையே சிலர் தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத (புதுப்புது) ஹதீஸ்களையெல்லாம் உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்கள் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறுதிக் காலத்தில் பெரும் பொய்யர்களான "தஜ்ஜால்கள்" தோன்றுவார்கள். நீங்களோ உங்கள் மூதாதையரோ கேள்விப்பட்டிராத ஹதீஸ்களை உங்களிடம் அவர்கள் சொல்வார்கள். ஆகவே, அவர்களைக் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவர்கள் உங்களை வழிகெடுத்துவிடவோ குழப்பத்தில் ஆழ்த்திவிடவோ (நீங்கள் இடமளித்துவிட) வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக ஷைத்தான் மனித உருவில் மக்களிடையே வந்து பொய்யான ஹதீஸ்களை எடுத்துரைப்பான். அதன் பிறகு மக்கள் கலைந்து செல்வார்கள். அப்போது அவர்களில் ஒருவர், "யாரோ ஒரு மனிதர் (வந்து) ஒரு ஹதீஸ் சொல்வதை நான் கேட்டேன். அவரது முகம் எனக்குத் தெரியும்; ஆனால், அவருடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது" என்று கூறுவார்.- இதை ஆமிர் பின் அபதா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கடலுக்குள் சில ஷைத்தான்கள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை (இறைத்தூதர்) சுலைமான் (அலை) அவர்கள் கட்டிவைத்தார்கள். அந்த ஷைத்தான்கள் வெகுவிரைவில் வெளியேறி வந்து மக்களுக்கு முன் குர்ஆனை(ப் போன்ற ஒன்றை) ஓதிக் காட்டுவார்கள்.
இதை தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தாவூஸ் பின் கைசான் அல்யமானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இதோ இவர் -புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்கள்- இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "இன்ன இன்ன நபிமொழிகளை மீண்டும் அறிவியுங்கள்"என்றார்கள். அவ்வாறே புஷைர் அவர்களும் மீண்டும் அறிவித்துவிட்டுத் தொடர்ந்து நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "இன்ன இன்ன ஹதீஸ்களை மீண்டும் அறிவியுங்கள்" என்றார்கள். அவ்வாறே புஷைர் அவர்கள் மீண்டும் அறிவித்துவிட்டு, "(நான் தெரியாமல் தான் கேட்கிறேன்:) நான் அறிவித்த எல்லா நபிமொழிகளையும் ஏற்றுக்கொண்டுவிட்டு, (குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் மறுக்கிறீர்களா? அல்லது நான் அறிவித்த எல்லா ஹதீஸ்களையும் மறுத்துவிட்டு, (குறிப்பிட்ட) இந்த நபிமொழியை மட்டும் ஏற்கிறீர்களா? என்று எனக்குத் தெரியவில்லை" என்றார்.
அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "நாங்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துக் கொண்டுதானிருந்தோம். அப்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது பொய்யுரைக்கப்பட்டதில்லை. பின்னர் மக்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்லத் தொடங்கியபோது நபிமொழிகளை அறிவிப்பதையே நாங்கள் நிறுத்திவிட்டோம்" என்று கூறினார்கள்.
இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (நபி (ஸல்) அவர்களது காலத்தில்) ஹதீஸ்களை மனனமிட்டுவந்தோம். ஹதீஸ்கள் அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டே மனனமிடப்பட்டுவந்தன. (ஆனால், இன்று) நீங்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும், கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்லத் தொடங்கியவுடன் எல்லாம் பாரதூரமான விஷயமாகிவிட்டது.
இதை அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
புஷைர் பின் கஅப் அல்அதவீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறியவாறு நபிமொழிகளை அறிவிக்கலானார். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களோ அவரது அறிவிப்பைச் செவிகொடுத்துக் கேட்கவோ அவரை ஏறெடுத்துப் பார்க்கவோ தலைப்பட வில்லை. உடனே புஷைர் அல் அதவீ, "இப்னு அப்பாஸ் அவர்களே! நீங்கள் எனது ஹதீஸைச் செவிகொடுத்துக் கேட்பதாகத் தெரியவில்லையே! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உங்களிடம் அறிவித்துக் கொண்டிருக்க, நீங்களோ காது கொடுக்காமல் இருக்கின்றீர்களே!" என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) பதிலுரைத்தார்கள்:
ஒரு காலம் இருந்தது. அக்காலத்தில் யாரேனும் ஒருவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று சொல்வதை நாங்கள் கேட்டுவிட்டால் உடனே அவரை நோக்கி எங்கள் பார்வை செல்லும்; அவர் கூறுவதைக் கேட்க எங்கள் காதுகளைத் தாழ்த்துவோம். பிறகு மக்கள் பிடிவாதம் பிடிக்கும் ஒட்டகங்களிலும் கட்டுப்படும் ஒட்டகங்களிலும் பயணம் செய்து (வித்தியாசமே இல்லாமல் எல்லா வழிகளிலும்) செல்ல ஆரம்பித்தவுடன் நாங்கள் (நபியவர்களிடமிருந்து) அறிந்துள்ள (சரியான)வற்றை மட்டுமே மக்களிடமிருந்து ஏற்றுக் கொண்டோம். - இதைக் கைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் பின் அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், எனக்கு ஒரு மடல் வரையுமாறும், (அதில் குழப்பவாதிகளான ஷியாக்களின் கருத்துகள்) எதுவும் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுமாறும் வேண்டிக் கடிதம் எழுதினேன். (கடிதம் கண்ட) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "அவர் நல்ல பிள்ளை; அவருக்காக நான் சில விஷயங்களை நன்கு தேர்ந்தெடுத்து, சொல்லக் கூடாதவற்றைத் தவிர்த்துவிடப்போகிறேன்" என்று கூறிவிட்டு, அலீ (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகளைக் கொண்டுவரும்படி கூறினார்கள். அவற்றில் சிலவற்றை எழுதத் தொடங்கினார்கள். ஒரு (குறிப்பிட்ட) விஷயம் வந்தபோது "இப்படியெல்லாம் அலீ (ரலி) அவர்கள் தீர்ப்பளித்திருக்க முடியாது; வழிதவறியவன்தான் இப்படித் தீர்ப்பளிப்பான்" என்று கூறினார்கள்.
இதை நாஃபிஉ பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் அளித்த தீர்ப்புகள் அடங்கிய (நீண்ட சுருள்) ஏடு ஒன்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப் பட்டது. அதில் ஒரு (முழம்) அளவிற்கு மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை அழித்துவிட்டார்கள்.(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும்போது தமது முழங்கையால் ("இந்த அளவு" என்று) சைகை செய்தார்கள்.
இதை ஹிஷாம் பின் ஹுஜைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஇஸ்ஹாக் அம்ர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்களுக்குப் பின் (அன்னாரின் தீவிர ஆதரவாளர்களான ஷியா பிரிவு) மக்கள் பல்வேறு புதிய கோட்பாடுகளை உருவாக்கியபோது, அலீ (ரலி) அவர்களின் நண்பர்களில் ஒருவர் "அல்லாஹ் இம்மக்களை (தனது அருளிலிருந்து) அப்புறப்படுத்துவானாக! எத்தகைய ஞானத்தை அவர்கள் சீரழித்துவிட்டார்கள் (தெரியுமா!)" என்று (கடிந்து) கூறினார்.
இதை சுலைமான் பின் மிஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஃகீரா பின் மிக்சம் அள்ளப்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் குறித்த அறிவிப்பாளர்களில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுடைய மாணவர்கள் மட்டுமே உண்மை உரைப்பவர்களாய் இருந்தனர்.
இதை அபூபக்ர் பின் அய்யாஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 5 அறிவிப்பாளர் தொடர்களை எடுத்துரைப்பது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும்; நம்பத்தகுந்த அறிவிப்பாளர்களிடமிருந்து வரும் அறிவிப்புகள் மட்டுமே ஏற்கப்படும்; அறிவிப்பாளர்களிடம் காணப்படும் குறைகளை எடுத்துரைப்பது அனுமதிக்கப்பட்டது என்பது மட்டுமன்றி, அது ஒரு கடமையும் கூட. அது தடை செய்யப்பட்டுள்ள புறங்கூறல் ஆகாது; மாறாக, புனித மார்க்கத்தைக் காக்கும் (அறப்) பணியாகும்.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நிச்சயமாக இந்த (நபிமொழி)க்கல்வியும் மார்க்கம்தான். எனவே, உங்களுடைய மார்க்க (ஞான)த்தை எவரிடமிருந்து பெறுகிறீர்களோ அவரை உற்றுக் கவனியுங்கள்.
இதை ஹிஷாம் பின் ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாக வந்துள்ளது.
முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
மக்கள் (ஆரம்பக் காலங்களில் ஹதீஸ்கள் அறிவிக்கப்படும்போது அவற்றின்) அறிவிப்பாளர் தொடர்கள் குறித்துக் கேட்டதில்லை. ஆனால், (பிற்காலத்தில்) குழப்பங்கள் தோன்றியபோது உங்களுக்கு இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்களின் பெயர்களையும் எங்களுக்கு அறிவியுங்கள்" என்று கூறலாயினர். ஆகவே, அந்த அறிவிப்பாளர்கள் நபிவழிக்காரர்களா என்று கவனித்து, அவ்வாறிருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டும் ஏற்கப்படும். அவர்கள் (நபிவழியில் இல்லாதவற்றைக் கூறும்) புதுமைவாதிகளாய் இருந்தால் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் ஏற்கப்படா.
இதை ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, இன்னார் எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார்" என்று கூறினேன். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள்,இதை உமக்கு அறிவித்தவர் நம்பத்தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக்கொள்க" என்று கூறினார்கள்.
இதை அபூஅம்ர் அப்துர் ரஹ்மான் பின் அம்ர் அல்அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுலைமான் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்களிடம், இன்னார் எனக்கு இன்னின்னவாறு அறிவித்தார்" என்று கூறினேன். அதற்கு தாவூஸ் (ரஹ்) அவர்கள்,உமக்கு இதை அறிவித்தவர் நம்பத் தகுந்தவராய் இருந்தால் ஏற்றுக்கொள்க" என்று கூறினார்கள்.
இதை சயீத் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபுஸ்ஸினாத் அப்துல்லாஹ் பின் தக்வான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மதீனாவில் நம்பிக்கைக்குரிய நூறு பேரைச் சந்தித்திருக்கிறேன். ஆனால், அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. இவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்" என்று சொல்லப்பட்டது.
இதை அப்துர் ரஹ்மான் பின் அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சஅத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நம்பத்தகுந்தவர்கள் மட்டுமே ஹதீஸ்களை அறிவிக்க வேண்டும்.இதை மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அறிவிப்பாளர் தொடரும் மார்க்கத்தின் ஓர் அங்கமே. அறிவிப்பாளர் தொடர் (இஸ்னாத்) மட்டும் இருந்திருக்காவிட்டால் (மார்க்கத்தில்) நினைத்தவர்கள் நினைத்ததையெல்லாம் சொல்லியிருப்பார்கள்.
அப்பாஸ் பின் அபீரிஸ்மா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், நமக்கும் மக்களுக்குமிடையே அறிவிப்பாளர் தொடர் என்ற கால்கள் உள்ளன (அவற்றைக் கொண்டே ஹதீஸ்கள் நிற்கும்)" என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்.
அபூஇஸ்ஹாக் இப்ராஹீம் பின் ஈசா அத்தாலகானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்களிடம்,நீ உனக்காக தொழுவதுடன் உன் பெற்றோருக்காகத் தொழுவதும், உனக்காக நோன்பு நோற்பதுடன் உன் பெற்றோருக்காக நோன்பு நோற்பதும் நன்மைக்கு மேல் நன்மை தரும் செயலாகும்" என்று ஒரு நபிமொழி வந்துள்ளது என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், அபூஇஸ்ஹாக்! இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான், இது, ஷிஹாப் பின் கிராஷ் (ரஹ்) அவர்கள் அறிவித்த ஹதீஸ்" என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், அன்னார் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்தாம்" என்று கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்?" என்று கேட்டார்கள். நான்,ஹஜ்ஜாஜ் பின் தீனார்" என்றேன். அன்னாரும் நம்பத்தகுந்த அறிவிப்பாளர்தாம்" என்று கூறிவிட்டு, அன்னாருக்கு இதை அறிவித்தவர் யார்?" என்று அப்துல்லாஹ் கேட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்றேன். அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்),அபூஇஸ்ஹாக்! ஹஜ்ஜாஜ் பின் தீனார் அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே பயண ஒட்டகங்களின் கழுத்துகள் முறிந்துவிடும் அளவுக்கு நீண்ட (கால)இடைவெளி உள்ளது. (இதை எப்படி அவர் நபியவர்களிடம் கேட்டிருக்க முடியும்?.) எனினும் (ஒருவர் தம் பெற்றோருக்காக)தான தர்மம் செய்வது (நன்மையே என்பது) தொடர்பாக எந்தக் கருத்து வேறுபாடுமில்லை" என்று சொன்னார்கள்.
அலீ பின் ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் மக்கள் மத்தியில் அம்ர் பின் ஸாபித்திடமிருந்து அறிவிப்பதை விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர் முன்னோரைப் பழிப்பவராய் இருந்தார்" என்று கூறுவதை நான் செவியேற்றேன்.
அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்தவக்கில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூமுஹம்மத் காசிம் பின் உபைதில்லாஹ் (ரஹ்) மற்றும் யஹ்யா பின் சயீத் (ரஹ்) ஆகியோர் அருகில் அமர்ந்திருந்தேன்.அப்போது யஹ்யா (ரஹ்) அவர்கள் காசிம் (ரஹ்) அவர்களிடம், அபூமுஹம்மதே! மார்க்க விவகாரத்தில் ஏதேனும் ஒன்றைப் பற்றி உங்களிடம் வினவப்பட்டு, அதற்குரிய விடையோ தீர்வோ உங்களிடம் இல்லாதிருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பெருங்குறையாயிற்றே!" என்று கூறினார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், ஏன் அவ்வாறு கூறுகின்றீர்கள்?" என்று கேட்டார்கள்.அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள்,நீங்கள் நேர்வழித் தலைவர்களான அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் வழித் தோன்றலாயிற்றே!" என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், நான் (தக்க)அறிவின்றிப் பேசுவதோ, நம்பத்தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவர்களிடம் இதைவிட மோசமானதாகும்" என்று கூறினார்கள். (இதைக்கேட்ட) யஹ்யா (ரஹ்) அவர்கள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாகிவிட்டார்கள்.
இதை அபுந்நள்ர் ஹாஷிம் பின் அல்காசிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஅக்கீல் யஹ்யா பின் அல்முத்த வக்கில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய (புதல்வரின்) புதல்வரிடத்தில் (காசிம் பின் உபைதில்லாஹ் அவர்களிடம்) மக்கள் ஒரு விஷயம் குறித்து வினவினர். ஆனால், அன்னாருக்கு அதற்கான விடை தெரிந்திருக்கவில்லை. அப்போது காசிம் (ரஹ்) அவர்களிடம் யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் நீங்கள் நேர்வழித் தலைவர்களின் -அதாவது உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோரின்- வழித்தோன்றல் ஆவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைப் போன்றவர்களிடம் ஒரு விஷயம் குறித்து வினவப்பட்டு, அதற்கான விளக்கம் உங்களிடம் இல்லாமலிருப்பதைப் பெருங்குறையாகவே நான் கருதுகிறேன்" என்று சொன்னார்கள். அதற்குக் காசிம் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (தக்க)அறிவின்றிப் பேசுவதோ, நம்பத்தகாதவர்களிடமிருந்து ஒன்றை அறிவிப்பதோ தான் அல்லாஹ்விடமும், அவனைப் பற்றி அறிந்தவர்களிடமும் அதைவிடப் பெருங்குறையாகும்" என பதிலளித்தார்கள். அவ்விருவரும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருந்தபோது அங்கு நானும் இருந்தேன்.
இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுஃப்யான் பின் சயீத் அஸ்ஸவ்ரீ (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்),சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) ஆகியோரிடம், என்னிடம் ஒருவர் வந்து நபிமொழித் துறையில் நம்பத்தகாத ஒருவரைப் பற்றி வினவினால் (நான் அவரது குறையை எடுத்துரைக்கலாமா?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அனைவரும், அவர் நம்பத்தகுந்தவர் அல்லர் என்று (மறைக்காமல்) எடுத்துரைத்துவிடுங்கள். (அது புறம் பேசல் ஆகாது)" என்று பதிலளித்தனர்.
இதை அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அவ்ன் பின் அர்திபான் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடம் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரின் அறிவிப்புக் குறித்து வினவப்பட்டது. அப்போது வீட்டின் நிலைப்படி மேல் நின்றுகொண்டிருந்த இப்னு அவ்ன் (ரஹ்) அவர்கள் ஷஹ்ர் மீது மக்கள் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளனர்; ஷஹ்ர் மீது மக்கள் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளனர்" என்று (இரு முறை) கூறினார்கள். அதாவது அவரது அறிவிப்புக் குறித்து மக்கள் குறை கூறியுள்ளனர்.
இதை உபைதுல்லாஹ் பின் சயீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷஹ்ர் பின் ஹவ்ஷப் என்பாரைச் சந்தித்திருக்கிறேன்; ஆனால், அவரை நான் பொருட்படுத்தியதில்லை.
இதை ஷபாபா பின் சவார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களிடம், அப்பாத் பின் கஸீர் என்பாரின் நிலை உங்களுக்குத் தெரிந்ததே. அவர் ஹதீஸை அறிவித்தால் விபரீதமான விஷயங்களை (நிராகரிக்கப்பட்ட ஹதீஸ்களை)யே கூறுகிறார். ஆகவே,அவரிடமிருந்து ஹதீஸ்களை ஏற்க வேண்டாமென மக்களிடம் நான் கூறி விடுவதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், ஆம் (அவ்வாறே கூறிவிடுங்கள்)" என்றார்கள்.
அதற்குப் பிறகு ஏதேனும் ஓர் அவையில் நானிருக்கும்போது அப்பாத் பின் கஸீரைப் பற்றிப் பேச்சு வந்தால், அவரது மார்க்க ஈடுபாடு குறித்து நான் மெச்சிப் பேசுவேன். ஆனால், அவர் அறிவிக்கும் அறிவிப்புகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என்று (மக்களிடம்) கூறிவிடுவேன்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஷுஅபா (ரஹ்) அவர்களிடம் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் இதோ இந்த அப்பாத் பின் கஸீர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள் (அவருடைய அறிவிப்புகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்)" என்று கூறினார்கள்.
ஃபள்ல் பின் சஹ்ல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் முஅல்லா பின் மன்ஸூர் அர்ராஸீ (ரஹ்) அவர்களிடம், அப்பாத் பின் கஸீருக்கு ஹதீஸ்களை அறிவிப்பவரான முஹம்மத் பின் சயீத் என்பாரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு முஅல்லா அர்ராஸீ (ரஹ்) அவர்கள் ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் தம்மிடம் (பின்வருமாறு) கூறியதாகத் தெரிவித்தார்கள்:
நான் முஹம்மத் பின் சயீதின் வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தேன். அவர் அருகில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோது அன்னாரிடம் நான் முஹம்மத் பின் சயீத் பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள் அவர் ஒரு பொய்யர்" என்று கூறினார்கள்.
முஹம்மத் பின் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள், ஹதீஸ் அறிவிப்புகளில் பொய்யுரைப்பதை விட அதிகமாக வேறெதிலும் பொய்யுரைக்கும் நல்லவர்களை நாம் கண்டதில்லை" என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அபீஅத்தாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் முஹம்மத் பின் யஹ்யா (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது இது பற்றிக் கேட்டேன். அப்போது அவர்கள், ஹதீஸ் அறிவிப்புகளில் பொய்யுரைப்பதைவிட அதிகமாக வேறெதிலும் நல்லவர்கள் பொய்யுரைப்பதை நீ காண மாட்டாய்" என்று தம் தந்தை கூறியதாகச் சொன்னார்கள்.
அபுல்ஹுசைன் முஸ்லிம் (பின் அல் ஹஜ்ஜாஜ் ஆகிய நான்) கூறுகிறேன்:
நல்லவர்கள் நாவில் (தம்மை அறியாமலேயே) பொய் வந்துவிடுகிறது; அவர்கள் வேண்டுமென்றே பொய்யுரைப்பதில்லை.
கலீஃபா பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஃகாலிப் பின் உபைதில்லாஹ் அவர்களிடம் சென்றபோது அவர் என்னிடம் மக்ஹூல் எனக்கு அறிவித்தார்;மக்ஹூல் எனக்கு அறிவித்தார்" என்று கூறி, (சில ஹதீஸ்களை) எழுதிக்கொள்ளுமாறு கூறலானார். அப்போது அவருக்குச் சிறுநீர் கழிக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுவிடவே உடனே அவர் எழுந்து சென்றுவிட்டார். அப்போது நான் (அவரது) பதிவேட்டைப் பார்த்தேன். அதில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அபான் அறிவித்தார்கள். அபான் இன்னாரிடமிருந்து அறிவித்தார்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. (அவர் என்னிடம் சொன்னதற்கும் குறிப்பேட்டில் உள்ளதற்கும் வேறுபாடு இருந்ததால்) உடனே நான் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டேன்.
ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள், நான் அஃப்பான் என்பாரின் (ஹதீஸ்) பதிவேட்டில், உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தொடர்பான செய்தி ஒன்றை, ஹிஷாம் அபில்மிக்தாம் அவர்கள் அறிவித்திருந்ததைக் கண்டேன். அதில் ஹிஷாம் அவர்கள் முஹம்மத் பின் கஅப் என்பாரிடமிருந்து இன்னாரின் புதல்வரான யஹ்யா எனும் ஒருவர் எனக்கு அறிவித்தார்" என்று எழுதப்பட்டிருந்தது. உடனே நான் அஃப்பான் அவர்களிடம், நபிமொழியியல் அறிஞர்கள், முஹம்மத் பின் கஅப் என்பாரிடமிருந்தே ஹிஷாம் அறிவித்ததாகக் கூறுகின்றனரே?" என்று கேட்டேன். அதற்கு அஃப்பான் அவர்கள், இந்த ஹதீஸ் விஷயத்தில்தான் ஹிஷாம் அகப்பட்டுக்கொண்டார். அவர் முஹம்மத் பின் கஅப் அவர்களிடமிருந்து எனக்கு யஹ்யா அறிவித்தார்" என்று முன்பு கூறிவந்தார். பின்னர் தாமே முஹம்மத் பின் கஅப் அவர்களிடமிருந்து (நேரடியாக இந்த ஹதீஸைச்) செவியேற்றதாக அவர் (மாற்றிக்) கூறலானார்" என்று சொன்னார்கள்.
அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின் ஜபலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்களிடம் நோன்புப் பெருநாள், வெகுமதிகளின் நாளாகும்" என்பது பற்றிய அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் ஹதீஸைத் தங்களுக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,சுலைமான் பின் அல்ஹஜ்ஜாஜ் அவர்கள்தாம். உங்கள் கரத்தில் நீங்கள் வைத்துள்ள அன்னாரிடமிருந்து கிடைத்த (மகத்தான) செய்திகளைப் பாருங்கள்" என்று (புகழ்ந்து) கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒரு வெள்ளி நாணயம் அளவு இரத்தம் (பட்ட நிலையில் தொழுதவரின் தொழுகை நிறைவேறாது; அதைத் திரும்பத் தொழ வேண்டும்)" என்ற ஹதீஸின் அறிவிப்பாளரான ரவ்ஹ் பின் ஃகுதைஃப் என்பாரைச் சந்தித்தேன். அவருடன் சிறிது நேரம் அமர்ந்தேன். ஆயினும், அவருடன் நான் அமர்ந்திருப்பதை என் தோழர்கள் பார்த்துவிடுவார்களோ எனக் கூச்சப்படலானேன். அவரது ஹதீஸ் வெறுக்கப்பட்டதே அதற்குக் காரணம்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அறிவிப்பாளர்) பகிய்யா பின் அல்வலீத் உண்மையாளர்தாம். ஆயினும், அவர் வருவோர் போவோரிடமிருந்தெல்லாம் (வித்தியாசமின்றி) ஹதீஸ்களை அறிவிப்பார்.
இதை சுஃப்யான் பின் அப்தில் மலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் அல் அஃவர் அல்ஹம்தானீ என்பார் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார். ஆனால்,அவர் ஒரு பொய்யராவார்.
இதை அபூஹிஷாம் முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூஹிஷாம் முஃகீரா அள்ளப்பீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் அல்ஹாரிஸ் பின் அப்தில்லாஹ் அல்அஃவர் எனக்கு ஹதீஸ்களை அறிவித்தார்"என்று கூறிவிட்டு, அவர் பொய்யர்களில் ஒருவர்" என அறுதியிட்டுக் கூறினார்கள்.
இதை முஃபள்ளல் பின் முஹல்ஹல் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்கமா (ரஹ்) அவர்கள், நான் குர்ஆனை இரண்டு ஆண்டுகளில் பயின்றேன்" என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அல் ஹாரிஸ் அல்அஃவர், குர்ஆன் எளியது; வேத அறிவிப்பு தான் (வஹீ) வலியது" என்று கூறினார்.
இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்ஹாரிஸ் அல்அஃவர் நான் குர்ஆனை மூன்று வருடங்களிலும் வேத அறிவிப்பை (வஹீ) இரண்டு வருடங்களிலும்"அல்லது வேத அறிவிப்பை மூன்று வருடங்களிலும் குர்ஆனை இரண்டு வருடங்களிலும்" பயின்றேன்" என்று கூறினார்.
இதை சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்ஹாரிஸ் சந்தேகத்திற்கிடமானவர் எனக் கருதப்பட்டார்.
இதை முஃகீரா பின் மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளார் தொடர்களில் வந்துள்ளது.
ஹம்ஸா அஸ்ஸய்யாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முர்ரா அல்ஹம்தானீ (ரஹ்) அவர்களிடம் அல்ஹாரிஸ், ஒரு ஹதீஸை அறிவித்தார். அப்போது முர்ரா (ரஹ்) அவர்கள்,வாசலிலேயே அமர்ந்திருப்பீராக!" என்று கூறிவிட்டு இல்லத்திற்குள் சென்று தமது உடைவாளை எடுத்தார்கள். (நிலைமையின்) விபரீதத்தை உணர்ந்த அல்ஹாரிஸ் (அங்கிருந்து) சென்று விட்டார்.
அப்துல்லாஹ் பின் அவ்ன் பின் அர்திபான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், முஃகீரா பின் சயீத், அபூஅப்திர் ரஹீம் ஆகியோர் குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். அவ்விருவரும் பொய்யார்கள் ஆவர்" என்று கூறினார்கள்.
ஆஸிம் பின் சுலைமான் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இளம் பிள்ளைகளாக இருந்தபோது அபூஅப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ (அப்துல்லாஹ் பின் ஹபீப் பின் ருபய்யிஆ -ரஹ்) அவர்களிடம் செல்வோம். அப்போது அவர்கள் எங்களிடம்,அபுல்அஹ்வஸைத் தவிர வேறெந்தப் பேச்சாளர்களிடமும் நீங்கள் உட்காராதீர்கள்! ஷகீக் அள்ளப்பீ என்பாரைக் குறித்தும் உங்களை நான் எச்சரிக்கிறேன் (அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்காதீர்கள்!)" என்று கூறுவார்கள். மேலும், இந்த ஷகீக், காரிஜீய்யாக்களின் கொள்கை கொண்டவராய் இருந்தார். இந்த ஷகீக், அபூவாயில் (என்றழைக்கப்படும் ஷகீக் பின் சலமா") அல்லர்" என்றும் கூறுவார்கள்.
ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் யஸீத் அல்ஜுஅஃபீ என்பாரைச் சந்தித்தேன். ஆனால், அவரிடமிருந்து (எந்த ஹதீஸையும்) நான் பதிவு செய்துகொள்ளவில்லை. ஏனெனில் அவர்,(ராஃபிஜிகளின் கொள்கையான) ரஜ்ஆ" எனும் கொள்கையில் நம்பிக்கையுடையவராய் இருந்தார்.
இதை அபூஃகஸ்ஸான் முஹம்மத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மிஸ்அர் பின் கிதாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் யஸீத் (அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை நம்பிக்கை கொள்வதற்கு முன் எனக்கு ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.
இதை யஹ்யா பின் ஆதம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர் பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ஜாபிர் பின் யஸீத் (அடிப்படையற்ற) நூதனக் கருத்துகளை வெளியிடுவதற்கு முன் அவரிடமிருந்து மக்கள் ஹதீஸ்களை அறிவித்து வந்தனர். அவர் நூதனக் கருத்துகளை வெளியிட்ட பின் அவரை ஹதீஸ் துறையில் மக்கள் சந்தேகிக்கலாயினர். சிலர் அவரிடமிருந்து ஹதீஸ்கள் அறிவிப்பதை நிறுத்திக்கொண்டனர்" என்று கூறினார்கள். அப்போது சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ஜாபிர் அப்படி எதை வெளியிட்டார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள்(அலீ (ரலி) அவர்கள் மேகத்தினுள் மறைந்திருக்கிறார்கள் என்ற) ரஜ்ஆ" எனும் கொள்கையை" என்று பதிலளித்தார்கள்.
இதை சலமா பின் ஷபீப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்ஜர்ராஹ் பின் மலீஹ் அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் யஸீத், என்னிடம் எழுபதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன. அவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ பின் ஹுசைன் பின் அலீ அல்பாகிர்-ரஹ்) அவர்களால் அறிவிக்கப் பெற்றவையாகும்" என்று கூறினார்.
ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் யஸீத்,என்னிடம் ஐம்பதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் எதையும் நான் (யாரிடமும்) அறிவிக்கவில்லை" என்று கூறினார். பிறகு ஒரு நாள் அவர் ஒரு ஹதீஸை அறிவித்துவிட்டு,(அந்த) ஐம்பதாயிரம் ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும்" என்றார்.
இதை அஹ்மத் பின் யூனுஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் யஸீத் அல்ஜுஅஃபீ,என்னிடம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப் பெற்ற ஐம்பதாயிரம் ஹதீஸ்கள் உள்ளன" என்று கூறினார்.
இதை அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் அத்தயாலிஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் ஜாபிர் பின் யஸீதிடம்,ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும்வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது தொடர்பாகத்) தீர்ப்பளிக்கும்வரை நான் இந்த பூமியை விட்டு ஒருபோதும் அகலவேமாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவனே மேலானவன்" எனும் (12:80ஆவது) இறைவசனத்தைப் பற்றிக் கேட்டார். அதற்கு ஜாபிர் பின் யஸீத், இந்த வசனத்திற்குரிய விளக்கம் இன்னும் வரவில்லை" என்று பதிலளித்தார். நான் ஜாபிர் பொய் சொல்கிறார்" என்று கூறினேன்.
இதன் அறிவிப்பாளரான ஹுமைதீ (அப்துல்லாஹ் பின் ஸுபைர் பின் ஈசா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம்,ஜாபிர் என்ன நோக்கத்தில் இவ்வாறு கூறினார்?" என்று கேட்டோம். அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள்,அலீ (ரலி) அவர்கள் மேகத்தினுள் இருந்துகொண்டிருக்கிறார்கள். வானிலிருந்து ஒருவர் -அதாவது அலீ (ரலி) அவர்கள்- இன்னாருடன் செல்லுங்கள்" என்று (குறிப்பிட்டுக்)கூறாதவரை நாங்கள் அவர்களுடைய வழித்தோன்றல்களில் யாரையும் பின்தொடரமாட்டோம்" எனும் (ரஜ்ஆ") கொள்கையினை ராஃபிளாக்கள் கூறிவருகின்றனர். இதுதான் அவ்வசனத்தின் பொருள் என்று ஜாபிர் பின் யஸீதும் கூறிவருகிறார். ஆனால், இது பொய். (உண்மையில்) அவ்வசனம் (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்களுடைய சகோதரரர்கள் தொடர்பாக அருளப் பெற்றதாகும்" என்று கூறினார்கள்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஜாபிர் பின் யஸீத் அறிவித்த ஏறத்தாழ முப்பதாயிரம் ஹதீஸ்களை நான் செவியேற்றுள்ளேன். எனக்கு இன்ன இன்னது (பரிசாகக்) கிடைத்தாலும் அந்த ஹதீஸ்களில் எதையும் எடுத்துரைக்க நான் இசையமாட்டேன்.
அபூஃகஸ்ஸான் முஹம்மத் பின் அம்ர் அர்ராஸீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களிடம், நீங்கள் ஹாரிஸ் பின் ஹஸீராவைச் சந்தித்திருக்கின்றீர்களா?"என்று கேட்டேன். அதற்கு ஜரீர் (ரஹ்) அவர்கள்,ஆம்; அவர் நெடிய மௌனம் காக்கும் கிழவர்; அபத்தமான (ரஜ்ஆ) கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர்" என்று கூறினார்கள்.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், ஒரு மனிதர் குறித்து அவர் சீரான நாவுடையவர் அல்லர்" என்றும்,மற்றொரு மனிதர் குறித்து அவர் எண்ணிக்கையைக் கூட்டிச் சொல்பவர்" (ஹதீஸ் விஷயத்தில் மோசடி செய்பவர்) என்றும் கூறியதை நான் கேட்டேன்.
இதை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்கள்,எனக்கு ஓர் அண்டைவீட்டுக்காரர் இருக்கிறார்" என்று கூறிவிட்டு, அவருடைய சிறப்புகளில் சிலவற்றை எடுத்துக்கூறினார்கள். பிறகு என்னிடம் அவர் இரு பேரீச்சம்பழங்களுக்காகச் சாட்சியமளிக்க முன்வந்தாலும் அவரது சாட்சியத்தை நான் ஏற்கமாட்டேன்" என்று கூறினார்கள்.
இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் யாரைப் பற்றியும் ஒருபோதும் புறங்கூறுவதை நான் கண்டதில்லை. ஆனால், அபூஉமய்யா அப்துல் கரீம் என்பவரைத் தவிர! அவரைப் பற்றிக் கூறுகையில் அல்லாஹ்தான் (அவரை மன்னித்து) அவருக்கு அருள்புரிய வேண்டும். அவர் நம்பத்தகாதவர்; இக்ரிமா (ரஹ்) அவர்கள் (எனக்கு) அறிவித்த ஒரு ஹதீஸ் குறித்து என்னிடம் அவர் கேட்டுவிட்டு, இக்ரிமாவிடம் தாமே செவியேற்றதாக அறிவித்தார்" என்றார்கள். - இதை அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
எங்களிடம் அபூதாவூத் (நுஃபய்உ பின் அல்ஹாரிஸ்) அல்அஃமா என்பார் வந்து பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்; ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்தார்கள்" என்று ஹதீஸ்களை அறிவிக்கலானார். நாங்கள் இதைப்பற்றி கத்தாதா (ரஹ்) அவர்களிடம் சொன்னபோது அவர் பொய் சொல்கிறார்; அவர் இவர்கள் எவரிடமிருந்தும் (எந்த ஹதீஸையும்) செவியுறவில்லை. அல்ஜாரிஃப்" கொள்ளைநோய் காலத்தில் மக்களிடம் கையேந்தும் யாசகராகவே அவர் இருந்தார்" என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். - இதை அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அபூதாவூத் அல்அஃமா, கத்தாதா (ரஹ்) அவர்களிடம் வந்துவிட்டு எழுந்து சென்றார். அப்போது (அங்கிருந்த) மக்கள்,இவர் பத்ருப் போரில் கலந்துகொண்ட பதினெட்டு நபித்தோழர்களைத் தாம் சந்தித்ததாகக் கூறிவருகிறார்" என்று கூறினர். அப்போது கத்தாதா (ரஹ்) அவர்கள்,இவர் அல்ஜாரிஃப்" கொள்ளைநோய் காலத்திற்கு முன்பு (மக்களிடம்) யாசகம் கேட்டுத் திரிந்துகொண்டிருந்தார். அவர் இந்த (ஹதீஸ்) துறையில் கவனம் செலுத்தியதுமில்லை; அது குறித்து அவர் பேசியதுமில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (இவரைவிட மூத்தவர்களான) ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) ஆகியோர்கூட பத்ருப்போரில் கலந்துகொண்ட நபித்தோழர்களில் சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து தவிர வேறு யாரிடமிருந்தும் நேரடியாகச் செவியுற்றதாக எமக்கு ஹதீஸ்களை அறிவித்ததில்லை" என்றார்கள்.
இதை யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரகபா பின் மஸ்கலா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஜஅஃபர் (அப்துல்லாஹ் பின் மிஸ்வர்) அல்ஹாஷிமீ அல்மதனீ என்பவர் உண்மையான தகவல்கள் சிலவற்றை (நபிமொழிகள் என்ற பெயரில்) புனைந்து கூறிவந்தார். (உண்மையில்) அவை நபிமொழிகளாக இருக்கவில்லை. ஆனால், அவற்றை நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவே அவர் அறிவித்து வந்தார்.
யூனுஸ் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் உபைத் என்பார் ஹதீஸ் அறிவிப்பில் பொய்யுரைத்துவந்தார்.
இதை ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அவ்ஃப் பின் அபீஜமீலா (ரஹ்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் நமக்கெதிராக ஆயுதம் ஏந்துகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறியதாக ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் உபைத் எமக்கு அறிவித்தார்" என்று கூறினேன். அதற்கு அவ்ஃப் (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அம்ர் பொய்யுரைத்துவிட்டார்" என்றார்கள். (ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அவர் இந்த ஹதீஸைச் செவியுறவில்லை.) மாறாக, தமது (அடிப்படையற்ற) தீய கோட்பாட்டை நிலைநிறுத்துவதே (இந்த ஹதீஸை அறிவிப்பதன் மூலம்) அவரது நோக்கமாகும்" என்று கூறினார்கள்.
இதை அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் எப்போதும் அபூபக்ர் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களுடன் இருந்து கொண்டு, அன்னாரிடம் ஹதீஸ்களைக் கற்று வந்தார். பிறகு (சிறிது காலமாக) அந்த மனிதரைக் காணவில்லை. அய்யூப் (ரஹ்) அவர்கள் விசாரித்தபோது மக்கள், அபூபக்ரே! இப்போது அவர் அம்ர் பின் உபைதுடன் இருந்துகொண்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.
இவ்வாறிருக்க, ஒரு நாள் காலையில் நான் அய்யூப் (ரஹ்) அவர்களுடன் அங்காடிக்குச் சென்றேன்.அப்போது அய்யூப் (ரஹ்) அவர்களை அந்த மனிதர் எதிர்கொண்டார். அவருக்கு அய்யூப் (ரஹ்) அவர்கள் சலாம் கூறி, நலம் விசாரித்தார்கள். பிறகு, நீங்கள் (தற்போது) அந்த அம்ர் பின் உபைத் என்பாருடன் இருப்பதாக எனக்குச் செய்தி எட்டியதே?" என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், அபூபக்ரே! ஆம் (உண்மைதான்); அம்ர் எங்களுக்கு அபூர்வமான பல தகவல்களைச் சொல்கிறார்" என்று கூறினார். அதற்கு அய்யூப் (ரஹ்) அவர்கள், அந்த அபூர்வமான தகவல்களைக் கண்டுதான் நாங்கள் வெருண்டோடுகிறோம்" அல்லது அஞ்சுகிறோம்" என்று கூறினார்கள்.
இதை உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம், பேரீச்சம்பழச்சாற்றில் தயாரிக்கப்பட்ட மதுவால் போதை உண்டானவனுக்குச் சாட்டையடி தண்டனை வழங்கப்படாது என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் உபைத் அறிவிக்கிறாரே?" என்று கேட்கப்பட்டது.அதற்கு அய்யூப் (ரஹ்) அவர்கள்,அம்ர் பொய்யுரைக்கிறார். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் பேரீச்சம்பழச் சாற்றில் தயாரான மதுவால் போதை ஏற்பட்டவனுக்குச் சாட்டையடி தண்டனை அளிக்கப்படும்" என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்று சொன்னார்கள்
இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சல்லாம் பின் அபீமுதீஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அம்ர் பின் உபைதிடம் சென்றுவரும் தகவல் அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களுக்கு எட்டியது. இந்நிலையில், ஒரு நாள் அய்யூப் (ரஹ்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது ஒருவரை அவரது மார்க்க நம்பிக்கையில் நீங்கள் நம்பாமலிருக்க, அவருடைய ஹதீஸ்களை மட்டும் நீங்கள் நம்புவீர்களா, என்ன?" என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூமூசா இஸ்ராயீல் பின் மூசா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அம்ர் பின் உபைத் (முஅதஸிலாக்களின்) மாறுபட்ட சிந்தனைகளை வெளியிடுவதற்கு முன் எங்களுக்கு ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
இதை சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
முஆத் பின் முஆத் பின் நஸ்ர் அல் அம்பரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களுக்கு வாசித்" நகரின் நீதிபதியான இப்ராஹீம் அபூஷைபா குறித்து (அவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கலாமா?" என்று) கேட்டு கடிதம் எழுதினேன். அதற்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் அவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நீங்கள் பதிவு செய்துகொள்ள வேண்டாம்! (படித்ததும்) எனது இக்கடிதத்தைக் கிழித்து விடுக" என்று எனக்கு பதில் கடிதம் எழுதினார்கள்.
இதை உபைதுல்லாஹ் பின் முஆத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஹம்மாத் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், ஸாபித் அவர்களிடமிருந்து சாலிஹ் பின் பஷீர் அல்முர்ரீ அறிவித்த ஹதீஸ் ஒன்றைக்கூறினேன். அப்போது ஹம்மாத் (ரஹ்) அவர்கள், சாலிஹ் பொய்யுரைத்துவிட்டார்" என்று கூறினார்கள்.
(இதைப்போன்றே) நான் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்களிடம், சாலிஹ் அல்முர்ரீ அறிவித்த மற்றோர் ஹதீஸை எடுத்துரைத்தபோது அவர்களும் சாலிஹ் பொய்யுரைத்து விட்டார்" என்றே கூறினார்கள்.
இதை ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூதாவூத் சுலைமான் பின் தாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ஷுஅபா (ரஹ்) அவர்கள், நீங்கள் ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்) அவர்களிடம் சென்று ஹசன் பின் உமாரா அறிவிக்கும் ஹதீஸ்களை அறிவிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதன்று.ஏனெனில், அவர் பொய்யுரைக்கிறார்" என்று சொல்லுங்கள் என்றார்கள்.
நான், ஏன் இவ்வாறு கூறுகின்றீர்கள்?" என்று ஷுஅபா (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ஹசன் பின் உமாரா, ஹகம் பின் உதைபா அல்கிந்தீ (ரஹ்) அவர்களிடமிருந்து சில ஹதீஸ்களை அறிவித்தார். ஆனால், அவற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று சொன்னார்கள். நான், எந்தெந்த ஹதீஸ்களை (உமாரா அறிவித்தார்)?" என்று கேட்டேன். அதற்கு ஷுஅபா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
நான் ஹகம் அவர்களிடம், உஹுத் போரில் கொல்லப்பட்ட உயிர் தியாகிகளுக்காக நபி (ஸல்) அவர்கள் (இறுதித்தொழுகை-ஜனாஸாத் தொழுகை") தொழுவித்தார்களா?" என்று கேட்டேன். அதற்கு ஹகம் அவர்கள்,அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை" என்று பதிலளித்தார்கள். ஆனால், இந்த ஹசன் பின் உமாராவோ, நபி (ஸல்) அவர்கள் உஹுத் போர் உயிர் தியாகிகளுக்காக ஜனாஸாத் தொழுகை தொழுவித்து அடக்கமும் செய்தார்கள்" என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து மிக்சம் (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக ஹகம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை (புனைந்து) அறிவித்தார்.
(இதைப் போன்றே) நான் ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களிடம் விபசாரத்தில் பிறந்த குழந்தைகள் தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள் (அவை இறந்துவிட்டால் அவற்றுக்காகத் தொழவைக்கப்படுமா)?" என்று கேட்டேன். அதற்கு ஹகம் (ரஹ்) அவர்கள், (ஆம்;) அவற்றுக்காகத் தொழவைக்கப்படும்" என்று பதிலளித்தார்கள். எந்த அறிவிப்பாளர் வழியாக வரும் ஹதீஸிலிருந்து (இவ்வாறு கூறுகின்றீர்கள்)?" என்று கேட்டேன். அதற்கு ஹகம் (ரஹ்) அவர்கள்,ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் வழியாக வரும் ஹதீஸில் இவ்வாறு அறிவிக்கப்படுகிறது" என்று பதிலளித்தார்கள். ஆனால், இந்த ஹசன் பின் உமாராவோ, தமக்கு ஹகம் அவர்களும், ஹகம் அவர்களுக்கு யஹ்யா பின் அல்ஜஸ்ஸார் அவர்களும், யஹ்யா அவர்களுக்கு அலீ (ரலி) அவர்களும் அறிவித்ததாகக் கூறினார். (இதனால்தான் ஹசன் பின் உமாரா பொய்யுரைக்கிறார் என்று நான் குறிப்பிட்டேன் என்றார்கள் ஷுஅபா (ரஹ்) அவர்கள்.)
ஹசன் பின் அலீ அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் ஸியாத் பின் மைமூன் என்பவர் குறித்துக் கூறுகையில், நான் அவரிடமிருந்தும் காலித் பின் மஹ்தூஜ் என்பவரிடமிருந்தும் எந்த ஹதீஸையும் அறிவிக்க மாட்டேன் எனச் சத்தியம் செய்துள்ளேன்"என்று கூறிவிட்டுப் பின்வருமாறும் கூறினார்கள்:
நான் ஸியாத் பின் மைமூன் என்பவரைச் சந்தித்து ஒரு ஹதீஸ் குறித்து (அதை உங்களுக்கு அறிவித்தவர் யார் என்று) கேட்டேன். அதற்கு ஸியாத், பக்ர் பின் அப்தில்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்று கூறினார். மற்றொரு முறை அவரைச் சந்தித்தபோது முவர்ரிக் பின் அல்முஷம்ரிஜ் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்"என்று கூறினார். பின்னர் இன்னொரு முறை அவரைச் சந்தித்தபோது ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்"என்றார்.
ஹசன் அல்ஹுல்வானீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
(ஸியாத் பின் மைமூன், காலித் பின் மஹ்தூஜ் ஆகிய) அவ்விருவரையும் பொய்யர்கள் என யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) அவர்கள் கூறிவந்தார்கள். நான், அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியேற்றுக்கொண்டிருந்தேன். ஸியாத் பின் மைமூன் பற்றி நான் குறிப்பிட்டபோது, அப்துஸ் ஸமத் (ரஹ்) அவர்களும் அவரைப் பொய்யர் என்றே கூறினார்கள்.
மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்களிடம், நீங்கள் அப்பாத் பின் மன்ஸூரிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவித்துள்ளீர்கள். ஆனால், அவரிடமிருந்து வாசனைப் பொருள் வியாபாரியான (ஹவ்லா எனும்) பெண்ணின் ஹதீஸை நீங்கள் ஏன் அறிவிக்கவில்லை? அந்த ஹதீஸை நள்ர் பின் ஷுமைல் எங்களுக்கு அறிவித்துள்ளாரே!" என்று கேட்டேன். அதற்கு அபூதாவூத் அத்தயாலிசீ (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: அமைதியாக இருங்கள்! நானும் அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களும் ஸியாத் பின் மைமூனைச் சந்தித்து (இந்த ஹதீஸ் குறித்து)க் கேட்டோம். (அவர்தாம் ஹவ்லா தொடர்பான இந்த ஹதீஸை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்தவர்.)அப்போது நாங்கள் இந்த ஹதீஸ்களை நீங்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தா அறிவிக்கிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு ஸியாத், பாவம் செய்த ஒருவர் பின்னர் வருந்தித் திருந்திவிட்டால் அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னிக்க மாட்டானா என்ன, சொல்லுங்கள்?" என்று கேட்டார். நாங்கள், ஆம் (மன்னிப்பான்)" என்றோம். ஸியாத், இவற்றிலிருந்து எந்த ஒரு சிறிய மற்றும் பெரிய ஹதீஸையும் நான் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து செவியுறவுமில்லை; அனஸ் (ரலி) அவர்களை நான் சந்திக்கவும் இல்லை என்பது பொதுமக்களுக்குத்தான் தெரியாது! உங்கள் இருவருக்குமா தெரிந்திருக்க வில்லை?" என்று கேட்டார்.
பின்னர் ஸியாத் (அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாக ஹதீஸ்களை) அறிவித்துவருகிறார் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. உடனே நானும் அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களும் அவரிடம் சென்றோம். அப்போது அவர்,நான் பாவமன்னிப்புக் கோருகிறேன்" என்று கூறினார். பிறகு (பழையபடியே) அவர் ஹதீஸ்களை அறிவிக்கவே அவரை நாங்கள் (அடியோடு) கைவிட்டோம்.
அபூஅம்ர் ஷபாபா பின் சவார் அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல் குத்தூஸ் பின் ஹபீப் அத்திமஷ்கீ என்பவர் எங்களுக்கு ஹதீஸ்களை அறிவிப்பார். அப்போது (சுவைத் பின் ஃகஃபலா" எனும் ஓர் அறிவிப்பாளரின் பெயரை) சுவைத் பின் அகலா என்று (மாற்றிக்) கூறுவார். மேலும் அப்துல் குத்தூஸ், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காற்றுக்காக (அர்ரவ்ஹ்) இலக்கு (அர்ள்) ஏற்படுத்துவற்குத் தடை விதித்தார்கள்" என்று கூறுவதை நான் செவியுற்றேன். அப்போது அவரிடம், இதற்கு என்ன பொருள்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், காற்று வருவதற்காகச் சுவரில் துளை ஏற்படுத்துவதாகும்" என்று (ஹதீஸின் மூல வார்த்தைகளைச் சிதைத்து அநர்த்தமாகக்) கூறினார்.
உபைதுல்லாஹ் பின் உமர் அல்கவாரீரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
மஹ்தீ பின் ஹிலால் என்பார் (ஹதீஸ்களை அறிவிப்பதற்காக) அமர்ந்த சில நாட்களுக்குப் பின்னால், (அவரிடம் ஹதீஸ்களைக் கேட்ட) ஒரு மனிதரிடம் அபூஇஸ்மாயீல் ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் என்ன உங்கள் திசையிலிருந்து (பொய் எனும்) உவர்ப்பு நீரூற்று கொப்பளிக்கிறதே!" என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் ஆம் (உண்மைதான்), அபூஇஸ்மாயீலே!" என்று பதிலளித்தார்கள்.
அபூஅவானா அல்வள்ளாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து எனக்குக் கிடைக்கப்பெறாத ஹதீஸ்களை யெல்லாம் நான் அபான் பின் அபீஅய்யாஷிடம் செல்லும்போது அவர் எனக்கு வாசித்துக் காட்டாமல் இருந்ததில்லை.
இதை அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அலீ பின் முஸ்ஹிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களும் அபான் பின் அபீஅய்யாஷிடமிருந்து ஏறத்தாழ ஓராயிரம் ஹதீஸ்களைச் செவியுற்றிருக்கிறோம். பின்னர் நான் ஹம்ஸா அஸ்ஸய்யாத் அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன். நான் அபானிடமிருந்து செவியுற்ற ஹதீஸ்களை நபியவர்களிடம் எடுத்துரைத்தேன். அவற்றில் ஐந்து அல்லது ஆறு ஹதீஸ்களைத்தான் நபியவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
ஸகரிய்யாஉ பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அபூஇஸ்ஹாக்(இப்ராஹீம் பின் முஹம்மத் பின் அல்ஹாரிஸ்) அல்ஃபஸாரீ (ரஹ்) அவர்கள், பகிய்யா பின் அல்வலீத் (எனும் அறிவிப்பாளர்), பிரபல அறிவிப்பாளர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களை எழுதிக்கொள்ளுங்கள்; பிரபலமற்ற அறிவிப்பாளர்களிடமிருந்து அவர் அறிவிப்பதை எழுதாதீர்கள். இஸ்மாயீல் பின் அய்யாஷ் (எனும் அறிவிப்பாளர்), பிரபல அறிவிப்பாளர்களிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அறிவிக்கும் எந்த ஹதீஸ்களையும் எழுதாதீர்கள்" என்று கூறினார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அத்தாரிமீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பகிய்யா பின் அல்வலீத் நல்ல மனிதர்தாம். எனினும், அவர் அறிவிப்பாளர்களின் சொந்தப் பெயர்களை(க் குறிப்பிட வேண்டிய இடத்தில் அவற்றை)க் குறிப்பிடாமல் குறிப்புப் பெயர்களையும், குறிப்புப்பெயர்களை(க் குறிப்பிட வேண்டிய இடத்தில் அவற்றை)க் குறிப்பிடாமல் சொந்தப் பெயர்களையும் குறிப்பிட்டு வந்தார். (இதனால் குழப்பம் நேர்ந்தது.) நீண்ட நாட்களாக அவர் அபூசயீத் அல்வுஹாழீ எனும் (குறிப்புப் பெயருடைய) ஓர் அறிவிப்பாளரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துவந்தார். நாங்கள் (அவரது இயற்பெயர் என்னவென்று) ஆராய்ந்த போது அவர் அப்துல் குத்தூஸ் என்ற (பலவீனமான) அறிவிப்பாளர்தாம் எனத் தெரிந்து கொண்டோம்.
அப்துர் ரஸ்ஸாக் பின் ஹுமாம் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் யாரைப் பற்றியும் அவர் பொய்யர்" என்று வெளிப்படையாகக் கூறுவதை நான் கேட்டதில்லை. அப்துல் குத்தூஸைப் பற்றி அவர் பொய்யர்" என்று அன்னார் கூறியதை நான் கேட்டுள்ளேன்.
அபூநுஐம் அல்ஃபள்ல் பின் துகைன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்முஅல்லா பின் உர்ஃபான் என்பார் ஸிஃப்பீன் போரின்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்..." என்று (தொடங்கும் ஒரு ஹதீஸை) எங்களுக்கு அபூவாயில் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றார். உடனே நான், இறந்துபோன அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் மண்ணறையிலிருந்து எழுந்தா (ஸிஃப்பீனுக்கு) போனார்கள்?" என்று கேட்டேன்.
அஃப்பான் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்களிடம் இருந்தோம். அப்போது (அங்கிருந்த) ஒருவர் மற்றொருவரிடமிருந்து (அவர் கூறியதாக) ஒரு ஹதீஸை அறிவித்தார். உடனே நான், அவர் நம்பிக்கைக்குரியவர் அல்லர்" என்று சொன்னேன். உடனே அந்த நபர், நீங்கள் அவரைக் குறித்துப் புறம் பேசிவிட்டீர்கள்" என்றார். அப்போது இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர்கள்,அவரைக் குறித்து இவர் புறம் பேசவில்லை; அவர் நம்பத்தகுந்தவர் அல்லர் என்று தீர்ப்பளித்தார் (அவ்வளவுதான்)" என்று கூறினார்கள்.
இந்தத் தகவல் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
பிஷ்ர் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிக்கும் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான் என்பவரைப் பற்றிக்கேட்டேன். மாலிக் (ரஹ்) அவர்கள், அவர் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். அவர்களிடம், (உமய்யா பின் கலஃபின் புதல்வியான) தவ்அமா அவர்களின் முன்னாள் அடிமையான ஸாலிஹ் என்பாரைப் பற்றிக் கேட்டேன். அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்று சொன்னார்கள். அபுல் ஹுவைரிஸ் அப்துர் ரஹ்மான் பின் முஆவியா என்பவரைப் பற்றிக் கேட்டதற்கு, அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்றார்கள். இப்னு அபீதிஉப் (முஹம்மத் பின் அப்திர் ரஹ்மான்) அவர்களுக்கு ஹதீஸ்களை அறிவித்த ஷுஅபா பின் தீனார் அல்குறஷீ பற்றிக் கேட்டபோது அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். ஹராம் பின் உஸ்மான் என்பவர் பற்றிக் கேட்ட போது அவரும் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்றார்கள்.
இந்த ஐந்து அறிவிப்பாளர்களைப் பற்றியும் நான் மாலிக் (ரஹ்) அவர்களிடம் வினவியபோது இவர்கள் ஐவரும் தங்களுடைய ஹதீஸ் அறிவிப்புகளில் நம்பத்தகுந்தவர் அல்லர்" என்றே கூறினார்கள். மற்றொருவரைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். -அவரது பெயரை மறந்துவிட்டேன்- அதற்கு மாலிக் (ரஹ்) அவர்கள், இவரது பெயரை என் ஹதீஸ் பதிவேடுகளில் நீர் கண்டுள்ளீரா?" என்று கேட்டார்கள். நான் இல்லை" என்றேன். மாலிக் (ரஹ்) அவர்கள், அவர் நம்பத்தகுந்தவராக இருந்திருந்தால் நிச்சயமாக அவரது பெயரை என் ஹதீஸ் பதிவேடுகளில் பார்த்திருப்பீர்" என்று சொன்னார்கள்.
இதை அபூஜஅஃபர் அஹ்மத் பின் சயீத் அத்தாரிமீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அபீதிஉப் (ரஹ்) அவர்கள் ஷுரஹ்பீல் பின் சஅத் என்பவரிடமிருந்து ஹதீஸ் அறிவித்தார்கள். ஷுரஹ்பீல் சந்தேகத்திற்குரியவராகக் கருதப்பட்டார்.
இதை யஹ்யா பின் முயீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் சொர்க்கம் செல்ல விரும்புகிறீர்களா, அல்லது (அதற்கு முன்) அப்துல்லாஹ் பின் அல்முஹர்ரர் அவர்களைச் சந்திக்க விரும்புகிறீர்களா? என்று என்னிடம் கேட்கப்பட்டால், (முதலில்) அவரைச் சந்தித்துவிட்டுப் பின்னர் சொர்க்கம் செல்ல விரும்புகிறேன் என்றே சொல்லிலியிருப்பேன். (அந்த அளவுக்கு அவர்மீது நான் மதிப்பு வைத்திருந்தேன்.) பின்னர் (அவர் ஒரு பொய்யர் என) அவரை நான் (இனம்) கண்டபோது, அவரைவிடக் கெட்டிச் சாணம் எவ்வளவோ பரவாயில்லை என்று எனக்குப் பட்டது.
இதை அபூஇஸ்ஹாக் அத்தாலகானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உபைதுல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஸைத் பின் அபீஉனைஸா (ரஹ்) அவர்கள், என் சகோதரர் (யஹ்யா பின் அபீஉனைஸா) இடமிருந்து எதையும் அறிவிக்காதீர்கள்" என்று கூறினார்கள்.
இதை வலீத் பின் ஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் அர்ரக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் அபீஉனைஸா ஒரு பொய்யர் ஆவார் என உபைதுல்லாஹ் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இதை அப்துஸ் ஸலாம் பின் அப்திர் ரஹ்மான் அல்வாபிஸீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்) அவர்களிடம் ஃபர்கத் பின் யஅகூப் அஸ்ஸப்கீ அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அய்யூப் (ரஹ்) அவர்கள் அவர் நபிமொழித் துறையைச் சேர்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள்.
இதை சுலைமான் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் பிஷ்ர் அல்அப்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களிடம் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் உபைத் பின் உமைர் அல்லைஸீ என்பவரைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது யஹ்யா (ரஹ்) அவர்கள், அவர் மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்" என்று கூறினார்கள். உடனே யஹ்யா (ரஹ்) அவர்களிடம், இவர் யஅகூப் பின் அதாஉ என்பவரைவிட மிகவும் பலவீனமான அறிவிப்பாளரா?" என்று வினவப்பட்டது. அதற்கு யஹ்யா (ரஹ்) அவர்கள், ஆம்" என்றார்கள். பிறகு,முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் உபைத் பின் உமைரிடமிருந்து எவரும் ஹதீஸ் அறிவிப்பார் என்பதை என்னால் எண்ணியும் பார்க்க முடியவில்லை" என்று கூறினார்கள்.
பிஷ்ர் பின் அல்ஹகம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் ஹகீம் பின் ஜுபைர், அப்துல் அஃலா மற்றும் யஹ்யா பின் மூசா பின் தீனார் ஆகியோர் பலவீனமான அறிவிப்பாளர்கள் என்று கூறினார்கள். மேலும் யஹ்யா பின் மூசாவின் அறிவிப்புகள் காற்று (போல வந்த வேகத்தில் மறையக்கூடியவை)தாம்" என்றும் தெரிவித்தார்கள். மேலும் மூசா பின் திஹ்கான், ஈசா பின் அபீஈசா அல்மதனீ ஆகியோரும் பலவீனமானவர்கள் என்று அன்னார் கூறினார்கள்.
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹசன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் செவிமடுத்துள்ளேன்: என்னிடம் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள்,நீங்கள் ஜரீரிடம் சென்றால் அவரிடமுள்ள அனைத்து ஹதீஸ்களையும் எழுதிக்கொள்ளுங்கள்; ஆனால், மூவர் அறிவித்த ஹதீஸ்களைத் தவிர. உபைதா பின் முஅத்திப், சரிய்யீ பின் இஸ்மாயீல், முஹம்மத் பின் சாலிம் ஆகியோரே அம்மூவரும்" என்றார்கள்.
அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:
சந்தேகத்திற்குரிய அறிவிப்பாளர்கள் குறித்தும், அவர்களுடைய குறைகள் குறித்தும் (நபிமொழி) அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இதைப் போன்ற தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகக் குறிப்பிட இந்த ஏடு போதாது. நாம் இதுவரை எடுத்துரைத்த தகவல்கள் இந்த விஷயத்தில் நபிமொழி அறிஞர்களின் கோட்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புவோருக்குப் போதுமானவை ஆகும்.
நபிமொழி அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறைகளை எடுத்துரைப்பதையும், தங்களிடம் வினவப்பட்டபோது அவற்றைத் தெளிவாகக் கூறுவதையும் நபிமொழி அறிஞர்கள் கட்டாயமாக்கிக் கொண்டதற்குக் காரணமே, அ(வற்றை மறைப்ப)தில் உள்ள மாபெரும் கேடுதான். ஆம்! மார்க்கச் செய்தி என்பதே அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தடை செய்யப்பட்டது (ஹராம்), செய்யத் தூண்டுவது (அம்ர்), தடுப்பது (நஹ்யு), ஆவலூட்டுவது (தர்ஃகீப்), எச்சரிப்பது (தர்ஹீப்) ஆகியவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும். இந்நிலையில் மார்க்கச் செய்திகளை அறிவிப்பவர் உண்மைக்கும் நம்பகத்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இல்லாமலிருந்தால் நிலைமை என்னவாகும்? அவரைப் பற்றித் தெரிந்த ஒருவர் அவரிடமிருந்து மார்க்கச் செய்திகளை அறிவிக்கப்போய், அவரிடமுள்ள குறைகளை விவரம் தெரியாத மக்களிடம் மறைத்தால், அது பாவம் மட்டுமல்ல; முஸ்லிம் பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.
ஏனெனில், அச்செய்திகள் அனைத்துமோ பெரும்பாலானவையோ அடிப்படையற்ற பொய்யான தகவல்களாக இருக்க,அவற்றைக் கேட்கும் சிலர் அப்படியே அவற்றைச் செயல் படுத்திவிடலாம்; அல்லது சிலவற்றையாவது செயல்படுத்திவிடலாம். அதே நேரத்தில், நம்பத் தகுந்த, திருப்தி தருகின்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகக் கிடைத்துள்ள சரியான தகவல்கள் ஏராளம் உள்ளன. அப்படியிருக்க, நம்பத்தகாத, திருப்திகொள்ள முடியாத அறிவிப்பாளர்களின் செய்திகளுக்கு என்ன அவசியம் நேர்ந்தது?
பலவீனமான ஹதீஸ்களையும் அடையாளம் தெரியாத அறிவிப்பாளர் தொடர்களையும் தெரிந்துகொண்டே அறிவிப்பதில் சிலர் முனைப்புக் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களிடம் தங்களை அதிக அறிவுபடைத்தவர்கள் என்று காட்டிக் கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றே கருதுகிறேன். இன்னார் எத்துனை எத்துனை ஹதீஸ்களை அறிந்துள்ளார்; ஏராளமான ஹதீஸ்களைத் திரட்டியுள்ளார் என்று (சிலாகித்துக்)கூறப்பட வேண்டும் என்பதே அவர்களின் இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.
(ஹதீஸ் எனும்) கல்வித் துறையில் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொண்ட எவருக்கும் விமோசனமே கிடையாது. இவர்களை அறிஞர்கள்" என்று குறிப்பிடுவதை விட முட்டாள்கள்" என்று கூறுவதே பொருத்தமாயிருக்கும்.
பாடம் : 6 "அல்முஅன்அன்' ஹதீஸை ஆதாரமாக ஏற்கலாம். இன்று தம்மை நபிமொழியியலார் என்று சொல்லிக்கொள்கின்ற சிலர், சரியான அறிவிப்பாளர் தொடர் எது, சரியில்லாத அறிவிப்பாளர் தொடர் எது? என்பது தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளனர். அதை எடுத்துரைக்காமலும் அதிலுள்ள தவறைச் சுட்டிக்காட்டாமலும் விட்டுவிடுவதே சரியான முடிவாக இருக்கும். ஏனெனில், கைவிடப்பட வேண்டிய ஒரு கருத்தை அடியோடு சாய்ப்பதற்கும் அந்தக் கருத்தாளரைப் பற்றிய நினைவை முற்றாக ஒழிப்பதற்கும் சிறந்த வழி என்னவென்றால், அந்தக் கருத்தை(க்கண்டு கொள்ளாமல்) அலட்சியப்படுத்துவதுதான். அறியாமக்களுக்கு அதை அறிமுகப்படுத்தி விடாமல் இருப்பதற்கும் அதுவே ஏற்றதாகும். இருப்பினும், பின்விளைவுகளை யோசித்தும், அறியாமக்கள் புதிய கருத்துகளைக் கண்டு ஏமாந்து, அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்ட தவறான கொள்கைகளையும் கூட விரைந்து ஏற்றுவிடுவர் என்பதை அஞ்சியும் அந்தச் சிலரது தவறான கருத்தை விவரிப்பதே பொதுமக்களுக்கு நல்லது என்று கருதினோம்; அந்தத் தவறான கருத்துக்கு, உரிய முறையில் பதிலளிப்பது எதிர்காலத்திற்குச் சிறந்ததாகும் என்ற முடிவுக்கு வந்தோம். இனி, அந்தச் சிலரது தவறான சிந்தனை என்னவென்று பார்ப்போம்: ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் "இன்னார் குறித்து இன்னார் அறிவித்தார்'' என்று கூறப்பட்டிருந்தால் அதை ஆதாரமாக ஏற்பதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அதாவது அவ்விரு அறிவிப்பாளர்களும் தம் வாழ்நாளில் ஓரிரு முறையாவது சந்தித்துக் கொண்டார்கள் என நாம் அறிந்திருக்க வேண்டும். அல்லது ஒருவரிடமிருந்து மற்றவர் நேரடியாக ஹதீஸைக் கேட்டிருக்க வேண்டும். அல்லது ஒரு தடவையோ பல தடவைகளோ சந்தித்தார்கள் என்ற செய்தி வேறு அறிவிப்புகளிலாவது வந்திருக்க வேண்டும். இதை விடுத்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதாலோ, அவரிடமிருந்து இவர் நேரடியாகக் கேட்டிருக்க வாய்ப்புண்டு என்பதாலோ மட்டும் அந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இருவரும் சந்தித்தார்கள்; ஒருவரிடமிருந்து மற்றவர் நேரடியாகச் செவியேற்றார் என்று உறுதியாகத் தெரியாதவரை இத்தகைய அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்ல. இத்தகைய அறிவிப்புகள் கிடைத்தால் அவற்றை நிறுத்தி வைத்துவிட்டு, ஒருவரிடமிருந்து மற்றவர் சிறிதளவோ அதிக அளவோ செவியேற்றார் என்பதற்கு வேறு சான்று கிடைக்கும்போது அவற்றை ஆதாரமாக ஏற்கலாம்;இல்லையேல் கூடாது. அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக! அறிவிப்பாளர்தொடர்களில் இத்தகைய குறைகாணும் இவர்களது கூற்று (அடிப்படையற்ற) கற்பனையாகும். இதற்கு முன்பும் சரி; இப்போதும் சரி; கல்வியாளர்களின் ஆதரவு இக்கூற்றுக்குக் கிடையாது. அன்றும் இன்றும் ஹதீஸ்களையும் அறிவிப்புகளையும் அறிந்துள்ள கல்வியாளரிடையே பரவலான ஏகோபித்த கருத்து இதுதான்: அதாவது நம்பத்தகுந்த அறிவிப்பாளர் ஒருவர் தம்மைப் போன்ற மற்றோர் அறிவிப்பாளரிடமிருந்து ஒரு ஹதீஸை அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்து ஒருவர் மற்றவரை நேரடியாகச் சந்தித்து உரையாடியிருக்க வாய்ப்பு உண்டு என்றிருந்தாலே, அந்த அறிவிப்பை ஏற்கலாம்; அது கட்டாயம் ஆதாரமாகும். இருவரும் சந்தித்துப் பேசினர் என்பதற்கு எந்தத் தகவலும் கிடைக்காவிட்டாலும் சரிதான். ஆனால்,இருவரும் சந்திக்கவில்லை என்பதற்கோ, ஒருவரிடமிருந்து மற்றவர் எதையும் செவியேற்கவில்லை என்பதற்கோ தெளிவான சான்று இருப்பின் அப்போது அந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இந்தத் தெளிவு ஏற்படாதவரை நாம் விவரித்த சாத்தியக்கூற்றை வைத்து செவியேற்றதாக எடுத்துக்கொள்ளப்படும். (அறிவிப்பாளர் இருவரும் ஒரேகாலத்தில் வாழ்ந்திருந்தாலும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்திருக்க வேண்டும் என்பது பற்றிய)இக்கருத்தை வெளியிட்ட அந்தச் சிலரிடமும் அவர்களுடைய ஆதரவாளர்களிடமும் நாம் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்: "நம்பத்தகுந்த அறிவிப்பாளர் ஒருவர் நம்பத்தகுந்த மற்றோர் அறிவிப்பாளரிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ் ஆதாரபூர்வமானது; அதன்படி செயல்படுவது கடமை'' என நீங்களே சொல்லிவிட்டுப் பிறகு நீங்களே "அவ்விரு அறிவிப்பாளர்களும் ஒரு தடவையோ, பல தடவைகளோ நேரடியாகச் சந்தித்திருக்கிறார்கள்; அல்லது ஒருவரிடமிருந்து மற்றவர் செவியேற்றிருக்கிறார் என்பது தெளிவாகாதவரை அவ்விரு அறிவிப்பாளர் வழியாக வந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளமாட்டோம்'' என்றொரு நிபந்தனையை இணைத்துக் கொள்கிறீர்களே! (இதுமுறையா?) இந்நிபந்தனையை முன்னோடியான வேறு யாரும் விதித்துள்ளார்களா? அப்படி விதித்திருந்தால் எங்கே அதற்கான சான்றைக் கொண்டு வாருங்கள் பார்ப்போம்! முந்தைய அறிஞர்களில் சிலர் இவ்வாறு நிபந்தனை விதித்திருந்தார்கள் என்று நீங்கள் கூறினால் எங்கே அவர்களுடைய பெயர்களைக் கூறுங்கள் என்று கேட்போம். அதற்கு அவர்களாலோ மற்றவர்களாலோ எந்த பதிலும் அளிக்க முடியாது. அப்படியே ஏதேனும் ஒன்றைக் கொண்டுவந்தால்கூட "இதில் எங்கே உங்களுக்கு ஆதாரம் உள்ளது?''என்று கேட்போம். அதற்கு அவர்கள் பின்வருமாறு பதிலளிக்கலாம்: அன்றும் இன்றும் நபிமொழி அறிவிப்பாளர்கள் பலரை நாம் பார்த்திருக்கிறோம். அவர்களில் ஒருவர் மற்றொருவரை நேரில் பார்த்திராமலும், ஒருவரிடமிருந்து மற்றொருவர் எதையும் செவியேற்றிராமலும் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இவ்வாறு செவியுறாமல், அறிவிப்பாளர் ஒருவர் தமக்கு அறிவித்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் (முர்சலாக) ஹதீஸ்களை அறிவிப்பதை அவர்கள் அனுமதித்துள்ளார்கள். ஆனால், இடையே அறிவிப்பாளர் பெயர் விடுபட்ட இத்தகைய (முர்சலான) ஹதீஸ் நம்மிடமும் நபிமொழி அறிஞர்களிடமும் ஆதாரம் ஆகாது. (பெயர் குறிப்பிடப்படாத அறிவிப்பாளர் யார், அவரிடம் மற்றவர் செவியேற்றாரா? என்று உறுதியாகத் தெரியாததே இதற்குக் காரணம்.) அப்படியானால், அறிவிப்பாளர் ஒருவர் மற்றவரிடம் செவியேற்றாரா, இல்லையா? என்பதைக் கவனிக்க வேண்டிய அவசியம் உண்டு எனத் தெரிகிறது. ஒருவர் மற்றவரிடமிருந்து சிறிதளவேனும் செவியேற்றார் என்பது உறுதியாகி விட்டால், அவர்களின் எல்லா அறிவிப்புகளையும் ஏற்பதில் சிக்கல் இல்லை. இந்த விளக்கம் கிடைக்காதபோது, அந்த அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டியதுதான். அதை ஆதாரமாக எடுக்கலாகாது. ஏனெனில், அதுவும் "முர்சலாக' இருக்கக்கூடும். இவ்வாறு கூறும் அவர்களிடத்தில் பின்வருமாறு நாம் கேள்வி எழுப்புவோம்: ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதற்கும், அதை ஆதாரமாக எடுக்கலாகாது என்பதற்கும் அதன் அறிவிப்பாளர் தொடருக்கிடையே எவரும் விடுபட்டிருக்கக்கூடும் என்ற சாத்தியக் கூற்றைக் காரணமாகக் கூறுகிறீர்கள். அப்படிப் பார்த்தால், "இன்னார் குறித்து இன்னார் அறிவித்தார்'' என்று கூறப்படும் எந்த ("முஅன் அன்') ஹதீஸ்களையும்,அதன் அறிவிப்பாளர் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒருவரிடமிருந்து மற்றவர் செவியேற்றார் என்று தெரிந்த பிறகே ஏற்க வேண்டியதுவரும். (ஆனால், "முஅன் அன்' ஹதீஸ்களில் அவ்வாறு நாம் பார்ப்பதில்லை.) உதாரணத்திற்கு, ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், அன்னார் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் (ஹிஷாம் பின் உர்வா "அன்' அபீஹி "அன்' ஆயிஷா) அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரை எடுத்துக்கொள்வோம். இதில் ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும் உர்வா (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் இந்த ஹதீஸைச் செவியேற்றார்கள் என உறுதியாக நாம் அறிகிறோம். ஆனால், ஹிஷாம் (ரஹ்) அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஓர் அறிவிப்பில் "நான் செவியேற்றேன்'என்றோ, "எனக்கு (என் தந்தை) அறிவித்தார்' என்றோ கூறியிருக்காவிட்டால் ஹிஷாமுக்கும் அவருடைய தந்தை உர்வாவுக்குமிடையே இன்னோர் அறிவிப்பாளர் இருந்து, அவர் ஹிஷாமுடைய தந்தையிடம் அந்த ஹதீஸைக் கேட்டு ஹிஷாமுக்கு அறிவித்திருக்கலாம்; ஹிஷாம் நேரடியாகத் தம் தந்தையிடம் அதைக் கேட்டிருக்கமாட்டார். இந்நிலையில், இடையில் அறிவிப்பாளர் விடுபட்டதை அறிவிக்க விருப்பமில்லாமல் தாம் யாரிடம் கேட்டார் என்பதை ஹிஷாம் கூறியிருக்க மாட்டார். (நேரடியாகத் தந்தையிடம் கேட்டதைப் போன்றே காட்டியிருப்பார்.) இதைப் போன்றே, ஹிஷாமுடைய தந்தை உர்வாவுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே ஓர் அறிவிப்பாளர் விடுபட்டிருக்க இடமுண்டு. ஏன், எந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரிலெல்லாம், ஒருவர் மற்றவரிடமிருந்து செவியேற்றதற்கான குறிப்பு இல்லையோ அதிலெல்லாம் இதே நிலை இருக்க இடமுண்டு. பொதுவாக, அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றொருவரிடமிருந்து அடிக்கடி ஹதீஸ்களைச் செவியேற்றுள்ளார் என்று தெரியும்போது, எப்போதாவது சில வேளைகளில் சில ஹதீஸ்களை அவரிடமிருந்து நேரடியாகக் கேட்காமல் வேறொருவர் வாயிலாகக் கேட்டிருக்க இடமுண்டு. அப்போது அந்த வேறொருவரின் பெயரைக் குறிப்பிடாமல் நேரடியாகக் கேட்டதைப் போன்றே அவர் அறிவிக்கலாம். அல்லது (மகிழ்ச்சி) வேகத்தில் அந்த வேறொருவரின் பெயரைக் குறிப்பிடவும் செய்யலாம். நாம் சொன்ன இந்த நடைமுறை நபிமொழித் துறையில் பரவலாக உள்ளது. நம்பத்தகுந்த நபிமொழியியலார் மற்றும் முக்கிய அறிஞர்களின் செயல்களிலிருந்து இதை அறியலாம். இனி, இம்முறையில் அறிவிக்கப்பெற்ற சில அறிவிப்பாளர்தொடர்களை (இன்ஷா அல்லாஹ்) நாம் குறிப்பிட விரும்புகிறோம். அவற்றைக் கொண்டு பெரும்பாலானவற்றின் நிலை என்ன என்பதைக் கணிக்க முடியும்.
அய்யூப் அஸ்ஸக்தியானீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், வகீஉ பின் அல்ஜர்ராஹ் மற்றும் இப்னு நுமைர் (ரஹ்) உள்ளிட்ட பலர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், ஹிஷாம் தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் (பின்வருமாறு) அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தபோதும், இஹ்ராம் கட்டாமல் இருந்தபோதும் என்னிடம் இருந்தவற்றிலேயே நல்ல மணமுடைய வாசனைப் பொருளை அவர்களுக்கு நான் பூசி வந்தேன்.
இதே ஹதீஸை லைஸ் பின் சஅத், தாவூத் அல்அத்தார், ஹுமைத் பின் அல்அஸ்வத், உஹைப் பின் காலித் மற்றும் அபூஉசாமா (ரஹ்) ஆகியோர் ஹிஷாம் (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். ஹிஷாம் (தம் சகோதரர்) உஸ்மான் பின் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உஸ்மான் (தம் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்.
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் தம் தந்தை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்; ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது (பள்ளிவாசலுக்குள்ளிருந்து) தமது தலையை, மாதவிடாய் ஏற்பட்டிருந்த என் பக்கம் நீட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலைவாரிவிடுவேன்.
இதே ஹதீஸை மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்தும்,ஸுஹ்ரீ அவர்கள் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்தும், உர்வா (ரஹ்) அவர்கள் அம்ரா (ரஹ்) அவர்களிடமிருந்தும்,அம்ரா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும், ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) மற்றும் சாலிஹ் பின் அபீஹஸ்ஸான் (ரஹ்) ஆகியோர் அபூசலமா (ரஹ்) அவர்களிடமிருந்தும், அபூசலமா அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தாம் நோன்பு நோற்றிருக்கும் போது (என்னை) முத்தமிட்டுள்ளார்கள்.
நோன்பு நோற்றிருக்கும்போது (மனைவியை) முத்தமிடுவது தொடர்பான மேற்கண்ட ஹதீஸை அறிவிக்கும்போது யஹ்யா பின் அபீகஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூசலமா அவர்களுக்கு உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களும், அன்னாருக்கு உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களும், உர்வா அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்களும் "நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிட்டுள்ளார்கள்" என்று அறிவித்துள்ளனர்.
சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) முதலானோர் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தும், அம்ர் அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தும் (பின்வருமாறு) அறிவித்துள்ளனர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் குதிரை இறைச்சியை உண்ண அனுமதியளித்தார்கள்; (நாட்டுக்) கழுதை இறைச்சியை உண்ண வேண்டாமெனத் தடைவிதித்தார்கள்.
இதே ஹதீஸை ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தும், அம்ர் அவர்கள் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், முஹம்மத் பின் அலீ அவர்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தும், ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளனர்.
இத்தகைய அறிவிப்புகள் அதிக எண்ணிக்கையில் வந்துள்ளன. அறிவுடையோர்க்கு நாம் மேலே குறிப்பிட்ட சில உதாரணங்களே போதுமானவை ஆகும்.
நிலைமை இவ்வாறிருக்க, அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றவரிடமிருந்து கேட்டார் என்று உறுதியாகத் தெரியாதபோது அந்த ஹதீஸ் பலவீனமானதுதான் என்று தீர்மானிக்க, இடையில் அறிவிப்பாளர் பெயர் விடுபட்டிருப்பதற்கான (முர்சலாக இருப்பதற்கான) வாய்ப்பே போதும் என்று அந்தச் சிலர் கூறியுள்ளனர். அப்படியானால், ஒருவர் மற்றவரிடமிருந்து செவியேற்றார் என்று தெரியும் போதுகூட, செவியேற்றதைப் பற்றிய குறிப்பு ஹதீஸில் இடம்பெறாதவரை அந்த (முஅன்அன்) ஹதீஸை ஏற்க முடியாது என்று சொல்ல வேண்டிய கட்டாயம் நேரும். ஏனெனில், நாம் முன்பு கூறியதைப்போன்று, ஹதீஸ் அறிவிப்பாளர்கள் தமக்கு அறிவித்தவரின் பெயரை (அவரிடமிருந்து செவியேற்றிருந்தும் கூட) குறிப்பிடாமல் இடையில் விட்டுவிடுவதும் உண்டு. இன்னும் சில நேரங்களில் (மகிழ்ச்சி) வேகத்தில் தாம் கேட்ட பிரகாரமே அறிவிப்பாளர் பெயரைக் குறிப்பிடுவதும் உண்டு. அவர்கள் இப்படிக் கீழே இறங்குவதும் உண்டு; அப்படி மேலே ஏறுவதும் உண்டு. முன்பே இதை நாம் விவரித்துள்ளோம்.
அறிவிப்பாளர் தொடர்களில் உண்மையானவை எவை, போலியானவை எவை? என ஆராயுந்திறன் படைத்த முன்னோர்களான அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), இப்னு அவ்ன் (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்), யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்), அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) மற்றும் அவர்களுக்குப் பின் வந்த நபிமொழி அறிஞர்கள் பலரும் (இவர்கள் வாதிடுவதைப் போன்று) ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ஒருவர் மற்றவரிடமிருந்து நேரடியாகச் செவியுற்றாரா என்று துருவி ஆராய்ந்ததாக நாம் அறியவில்லை.
ஆனால், ஹதீஸ் அறிவிப்பில் இருட்டடிப்பு ("தத்லீஸ்") செய்வதில் பிரசித்திபெற்றவராக ஒருவர் இருந்தால், அவர் மற்றவரிடமிருந்து கேட்டாரா? என்பது குறித்து அவர்கள் ஆராய்வதுண்டு.அந்த இருட்டடிப்பு வேலைக்குத் தாமும் துணைபோய்விடக்கூடாது என்பதே அதற்குக் காரணம். இதன்றி, இருட்டடிப்புச் செய்யாத அறிவிப்பாளர்கள் விஷயத்திலும் இதே நடைமுறையைக் கையாண்டார்கள் என்பதற்கு நாம் மேலே குறிப்பிட்ட அறிஞர்களிடமோ மற்ற அறிஞர்களிடமோ எந்தச் சான்றையும் நாம் காணவில்லை.
எடுத்துக்காட்டாக, அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த நபித்தோழர் ஆவார்கள். அன்னார் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி), அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) ஆகிய இருவரிடமிருந்தும் நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.ஆனால், அவர்கள் இருவரிடமிருந்து அன்னார் எதையும் செவியேற்றதாக எந்த அறிவிப்பிலும் காணப்படவில்லை. அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களுடன் அல்லது அபூமஸ்ஊத் (ரலி) அவர்களுடன் நேரடியாக உரையாடியதாகவோ இருவரையும் சந்தித்ததாகவோ எந்த அறிவிப்பிலிருந்தும் நம்மால் அறிய முடியவில்லை.
அதே நேரத்தில், ஹுதைஃபா (ரலி), அபூமஸ்ஊத் (ரலி) ஆகியோரிடமிருந்து அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள இந்த ஹதீஸ்கள் பலவீனமானவை எனக் கல்வியாளர்கள் எவரும் அன்றும் சரி; இன்றும் சரி குறை கூறியதில்லை. மாறாக, இது போன்ற அறிவிப்புகளை வலுவான அறிவிப்பாளர்தொடர் வரிசையில் சேர்த்திருப்பதுடன், ஆதாரங்களாகவும் அவற்றை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால், இந்த அறிவிப்புகளெல்லாம், நாம் முன்பு குறிப்பிட்ட சிலரது கூற்றுப்படி பலவீனமானவையாகவும் வீணானவையாகவும் கருதப்பட வேண்டிய நிலை உருவாகும். ஒருவர் யாரிடமிருந்து அறிவிக்கிறாரோ அவரிடம் நேரடியாகச் செவியேற்றிருக்க வேண்டும் என இவர்கள் கட்டாயப்படுத்துவதே இதற்குக் காரணமாகும். இவர்களது கூற்றுப்படி பலவீனமானவை என்று கருதப்படும் அதேவேளையில், கல்வியாளர்களிடம் சரியானவைதாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இத்தகைய செய்திகளை நாம் பட்டியலிடுவதென்றால் அது நீண்டுகொண்டே போகும்; சிரமமும்கூட. இருப்பினும், நமது கூற்றுக்கு அடையாளமாக ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) மற்றும் அபூராஃபி அஸ்ஸாயிஃக் (ரஹ்) ஆகிய இருவரும் அறியாமைக் காலத்தைக் கண்டவர்கள்; பத்ருப் போரில் கலந்துகொண்ட (முக்கிய) நபித்தோழர்களின் தோழமையைப் பெற்றவர்கள்; மேலும்,அவர்களிடமிருந்து நபிமொழிகள் பலவற்றை அறிவித்தவர்கள். பின்னர் அவர்கள் இருவரும் (பத்ருப் போரில் கலந்து கொள்ளாத)அபூஹுரைரா (ரலி), இப்னு உமர் (ரலி) போன்றோரிடமிருந்தும் நபி மொழிகளை அறிவித்தனர்.
இவர்கள் (அபூஉஸ்மான், அபூராஃபி) ஒவ்வொருவரும் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்தும் நபிமொழிகளை அறிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் இருவரும் எந்த ஓர் அறிவிப்பிலும் "உபை பின் கஅப் (ரலி) அவர்களை நாங்கள் நேரடியாகச் சந்தித்தோம்" என்றோ "அவர்களிடமிருந்து செவியேற்றோம்" என்றோ கூறியதாக நாம் காணவில்லை.
அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறியாமைக் காலத்திலும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் வாழ்ந்திருக்கிறார்கள். அன்னாரும் அபூமஅமர் அப்துல்லாஹ் பின் சக்பரா (ரஹ்) அவர்களும் அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து தலா இரண்டு நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் உம்மு சலமா (ரலி) அவர்களிடமிருந்தும், உம்மு சலமா (ரலி) அவர்கள் தம் கணவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்தும் ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள். ஆனால், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தில் சிறு குழந்தையாக இருந்துள்ளார்கள்.
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் நபி (ஸல்) அவர்களது காலத்தை அடைந்தவர்கள்.அன்னார் அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக மூன்று நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.
அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடமிருந்து ஹதீஸை மனனமிட்டுள்ளார்கள்; அலீ (ரலி) அவர்களின் தோழமையைப் பெற்றவர்கள். அன்னார் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள்.
ரிப்ஈ பின் ஹிராஷ் (ரஹ்) அவர்கள் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் வழியாக இரண்டு நபிமொழிகளையும்,அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக ஒரு நபிமொழியையும் அறிவித்துள்ளார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடமிருந்தும் ஹதீஸ்களை செவியுற்று அன்னார் அறிவித்துள்ளார்கள்.
நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம் (ரஹ்) அவர்கள் அபூஷுரைஹ் அல்குஸாயீ (ரலி) அவர்களிடமிருந்து ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள்.
நுஅமான் பின் அபீஅய்யாஷ் (ரஹ்) அவர்கள் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வழியாக மூன்று நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.
அதாஉ பின் யஸீத் அல்லைஸீ (ரஹ்) அவர்கள் தமீம் அத்தாரீ (ரலி) அவர்கள் வழியாக ஒரு நபிமொழி அறிவித்துள்ளார்கள்.
சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் வழியாக ஒரு நபிமொழியை அறிவித்துள்ளார்கள்.
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல் ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகப் பல நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட நபித்தோழர்களிடமிருந்து நபிமொழிகளை அறிவிக்கும் இந்த நபித்தோழர்களின் நண்பர்களில் (தாபிஉகள்) எவரும் சம்பந்தப்பட்ட ஹதீஸை அந்த நபித்தோழரிடமிருந்து நேரடியாகச் செவியுற்றார்கள் என்பதற்கோ அல்லது அவர்களை நேரடியாகச் சந்தித்தார்கள் என்பதற்கோ அந்த அறிவிப்புகளில் எந்தக் குறிப்பும் காணப்படவில்லை. ஆனால்,நபிமொழி மற்றும் நபிமொழி அறிவிப்பாளர் பற்றிய அறிவு படைத்தவர்கள் இவை அனைத்தும் உண்மையான அறிவிப்பாளர்தொடர் என்றே கருத்துத் தெரிவித்துள்ளனர். இவற்றில் எதையும் அவர்கள் பலவீனமானதாக அறிவிக்கவில்லை. மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவர் மற்றவரிடம் நேரடியாகச் செவியேற்றாரா, என அவர்கள் தேடிக் கொண்டிருக்கவுமில்லை.
ஏனெனில், இவ்வறிவிப்புகளில் இடம்பெற்றுள்ள ஒவ்வோர் அறிவிப்பாளரும் மற்ற அறிவிப்பாளரிடமிருந்து நபிமொழியைச் செவியேற்றிருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. அதை நிராகரிக்க முடியாது. ஏனென்றால், இவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் ஆவர்.
ஆகவே, நாம் குறிப்பிட்ட அந்தச் சிலர் ஒரு ஹதீஸை பலவீனப்படுத்த என்ன காரணம் கூறினார்களோ அது விவாதிக்கவே அருகதையற்றதாகும். இது பின்னாளில் கூறப்பட்ட புதிய கூற்றாகும். கல்வியாளர்களில் முன்னோர்கள் எவரும் இக்கருத்தை வெளியிடவில்லை. சொல்லப்போனால், அவர்களுக்குப் பின்வந்த அறிஞர்களும் கூட இதை நிராகரித்துள்ளார்கள். நாம் இதுவரை எடுத்துக் கூறிய விளக்கத்திற்கு அதிகமாக மறுப்புச் சொல்ல வேண்டிய தேவையில்லை. ஏனெனில், இக்கூற்றின் தரமும் இதைக் கூறியவர்களின் தரமும் நாம் விவரித்த அளவில்தான் உள்ளது.
நபிமொழி அறிஞர்களின் கொள்கைக்கு எதிரான அக்கருத்தை வென்றெடுக்க வல்ல அல்லாஹ் உதவுவான். அவனையே நாம் முற்றிலும் சார்ந்திருக்கிறோம்.