பாடம் : 12 தொழுகையில் இடுப்பில் கை வைப்பது வெறுக்கத் தக்கதாகும்.
948. அபூஹுரைரரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் தமது இடுப்பில் கை வைத்தவாறு தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 13 தொழும்போது (சஜ்தாச் செய்வதற்காகத் தரையில் உள்ள) சிறு கற்களை அப்புறப்படுத்துவதும் மண்ணைச் சமப்படுத்துவதும் வெறுக்கத் தக்கதாகும்.
949. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும் சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றிக் கூறுகையில், "அவ்வாறு செய்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்க" என்றார்கள்.
அத்தியாயம் : 5
950. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம், தொழுகையில் (சஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும்) சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றி மக்கள் கேட்டனர். அதற்கு அவர்கள், "ஒரு தடவை மட்டும் (செய்துகொள்ளுங்கள்)" என்று பதிலளித்தார்கள்.
-இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
951. முஐகீப் பின் அபீஃபாத்திமா அத்தவ்சீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தொழுகையில்) சஜ்தாச் செய்யும் இடத்திலிருந்த மண்ணைச் சமப்படுத்திய ஒரு மனிதர் தொடர்பாக, "நீர் இவ்வாறு செய்துதான் ஆக வேண்டுமென்றால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்வீராக!"என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 14 தொழும்போதோ மற்ற நேரங்களிலோ பள்ளிவாசலுக்குள் எச்சில் துப்பலாகாது.
952. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலின்) கிப்லாத் திசையிலுள்ள சுவரில் (உமிழப்பட்டிருந்த) எச்சிலைக் கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப்படுத்தி)ய
பின் மக்களை நோக்கி, "உங்களில் ஒருவர் தொழும்போது தமது முகத்துக்கெதிரே (கிப்லாத் திசையில்) எச்சில் துப்பவேண்டாம். ஏனெனில், அவர் தொழும்போது அல்லாஹ் அவருடைய முகத்துக்கெதிரே இருக்கிறான்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 5
953. மேற்கண்ட ஹதீஸ் மேலும் எட்டு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" என ஹதீஸ் தொடங்குகிறது. ஆனால், ளஹ்ஹாக் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. ("பள்ளிவாசலின்" என்ற குறிப்பு இல்லை).
அத்தியாயம் : 5
954. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே ஒரு சிறு கல்(லை எடுத்து அதன்) மூலம் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு "ஒரு மனிதர் (தொழும்போது உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) தமது வலப் பக்கத்தில் அல்லது முன் பக்கத்தில் உமிழ வேண்டாம்" என்று தடை விதித்தார்கள். "மாறாக, தமது இடப் பக்கத்தில் அல்லது தம் பாதங்களுக்கு அடியில் அவர் உமிழ்ந்துகொள்ளட்டும்"என்றார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோரிடமிருந்து மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றிலும் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ,(காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள்" எனும் வாசகமே இடம் பெற்றுள்ளது.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலுள்ள சுவரில் "எச்சிலை” அல்லது "மூக்குச் சளியை" அல்லது "காறல் சளியைக்” கண்டார்கள். உடனே அதைச் சுரண்டி(சுத்தப் படுத்தி)னார்கள்.
அத்தியாயம் : 5
955. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
)ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் கிப்லாவில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டார்கள். உடனே அவர்கள் மக்களை முன்னோக்கி, "உங்களில் ஒருவருக்கு என்ன நேர்ந்துவிட்டது? அவர் தம் இறைவனை முன்னோக்கி நின்று கொண்டு அவனுக்கு முன்னேயே காறி உமிழுகின்றார். உங்களில் ஒருவர் தமது முகத்திற்கெதிரே உமிழப்படுவதை விரும்புவாரா? உங்களில் ஒருவருக்கு உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும். அது முடியாவிட்டால் அவர் இவ்வாறு செய்துகொள்ளட்டும்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான காசிம் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, தமது ஆடையி(ன் ஓர் ஓரத்தி)ல் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஹுஷைம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஆடையின் (ஓர் ஓரத்தில் உமிழ்ந்து) அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டதை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது” என்று (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
956. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தொழும்போது அவர் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ (அதாவது கிப்லாத் திசையிலோ) வலப் பக்கமோ உமிழ வேண்டாம். (வேண்டுமானால்) அவர் தமது இடப் பக்கத்தில் பாதத்திற்கடியில் உமிழ்ந்து கொள்ளட்டும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
957. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
958. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் கத்தாதா (ரஹ்) அவர்களிடம் பள்ளிவாசலுக்குள் உமிழ்வது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசலுக்குள் உமிழ்வது குற்றமாகும். அ(வ்வாறு உமிழ்ந்த)தை மண்ணுக்குள் புதைப்பதே அதற்குரிய பரிகாரமாகும்.
அத்தியாயம் : 5
959. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரின் நற்செயல்களும் தீய செயல்களும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. சாலையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அகற்றுவதை, அவர்களின் நற்செயல்களி(ன் பட்டியலி)ல் கண்டேன். பள்ளிவாசலில் (உமிழ்ந்து) மண்ணுக்குள் புதைக்கப் படாமல் இருக்கும் சளியை, அவர்களின் தீய செயல்களில் கண்டேன்.
இதை அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
960. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்கள் சளியை உமிழ்ந்ததை நான் பார்த்தேன். பின்னர் அதைத் தமது காலணியால் (தரையில்) தேய்த்தார்கள்.
அத்தியாயம் : 5
961. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது
நான் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் சளியை உமிழ்ந்துவிட்டு அதைத் தமது இடது கால் காலணியால் தேய்த்து விட்டார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 15 காலணி அணிந்துகொண்டே தொழலாம்.
962. அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?" என்று கேட்டேன். அவர்கள் "ஆம்" என்று பதிலளித்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அபூமஸ்லமா சயீத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 16 (கண்ணைக் கவரும்) வேலைப்பாடு மிக்க ஆடை அணிந்து தொழுவது வெறுக்கப் பட்டதாகும் .
963. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு தொழுதார்கள். (தொழுது முடித்ததும்,) இதன் வேலைப்பாடுகள் எனது கவனத்தை ஈர்த்துவிட்டன. எனவே, இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்மிடம் சேர்த்துவிட்டு (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் முன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
964. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்துகொண்டு நின்று தொழுதார்கள். அதன் வேலைப்பாட்டை உற்று நோக்கினார்கள். தொழுது முடித்ததும், "இந்த ஆடையை (எனக்கு அன்பளித்த) அபூ ஜஹ்ம் பின் ஹுதைஃபாவிடம் (இதைக்) கொண்டுசெல்லுங்கள். (அவரிடமிருந்து மற்றொரு) சாதாரண ஆடையை என்னிடம் கொண்டுவாருங்கள். ஏனெனில், சற்று முன்பு இது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பிவிட்டது" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
965. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்று இருந்தது. அது தொழுகையில் அவர்களது கவனத்தை ஈர்த்துவந்தது. எனவே, அதை (தமக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்துவிட்டு அவரிடமிருந்து மற்றொரு சாதாரண ஆடையை வாங்கிக்கொண்டார்கள்.
அத்தியாயம் : 5
பாடம் : 17 உடனே உண்ண விரும்பும் உணவு அங்கு காத்திருக்கத் தொழுவது வெறுக்கப் பட்டதாகும்; சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டு தொழுவதும் வெறுக்கப் பட்டதாகும்.
966. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேர உணவு முன்னே காத்திருக்கத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுமானால் நீங்கள் முதலில் உணவை உண்ணுங்கள்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் மஃக்ரிப் தொழுகை தொழுவதற்கு முன்னால் (உங்கள் முன்) இரவு நேர உணவு வைக்கப்படுமானால் முதலில் உணவை உண்ணுங்கள். (பிறகு தொழுகையை நிறைவேற்றுங்கள்.) உங்களது இரவு உணவை விடுத்து (தொழுகைக்காக) நீங்கள் அவசரப்பட வேண்டாம்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
967. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5