912. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதிருக்கிறார்கள்.
இதை அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 3 கிப்லாத் திசை, பைத்துல் மக்திஸைவிட்டு கஅபாவிற்கு மாற்றப்படல்.
913. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதேன். "அல்பகரா"அத்தியாயத்திலுள்ள "நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் (-கஅபாவின்) பக்கமே திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (இவ்வாறே நாங்கள் செய்தோம்). நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (நபி (ஸல்) அவர்களுடன் தொழுது முடித்த) மக்களில் ஒருவர் அன்சாரிகளில் சிலரைக் கடந்துசென்றார். அவர்கள் (பைத்துல் மக்திஸை நோக்கித்) தொழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் (தொழும் திசை மாற்றப்பட்டுவிட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக்கொண்டனர்.
அத்தியாயம் : 5
914. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் "பதினாறு” அல்லது "பதினேழு” மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா (எனும் தற்போதைய கிப்லா) நோக்கித் திருப்பப்பட்டோம்.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
915. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் சுப்ஹு தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில், இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்" என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
916. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
917. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது "(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச்செய்கிறோம். ஆகவே,உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்கித் திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அப்போது பனூசலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் (நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத்) தமது குலத்தாரைக் கடந்துசென்றார். அப்போது அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தைத் தொழுதுவிட்டு (இரண்டாவது ரக்அத்தின்) ருகூஉவில் இருந்தனர். உடனே அம்மனிதர், "அறிந்துகொள்ளுங்கள்: இந்தக் கிப்லா (தொழும் திசை) மாற்றப்பட்டுவிட்டது" என்று உரத்த குரலில் அறிவித்தார். உடனே அம்மக்கள் தொழுகையிலிருந்தவாறு அப்படியே (கஅபா எனும் தற்போதைய) இந்தக் கிப்லாவை நோக்கித் திரும்பிக்கொண்டனர்.
அத்தியாயம் : 5
பாடம் : 4 மண்ணறைகள்மீது பள்ளிவாசல்கள் எழுப்புதல், அவற்றில் உருவப்படங்களை வரைதல், அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொள்ளல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
918. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
919. யிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்த போது அவர்களிடம் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உம்முசலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
920. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (சிலர்) தாங்கள் கண்ட "மாரியா” எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர். மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 5
921. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, "அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத்தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத்தலம் எங்கே வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
923. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
924. ஆயிஷா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) அவர்களும் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோய் அதிகமாகி) இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் தமது கறுப்புக் கம்பளி ஆடையைத் தமது முகத்தின் மீது போட்டுக் கொள்ளலானார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்போது தமது முகத்திலிருந்து அதை அகற்றிவிடுவார்கள். அவர்கள் அதே நிலையில் இருந்துகொண்டே, "யூதர்கள்மீதும் கிறிஸ்தவர்கள்மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்" என்று அவர்கள் செய்ததை(ப் போன்று நீங்களும் செய்துவிடக் கூடாது என அதை)க் குறித்து எச்சரித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
925. ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் "உங்களில் ஒருவர் என் (தேவைகளுக்காக நான் அணுகும்) உற்ற தோழராக இருப்பதிலிருந்து (விலகி) நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கிறேன். ஏனெனில், உயர்வுக்குரிய அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை (தன்) உற்ற தோழராக ஆக்கிக்கொண்டதைப் போன்று என்னையும் (தன்) உற்ற தோழனாக ஆக்கிக்கொண்டான். நான் என் சமுதாயத்தாரில் ஒருவரை என் உற்ற தோழராக ஆக்கிக்கொள்வதாயிருந்தால் அபூபக்ர் அவர்களையே நான் என் உற்ற தோழராக ஆக்கிக்கொண்டிருப்பேன். அறிந்துகொள்ளுங்கள்: உங்களுக்கு முன்னிருந்த (சமுதாயத்த)வர்கள் தங்களுடைய நபிமார்கள் மற்றும் சான்றோர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள். எச்சரிக்கை! நீங்கள் அடக்கத் தலங்களை வழிபாட்டுத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று உங்களுக்கு நான் தடை விதிக்கிறேன்" என்று கூறுவதை நான் கேட்டேன்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 5 பள்ளிவாசல் எழுப்புவதன் சிறப்பும் அது குறித்து வந்துள்ள ஆர்வமூட்டலும்.
926. பைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ (புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் திருப்தியை நாடி (பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ...)" என்று இடம்பெற்றுள்ளது) அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அஹ்மத் பின் ஈசா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அதைப் போன்ற ஒன்றைச் சொர்க்கத்தில் (அல்லாஹ் அவருக்காகக் கட்டுகிறான்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
927. மஹ்மூத் பின் லபீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்டத் திட்டமிட்டபோது அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று மக்கள் விரும்பினர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளளது.
அத்தியாயம் : 5
பாடம் : 6 (தொழுகையில்) ருகூஉவில் முழங்கால்கள் மீது கைகளை வைக்குமாறு வந்துள்ள வலியுறுத்தலும், உள்ளங்கைகளை இணைத்து இருதொடைகளுக்கு இடையே வைக்கும் முறை மாற்றப்பட்டுவிட்டதும்.
928. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) மற்றும் அல்கமா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களைச் சந்திக்க அவர்களது இல்லத்திற்குச் சென்றோம். அப்போது அவர்கள், "(இமாம்களான) உங்களுக்குப் பின்னால் (ஆட்சியாளர்களான) இவர்கள் (உரிய நேரத்தில்) தொழுகின்றனரா?" என்று கேட்டார்கள். நாங்கள் "இல்லை” என்று சொன்னோம். (அப்போது தொழுகை நேரம் வந்தும் அவர்களிருவரும் தொழாமலிருந்த காரணத்தால்) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நீங்கள் (இருவரும்) எழுந்து (என்னைப் பின்பற்றித்) தொழுங்கள்!" என்று கூறினார்கள்- அப்போது (பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்பட்டுவிட்டதால்) அவர்கள் பாங்கு சொல்லும்படியோ இகாமத் சொல்லும்படியோ எங்களிடம் கூறவில்லை- நாங்கள் (இருவரும்) அவர்களுக்குப் பின்னால் நிற்கப்போனோம். உடனே அவர்கள் எங்கள் கைகளைப் பிடித்து எங்களில் ஒருவரை தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கத்திலும் நிறுத்தினார்கள்.
அவர்கள் ருகூஉச் செய்தபோது நாங்கள் எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைத்(துக்கொண்டு ருகூஉச் செய்)தோம். உடனே அவர்கள் எங்கள் கைகள்மீது அடித்துவிட்டு, தம்மிரு உள்ளங்கைகளையும் இணைத்துத் தம் தொடைகளின் நடுவே இடுக்கிக்கொண்டார்கள்.
அவர்கள் தொழுது முடித்ததும், "விரைவில் உங்களுக்குத் தலைவர்களாக சிலர் வருவார்கள். அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதப்படுத்தி, நெருக்கடியில் நிறைவேற்றுவார்கள். அவர்கள் இவ்வாறு செய்வதை நீங்கள் கண்டால் உரிய நேரத்தில் நீங்கள் தொழுகையை நிறைவேற்றிவிடுங்கள். கூடுதலான (நஃபில்) தொழுகை என்ற முறையில் அவர்களுடனும் சேர்ந்து (மீண்டும்) தொழுதுகொள்ளுங்கள். நீங்கள் மூன்று பேர் இருந்தால் (ஒரே அணியில்) இணைந்து தொழுங்கள். அதைவிட அதிகம் பேர் இருந்தால் உங்களில் ஒருவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். உங்களில் ஒருவர் ருகூஉச் செய்யும்போது தம் முன்கைகளை தொடைமீது சாத்திக்கொண்டு குனிந்து நிற்கட்டும். அவர் தம் உள்ளங்கைகளை இணைத்து இரு தொடைகளுக்கு இடையே வைத்துக் கொள்ளட்டும். ஏனெனில், (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழும்போது ருகூஉவில்) தம் விரல்களைக் கோத்துக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என்று கூறிவிட்டு, அவ்வாறு தம் கைகளைக் கோத்துக் காட்டினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
929. மேற்கண்ட ஹதீஸ் மேலும் பல அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், இப்னு முஸ்ஹிர் (ரஹ்) மற்றும் ஜரீர் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில் "ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்துகொண்டிருந்தபோது அவர்களுடைய விரல்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது" என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
930. அல்கமா (ரஹ்) மற்றும் அஸ்வத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:
நாங்கள் இருவரும் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் (எங்களிடம்), "உங்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் தொழுதுவிட்டனரா?" என்று கேட்டார்கள். நாங்கள் இருவரும், "ஆம்” என்றோம். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்கள் இருவருக்குமிடையே (தொழுவதற்காக) நின்றார்கள். எங்களில் ஒருவரைத் தமது வலப் பக்கத்திலும் மற்றொருவரை இடப் பக்கதிலும் நிறுத்தலானார்கள். பிறகு நாங்கள் ருகூஉச் செய்தபோது எங்கள் (உள்ளங்)கைகளை எங்களுடைய முழங்கால்கள் மீது நாங்கள் வைத்தோம். உடனே அவர்கள் எங்கள் கைகளில் அடித்தார்கள். பிறகு தம்மிரு கைகளைக் கோத்துக்கொண்டு அவ்விரண்டையும் தம் தொடைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டார்கள். தொழுது முடித்ததும், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்படித்தான் செய்தார்கள்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
931. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் தங்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அவர்களின் விலாப் புறத்தில் (நின்று) தொழுதேன். அப்போது நான் (ருகூஉவில்) என்னிரு கைகளையும் (கோத்து) என் இரு முழங்கால்களுக்கு நடுவே இடுக்கிக்கொள்ளலானேன். உடனே என் தந்தை, "உன் உள்ளங் கைகளை முழங்கால்கள்மீது வை!" என்று சொன்னார்கள். நான் (அவ்வாறு செய்யாமல்) மீண்டும் அவ்வாறே (முன்பு போன்றே) செய்தேன். உடனே அவர்கள் என் கைகள்மீது அடித்துவிட்டு, "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது. உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "இவ்வாறு செய்ய வேண்டாம் என எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுவிட்டது" என்பதுவரை இடம்பெற்றுள்ளது. அதற்குப் பிறகுள்ள குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம் : 5