பாடம் : 1 பூமியில் முதலாவதாக எழுப்பப்பெற்ற இறை ஆலயம்.
903. அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்) "அல்லாஹ்வின் தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் எது?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "அல் மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். நான் "பிறகு எது?" என்று கேட்டேன். அவர்கள் "(ஜெரூஸலத்திலுள்ள) அல்மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள் "நாற்பதாண்டுகள்" (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பெற்று நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல் அக்ஸா அமைக்கப்பெற்றது). (பின்னர்) உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைகிறதோ அங்கு நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்! ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அபூகாமில் அல்ஜஹ்தரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "பிறகு உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் (அங்கு) நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஏனெனில், அதுதான் இறைவனை வழிபடும் தலம் (மஸ்ஜித்) ஆகும்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 5
904. இப்ராஹீம் பின் யஸீத் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் பள்ளிவாசலை ஒட்டியுள்ள இடத்தில் என் தந்தை (யஸீத் அத்தைமீ) அவர்களிடம் குர்ஆனை ஓதிக் காட்டிக்கொண்டிருந்தேன். அப்போது நான் "சஜ்தா" வசனத்தை ஓதியவுடன் என் தந்தை (அங்கேயே) சஜ்தாச் செய்தார்கள். நான், "தந்தையே! (நடை)பாதையில் சஜ்தா (சிரவணக்கம்) செய்கிறீர்களே?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், பூமியில் முதன் முதலில் அமைக்கப்பெற்ற பள்ளிவாசல் குறித்துக் கேட்டேன். அவர்கள், "அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா நகரிலுள்ள புனித கஅபா அமைந்திருக்கும்) பள்ளிவாசல்" என்று பதிலளித்தார்கள். "பின்னர் எது?" என்று கேட்டேன். (ஜெரூஸலத்திலுள்ள) "அல்மஸ்ஜிதுல் அக்ஸா”” எனறார்கள். நான், "அவ்விரண்டுக்குமிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி இருந்தது)?" என்று கேட்டேன். அவர்கள், "நாற்பதாண்டுகள்” என்று கூறினார்கள். "பிறகு பூமி முழுவதுமே உங்களுக்குத் தொழுமிடம்தான். ஆகவே, உங்களைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் அங்கே நீங்கள் தொழுதுகொள்ளுங்கள்!" என்றும் சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
905. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் வாழ்ந்த (இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பெற்றுள்ளன:
1.ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். நான் சிவப்பர் கறுப்பர் (என்ற பாகுபாடின்றி) அனைவருக்கும் தூதராக அனுப்பப்பெற்றுள்ளேன்.
2.போரில் கிடைக்கப்பெறும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னிருந்த (இறைத்தூதர்) எவருக்கும் அவை அனுமதிக்கப்படவில்லை.
3.எனக்கு பூமி முழுவதும் சுத்தம்(தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தூய்மையானதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. (என் சமுதாயத்தாரில்) யாரேனும் ஒருவருக்குத் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால் அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திலேயே தொழுதுகொள்வார்.
4.எதிரிகளுக்கும் எனக்குமிடையே) ஒரு மாதகாலப் பயணத் தொலைவிருந்தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்புக் கலந்த) அச்சம் ஏற்படுத்தப் படுவதன் மூலம் நான் வெற்றியளிக்கப்பெற்றுள்ளேன்.
5.மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப் பெற்றுள்ளேன்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
906. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
)இறுதி சமுதாயத்தாராகிய) நாம் மூன்று விஷயங்களில் (மற்ற) மக்கள் அனைவரை விடவும் சிறப்பிக்கப்பட்டுள்ளோம்:
1.நம் (தொழுகை) வரிசைகள் வானவர்களின் (தொழுகை) வரிசைகளைப் போன்று (சீராக) ஆக்கப்பட்டுள்ளன.
2. நமக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்பட்டுள்ளது. (தொழுகைக்காக "அங்கத் தூய்மை" செய்ய) நமக்குத் தண்ணீர் கிடைக்காதபோது தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாக ஆக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சிறப்பையும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இதை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
907. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மற்ற இறைத்தூதர்களைவிடவும் ஆறு விஷயங்களில் சிறப்பிக்கப்பட்டுள்ளேன்:
1.நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
2.எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய (மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது.
.3போர்ச் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளன.
.4எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
.5நான் மனித இனம் முழுவதற்கும் தூதராக நியமிக்கப்பெற்றுள்ளேன்.
.6என்னோடு நபிமார்களின் வருகை முற்றுப்பெற்றுவிட்டது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
908. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்களுடன் அனுப்பப்பெற்றுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு எனக்கு வெற்றியளிக்கப்பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் முன்னால் வைக்கப்பட்டன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்றுவிட்டார்கள். நீங்கள் அந்தக் கருவூலங்களை (தேடி) வெளியே எடுத்து (அனுபவித்து)க் கொண்டிருக்கிறீர்கள்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே வேறு நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
909. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப் பட்டுள்ளேன். நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப் பெற்றுள்ளேன். (ஒருமுறை) நான் உறங்கிக்கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என் கைகளில் வைக்கப்பட்டன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 5
910. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும் இவை. அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளுக்கு (என்னைப் பற்றிய மதிப்பும்) அச்ச(மு)ம் ஊட்டப்பட்டு நான் வெற்றியளிக்கப்பட்டுள்ளேன். நான் ஒருங்கிணைந்த (பொருள்களைக் குறிக்கும்) சொற்கள் வழங்கப்பெற்றுள்ளேன்.
அத்தியாயம் : 5
பாடம் : 2 மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் கட்டப்பெற்ற விவரம்.
911. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பிறந்தகத்தைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது மதீனாவின் மேட்டுப்பாங்கான பகுதியில் இறங்கி, "பனூ அம்ர் பின் அவ்ஃப்" என்றழைக்கப்பட்டுவந்த ஒரு குடும்பத்தாரிடையே பதிநான்கு நாட்கள் தங்கினார்கள். பிறகு பனூ நஜ்ஜார் கூட்டத்தாருக்கு (அவர்களை அழைத்து வருமாறு) ஆளனுப்பினார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தார் (நபியவர்களை வரவேற்கும் முகமாகத்) தம் வாட்களை (கழுத்தில்) தொங்கவிட்டபடி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் அமர்ந்திருக்க, அவர்களுக்குப் பின்னால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அமர்ந்திருக்க, பனூநஜ்ஜார் கூட்டத்தார் புடைசூழ அவர்களைக் குழுமியிருந்த காட்சியை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது. இறுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனம் அபூஅய்யூப் (ரலி) அவர்களின் வீட்டு முற்றத்தில் அவர்களை இறக்கிவிட்டது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகை நேரம் வந்தடையும் இடத்திலேயே தொழுகையை நிறைவேற்றுவார்கள்; ஆட்டுத் தொழுவங்களிலும் தொழுவார்கள். (இது அவர்களது வழக்கமாக இருந்தது.) இந்நிலையில்தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் கட்டும்படி உத்தரவிட்டார்கள். பனூநஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்துவரச் சொல்லி) ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்தபோது, "பனூநஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களுடைய இந்தத் தோட்டத்தை எனக்கு விலைபேசி (விற்று)விடுங்கள்" என்று கேட்டார்கள். அதற்கு அக்கூட்டத்தார், "இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்" என்று கூறி (அத்தோட்டத்தை அளித்த)னர்.
நான் (உங்களிடம்) கூறவிருப்பவைதாம் அத்தோட்டத்தில் இருந்தன: அதில் சில பேரீச்ச மரங்கள்,இணைவைப்பாளர்களின் சமாதிகள், இடிபாடுகள் ஆகியவைதாம் இருந்தன. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டும்போது அங்கிருந்த) பேரீச்ச மரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. இணை வைப்பாளர்களின் சமாதிகளைத் தோண்டி (அப்புறப் படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை தோண்டப்பட்டன. இடிபாடுகளை (அகற்றி)ச் சமப்படுத்தும்படி உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப்பட்டன.
பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர். பள்ளிவாசலின் (நுழைவாயிலின்) இரு நிலைக்கால்களாகக் கல்லை (நட்டு) வைத்தனர். அப்போது "ரஜ்ஸ்” எனும் ஒருவித யாப்பு வகைப் பாடலை பாடிக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (பாடியபடி பணியில் ஈடுபட்டு) இருந்தார்கள்.
"இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை கிடையாது; ஆகவே, (மறுமையின் நன்மைகளுக்காகப் பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ உதவி செய்வாயாக!” என்று அவர்கள் பாடினர்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
912. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசல் கட்டப்படுவதற்கு முன்னால் ஆட்டுத் தொழுவங்களில் தொழுதிருக்கிறார்கள்.
இதை அபுத்தய்யாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
பாடம் : 3 கிப்லாத் திசை, பைத்துல் மக்திஸைவிட்டு கஅபாவிற்கு மாற்றப்படல்.
913. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதேன். "அல்பகரா"அத்தியாயத்திலுள்ள "நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் (-கஅபாவின்) பக்கமே திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (இவ்வாறே நாங்கள் செய்தோம்). நபி (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (நபி (ஸல்) அவர்களுடன் தொழுது முடித்த) மக்களில் ஒருவர் அன்சாரிகளில் சிலரைக் கடந்துசென்றார். அவர்கள் (பைத்துல் மக்திஸை நோக்கித்) தொழுதுகொண்டிருந்தனர். அந்த மனிதர் (தொழும் திசை மாற்றப்பட்டுவிட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக்கொண்டனர்.
அத்தியாயம் : 5
914. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் "பதினாறு” அல்லது "பதினேழு” மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா (எனும் தற்போதைய கிப்லா) நோக்கித் திருப்பப்பட்டோம்.
இதை அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
915. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கள் குபாவில் சுப்ஹு தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில், இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்" என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
916. மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
917. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது "(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச்செய்கிறோம். ஆகவே,உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்கித் திருப்புங்கள்" எனும் (2:144ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அப்போது பனூசலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் (நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத்) தமது குலத்தாரைக் கடந்துசென்றார். அப்போது அவர்கள் ஃபஜ்ர் தொழுகையின் முதல் ரக்அத்தைத் தொழுதுவிட்டு (இரண்டாவது ரக்அத்தின்) ருகூஉவில் இருந்தனர். உடனே அம்மனிதர், "அறிந்துகொள்ளுங்கள்: இந்தக் கிப்லா (தொழும் திசை) மாற்றப்பட்டுவிட்டது" என்று உரத்த குரலில் அறிவித்தார். உடனே அம்மக்கள் தொழுகையிலிருந்தவாறு அப்படியே (கஅபா எனும் தற்போதைய) இந்தக் கிப்லாவை நோக்கித் திரும்பிக்கொண்டனர்.
அத்தியாயம் : 5
பாடம் : 4 மண்ணறைகள்மீது பள்ளிவாசல்கள் எழுப்புதல், அவற்றில் உருவப்படங்களை வரைதல், அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொள்ளல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
918. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உம்முஹபீபா (ரலி), உம்முசலமா (ரலி) ஆகிய இருவரும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையோர் எனில்,) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும்போது, அவருடைய சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றை நிறுவி அதில் அம்மாதிரியான உருவப்படங்களை பொறித்துவிடுவார்கள். அவர்கள்தாம் மறுமை நாளில் அல்லாஹவிடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்" என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 5
919. யிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடல் நலிவுற்று (தம் இறுதிநாட்களில்) இருந்த போது அவர்களிடம் மக்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது உம்முசலமா (ரலி) அவர்களும் உம்முஹபீபா (ரலி) அவர்களும் (தாங்கள் கண்ட) கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர்.
தொடர்ந்து மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
920. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் (சிலர்) தாங்கள் கண்ட "மாரியா” எனப்படும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினர். மற்றவை மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 5
921. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயிலிருந்து எழாமல் (இறந்து) போய்விட்டார்களோ அந்த நோயின்போது, "அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தங்களுடைய நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்" என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது இந்த அறிவிப்பு (மட்டும்) இல்லாவிட்டால் நபியவர்களின் அடக்கத்தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்பபடையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆயினும், அவர்களது அடக்கத்தலம் எங்கே வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சப்பட்டது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5
922. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிக்கொண்டார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 5