598. அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், நாங்கள் மேற்கே வசித்துவருகிறோம். அக்னி ஆராதனையாளர்(மஜூசி)கள் தோல்பைகளில் தண்ணீரையும் கொழுப்பையும் எங்களிடம் கொண்டுவருகின்றனர். (நாங்கள் அந்தத் தோல் பைகளில் அருந்தலாமா?) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அருந்தலாம் என்றார்கள். நான், இது உங்களது சுயமான கருத்தா?என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைப் பதப்படுத்துவதே அதைத் தூய்மையாக்கிவிடும் என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 28 தயம்மும்.
599. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) பைதா அல்லது தாத்துல் ஜைஷ் எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.
அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார். இங்கும் தண்ணீர் இல்லை;மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று முறையிட்டனர். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை என்று கூறினார்கள். அவர்கள் எதை எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும் படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போது தான் தயம்மும் உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் தயம்மும் செய்தனர்.
(இது குறித்து) அல்அகபா உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான- உசைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன) என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.
அத்தியாயம் : 3
600. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்தணி ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்துபோய்விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்.) அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் தயம்மும் தொடர்பான (5:6ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
இதையடுத்து (என்னிடம்) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், தங்களுக்கு அல்லாஹ் நற்பலன் வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான முகாந்திரத்தைத் தங்களுக்கும், அதில் ஒரு சுபிட்சத்தை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
601. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம்), அபூஅப்திர் ரஹ்மான்! பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்ட ஒருவருக்கு ஒரு மாதகாலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எவ்வாறு தொழுவார்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், ஒரு மாத காலம் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சரியே, அவர் தயம்மும் செய்யமாட்டார். (அவர் தொழவுமாட்டார்) என்று கூறினார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், அப்படியானால் அல்மாயிதா அத்தியாயத்தில் வரும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்துகொள்ளுங்கள் எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், இந்த வசனத்தை முன்னிட்டு மக்களுக்கு (பொதுவான) அனுமதி அளிக்கப்பட்டுவிடுமானால் தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட மண்ணில் தயம்மும் செய்துகொள்ளப் பார்ப்பார்கள் என்றார்கள்.
உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன (பின்வரும்) செய்தியை நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார்கள்.(அம்மார் கூறினார்கள்:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை நிமித்தம் (படைப்பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே! என்று கூறிவிட்டுத் தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக் கரத்தால் வலக் கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவலானார்கள்.
(இந்நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்கள் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பதைத் தாங்கள் அறியவில்லையா? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
602. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால் அதில், நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்திருந்தால் உங்களுக்குப் போதுமானதாக இருந்திருக்குமே! என்று கூறிவிட்டு, தம் கைகளை பூமியில் அடித்து, பின்னர் அவற்றை உதறிவிட்டு, தமது முகத்திலும் முன் கைகளிலும் தடவினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
603. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, நான் பெருந்துடக்குடையவனாகிவிட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?) என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீர் தொழ வேண்டியதில்லை என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அம்மார் (ரலி) அவர்கள், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நானும் நீங்களும் ஒரு படைப்பிரிவில் இருந்தோம். அப்போது நமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்கு பதிலாக தயம்மும் செய்வதைப் போன்று குளியலுக்கு பதிலாக) மண்ணில் புரண்டெழுந்து பின்னர் தொழுதேன். (இதுபற்றி நான் தெரிவித்தபோது) நபி (ஸல்) அவர்கள், உம்மிரு கைகளையும் தரையில் அடித்துப் பிறகு (கைகளை) ஊதிவிட்டுப் பின்னர் இரு கைகளால் உமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக்கொண்டிருந்தால் போதுமே (ஏன் மண்ணில் புரண்டீர்கள்?) என்று கூறியது உங்களுக்கு நினைவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை அஞ்சிக்கொள், அம்மாரே! என்று சொன்னார்கள். உடனே அம்மார் (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் இதை நான் யாருக்கும் அறிவிக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் நீர் எதற்குப் பொறுப்பேற்றுக்கொண்டீரோ அதற்கு உம்மையே நாம் பொறுப்பாளியாக்கினோம் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
604. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது... என்று தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது. அதில், அம்மார் (ரலி) அவர்கள்,இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு என்மீது இறைவன் விதியாக்கிய கடமையை முன்னிட்டு இதை நான் யாரிடமும் அறிவிக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் நான் இதை யாருக்கும் அறிவிக்கமாட்டேன் என்று கூறினார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
605. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யசார் (ரஹ்) அவர்களும் அபுல்ஜஹ்ம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) பிஃரு ஜமல் எனும் இடத்திலிருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து சலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உடனடியாக பதில் சலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து)கொண்ட பின்னர் அவருக்கு பதில் சலாம் சொன்னார்கள்.
அத்தியாயம் : 3
606. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்துசென்ற மனிதர் ஒருவர் சலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சலாம் சொல்லவில்லை.
அத்தியாயம் : 3
பாடம் : 29 ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகிவிடமாட்டார் என்பதற்கான சான்று. - அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) மதீனாவின் சாலைகளில் ஒன்றில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து நழுவிச் சென்று குளித்தேன். இதற்கிடையே நபி (ஸல்) அவர்கள் என்னைக் காணாமற் தேடினார்கள். நான் (குளியலை முடித்துவிட்டு) அவர்களிடம் வந்தபோது, (இவ்வளவு நேரம்) எங்கே இருந்தீர், அபூஹுரைரா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் நானிருந்த நிலையில் என்னைத் தாங்கள் சந்தித்தீர்கள். குளிக்காமல் தங்களிடம் அமர்வதை நான் வெறுத்தேன் என்று கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்). இறைநம்பிக்கையாளர் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விடமாட்டார் என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
607. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளியல் கடமையான நிலையில்) இருந்தபோது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து விலகிச்சென்று குளித்துவிட்டு வந்து, நான் பெருந்துடக்கு உள்ளவனாய் இருந்தேன். (குளித்துவிட்டு வரத் தாமதமாகி விட்டது) என்று கூறினேன். அதற்கு அவர்கள் ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கினால்) அசுத்தமாகிவிடமாட்டார் என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 30 பெருந்துடக்கு போன்ற நிலைகளில் அல்லாஹ்வை திக்ர் செய்தல் (துதித்தல்).
608. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை திக்ர் செய்பவர்களாய் இருந்தார்கள்.- இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 31 சிறு துடக்கு ஏற்பட்டவர் (உளூச் செய்யாமல்) உணவு உட்கொள்ளலாம். அவ்வாறு செய்வது ஓர் அருவருக்கத் தக்க செயலன்று. (துடக்கு ஏற்பட்ட) உடனே உளூச் செய்வது கட்டாயமல்ல.
609. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் கழிவறையிலிருந்து வெளியேறியபோது அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. அப்போது மக்கள் உளூச் செய்யுமாறு அவர்களுக்கு நினைவூட்டினர். நபி (ஸல்) அவர்கள், நானென்ன தொழவா போகிறேன்,உளூச் செய்துகொள்வதற்கு? என்று கேட்டார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 3
610. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்று விட்டு வந்தார்கள். மேலும், அவர்களுக்கு உணவு கொண்டுவரப்பட்டது. (அவர்கள் சாப்பிடப் போனபோது) அவர்களிடம், நீங்கள் உளூச் செய்துகொள்ளவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஏன்? நானென்ன தொழவாபோகிறேன், உளூச் செய்து கொள்வதற்கு? என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 3
611. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிவறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபோது அவர்களுக்கு முன்னால் உணவு வைக்கப்பட்டது. அப்போது, நீங்கள் உளூச் செய்துகொள்ள வில்லையே, அல்லாஹ்வின் தூதரே!? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், எதற்கு, தொழுகைக்கா? என்று கேட்டார்கள்.
அத்தியாயம் : 3
612. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்றிவிட்டுக் கழிவறையிலிருந்து வந்தார்கள். அப்போது அவர்களுக்கு உணவு கொண்டுவந்து பரிமாறப்பட்டது. அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். ஆனால், தண்ணீரைத் தொடவேயில்லை (உளூச் செய்யவில்லை).
சயீத் பின் அல்ஹுவைரிஸ் (ரஹ்) அவர்களிடமிருந்து அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உளூச் செய்யவில்லையே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், நான் எந்தத் தொழுகையையும் நிறைவேற்றப்போக வில்லையே, அவ்வாறிருந்தால்தானே நான் உளூச் செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள் என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 3
பாடம் : 32 கழிப்பிடத்திற்குச் செல்லும்போது ஓத வேண்டிய பிரார்த்தனை.
613. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும்போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிக்க மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள்.
(பொருள்: இறைவா! ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.)
ஹுஷைம் பின் பஷீர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் (கழிப்பிடம் என்பதைக் குறிக்க அல்கலா எனும் சொல்லுக்கு பதிலாக) அல்கனீஃப் எனும் சொல் காணப்படுகிறது.
- இந்த ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், நபி (ஸல்) அவர்கள் அவூது பில்லாஹி மினல் குப்ஸி வல்கபாயிஸி என்று கூறுவார்கள் என இடம்பெற்றுள்ளது.
(பொருள்: ஆண் மற்றும் பெண் ஷைத்தான்களின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)
அத்தியாயம் : 3
பாடம் : 33 உட்கார்ந்துகொண்டு உறங்கினால் உளூ முறியாது என்பதற்கான சான்று.
614. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. (ஆனால்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் (நீண்டநேரம்) தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இறுதியில் மக்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பின்னர்தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு (வந்து) நின்றார்கள்.
அத்தியாயம் : 3
615. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள் இஷாத் தொழுகைக்காக) இகாமத் சொல்லப்பட்டது. ஆனால், நபி (ஸல்) அவர்களோ ஒரு மனிதரிடம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் (நீண்டநேரம்) பேசிக்கொண்டிருந்ததில் நபித்தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) தூங்கிவிட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து மக்களுக்குத் தொழுவித்தார்கள்.
அத்தியாயம் : 3
616. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (உட்கார்ந்துகொண்டே) உறங்கிவிட்டு (பிறகு எழுந்து) தொழுவார்கள். (அதற்காகப் புதிதாக) உளூச் செய்யமாட்டார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன் என கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். நான், இதை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு கத்தாதா (ரஹ்) அவர்கள், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 3
617. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) இஷாத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்) எனக்கு (தங்களிடம்) ஓர் அலுவல் (குறித்துப் பேச வேண்டியது) இருக்கிறது என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து அவரிடம் (நீண்ட நேரம்) தனியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். (எந்த அளவுக்கென்றால்) மக்கள் அனைவரும் அல்லது மக்களில் சிலர் (உட்கார்ந்த நிலையிலேயே) உறங்கிவிட்டனர். பிறகு (புதிதாக உளூச் செய்யாமலேயே) தொழுதனர்.
அத்தியாயம் : 3