5688. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாரான நாங்கள் அடுப்பு பற்றவைக்காமல் ஒரு மாதத்தைக் கழித்திருக்கிறோம். அப்போது பேரீச்சம் பழமும் தண்ணீருமே எங்கள் உணவாக இருந்தன.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் "நாங்கள் ஒரு மாதத்தைக் கழித்துவந்தோம்" என்று இடம்பெற்றுள்ளது. "முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தார்" எனும் குறிப்பு இல்லை.
இப்னு நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூகுறைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், "எங்களிடம் சிறிதளவு இறைச்சி (அன்பளிப்பாக) வந்தால் தவிர" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5689. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்(வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது.
அத்தியாயம் : 53
5690. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என்னிடம்) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் பிறை பார்ப்போம். அடுத்த பிறையும் பார்ப்போம். அதற்கடுத்த பிறையும் பார்ப்போம். இரண்டு மாதங்கள் மூன்று பிறை பார்த்துவிட்டிருப்போம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (துணைவியர்) இல்லங்களில் (சமைப்பதற்காக அடுப்பில்) நெருப்பு பற்றவைக்கப்பட்டிராது" என்று கூறினார்கள்.
அதற்கு நான், "என் சிற்றன்னையே! (அப்படியானால்) நீங்கள் எப்படி வாழ்க்கை நடத்தினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "இரு கறுப்பர்களான பேரீச்சம் பழமும் நீரும்தான் (அப்போது எங்கள் உணவு). இருப்பினும்,அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அண்டை வீட்டாராக இருந்தனர். அவர்களிடம் (இலவசமாகப் பால் கறந்துகொள்வதற்கான) இரவல் ஒட்டகங்கள் இருந்தன. (அவற்றிலிருந்து பால் கறந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்கள் (அன்பளிப்பாகக்) கொடுத்தனுப்புவார்கள். அந்தப் பாலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அருந்தக் கொடுப்பார்கள்" என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 53
5691. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே நாளில் இரண்டு வேளை ரொட்டியும் ஆலிவ் எண்ணெயும் வயிறு நிரம்ப உண்ணாமலேயே இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5692. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இருகறுப்பர்களான பேரீச்சம் பழமும் தண்ணீரும் உட்கொண்டு மக்கள் வயிறு நிரம்பி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5693. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரு கறுப்பர்களான பேரீச்சம்பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிறு நிரம்பி இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இரு கறுப்பர்களான பேரீச்சம்பழமும் தண்ணீரும் உட்கொண்டு நாங்கள் வயிறு நிரம்பியிராத நிலையில் (இறந்தார்கள்)" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5694. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள், "என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அல்லது அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக!) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரியும்வரை கோதுமை ரொட்டியைத் தொடர்ந்து மூன்று நாட்கள் தம் குடும்பத்தாருக்கு வயிறு நிரம்ப அளிக்கவில்லை" என்று சொன்னார்கள். - இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5695. அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் தம் விரலால் பல முறை சைகை செய்தபடி, "அபூஹுரைராவின் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வுலகைப் பிரியும்வரை அவர்களும் அவர்கள்தம் குடும்பத்தாரும் கோதுமை ரொட்டியை மூன்று நாட்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப உண்டதில்லை" என்று கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 53
5696. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள், "(இன்று) நீங்கள் விரும்பும் உணவும் பானமும் உங்களிடம் இல்லையா? ஆனால்,உங்கள் நபி (ஸல்) அவர்களோ தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான உலர்ந்த பேரீச்சம் பழம் கூட கிடைக்காத நிலையில் இருந்ததை நான் கண்டுள்ளேன்" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5697. மேற்கண்ட ஹதீஸ் நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "ஆனால், நீங்களோ (இன்று) பல வண்ண பேரீச்சம் பழங்களுக்கும், வெண்ணெய்க்கும் குறைவானதைக் கொண்டு திருப்தி அடைவதில்லை" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5698. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்கள்: உமர் (ரலி) அவர்கள் (தற்போது) மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்க்கை வளம் பற்றி நினைவு கூர்ந்தார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வயிறு நிரம்பும் அளவுக்கு மட்டமான பேரீச்சம் பழம்கூட கிடைக்காத நிலையில் ஒரு நாள் முழுவதும் சுருண்டு கிடப்பதை நான் கண்டுள்ளேன்" என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5699. அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர், "நாம் ஏழை முஹாஜிர்கள் இல்லையா?"என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீர் அமைதி காண உமக்கு மனைவி இல்லையா?"என்று கேட்டார்கள். அதற்கு அந்த மனிதர், "ஆம் (இருக்கிறாள்)" என்றார்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "வசிப்பதற்கு உமக்கு வீடு இல்லையா?" என்று கேட்டார்கள். அந்த மனிதர் "ஆம் (இருக்கிறது)" என்றார். "அவ்வாறாயின், நீர் செல்வர்களில் ஒருவராவீர்" என்று கூறினார்கள். அந்த மனிதர் "இத்துடன் என்னிடம் பணியாளர் ஒரு வரும் இருக்கிறார்" என்றார். "அவ்வாறாயின், நீர் மன்னர்களில் ஒருவர் ஆவீர்" என்றார்கள்.
- அபூஅப்திர்ரஹ்மான் அல்ஹுபுலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் மூன்று பேர் வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் நானும் இருந்தேன். அவர்கள் (மூவரும்), "அபூமுஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! எங்களுக்கு எந்தப் பொருள்மீதும் சக்தி இல்லை. எங்களிடம் செலவழிப்பதற்கு வசதியோ, வாகனமோ, தேவையான வீட்டுப்பொருட்களோ இல்லை" என்று கூறினர்.
அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் எதை நாடுகிறீர்கள் (உங்களுக்கு என்ன வேண்டும்)? நீங்கள் விரும்பினால், எம்மிடம் வாருங்கள். நாம் உங்களுக்கு அல்லாஹ் எளிதாக்கியுள்ள செல்வத்தை வழங்குவோம். நீங்கள் விரும்பினால், உங்கள் பிரச்சினையை நாம் அரசரிடம் தெரிவிப்போம். நீங்கள் விரும்பினால், பொறுமையாக இருக்கலாம். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஏழை முஹாஜிர்கள் மறுமைநாளில் செல்வர்களைவிட நாற்பதாண்டுகளுக்கு முன்பே சொர்க்கத்துக்குச் சென்றுவிடுவார்கள்" என்று கூறியதைக் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அதற்கு அவர்கள் (மூவரும்), "அப்படியானால், நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்; எதையும் கேட்கமாட்டோம்"என்று கூறினர்.
அத்தியாயம் : 53
பாடம் : 2 தமக்குத் தாமே அநீதியிழைத்து (அழிவில் சிக்கி)க்கொண்டவர்களின் வசிப்பிடங்களுக்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம்.
5700. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் பயணத்தின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹிஜ்ர்"வாசிகள் (ஸமூத் கூட்டத்தார்) தொடர்பாக, "இறைவனால் வேதனைக்குள்ளாக்கப்பட்ட இந்த மக்களின் இடத்திற்கு அழுதவர்களாகவே தவிர நீங்கள் செல்ல வேண்டாம். உங்களால் அழ முடியாவிட்டால், அவ்விடத்திற்குச் செல்லாதீர்கள். அவர்களுக்கு ஏற்பட்டது உங்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 53
5701. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஹிஜ்ர்" பிரதேசத்தைக் கடந்து சென்றபோது, "தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்கு நேர்ந்த அதே சோதனை உங்களுக்கும் ஏற்பட்டுவிடுமோ என்றஞ்சி, அழுதபடியே தவிர செல்லாதீர்கள்" என்று எங்களிடம் கூறினார்கள். பிறகு தமது வாகனத்தை விரட்டிக் கொண்டு, மிக விரைவாக அந்த இடத்தைக் கடந்துசென்றார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், "ஸமூத்" கூட்டத்தாரின் வசிப்பிடமான "ஹிஜ்ர்" பற்றிக் கூறும்போது இதை அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 53
5702. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(தபூக் பயணத்தில்) மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "ஸமூத்" கூட்டத்தார் வாழ்ந்த பகுதியான "ஹிஜ்ர்" பிரதேசத்தில் இறங்கி, அங்கிருந்த கிணறுகளில் நீரிறைத்தார்கள். அதைக் கொண்டு மாவு குழைத்தார்கள்.
அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைத்த நீரைக் கொட்டி விடுமாறும், (அந்தத் தண்ணீரால்) குழைக்கப்பட்ட அந்த மாவை ஒட்டகங்களுக்குத் தீனியாகப் போட்டுவிடுமாறும் உத்தரவிட்டார்கள். மேலும், (ஸாலிஹ் நபியின்) ஒட்டகம் வந்து நீரருந்திய கிணற்றிலிருந்து நீரிறைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆயினும் அதில், ("கிணறுகளிலிருந்து" என்பதைக் குறிக்க "ஆபார்" என்பதற்குப் பதிலாக) "பிஆர்" என்ற சொல்லும், ("குழைத்தார்கள்" என்பதைக் குறிக்க "அஜனூ" என்பதற்குப் பதிலாக) "இஃதஜனூ" என்ற சொல்லும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 53
பாடம் : 3 விதவைகள், ஏழைகள், அநாதைகள் ஆகியோருக்கு உதவி புரிதல்.
5703. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார். மேலும், "(இரவெல்லாம்) சோர்ந்து விடாது நின்று வணங்கி, (பகலெல்லாம்) விடாது நோன்பு நோற்றவரைப் போன்றவரும் ஆவார்" (என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என்றே நான் எண்ணுகிறேன் என அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்லமா (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 53
5704. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அநாதையின் காப்பாளரும் -அந்த அநாதை உறவுக்காரராகட்டும் அந்நியராகட்டும்- சொர்க்கத்தில் இப்படி இருப்போம்" என்று சைகை செய்து கூறினார்கள்.
இதை அறிவிக்கும்போது மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், தமது சுட்டுவிரலாலும் நடுவிரலாலும் (அவற்றை இணைத்துக் காட்டி) சைகை செய்தார்கள்.
அத்தியாயம் : 53
பாடம் : 4 பள்ளிவாசல்கள் எழுப்புவதன் சிறப்பு.
5705. உபைதுல்லாஹ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்ட எண்ணியபோது, அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் மக்களிடம், "நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ -புகைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அல்லாஹ்வின் உவப்பை நாடி (பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ" என்று (ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள் என நான் எண்ணுகிறேன் என்று) இடம்பெற்றுள்ளது- அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப் போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்" என்றார்கள்.-இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் ஹாரூன் பின் சயீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
5706. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க்கட்டத் திட்டமிட்டபோது, அதை மக்கள் வெறுத்தனர்; அதை முன்பிருந்த அமைப்பிலேயே விட்டுவிட வேண்டும் என்று விரும்பினர்.
அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வி(ன் பொருத்தத்தி)ற்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் அதைப்போன்ற ஒன்றைக் கட்டுகிறான்" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்" என இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53
பாடம் : 5 ஏழை எளியோருக்கு தானதர்மங்கள் செய்தல்.
5707. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே "இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி" என்று ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர்வழியைத் தொடர்ந்தார்.
அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண்வெட்டியால் தண்ணீரை திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார். அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன?" என்று கேட்டார். அவர் "இன்னது" என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார்.
அப்போது அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்கிறீர்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, "இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப்பொழி" என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர்தான் இது. அந்தத் தோட்டத்தி(ன் மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீர் என்ன செய்கிறீர்?"என்று கேட்டார்.
அதற்கு அந்தத் தோட்டக்காரர், "நீங்கள் சொல்வது உண்மையானால், அதன் விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நானும் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்" என்று கூறினார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "அதில் (கிடைக்கும் வருவாயில்) மூன்றில் ஒரு பகுதியை ஏழைகள், யாசகர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குத் தர்மம் செய்கிறேன்" என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 53